பெட்ரோல் – டீசல் – காஸ் அநியாய விலை உயர்வு! மத்திய, மாநில அரசுகள் வரிகளைக் குறைத்தால் ரூ 65-65-650 க்கு விற்க முடியும்!

அறிக்கைகள்
s2 202 Views
  • Dr K Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr K Krishnasamy
Published: 21 Aug 2021

Loading

பெட்ரோல் – டீசல் – காஸ் அநியாய விலை உயர்வு!

எண்ணெய் – மக்களின் எண்ணக் கிடங்குகளில் நெருப்பைப் பற்ற வைப்பதற்குச் சமம்!

மத்திய, மாநில அரசுகள் வரிகளைக் குறைத்தால் ரூ 65-65-650க்கு விற்க முடியும்!

ஏழு தினங்களுக்கு முன்பு, சமையல் காஸ் விலையை மத்திய அரசு சிலிண்டருக்கு ரூபாய் 25 உயர்த்தி இருக்கிறது. துவக்கத்தில் ரூபாய் 150 ஆகவும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை ரூபாய் 300 ஆகவும் இருந்த காஸ் சிலிண்டர்களின் விலை பன் மடங்கு உயர்ந்து 900 ரூபாயை நெருங்கிவிட்டது. வசதி படைத்தவர்களைக் காட்டிலும் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள் தான் காஸ் சிலிண்டரை சமையலுக்குப் பெரிதும் பயன்படுத்தி வருகிறார்கள். கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் அண்மை காலம் வரையிலும் விறகு, மாட்டுச் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் வறட்டி மற்றும் மண்ணெண்ணெய் போன்ற பொருட்களே எரி பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. இதன் காரணமாக சமையல் என்பதே பெரும் சுமையாகவும், குறிப்பாக பெண்கள் அடுப்புக்குள்ளேயே அதிக நேரம் முடங்கியும், அதனால் அவர்கள் உடல்நிலை பாதிப்பதுடன் அவர்களுடைய சுதந்திரமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. பெரும்பாலும் பெண்களின் வாழ்க்கை இதனால் அடுப்படியிலேயே முடங்கி போயிற்று.

காஸ் சிலிண்டர்களின் வருகை கிராமம் முதல் நகர் வரையிலும் ஒரு புரட்சியை உருவாக்கியது. குறைந்த செலவில் அதிக புகை இல்லாமல் சமையல் செய்ய முடிந்தது. இதன் காரணமாக ‘பெண்கள்’ என்றாலே சமைக்கத்தான் என்ற நிலைகள் மாறி பணிக்குச் செல்லவும்; வருமானத்தை ஈட்டவும்; வீட்டில் இருக்கும் முதியோர்கள், குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்தவும் முடிந்தது. எதனால் சமையல் செய்யும் சுமை குறைந்தது என்று துவக்கத்தில் கருதப்பட்டதோ அதன் விலை நாளுக்கு நாள் அதிகமாகி வருவதும், தங்களது வருமானத்தில் பெரும்பகுதியை காஸ் சிலிண்டர்களுக்கு செலவழிப்பதும் ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களுக்கு புதிய பிரச்சனையாகவும், பெரும் சுமையாகவும் உருவெடுத்துள்ளது.

கடந்த இரு வருடங்களாக கரோனா தாக்குதல் காரணமாக வேலை வாய்ப்புகள் இல்லை. வேலை வாய்ப்புகள் இருந்தாலும் கால் சம்பளம், அரை சம்பளம் என்ற நிலைதான். அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலைகளும் பன்மடங்கு உயர்ந்து விட்டன. இந்த நேரத்தில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ரூ 50, ரூ 100 என காஸ் சிலிண்டரின் விலை கிடுகிடுவென உயர்த்தப்படுவதால் சமையல் காஸை பயன்படுத்தலாமா? வேண்டாமா? என்ற மோசமான நிலைக்குக் கோடான கோடி குடும்பங்களும், பெண்களும் தள்ளப் பட்டிருக்கின்றனர். இதனால் குடும்ப பெண்களின் நிலைமை மீண்டும் பழைய நிலைக்கே திரும்பும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

அதேபோல பெட்ரோல், டீசல் விலைகளும் நாளுக்கு நாள் தாறுமாறாக உயர்ந்து கொண்டே போகின்றன. ஒரு காலத்தில் கார்களும், இரு சக்கர வாகனங்களும் சொகுசு வாகனங்களாக கருதப்பட்டன. இன்றைய காலகட்டத்தில் இருசக்கர வாகனங்களும், சிறிய அளவிலான கார்களும் ஒவ்வொரு குடும்பங்களின் அடிப்படைத் தேவையாக மாறி விட்டன. ஒரு வீட்டில் இருவர் வெவ்வேறு நிறுவனங்களுக்கு பணிக்குச் செல்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு வாகனங்கள் கண்டிப்பாக அவசியமாகிறது. பெரும்பாலும் இருசக்கர வாகனங்கள் பெட்ரோலிலும்; கார், பேருந்து போன்ற பெரும்பாலான நான்கு சக்கர வாகனங்கள் டீசலிலும் இயங்குகின்றன.

வீட்டில் பயன்படுத்தப்படும் காஸ்; இருசக்கர வாகனங்களுக்கு பயன்படும் பெட்ரோல்; காய்கறி முதல் அனைத்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும், வேளாண்மைக்கு அதிகம் பயன்படுத்தும் ட்ராக்டர்களுக்கும் பயன்படும் டீசல் போன்றவற்றின் விலை உயர்வால் போக்குவரத்து, வாடகை செலவுகள் அதிகமாகி அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்வதால் ஒவ்வொரு குடும்பமும் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றன.

