தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது ஸ்டாலினுக்கு பதவி ஒரு கேடா ?

வலைப்பதிவுகள்

Author: வாழையூர் குணா

Guna 5
Published: 18 Aug 2023

ஒரு நாட்டின் விரைவான வளர்ச்சிக்கான முதல் அளவு கோல் ஒரு நல்ல சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை. இந்தியாவில் 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்கள் 3.3 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவு 1.25 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பல மதங்கள், பல சாதிகள் பலமொழிகள் மற்றும் இனக்குழுக்கள் வாழும் பெரும் தேசமாகும்.

அரசுக்கு எதிரான குற்றம் மனித குலத்திற்கு எதிரான குற்றம் என பல்வேறு குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

இன்றைய சூழல் மது ,புகை, கஞ்சா போதை மாத்திரை போன்ற தீய பழக்கவழக்கங்களால் மாணவர்கள் , சிறுவர்கள்,இளைஞர்கள் சீரழிவதோடு அல்லாமல் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது .

மக்கள் நிம்மதியாகவும், சந்தோசமாகவும், வாழும் சூழ்நிலையை அமைத்துக் கொடுப்பதே சிறந்த ஆட்சி ஆகும். அப்படிப்பட்ட ஆட்சியா இப்போது நடக்கிறது ?

கடந்த மே மாதம் 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மக்கள் பல்வேறு துயரத்திற்கு ஆளாகி வாழ்வா? சாவா? என பரிதவிக்கிறார்கள்.

விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. கட்டுமான பொருட்களின் விலை கண்ணை கட்டுகிறது . பால் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு ,மின் கட்டண உயர்வு, பத்திர பதிவு கட்டண உயர்வு, என பல்வேறு வரி சுமைகள் மக்கள் தலையில் சுமத்தப்பட்டுள்ளது.

உழைக்கின்ற பெரும்பகுதி பணத்தை அரசுக்கு வரி கட்டியே மக்கள் வறுமையில் வாடுகிறார்கள் . இப்படிப்பட்ட பல்வேறு கொடுமைகள் இருந்த போதிலும் அதில் பெரும் கொடுமையாக சட்டம் ஒழுங்கு என்பது தினந்தோறும் சந்தி சிரித்து வருகிறது.

காவல் நிலையத்தில் மரணங்கள் நடக்கிறது .சமூக ரீதியான படுகொலைகள் அதிகரித்துள்ளது.சிறைச்சாலை மரணங்கள் தலை விரித்து ஆடுகிறது .சாதிய மோதல்கள் ,படுகொலைகள் அன்றாடம் நடக்கும் சம்பவங்களாக தொடர்கிறது. நாளிதழ்களிலும், செய்தி சேனல்களிலும் , கொலை, கொள்ளை, கற்பழிப்பு ,பாலியல் குற்றம் என செய்திகள் வராத நாளே இல்லை .

விழுப்புரம்;

மே மாதம் 13ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் மதுராந்தகத்தில் மது அருந்தி 23 பேர் மரணம்.
சட்ட ஒழுங்கு சரியில்லை என்று அண்மையில் அரசே ஒப்புக்கொண்டு 27 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்தார்கள்.

கண்டாச்சிபுரம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியரால் தன்னோட மகனுக்கு நடந்த சாதி துபிஷேகம் தொடர்பாக மாணவரோட தாயார் முதல்வருக்கு கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

வேலூர் ;

பட்டாகத்தி உடன் 18 , 20 வயது உடையவர்கள் சாலையோர கடைக்காரர்களிடம் மாமுல் கேட்டு மிரட்டுகிறார்கள்.

அதே வேலூரில் கஞ்சா போதைக்கு அடிமையான 17, 18, 19 வயதுடைய 3 பேர் பெண் தகராறில் ஒரு இளைஞரை கொன்று புதைத்திருக்கின்றார்கள். அதேபோல முன் விரோதம் காரணமாக 17 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட ஆறு பேர் சேர்ந்து இளைஞர்கள் இரண்டு பேரை கொலை செய்து உடலை எரித்து பாலாற்றில் வீசி இருக்கிறார்கள் .

