’சென்னை’ என்பது மாற்றப்பட்டு மீண்டும் ‘மதராஸ்” என்ற அதன் பூர்வீக தமிழ்ப் பெயரிலேயே அழைக்கப்படுமா?

1639 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழகத்தின் தலைநகரமான ’சென்னை’ இன்று தனது 382 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஏறக்குறைய 80 லட்சம் மக்கள் தொகை கொண்ட ’சென்னை மாநகரம்’ இந்தியாவின் ஐந்தாவது பெரிய நகரமாகும். ’சென்னை’ துவக்கக் காலத்தில் ’மதராசப்பட்டிணம்’ என்ற மீனவக் கிராமமாக இருந்தது.
இந்தியாவிற்குள் வாஸ்கோடாகாமா மற்றும் அதைத் தொடர்ந்து பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்களின் வருகை காரணமாக இந்நகரம் முக்கியத்துவம் பெற்றது. சென்னை பகுதி ஆங்கிலேயர் வசம் வந்த பிறகு, கிழக்கிந்தியக் கம்பெனி முதலில் சூரத், பின் ஆந்திர மாநிலம்-மசூலிப்பட்டிணம், பின் கல்கத்தா அடுத்தபடியாக தனது ஆளுகை மையமாகத் தேர்ந்தெடுத்த இடம் தான் ’MADRAS–மெட்ராஸ்’ என அழைக்கப்படும் ’சென்னை மாநகரம்’. தன்னுடைய அரசியல் பிராந்திய தலைமை இடமாகவும், இராணுவ கேந்திரமாகவும் விளங்கிய காரணத்தினால் கிழக்கிந்திய கம்பெனி சென்னை பன்முகத் திறன் வளர்ச்சி அடைய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன் காரணமாக சென்னையில் துறைமுகம், விமான நிலையம், இராணுவ தளம், மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகள், அதே போல தமிழகத்தின் பிற பகுதிகளையும், அண்டை மாநிலங்களை இணைக்கும் வகையில் சாலை வசதிகள் போன்ற பல கட்டுமான வசதிகள் உருவாக்கப்பட்டன.
பூர்வீகமாக இன்று இருக்கக்கூடிய கோட்டை மற்றும் வடக்குப் பகுதிகளே சென்னையின் துவக்க காலப் பகுதிகளாகும். அதைத்தொடர்ந்து திருவொற்றியூர், திருவான்மியூர், திருமயிலை போன்ற பல கிராமப் பகுதிகளை இணைத்து ’மதராசன்’ என்ற தமிழ் மீனவரின் பெயரைத் தாங்கி ’மெட்ராஸ்’ என்று பன்னெடுங்காலம் அழைக்கப்பட்டு வந்தது. அதன் பின் அப்பகுதிகள் விஜயநகரப் பேரரசின் தளபதியாக விளங்கிய தெலுங்கு ஆட்சியாளரான ’சென்னப்ப நாயக்கரின்’ ஆட்சிக்குட்பட்டதால் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ’சென்னைப் பட்டினம்’ எனவும் அழைக்கப்பட்டு வந்தது.
1998-ல் பெரும்பாலான மாநிலங்களில் பெயர் மாற்றம் நிகழ்ந்த போது ’மெட்ராஸ்’ என்ற பெயரும் மாற்றம் செய்யப்பட்டது. ’மெட்ராஸ்’ – ’MAD – RAJ’ என்பது ஆங்கிலத்தில் ’ரவுடிகளின் இராஜ்ஜியம்’ என்ற பொருள் பட்டதால் ’மெட்ராஸ்’ என்ற பெயர் நீக்கப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டது. உண்மையில் அது அந்த மீனவக் கிராமத் தலைவரின் தமிழ்ப் பெயரே. ஆனால் ’மெட்ராஸ்’ என்பதை ஆங்கிலேயர் வைத்ததாகவும்; தெலுங்கு விஜயநகரப் பேரரசின் தளபதியான சென்னப்ப நாயக்கரைக் குறிப்பிடும் வகையில் ’சென்னைப் பட்டிணம்’ என சில காலம் அழைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டு ‘மதராஸ்’ என்ற அழகான தமிழ்ப் பெயர் நீக்கப்பட்டு ’சென்னை’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அந்த தவறு எப்போது நிவர்த்தி செய்யப்படும் எனத் தெரியவில்லை?
ஆனால், சென்னை தற்போது அதன் வளத்திலும், தரத்திலும் பன்மடங்கு உயர்ந்து ஏறக்குறைய 80 லட்சம் மக்களின் வாழ்விடமாகவும், தமிழகத்தின் அடையாளமாகவும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் இடமாகவும் மாறி இருப்பதில் மகிழ்ச்சி. ஆனால், திராவிட அடையாளப் பெயரான ’சென்னை’ என்பது மாற்றப்பட்டு, மீண்டும் “மதராஸ்’ என்று அதன் பூர்வீக தமிழ்ப் பெயரிலேயே அழைக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான தமிழ் மக்கள், தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,
நிறுவனர்& தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
22.08.2021