முன்னேறிய தமிழகம் தடுப்பூசி போடுவதில் பின் தங்கியது ஏன்? – டாக்டர் கிருஷ்ணசாமி
அரசியலுக்கு எதை எதைப் பயன்படுத்த வேண்டும்? என்ற சுய சிந்தனை கூட இல்லாமல் தமிழகத்தின் பெரும்பாலான அரசியல்வாதிகளும், திரைப்படத் துறையினரும், சமூக ஆர்வலர்கள் என்று செயல்படக்கூடியவர்களும், சில ஊடகங்களும், மத்திய அரசுக்கு எதிரான சில மதவாத குழுக்களும் ஒன்றிணைந்து மத்திய அரசு எதைக்கொண்டு கொண்டு வந்தாலும், அதை கண்மூடித்தனமாக எதிர்ப்பது என்ற போக்கை கையாண்டு தடுப்பூசிக்கு எதிராக மக்கள் மத்தியில் அவதூறு பிரச்சாரத்தைக் கட்டமைத்து விட்டார்கள்.
333 Views
![]()
2019 ஆம் ஆண்டு இறுதியில் துவங்கி, 2020 ஆம் ஆண்டு முழுமைக்கும் கரோனா பெருந்தொற்று உலகத்தையே ஆட்டிப் படைத்தது. நூறு வருடங்களுக்கு முன்பு, உலக அளவில் அதிக உயிர்ப் பலி கொண்டது ‘ஸ்பானிஷ் ப்ளு” ஆகும். அதன் பின், கரோனா பெருந்தொற்றால் மட்டுமே பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கரோனா வைரஸ் கிருமியைக் கொல்லுவதற்கு இதுவரையிலும் மருந்துகள், மாத்திரைகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் நோயைத் தடுப்பது ஒன்றே தீர்வாக கருதப்பட்டது. தடுப்பு என்று வருகின்ற போது முகக் கவசம் அணிவது; அடிக்கடி சோப்பு மற்றும் சானிடைஷர்களை பயன்படுத்தி கைகளைக் கழுவுவது; தனிமனித இடைவெளியை அதிகரிப்பது; ஒவ்வொருவரின் உடலிலும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பது; தடுப்பூசி போட்டுக் கொள்வதும் ஆகும். உருமாறிய கரோனா என்பதால் தடுப்பூசிகள் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகையால் உலகின் பெரும்பாலான நாடுகள் தடுப்பூசியைக் கண்டு பிடிப்பதில் தீவிரம் காட்டினர். இதில் இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் நிறுவனத்துடன் மிகக் குறைவான பின்விளைவுகளுடன், அதிக அளவில் நன்மையைத் தரும் தடுப்பூசியை சீரம் நிறுவனம் ’கோவீசில்டு’ என்ற தடுப்பூசியையும், பாரத் பயோடெக் நிறுவனம் மத்திய அரசு உதவியுடன் “கோவாக்சீன்” என்ற தடுப்பூசியையும் அறிமுகம் செய்தன. ஜனவரி மாதம் 18 ஆம் தேதி முதல் முன்கள பணியாளர்களுக்கும்; அதன்பின் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும், மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி போடும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டன.
இந்தியாவிலேயே கல்வி மற்றும் தொழிலில் பின்தங்கிய மாநிலங்கள் என்று சொல்லப்படும் வடக்கு மாநிலங்களான சட்டீஸ்கர், இமாச்சலப் பிரதேஷ், உத்ரகாண்ட், குஜராத், இராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், ஹரியானா போன்ற மாநிலங்களிலும்; அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஒரிசா போன்ற மாநிலங்களிலும் 50 முதல் 75 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், சற்று ஏறக்குறைய 20 சதவீதத்திற்கும் மேலானோருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு விட்டது. ஆனால் 50 சதவீதத்திற்கு மேல் உயர்கல்வி பெற்ற, தொழிலில் முன்னேறிய, சமூக விழிப்புணர்வு என பல அடையாளங்களைக் கொண்ட தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவு வெறும் 20 சதவீதத்திற்குக் குறைவானோரே முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
அரசியலுக்கு எதை எதைப் பயன்படுத்த வேண்டும்? என்ற சுய சிந்தனை கூட இல்லாமல் தமிழகத்தின் பெரும்பாலான அரசியல்வாதிகளும், திரைப்படத் துறையினரும், சமூக ஆர்வலர்கள் என்று செயல்படக்கூடியவர்களும், சில ஊடகங்களும், மத்திய அரசுக்கு எதிரான சில மதவாத குழுக்களும் ஒன்றிணைந்து மத்திய அரசு எதைக்கொண்டு கொண்டு வந்தாலும், அதை கண்மூடித்தனமாக எதிர்ப்பது என்ற போக்கை கையாண்டு தடுப்பூசிக்கு எதிராக மக்கள் மத்தியில் அவதூறு பிரச்சாரத்தைக் கட்டமைத்து விட்டார்கள்.
குறிப்பாக ஒரு நடிகர் இறந்த பிறகு, அவர்கள் செய்த பிரச்சாரத்தால் மக்கள் தடுப்பூசி போட அச்சமுற்றனர். அதன் காரணமாகவே இப்போது தினமும் 30,000 முதல் 40,000 பேர் கரோனாவால் பாதிப்படையும் நிலை உருவாகியுள்ளது. விலைமதிப்பற்ற அந்த தடுப்பூசி தமிழகத்தில்தான் அதிக அளவு விரயமாக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. எதில் அரசியல் செய்ய வேண்டும்? செய்யக் கூடாது? என்று ஒரு நெறிமுறை உண்டு. மோடி அரசை எதிர்க்க ஆயிரமாயிரம் காரணங்கள் உண்டு. அதையெல்லாம் விட்டுவிட்டு இலட்சக்கணக்கில் இந்தியக் குடிமக்களின் வாழ்வோடு விளையாடியதே, இன்று தமிழகம் கரோனாவிடம் சிக்கித் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.
இனியாவது, தமிழகத்தில் அனைவரும் பொறுப்புடன் ஒருங்கிணைந்து, அரசியல் வேறு, மக்கள் நலன் வேறு என்பதை உணர்ந்து, கரோனா தடுப்பூசிகளுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் பிரச்சாரத்தை தவிர்த்து, மக்கள் மத்தியில் தடுப்பூசியின் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மக்கள் இயக்கமாகக் கொண்டு செல்ல வேண்டுகிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
13.05.2021






