தன்னலமற்ற வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய என்.சங்கரய்யா அவர்கள்!

நினைவுகள்
s2 399 Views
  • Sankaraiah
  • Sankaraiah
Published: 16 Nov 2023

Loading

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் என்.சங்கரய்யா அவர்கள் தனது 102-வது வயதில் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்திய தேச விடுதலைக்காகவும் அனைத்து மக்களுக்கும் சமூக, அரசியல், பொருளாதார தளங்களில் சமபங்கும் சமஉரிமையும் கிடைக்க வேண்டும் என்ற பொதுவுடைமைச் சித்தாந்தத்தை நிறைவேற்றுவதற்காகவும் தன் வாழ்நாளையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.

தான் எடுத்துக் கொண்ட கொள்கைகளும் கோட்பாடுகளும் சரியானது என்று தீர்மானித்த பிறது, அது உடனடி பலனையோ, வெற்றியையோ தராவிடினும், நிச்சயம் என்றாவது ஒருநாள் அது வெற்றியடையும் என்ற நம்பிக்கையில் இம்மியளவும் பிசகாமல் அதற்காகப் பாடுபட்டவர். அவரது வாழ்நாட்களில் தொழிலாளர்களுக்காக, விவசாயிகளுக்காக, மாணவர்களுக்காக, அனைத்துப் பாட்டாளிகளுக்காக சிறை சென்றது எண்ணிலடங்கா. எடுத்தவுடன் எதுவும் கிடைத்துவிட வேண்டுமென்று அலைபாயும் இன்றைய இளைஞர்களுக்கு அதுபோன்ற எண்ணம் தலைதூக்கக் கூடாது என்று தனது வாழ்நாளையே கொள்கைக்காக வாழ்ந்துகாட்டியவர்.
அண்மையில் அவருக்கு டாக்டர் பட்டம் அளிக்கப்பட வேண்டும் என மாநில அரசு செய்த பரிந்துரை, ஆளுநர் அவர்களால் நிராகரிக்கப்பட்ட போது, ’அவ்வாறு மறுக்கப்பட்டிருக்கக் கூடாது; பொதுவாழ்வில் அப்பழுக்கற்று வாழ்ந்ததற்காக டாக்டர் பட்டம் பெறுவதற்கு முழுத்தகுதி படைத்தவர் அவர்’ என்று நாம் நம்முடைய கருத்தை வலுவாகத் தெரிவித்திருந்தோம்.

அவருடைய தூயப் பொதுவாழ்வை கெளரவிக்கக்கூடிய வகையில், மாநில அரசு ’கொள்கைக் கோமான்’ என்ற சிறப்பு கெளரவப் பட்டத்தைக் கூட வழங்கலாம். மேலும் பல்கலைக்கழகங்களில் அவருடைய பெயரில் ஆராய்ச்சி இருக்கையைத் தொடங்க வேண்டும்.

அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது இயக்கத்தாருக்கும், பொதுஉரிமை, பொதுவுடைமையை நேசிக்கக்கூடிய முற்போக்குச் சிந்தனையாளர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு புதிய தமிழகம் கட்சியின் செம்மாந்த அஞ்சலியை உரித்தாக்குகிறோம்.