விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு
விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கான புதிய தமிழகம் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு
விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கான புதிய தமிழகம் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. புதிய நிர்வாகிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! இதைத் தொடர்ந்து பிற மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் பட்டியலும்; அதன்பின் ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகிகள் நியமனம் குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்படும். புதிய தமிழகம் கட்சி துவங்கி 24 ஆண்டுகள் முடிவுற்று, 25-வது ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. அரசியல் கட்சியாக 24 ஆண்டுகள், சமூக அமைப்பாக 16 ஆண்டுகள் என 40 ஆண்டுகள் தமிழக சமூக, அரசியல் களத்தில் நம்மை அர்ப்பணித்துள்ளோம். சமூகத் தளத்தில் வேறு எந்த அரசியல் கட்சிகளாலோ அல்லது இயக்கங்களாலோ தீர்க்க முடியாத எண்ணற்ற பிரச்சினைகளுக்கு நம் கண் முன்னாலேயே தீர்வு கண்டிருக்கிறோம்.
40 வருடங்களுக்கு முன்பு, சமூக இயக்கமாகத் துவங்கியபோது, மலையின் அடிவாரத்தில் நின்று கொண்டு உயர்ந்த மலையின் உச்சியைப் பார்த்தால் எவ்வளவு பிரமிப்பாக இருக்குமோ? அது போன்று சமூகப் பிரச்சினைகள் இருந்தன. மலை போன்றிருந்த சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்ட நாம், அரசியல் தளத்தில் அதே அளவு வெற்றியை ஈட்ட இயலவில்லை. சமூகத் தளத்தில் நாம் செய்த சாதனைகளை சில அரசியல் சதிகாரர்கள் மறைக்க முயற்சி செய்தாலும், அதை என்றென்றும் மறைக்க முடியாது. எதிர்காலத்தில் மிகவும் போற்றப்படும், பொறிக்கப்படும். எனினும், இனி வரக்கூடிய காலகட்டங்களில் பொது அரசியல் தளத்தில் அதிக கவனமும், வெற்றிகளை ஈட்ட வேண்டிய கடமையும் ஒவ்வொரு புதிய தமிழகம் கட்சி தொண்டனுக்கும் அதிகம் இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
நிகழ்கால அரசியல் தளம் கடந்த காலங்களைப் போல கொள்கை, கோட்பாடுகளைக் கூறி நேர்மையான முறையில் வாக்குகள் சேகரிப்பதாகவோ, வெற்றியைப் பெறக் கூடியதாகவோ இல்லை. முழுக்க முழுக்க நேர்மையற்றவர்களிடத்திலே கைமாறிச் சென்றுவிட்டது. நமது தலைமை மற்றும் கட்சிக்கு எதிராகப் பொய்யுரைகளையும், புரட்டல்களையும் கூறி நமது வெற்றியைத் தடுப்பதையே குறிக்கோளாகக் கொண்டு அரசியல் சந்தையில் மலிவாக தங்களை விலைக்கு விற்கும் ஒரு பெரும் சதிகார கூட்டம் அலைகிறது. எவ்வளவுதான் கஷ்டப்பட்டு, நிலத்தை உழுது, அதை பன்படுத்தி, நாற்று நட்டு, களை எடுத்து, நீர்பாய்ச்சி, உரமிட்டு, வளர்த்த பின், முதிர்ந்த நெல்லை அறுவடை செய்யும் வரை நாம் சரியாக பாதுகாக்கவில்லை என்றாலோ, அதை அறுவடை செய்வதற்குண்டான ஆட்பலம் இல்லை என்றாலோ, அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபடாமல் இருந்தாலோ இரவோடு இரவாக உள்ளூர், வெளியூர் கயவர்களால் அது கொள்ளையடிக்கப்படும் என்பதை அண்மைக் கால தேர்தல்களிலும், குறிப்பாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலிலும் நாம் கண்ணாரக்கண்டோம். நமது 50 ஆண்டுகால நமது உழைப்பைக் களவாடி, அடையாளத்தை அழித்து ஆதாயம் தேட எண்ணியவர்கள் இப்போது அரசியல் தளத்தில் அம்பலப்பட்டு நிற்கிறார்கள். ஆனால், புதிய தமிழகம் கட்சி 60 நாட்களில் ‘நெருப்புக் கோழிபோல்’ வீறுகொண்டு எழுந்து நிற்கிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் நமக்குக் கிடைத்த ஒரு மிக மிக கசப்பான அனுபவம். எனவே, அதை மனதில் கொண்டு எதிர்கால அரசியல் தளத்தில் நாம் ஒவ்வொரு அடியையும் மிக கவனமாக எடுத்து வைக்க வேண்டும். ஒரு மிகப்பெரிய சமுதாயத்தின் ஆயிரம் ஆண்டுக்காலம் மறைக்கப்பட்ட வரலாற்றை, பத்தாண்டுக்காலம் போராடி மீட்டுக் கொடுத்த சாதனையையும், கடந்த கால பிற சாதனைகளையும் ஒவ்வொரு வீடும் தோறும் கொண்டு போய்ச் சேர்க்காததாலும்; நம்முடைய உழைப்பைக் களவாட வந்த கயவர் கூட்டத்தை விரட்டி துரத்தியடிக்க தவறியதாலும் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் நமக்கு சொல்லொனா துயரத்தையும், ஈடுசெய்ய முடியாத அரசியல் இழப்பையும் தந்துவிட்டது.