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தனது தந்தை குடிப்பழக்கத்திற்கு ஆளாகி அதனால் குடும்ப தொல்லைப்படுவதை காண முடியாத பள்ளி மாணவி விஷ்ணு பிரியா தந்தை குடிப்பழக்கத்தில் இருந்து திருந்த வேண்டும் என்று கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.

தாம்பரம்;

இரவு நேர வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை சோதனை இட்டபோது ஒருவர் பட்டா கத்தியுடன் பிடிபட்டுள்ளார்.

மதுரை;

மதுரையில் இருந்து திருப்பூர் சென்ற அரசு பேருந்து ஒன்றின் டிரைவர் பின்னால் வந்த தனியார் பேருந்துக்கு வழி விடாததால் அரசு பேருந்து டிரைவரை தனியார் பேருந்து டிரைவர் இரும்பு கம்பியால் தாக்கி கையில் ரத்த காயம் ஏற்படுத்தினார்.

ஜூன் மாதம் 3ஆம் தேதி மதுரை மேலூர் கிடாரிப்பட்டியில் ஒரு சிறுவன் உட்பட 4 பேர் மது அருந்தி பாதிப்பு ஆளாகி ஒருவர் பலி.

தூத்துக்குடி;

நாங்குநேரியைப் போல மற்றொரு சம்பவம் ;

தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி அருகே கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் லட்சுமி புரத்தை சேர்ந்த ஒரு மாணவன் பிளஸ்-1படித்து வருகிறான். அந்த மாணவனுக்கும் அதே பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் கழுகுமலையை சேர்ந்த மற்றொரு பிரிவு மாணவர்களுக்கிடையே பள்ளியில் தகராறு ஏற்பட்டுள்ளது. கழுகுமலை சேர்ந்த மாணவர் 10 பேருடன் லட்சுமிபுரத்திற்கு நேற்று இரவு சென்றுள்ளார்.அங்கு தனியாக அமர்ந்திருந்த லட்சுமிபுரம் மாணவனை அவதூறாக பேசி தாக்கினார். இதில் காயமடைந்த மாணவரை அப்பகுதியில் மீட்டு கோவில்பட்டி மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திராவிட மாடல் ஆட்சியில் கனிமவளக் கொள்ளை தடுக்கச் சென்ற முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவர்களை சமூக விரோதிகளால் நிர்வாக நிர்வாக அலுவலகத்திற்குள் வைத்து வெட்டி படுகொலை செய்துள்ளார்கள்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்களும் திமுக ஒன்றிய செயலாளர் ஆதரவாளர்களும் அரசு மருத்துவக் கல்லூரி பல் டாக்டர் ஒருவரை காரில் கடத்திச் சென்று தோட்டத்தில் கட்டி வைத்து உருட்டு கட்டையால் அடித்து கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார்கள் .

கரூர்;

வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது வேன் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

அதே மாவட்டத்தில் மொபைல் போனை திருடிய குற்றத்திற்காக 5 சிறுவர்கள் 17 ,16 ,மற்றும் 13 வயதுடைய சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருச்சி;

நவல்பட்டு காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் அவர்களை ஆடு திருடும் கும்பலைச் சேர்ந்த சிறுவர்கள் இளைஞர்கள் நான்கு பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர் .

திருச்சி சிவா வீட்டில் அமைச்சர் நேரு ஆட்கள் அடித்து நொறுக்கிய காட்சிகள் எல்லாம் சட்ட ஒழுங்கில் வருமா வராதா என்று தெரியவில்லை.

கடலூர் ;

கள்ளக்குறிச்சி அருகே ஸ்ரீமதி பள்ளி மாணவியின் மரணம் அனைவரையும் கதிகலங்க செய்தது . அந்த மரணம் குறித்த உண்மை தன்மை இதுவரை வெளி வராததுதான் திராவிட மாடலின் நிர்வாக திறமையாகும்.

