”விகிதாச்சார தேர்தல் சீர்திருத்தத்துடன் கூடிய ஒரே நாடு ஒரே தேர்தல்”
424 Views
![]()
”ஒரே நாடு, ஒரே தேர்தல் – ONE NATION ONE ELECTION” குறித்து மத்திய அரசால் அமைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மேதகு ராம்நாத் கோவிந்த் அவர்கள் தலைமையிலான குழு, அதை ஆதரித்து ஜனாதிபதி அவர்களிடம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்து உள்ளனர். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வரவேற்கத் தகுந்த ஒன்றாகும். 4000 கிலோ மீட்டர் வடக்கு தெற்காகவும், 3000 கிலோமீட்டர் கிழக்கு மேற்காகவும் பரந்து விரிந்து இருக்கக்கூடிய பல மொழிகள், பல இனங்கள் உள்ளடக்கிய இந்தியத் தேசத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி என்று தனித்தனியே தேர்தல் நடத்துவதால் கால விரயமும், பெருத்த பொருள் செலவும், தேர்தல் விதிமுறைகள் அடிக்கடி அமலாவதால் அரசுத் திட்டங்கள் நிறைவேறுவதில் தேக்கமும் ஏற்படுகின்றன. ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் பெரும்பாலான நேரங்களை தேர்தல் நடத்துவதற்கு என்று ஒதுக்க வேண்டி இருக்கிறது. இதனால் மக்கள் பணிகள் பெரிதும் பாதிப்புக்கு ஆளாகின்றன. எனவே, நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் உள்ளாட்சிகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது தான் இந்தியாவை வேகமான வளர்ச்சிக்கு பாதைக்கு இட்டு செல்லும்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால், மாநிலங்கள் அளவில் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி இழப்புக்கள் ஏற்படுகின்ற பொழுது என்ன செய்வது? மத்தியிலேயே பெரும்பான்மை இல்லை என்றால் குறிப்பிட்ட ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே தேர்தல் நடத்த வேண்டிய சூழல் வரும் பட்சத்தில், மீண்டும் மாநிலங்களுக்குத் தேர்தல் நடத்த வேண்டுமா? என்பது போன்ற பல சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. நிச்சயமாக அது குறித்து ஆழமாக சிந்திக்கத் தான் வேண்டும்.!
இந்தியாவினுடைய அரசியல் சாசனம் உருவாக்கப்பட்ட பொழுது அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுடைய அரசியல் சாசனங்களை வழிகாட்டியாக எடுத்துக்கொண்டு அதை வடிவமைத்தார்கள். ஆனால், தேர்தல் முறையில் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை எனவும்; First Past Post System என்ற ஜனநாயகத்திற்கு ஒவ்வாத ஒரு தேர்தல் முறையையும் ஏற்றுக் கொண்டார்கள். அதாவது, ஒவ்வொரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத் தொகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வாக்களித்தாலும் ஒரு வாக்கு அதிகமாக வாங்கினாலும் அந்த வேட்பாளரே வெற்றி பெறுகிறார்; அந்தக் கட்சி மட்டுமே வெற்றி பெறுகிறது. உதாரணத்திற்கு ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் 10 லட்சம் வாக்கு இருப்பதாகக் கணக்கிட்டால் 5,00,001 வாக்குகளைப் பெறுகிறவர் வெற்றி பெறுகிறார்; அக்கட்சி வெற்றி பெற்று விடுகிறது. 4,99,999 வாக்குகள் பெறக்கூடிய வேட்பாளர் வெற்றி வாய்ப்பை இழந்து விடுகிறார். இது ஏதோ ஒரு தொகுதியில் என்று பார்க்கக் கூடாது. பல நேரங்களில் அதிகமான வாக்கு சதவீதத்தைப் பெறக்கூடிய அரசியல் கட்சிகள் நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் குறைவான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டிய போக்கும், குறைவான வாக்கு சதவீதத்தை பெறக்கூடியவர்கள் அதிகமான பிரதிநிதிகளைப் பெறக்கூடிய நிலையும் உருவாகிறது. பல நேரங்களில் அதிகமான சதவீத வாக்கைப் பெறக்கூடிய கட்சியால் ஓரிரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாத சூழல் உருவாகி விடுகிறது. அனைவருக்குமான ஒரு ஜனநாயகத்தில் ஒரு வாக்கு கூடுதல் அல்லது ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறக் கூடியவர்கள் மட்டுமே ஆட்சியில் அமருவதும், லட்சக்கணக்கான மக்களின் ஆதரவு பெற்றும் மற்ற கட்சிகள் தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முடியாததும் ஜனநாயகத்திற்குப் பேராபத்தை ஆகும். அதுதான், தற்போது இந்தியத் தேர்தல் முறையில் இருக்கக்கூடிய மிகப்பெரும் குறைபாடாகும்.
”ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள்” என்பது போல இரண்டு, மூன்று முக்கியமான தேர்தல் சீர்திருத்தங்களையும் இத்துடன் மத்திய அரசு அமலாக்குமேயானால், இப்பொழுது, இதை ”ஒரே நாடு ஒரே தேர்தல்” முறையை ஏற்க மறுக்கும் அரசியல் கட்சிகள் கூட ஏற்க வாய்ப்பிருக்கும் என்று கருதுகிறேன்.
1. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இருக்கக்கூடிய தேர்தல் முறையை நான்காண்டுக்கு ஒரு முறை என மாற்றப்பட வேண்டும்.
2. விகிதாச்சார தேர்தல் முறை அமல்படுத்தப்பட்டால், தேர்தலில் பங்கு பெறக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளுமே தங்களுடைய வாக்கு விகிதாச்சாரத்திற்கு ஏற்ப பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்ப முடியும். எனவே, பரவிக்கிடக்கும் அனைத்து தரப்பினரும் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முடியும்.
ஒரு கட்சி ஆட்சி முறை என்பது முற்றாக அளிக்கப்பட்டு பல கட்சிகள் ஒருங்கிணைந்து மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அமைக்கக்கூடிய சூழல் உருவாகும். இதனால், உண்மையான சமத்துவமும், ஜனநாயகமும் நிலைநாட்டப்படும். அச்சமயத்தில் ஆட்சி கவிழ்ப்பும் மிக மிகக் குறைவாகிப் போய்விடும், தேசிய அரசாங்கங்கள் என்ற அடிப்படையில் பல கட்சிகள் ஒருங்கிணைந்து எப்பொழுதும் அரசு கவிழாமல் இருக்கக் கூடிய வாய்ப்புகள் உருவாகும். அண்டை நாடான இலங்கையிலும், ஐரோப்பாவின் மிக முக்கியமான நாடுகளான சுவிட்சர்லாந்து, நார்வே, ஸ்வீடன், பின்லாந்து போன்ற பல நாடுகளிலும் இந்த தேர்தல் முறைதான் இருக்கிறது.
ஏறக்குறைய 75 வருடங்களுக்குப் பிறகு தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர ஒரே நேரத்தில் ஒரே தேர்தல் நடத்த வேண்டும் என்று நினைக்கின்ற மத்திய அரசின் நோக்கம்; நல்ல நோக்கம், சரியானது. அதே சமயத்தில் ”பழைய கள் புதிய மொந்தை” என்பதற்கு ஏற்ப பழைய தேர்தல் முறைகளையே கடைப்பிடித்தால் அது எவ்வித பலனும் அளிக்காது; அது, குழப்பங்களை மட்டுமே ஏற்படுத்தலாம். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பல மாநிலங்கள் ஒப்புக் கொள்ளாத சூழல் ஏற்படலாம். அதே சமயம் நான்காண்டுக்கு ஒருமுறை தேர்தல், விகிதாச்சார தேர்தல் முறை போன்றவற்றை நிச்சயம் அனைத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் சூழல் ஏற்படும்.!
எனவே மத்திய அரசு ”ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற உன்னதமான லட்சியத்தை அமலாக்குகின்ற பொழுது, விகிதாச்சார தேர்தல் முறையுடனான தேர்தல் மாற்றம் வேண்டும் என்பதே புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
15.03.2024.






