சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உடனடித் தேவை ’கார்’ அல்ல; காரியாலயம்!

அறிக்கைகள்
s2 0 Views
785979798 916408931081999 4199489041881773539 N (1)
Published: 24 Aug 2026

Loading

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உடனடித் தேவை ’கார்’ அல்ல; காரியாலயம்!
…………………………………………..

சில சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் கார் வழங்கும் திட்டம் ’110 விதியின் கீழ்’ சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இத்திட்டத்திற்கு கடும் கண்டனங்கள் எழுகின்றன. எதையும் ஆராயாமல் திட்டங்களை அறிவிக்கும்போது இவ்வாறே நிகழும்.
தொகுதி முழுக்கப் பயணம் செய்து மக்கள் குறைகளைக் கேட்க இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் வாகனம் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அந்த வசதிகூட இல்லாதவர்கள் எத்தனை பேர் என்பதே முக்கியம்.
தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ள பொழுது, இத்திட்டம் ஆடம்பரமானது அல்லது ஊதாரித்தனமானது என்றே விமர்சிக்கப்படுகிறது. ஆனால், 200 முதல் 300 கிராமங்கள் உள்ள தங்கள் தொகுதி மக்களின் தேவைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க “ஒரு நிர்வாக அலுவலகம்” தேவை என்பதை ஏன் எந்த சட்டமன்ற உறுப்பினரும் வலியுறுத்தவில்லை எனத் தெரியவில்லை.
சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சராகிவிட்டால் அவர்களின் அதிகாரம் தமிழக அளவில் பரவுகிறது. ஆனால், சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற ஒவ்வொரு அலுவலகப் படிக்கட்டுகளிலும் ஏறி இறங்கும் நிலையே உள்ளது.
எனவே, சட்டமன்ற உறுப்பினர்கள் மதிப்பும் மரியாதையோடும் சுதந்திரமாகவும் தங்களது சட்டமன்றத் தொகுதிக்குள் கடமையாற்ற தேவைப்படுவது குறைந்தபட்சம் ”ஒரு தட்டச்சர் (Typist), உதவி பி.டி.ஓ (Assistant BDO), துணை வட்டாட்சியர் (Deputy Tahsildar), ஒரு பொறியாளர் (Assistant Engineer) உள்ளடங்கிய தனிக் காரியாலயம் – நிர்வாக அலுவலகமே! – கார் அல்ல!

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
24.08.2026