சென்னை;

செங்குன்றம் அருகே முன்னாள் ஊராட்சி தலைவர் வெற்றி படுகொலை.
சென்னை போன்ற பெருநகரங்களில் திருடு ,வழிப்பறி ,பாலியல் ரீதியான புகார்கள் பேரளவில் அதிகரித்துள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் ஜமீன் ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த அர்ஜுன் (24 )இவர் பெயிண்டர் இவருக்கு குடிப்பழக்கம் உண்டு.அருகாமையில் இருந்த மணிகண்டன் வீட்டு முன் மதுபாட்டில்கள் போட்டதால் ஆத்திரமடைந்த மணிகண்டனும் அவரது மனைவியும் உருட்டு கட்டையால் சரமாரியாக அடித்தனர் மயங்கி விழுந்தும் விடாமல் கொதிக்கும் வெந்நீரை அவர் மீது ஊற்றி தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர்.
சேலையூர் அடுத்த வேங்கை வாசல் பகுதியைச் சேர்ந்தவர் பாபு அவரது வீட்டில் கதவை உடைத்து பீரோவில் இருந்து 75 சவரன் நகை கொள்ளை அடிக்க பட்டது.

கோயமுத்தூர் ;

பொது இடங்களில் டிபன் பாக்ஸில் குண்டு வெடித்து பொது அமைதிக்கு குந்தகத்தை ஏற்படுத்திய சம்பவம் நடந்துள்ளது.

பாலியல் வன்கொடுமை, தீவிரவாத மத மோதல், சாதி மோதல் ஆகியவற்றிற்கு அடிப்படை முகாந்தரமாக அமைவது சினிமாவில் இடம் பெறும் வன்முறை காட்சிகளை பார்த்து சிறுவர்கள், இளைஞர்கள் ,மாணவர்கள் தடம் மாறி வருகிறார்கள்.

தஞ்சாவூர்;

தஞ்சையில் காலை 10:30 மணியளவில் டாஸ்மாக் பாரில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழந்து உள்ளனர் .

திருக்காட்டுப்பள்ளி பழமார் நேரி சாலை பகுதியைச் சார்ந்த வர் பிரபு வயது 39 இவர் அதிமுக இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி ஐந்தாவது வார்டு முன்னாள் கவுன்சிலாக இருந்தார். இவரை டூவீலரில் வந்த மர்ம கும்பல் பிரபுவின் கழுத்து மற்றும் தலையில் சரமாரியாக வெட்டினார்கள் பிரபு சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருமலை சமுத்திரம் தகுதியை சார்ந்தவர் சக்திவேல் 23 காதலிஉடன் நெருக்கமாக இருக்கும் படங்களை வாட்ஸ் அப்பில் வெளியிடுவேன் என்று மிரட்டியதால் சக்திவேல் என்பவனை வெட்டிக் கொன்று அம்மாபேட்டை அருகில் உள்ள ராமுத்திர கோட்டை மேல தோப்பு நெய் வாசல் தென்பகுதி வாய்க்காலில் உடலை ஆற்றில் வீசினர். இக்கொலை சம்பந்தமாக தந்தை ,மகள், மகன் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் ;

திருப்பூர் மாவட்டம் ,சென்னிமலை அருகே தினமும் குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்த கணவர் பாலுவை அவரது மனைவி ஈஸ்வரி சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார்.

திருப்பூர் மாவட்டம் கடை உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 16 லட்சம் கொள்ளை அடித்தனர். பெண் போலீஸ் கணவர் உட்பட 6 கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒருவர் மரணம்.

விருதுநகர் ;

காரியாபட்டி ஒன்றியம், வெற்றிலை முருகன் பட்டி கிராமம் மாயகிருஷ்ணன் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர். அவரை சண்முக நாராயணன்( எ) சதாசிவம் மற்றும் மாரிசாமி ஆகியோர் மாயகிருஷ்ணனை கோயில் பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்தனர்.

சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தை சேர்ந்தவர் சுசீந்திரன். இவரது மனைவி சீலா ராணி 25 என்பவரை சிவகாசி ரிசர்வ் லைன் பாரதிநகரை சேர்ந்த சேக் முகமது யாசின் 31 என்பவர் சீலா ராணியை கடத்தி சென்று நகைக்காக கொலை செய்து உடலை கிணற்றில் வீசியதாக வாக்குமூலம் தந்துள்ளார்.

பெரம்பலூர் ;

பெரம்பலூர் ஒன்றியம், அரனாரை கிராமம் செல்வராஜ்( எ)அப்துல் ரகுமான் என்பவரை டாஸ்மாக் கடையில் பட்டப்பகலில் புகுந்து வெட்டி படுகொலை செய்தனர்.