ஒவ்வொரு கிராமம் தோறும், வார்டு தோறும் கட்சிக்கு முறையான கட்டமைப்பு உருவாக்கப்படாததே நம்முடைய அரசியல் இழப்புகளுக்கு உண்மையான காரணமாகும். நமது கட்சி கட்டமைப்பைக் கிராமந்தோறும் வலுப்படுத்த வேண்டும் என நான் எவ்வளவோ முறை அறிவுறுத்தியிருக்கிறேன். ஆனால் அதன் முக்கியத்துவத்தை நமது நிர்வாகிகள் எவரும் அறிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. எல்லோருக்கும் நன்மை செய்து இருக்கிறோம்; உழைத்து இருக்கிறோம்; பாடுபட்டு இருக்கிறோம். எனவே எல்லோரும் நம்மிடத்தில் விசுவாசமாக இருப்பார்கள் என எண்ணிவிட்டோம்.
ஆனால், ஊழலில் உழன்று, அதில் நிபுணத்துவம் பெற்ற தமிழக அரசியல் கட்சிகள் ஏழை, எளிய மக்களை எளிதாக வஞ்சித்து நமது வாக்கு வங்கியை தட்டிப் பறித்துச் சென்று விட்டார்கள். எனவே, இனி இதுபோன்று ஒரு நிகழ்வு எக்காலகட்டத்திலும் நிகழாவண்ணம் தடுத்து, நாம் அரசியல் தளத்தில் வெற்றி பெற வேண்டுமெனில், பொது அரசியல் தளத்தில் அதிகமாக பணியாற்ற வேண்டியுள்ளது. எனவே, இவற்றையெல்லாம் உள்வாங்கிக் கொள்ளும் வகையில் வலுவான கட்சி கட்டமைப்பை ஒவ்வொரு கிராமம் வரை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது.
எனவே, கட்சி பரந்துபட்டு இருக்கவேண்டும் என்ற அடிப்படையிலும், கட்சி பணிகளைத் துரிதப்படுத்தும் பொருட்டும் தன்னலனை மறந்து கட்சி நலனைப் பெரிதாகக் கருதித் தொடர்ந்து விசுவாசமாக விளங்கும் பல்வேறு இளைஞர்களுக்கும், மூத்த நிர்வாகிகளுக்கும் ஏற்கனவே மாநில பொறுப்புகளும், அதன் தொடர்ச்சியாக இப்போது மாவட்ட பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாவட்டச் செயலாளர்கள், இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள் கிராமந்தோறும் புதிய தமிழக கட்சியின் கிளைகளை உருவாக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். மேலும், வேறு எந்த சமூக அமைப்புகளுடனோ, அரசியல் கட்சிகளுடனோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எவ்வித தொடர்பும் இல்லாத அப்பழுக்கற்ற ’புதிய தமிழகம் கட்சி தொண்டன்’ என்ற அடையாளத்தோடு மட்டுமே அனைவரும் செயல்பட வேண்டும்.
நமது எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அதில் கட்சியின் ஒற்றுமை, வலிமை, கட்டுப்பாடு, தலைமையின் பெருமை ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக் காட்டும் வகையில் அமைந்திட வேண்டும். எனவே அவரவர்க்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை மன மகிழ்ச்சியோடு ஏற்று, இணக்கமாகச் செயல்பட்டு, எதிர்வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் அதில் நமது கட்சி வெற்றி பெற வேண்டுமென்ற ஒற்றை குறிக்கோளோடும், தீராத வேட்கையோடும் ஒவ்வொருவரும் சபதம் ஏற்றுக் கிராமங்களில் கட்சி கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஜீலை 23-ல் நெல்லையில் சந்திப்போம்!
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
12.07.2021