”கையில வாங்கினேன் பையில போடல, காசு போன இடம் தெரியல” என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் பாடியதை போல இப்போது ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அனைவரும் காஸ் மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக தங்களது வருமானம் முழுமையும் இழப்பது மட்டுமின்றி, கடனாளிகளாகும் நிலைக்கும் தள்ளப்படுகிறார்கள். மக்களின் இந்த பெரும் துயரங்களை எல்லாம் சிறிது கூட கண்டுகொள்ளாமல் மத்திய, மாநில அரசுகள் தங்கள் அரசாங்கத்தை நடத்துவதற்கு அரசின் வருவாயைப் பெருக்கப் பல வழிமுறைகளையும் கடைப்பிடிப்பதற்கு மாறாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் மீது மட்டுமே அதிக வரி விதிக்கும் குறுக்கு வழியைக் கையாள்வது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல.

சில வருடங்களுக்கு முன்பு வரையிலும், சர்வதேசச் சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 140 டாலர் வரையிலும் கூட சென்று இருக்கிறது. ஆனால், இன்றைய கணக்கின் படி ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 60-65 டாலர்களாக உள்ளது. சர்வதேச சந்தையில் பேரலுக்கு ஒரு டாலர் குறைந்தால் 1 லிட்டர் டீசலின் விலையில் 50 பைசா குறைக்கலாம். அந்த கணக்கின் படி, பெட்ரோல், டீசல் ரூ 65 க்குள்ளும், காஸ் சிலிண்டரை ரூ 650 க்குள்ளும் விற்க முடியும். ஆனால் அந்த பலன்களை நேரடியாக மக்களுக்குத் தராமல் மத்திய, மாநில அரசின் வருவாய்களைப் பெருக்க நினைப்பது எவ்விதத்தில் நியாயம்?

ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ 100 என்று வைத்துக் கொண்டால் மத்திய, மாநில அரசுகள் போட்டிப் போட்டு வரி விதித்து ரூ 36-ஐ மத்திய அரசும், ரூ 24-ஐ மாநில அரசும் மொத்தம் ரூ 60-ஐ எடுத்துக் கொள்கின்றன. மீதமுள்ள ரூ 40-ல், ரூ 36 எண்ணெய் கம்பெனிகளுக்கும், ரூ 4 பெட்ரோல் விற்பனையாளர்களுக்கும் செல்கின்றன. மத்திய அரசினுடைய எக்சைஸ் வரி 90-94% வரை பெட்ரோல், டீசல் விற்பனையிலிருந்து மட்டுமே எடுக்கப்படுகிறது என்பது ஒரு வளர்ந்து வரும் நாட்டில் ஏழை, எளிய மக்கள் மீது தொடுக்கப்படும் போர் என்றே கருத வேண்டியுள்ளது. ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் வரிவிதிப்பால் வரும் வருவாயைக் கொண்டு மட்டுமே அரசை நடத்த மத்திய, மாநில அரசுகள் எண்ணக்கூடாது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாறி மாறி மத்திய, மாநில அரசுகள் ஒருவரை ஒருவர் குறை சொல்லி பழியைப் போட்டுத் தப்பித்துக் கொள்ளும் முயற்சிகள் நீண்ட நாட்களுக்குப் பயன் தராது. பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவதன் மூலம் அதன் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுப்புறச்சூழலைப் பாதுகாக்கப் போகிறோம் என்று சொல்லுவது ‘கொக்கு தலையில் வெண்ணெயை வைத்து, அது உருகிய பின் கொக்கை பிடிப்பதற்குச் சமமானதே’ தவிர, அது உடனடி செயலுக்கு உதவாது. பசுமை வாயுக்களை (Green Gases) குறைத்து சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க ஹைட்ரஜன் போன்ற அதிநவீன எரிபொருள்கள் முழுமையாக வாகன பயன்பாட்டுக்கு வரும் வரையிலும் பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்க இயலாது.
காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வுகள் அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியையும் முடக்கியிருக்கிறது. அதன் விளைவாக மக்கள் மத்தியில் கடும் கோபம் உருவாகி வருகிறது. மக்கள் எப்படியும் காஸ், பெட்ரோல், டீசலை பயன்படுத்தித் தான் தீர வேண்டும் என்று கருதி எரிவாயு, எண்ணெய் பொருட்கள் மீதான வரிகளைத் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்வது அரசே மக்களைக் கொள்ளையடிப்பதற்கு சமமாகும். எனவே, மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து காஸ், பெட்ரோல், டீசல் விலையைக் கணிசமாகக் குறைக்க வரி குறைப்பு மற்றும் பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வருவது போன்ற உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.

மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது அரசுகளின் கடமை. ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையோடு மத்திய, மாநில அரசுகள் விளையாடக் கூடாது. எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவதற்கும், எரியும் தறுவாயில் உள்ள எண்ணெய்யில் நெருப்பைப் பற்ற வைப்பதற்கும் வித்தியாசம் உண்டு. இப்போது காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழை, எளிய மக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பற்றிக் கொள்ளும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளைப் போல இருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் விலையை ஏற்றி மக்களின் எண்ணக் கிடங்குகளில் நெருப்பைப் பற்ற வைத்து விடாதீர்கள். மக்களை ஏமாளிகள் என்றும் எண்ணி விடாதீர்கள்!

பெட்ரோல் – டீசல் – காஸ் அநியாய விலை உயர்வு!

எண்ணெய் – மக்களின் எண்ணக் கிடங்குகளில் நெருப்பைப் பற்ற வைப்பதற்குச் சமம்!

மத்திய, மாநில அரசுகள் வரிகளைக் குறைத்து ரூ 65-65-650 க்கு விற்க நடவடிக்கை எடுப்பார்களா? அல்லது மக்களின் கோபத்திற்கு ஆளாவார்களா?

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
21.08.2021