திருவாரூர் ;

முத்துப்பேட்டை ஒன்றியம் இடையூர் கிராமத்தைச் சார்ந்த ரஜினி பாண்டியன் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். கனிம வள கொள்ளை அடித்ததில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக முக்குலத்தோர், அகமுடையர் சமூகத்தைச் சார்ந்த இருவர் ரஜினி பாண்டியனை வெட்டி கொன்றனர் .

கொரடாச்சேரி ஒன்றியம் ,அம்மையப்பன் கிராமம் காவியராஜன் ஆதி திராவிடர் சமூகத்தைச் சார்ந்தவர் அரசியல் போட்டி பொறாமையால் படுகொலை செய்யப்பட்டார் .

கொரடாச்சேரி ஒன்றியம், காட்டூர் குமரேசன் ஆதி திராவிடர் சமூகத்தைச் சார்ந்தவர் இவரை முன்விரோதம் காரணமாக கூலிப்படையினரை வைத்து படுகொலை செய்தனர்.

நீடாமங்கலம் ஒன்றியம், பூவலூர் கிராமம் ராஜ்குமார் என்பவரை முன்விரோதம் காரணமாக ஸ்டாலின் என்பவர் கூலிப்படை மூலமாக படுகொலை செய்தார்.

புதுக்கோட்டை ;

திருமயம் ஒன்றியம் ,விராசிலை கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் ,தேவர் இரு சமூகத்தினர் இடையே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் மேடையில் இருந்து சோடா பாட்டில் வீசி அடிதடி இருதரப்பு மீது வழக்கு.

நாகப்பட்டினம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 10 பேர் கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து வழக்கு நீதிமன்ற வாசல் என்று அலைந்து திரிந்து அல்லல்படுகின்ற ஒரு சூழலை திமுக ஆட்சியில் கட்சதீவை தாரை வார்த்தால் தான் இது போன்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது இது மீனவர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

திமுக ஆட்சிக்கு பிறகு 2021 மே முதல் செப்டம்பர் வரை 697 கொலைகள் நடந்துள்ளன . இவையெல்லாம் வெளியே தெரிந்தவை வெளியே தெரியாதவை பல்லாயிரக்கணக்கில் மறைக்கப்பட்டுள்ளது .

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டிற்கு ஆய்வுக்காக சென்றபோது அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் தூண்டுதலின் பேரில் ரௌடிகள் பெண் அதிகாரியின் கையைப் பிடித்து இழுத்து திருகி ரத்தத்தை வரவழைத்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் அளவிற்கு சட்ட ஒழுங்கை ஆளுங்கட்சினர்களே சீர்குலைத்த சம்பவமும் அரங்கேறியது.

ஆளும் கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலாளரே கோயிலுக்குள் நுழைந்த பட்டியல் பிரிவு இளைஞரை பொது இடத்தில் சரமாரியாக கன்னத்தில் அறைந்தது. அதேபோன்று சாதி தீண்டாமை வடிவங்கள் ஆன
வேங்கை வயல் சம்பவம் ,மேல்பாதி சம்பவம், நாங்குநேரி சம்பவம் ஒரு சமூக பதட்டத்தை உருவாக்கிய நிகழ்வுகளும் நடந்தேறியது.

திராவிட மாடல் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பொது கூட்டங்களிலும் ,பொது இடங்களிலும் பொன்முடி என்ற அமைச்சர் ” நீ எஸ்,சி தானே எந்திரிம்மா” என்று சொல்வதும் “நாங்கள் என்ன மூன்றாம் தர மக்களா ?என தயாநிதி மாறன் கேட்பதும், “ஓசி பஸ்ல தானே போகிறீர்கள் “என்று எகத்தாளமாக பேசுவதும் மக்கள் பிரதிநிதிகளை கூட சாதி பார்த்து இருக்கையில் அமர வைப்பது. இப்படி பல்வேறு நிகழ்வுகளால் தான் தமிழ் சமூகத்தில் இடையே பிளவுகளும், பிணக்குகளும், பகைகளும் ,உருவாகுவதற்கு அடிப்படை அம்சங்களாக அமைந்து வருகிறது.

சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை
இந்த ஆட்சியில் நடந்த அனைத்து சம்பவங்களையும் இக்கட்டுரையில் சுட்டிக்காட்ட முடியாது இருந்தபோதிலும் ஒன்று இரண்டு மட்டும் உதாரணத்துக்கு சுட்டிக்காட்டப்படுகிறது .

தென் தமிழகத்தில் திருநெல்வேலி & தென்காசி மாவட்டத்தில் மட்டும் பல்வேறு படுகொலைகள் நடைபெற்றுள்ளன. அவற்றில் உதாரணத்திற்கு சில படுகொலைகள்..

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், பாப்பாக்குடி ஒன்றியத்தில் முக்கூடல் என்ற பகுதிக்கு அருகாமையில் உள்ள பள்ளக்கால் புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அருகாமையில் உள்ள அடைகாணி கிராமத்தைச் சார்ந்தவர்களுக்கு அப்பகுதி பள்ளியில் மோதல் ஏற்பட்டு தலையில் காயம் ஏற்பட்டு செல்வ சூர்யா என்ற மாணவன் இறந்தார் .

திசையன்விளை முத்தையா என்பவர்
அருந்தியர் சமூகத்தை சேர்ந்தவர், நாடார் பெண்ணை விரும்பியதால் அவரது சகோதரர் முத்தையாவை கண்டித்தார். மீண்டும் அந்த பெண் முத்தையாவுடன் பழகி வந்ததை தெரிந்து கொண்டு முத்தையாவை நாடார் சமூகத்தினர் கொலை செய்தனர். இதில் குற்றவாளியாக ஆதி திராவிட சமூகத்தினரை காவல்துறையினர் குற்றவாளியாக சேர்த்துள்ளனர். (அது ஏன் என்று மர்மமாக உள்ளது )

முக்கூடல் ஆறுமுகம் படுகொலை. தேவேந்திரகுல வேளாளருக்கும் நாடார்களுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அதில் ஆறுமுகம் மகன் நாடார் சமூகத்தின் மீது வழக்கு தொடுத்ததன் காரணமாக மகனை கொலை செய்ய வந்தவர்கள் தந்தையை படுகொலை செய்தனர்.

சிதம்பரம் யாதவ் படுகொலை. யாதவர்களுக்கு பாத்தியப்பட்ட கோவிலில் தேவர்கள் அராஜகம் செய்தனர் . அதை தட்டி கேட்ட சிதம்பரம் என்ற பூசாரியை தேவர் சமூகத்தினர் படுகொலை செய்தனர்.

சிதம்பரம் யாதவ் கொலை வழக்கு விசாரணைக்கு வந்த போது சாட்சிகளுக்கு உதவியதற்காக மாயாண்டி யாதவ் என்பவரை தேவர் சமூகத்தினர் வெட்டிபடுகொலை செய்தனர்.

பால் கட்டளை பேச்சு ராஜா தேவேந்திரகுல வேளாளர் படுகொலை
பசுபதி பாண்டியன் கும்பலுக்கும் ராக்கெட் ராஜா கும்பலுக்கும் இடையே மோதலால் இந்த படுகொலை நடைபெற்றுள்ளது.

நடுக்கல்லூர் நம்பிராஜன் யாதவ் படுகொலை சமூக வலைதளங்களில் சாதி ரீதியாக யாதவர்கள் பெரிய சமூகமாக காட்டியதன் காரணமாக நம்பிராஜன் யாதவ் தேவர் சமூகத்தினர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

வீரவநல்லூர் அருணாசலக்குமார் படுகொலை பெண் வீட்டாரிடம் தவறான தகவலை கொடுத்து திருமணத்தை நிறுத்தியதால் கோபம் கொண்டு யாதவர்களுக்குள் படுகொலை செய்து கொண்டனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி (வயது 30 ) எனும் பட்டதாரி எவ்வித முன் விரோதம் இல்லாமல் எந்த பிரச்சனையும் இல்லாமல் தேவர் சமூகத்தினர்கள் தேவேந்திர குல வேளாளரை ஆகஸ்ட் 13.8 .2023 அன்று படுகொலை செய்து அதன் மூலமாக சாதிய மோதலை தூண்டுவதற்கு ஆளுங்கட்சி தூபமிட்டதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் கண்டித்து எச்சரிக்கை செய்துள்ளார் .

உலகையே உலுக்கிய நாங்குநேரி சம்பவம் பன்னிரண்டாவது படித்து வந்த சின்னத்துரை எனும் மாணவனிடம் சாதி ரீதியாக சக மாணவர்களே பல்வேறு தொல்லைகளை கொடுத்ததன் விளைவாக சின்னதுரை பள்ளிக்கு செல்லாமல் அஞ்சி இருந்த போது பெற்றோர்களின் கட்டாயத்தின் பேரில் பள்ளிக்குச் சென்றான் தன்னுடன் படிக்கின்ற மாணவர்களே தனக்கு கொடுத்த கொடுமைகளை பற்றி தலைமையாசிரியரிடம் தெரிவித்ததை தெரிந்து கொண்ட சாதி வெறி பிடித்த மாணவர்கள் அன்று இரவே அரிவாளோடு சின்னதுரை வசித்து வந்த தெருவிற்குள் அத்துமீறி சென்று திமிரோடு வீட்டுக்குள் நுழைந்து அவனையும் ,அவனது சகோதரி சந்திரா செல்வியையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி வீழ்த்திய போது அந்த சம்பவத்தை நேரில் கண்டு தடுக்க வந்த அவரது தாத்தா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இப்படிப்பட்ட ஒரு துயர சம்பவம் நடப்பதற்கு முன்பாக சமீபத்தில் வெளிவந்த மாமன்னன் படத்தில் வில்லன் ரத்தினவேல் கதாபாத்திரத்தை கொண்டாடும் வகையில் மீம்ஸ் போட்டு வைரல் ஆக்கினார்கள் . அந்த கொண்டாட்டத்தில் சம்பந்தப்பட்ட சிறுவர்களும் பங்கேற்று வெடிகுண்டுகளை தயாரித்து வெடித்த போது அது காவல்துறைக்கு புகாராகி அந்த மாணவர்கள் மீது வழக்குப் பதிந்து அந்த வழக்கு நீதிமன்றம் வரை சென்று நீதிபதி அறிவுரை வழங்கி மாணவர்களை பள்ளிக்கு அனுப்பிய பிறகும் இது போன்ற ஒரு அதி பயங்கர சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். என்றால் அந்த மாணவர்களுக்கு பின்புலமாக திமுக கட்சியின் ஒன்றிய செயலாளர் இருந்துள்ளதை அனைவரும் மறைத்துள்ளனர்.இப்படிப்பட்ட ஒரு துயரச் சம்பவம் சின்னத்துரையின் வீட்டு படிக்கட்டுகளில் ரத்தக்கரைகள் இன்னும் சாதிய கரையாக ஒட்டிக் கொண்டிருக்கிறது .

17.8.2023 நாங்குநேரி அருகே முன்விரோதம் காரணமாக தம்புரத்தைச் சேர்ந்த வானமாமலை வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி 10 பேர் கைது.

தென்காசி மாவட்டம் ;

செங்கோட்டையில் திமுக கவுன்சிலர் மகன் ராஜேஷ் என்பவர் திருநெல்வேலி காண்ட்ராக்ட் செங்கோட்டை பகுதியில் தங்கி இருந்து பணி செய்தபோது இருவருக்கிடையே ஏற்பட்ட சண்டை அதன் மூலமாக முன்விரோதம் ஏற்பட்டு செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் புகுந்து ராஜேஷ் என்பவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
இறந்தவர் தேவேந்திரகுல வேளாளர் படுகொலை செய்தவர் திருநெல்வேலி தேவர் .

புளியங்குடி தங்க சாமி என்பவர் திருநெல்வேலி பாளையங்கோட்டை சிறைச்சாலையில் மரணம் .

கடையநல்லூர் மாவடிகால் பகுதியை சேர்ந்த சாமி என்பவரை நாடார் சமூகத்தினர் வெட்டி படுகொலை செய்தனர்.

தந்தையின் குடியின் கொடுமையால் எத்தனை குழந்தைகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டு உள்ளனர் குறிப்பாக விஷ்ணு பிரியா, இலக்கியா போன்றவர்கள்.

கணவனின் குடி கொடுமையால் எத்தனை மனைவிகள் தற்கொலை செய்து உள்ளனர்

குடியின் கொடுமையால் எத்தனை கொடூர கொலைகள் .இதற்கு காரணமான இந்த விடியாத விடியல் அரசு பற்றி ஒரு ஒப்பாரி யாவது எந்த மீடியாவாது வச்சு பார்த்திருக்கீங்களா ?

பள்ளிக் கல்லூரி குழந்தைகள் சுதந்திரமாக சென்று விட்டு வீட்டுக்கு வர முடியவில்லை .பெண் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு பெற்றோர்கள் அடிவயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு தினந்தோறும் அவஸ்தை படுகின்ற அவலநிலையே உள்ளது .

ஆண் பிள்ளைக்கு எவராவது மது, கஞ்சா, போதை மாத்திரை, போதை வஸ்துக்களை கொடுத்து கெடுத்து விடுவார்களோ என்ற அச்சம் அனைத்து பெற்றோர்கள் மனதிலும் குடி கொண்டுள்ளது .

தன் பெண் பிள்ளையை யாராவது ஏதாவது செய்து விடுவார்களோ என அச்சத்திலேயே வாழ்ந்து வருகிறார்கள். பெண் பிள்ளையை பெற்ற பெற்றோர்களும், ஆண் பிள்ளையைப் பெற்ற பெற்றோர்களும்,எவரும் நிம்மதியாக சந்தோசமாக இருக்க முடியாத ஒரு சூழல் தமிழகத்தில் தலை விரித்து ஆடுகிறது.

லட்சக்கணக்கான காவல்துறையினர்கள் பாதுகாப்பு பணியில் இருந்து என்ன பயன் ? அவர்களும் சாதியாகவும், மதமாகவும் ,இனமாகவும், மொழியாகவும் உழன்டு கொண்டுதான் பணி செய்கிறார்கள்.

காவல்துறையில் பல்வேறு உளவு பிரிவுகள் இருந்து என்ன பயன் ? எந்தப் பிரச்சினையும் வரும் முன் தடுக்கப்பட்டு இருக்கிறதா ? அப்படி தடுக்கப்பட்டதாக எந்த சம்பவங்களும் இல்லை .இப்படிப்பட்ட ஒரு கொடூர சூழலில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் .

காவல்துறை கண்ணும் கருத்துமாக இருந்திருந்தால் தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகளை நடக்காமல் தடுத்திருக்க முடியும் ஆனால் காவல்துறையினர் அலட்சியமாகவும் மெந்தன போக்கோடும் சாதிய திமிரோடும் ,சாதிய பார்வையோடும் எதையும் அணுகுவதால் தான் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதைக் காவல்துறையினர்கள் உணராத வரை இது போன்ற சமூக சீரழிவுகளும், பேராபத்துகளும் தொடரத்தான் செய்யும்.

தமிழகத்தில் நடைபெறுகின்ற அனைத்து குற்ற செயல்களுக்கும் அடிப்படை காரணமாக அமைவது டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் உள்ள 5500 க்கும் மேற்பட்ட அனைத்து டாஸ்மாக் கடைகளையும் இழுத்து மூட வேண்டும். 19 மது உற்பத்தி ஆலைகளையும் இழுத்து மூட வேண்டும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும். டாஸ்மாக் மூலம் ஒரு லட்சம் கோடி ஊழல் புரிந்த செந்தில் பாலாஜி மற்றும் முதல்வர் குடும்பத்தினர்கள் மீது வழக்கு தொடுக்க வேண்டும் . என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் எண்ணிலடங்காத படுகொலைகள் நடந்தேறிய போதும்,தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது என்று ஸ்டாலின் மேடைக்கு மேடை முழங்குகிறார் என்றால் மேற்குறிப்பிட்ட படுகொலைகள் தமிழகத்தில் நடக்காமல் வேற மாநிலத்தில் நடந்ததா? என்பதை முதல்வர் அவர்கள் மக்கள் மன்றத்திடம் பதில் சொல்ல வேண்டும். இல்லையென்றால் அனைத்து படுகொலைக்கும் தானே பொறுப்பேற்று பதவி விலக வேண்டும். என்பதுதான் தமிழக மக்களின் பேராவலாக உள்ளது.
வாழையூர் குணா