தேசிய கரோனா அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்க வேண்டி இந்திய ஜனாதிபதி, பாரத பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம்.
304 Views
![]()
இந்தியாவில் தேசிய கரோனா அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்க வேண்டி இந்திய ஜனாதிபதி, பாரத பிரதமர், உள்துறை அமைச்சர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு தனித்தனி கடிதம்.
பெறுநர்:
மேதகு நரேந்திர மோடி அவர்கள் ,
பாரதப் பிரதமர்,
பாரதப் பிரதமர் அலுவலகம்,
புது தில்லி – 110011.
பெருமதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்!
டாக்டர் க.கிருஷ்ணசாமி ஆகிய நான் முதுநிலை மருத்துவ பட்டம் பெற்ற மருத்துவர். தமிழகத்தில் புதிய தமிழகம் எனும் அரசியல் கட்சியின் தலைவராக விளங்கி; ஏழை, எளிய, விளிம்பு நிலை மக்களின் சமத்துவம் – சம உரிமைக்காகவும் போராடி வரக்கூடியவன். மேலும் தொடர்ந்து தங்களது அரசின் பல்வேறு நல்ல திட்டங்களை வெளிப்படையாக பாராட்டக்கூடிய தமிழக அரசியல்வாதிகளில் முதன்மையானவன். தங்கள் அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துகளுக்கான 370 சரத்து ரத்து, நீட் தேர்வு அமலாக்கப்பட்டது போன்ற காலகட்டங்களில் தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் வந்தபோது, தனி ஆளாக நின்று தங்களது அரசுக்கு உற்ற துணையாக விளங்கினேன். 2020, மார்ச் மாதத்தில், அரசு அறிவித்த கரோனா முழு முடக்கக் காலத்தில் பல்வேறு நல்ல திட்டங்களின் சிறப்பம்சங்கள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்கியுள்ளேன்.
வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளில் இலட்சக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாக மரணம் எய்திய பொழுது, தங்களது அரசு இந்தியாவில் கரோனாவை கட்டுக்குள் வைத்து, மரண எண்ணிக்கையை வெகுவாக குறைத்தீர்கள். 2021 மார்ச், ஏப்ரல் மாதங்களில் கரோனா முற்றாகத் துடைத்தெறியப்படும் என்று கோடான கோடி மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு மெல்ல மெல்ல அதிகரித்த கரோனா இப்போது இந்தியா முழுமைக்கும் உச்சத்தை தொட்டு இருக்கிறது. வரக்கூடிய காலகட்டங்களில் இன்னும் அதிகரிக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது.
2020 மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட முழு முடக்க கட்டுப்பாடுகளுக்கு இந்தியா முழுமைக்கும் வணிகம், தொழில் நிறுவனங்கள் உட்பட அனைவரும் பூரண ஒத்துழைப்பு நல்கினார்கள். ஆனால், கரோனா வேகமாக பரவிக் கொண்டிருந்த அக்கால கட்டத்தில் அதைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் இந்தியத் தேர்தல் ஆணையம் பீகார் தேர்தலை நடத்தியது. அதை தொடர்ந்து 2021, பிப்ரவரி 26 ஆம் தேதி 5 மாநில தேர்தல் தேதியையும் அறிவித்தது. அதன் காரணமாக அரசியல் கட்சிகள் தங்களுடைய பிரச்சார கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான மக்களை வீட்டிலிருந்து வீதிக்குக் கொண்டு வந்து சேர்த்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட எவரும் முக கவசம் அணியவில்லை; சமூக இடைவெளியையும் கடைப்பிடிக்கவில்லை; கிருமி நாசினிகளையும் பயன்படுத்தவில்லை. அதன் விளைவாக இப்போது தமிழ்நாட்டில் தினமும் 30,000க்கும் மேற்பட்டோர் கரோனா பாதிப்புக்கு ஆளாகி மருத்துவமனைகளில் குவிகின்றனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு; உரிய மருந்து, மாத்திரைகள் பற்றாக்குறை, இறந்தவர்களின் சடலங்களைக் கூட முறையாகப் புதைக்கவோ, எரியூட்டவோ கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தியா முழுமைக்கும் இதுபோன்ற அவலநிலைகள் ஏற்பட்டிருப்பது மிகவும் கவலை அளிக்கிறது.
நமது பாரத தேசத்தின் தலைநகரான டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரே நாளில் 20 பேர் மாண்டு போகும் அபாய நிலை ஏற்பட்டது. அதே நிலை ஆந்திரா, கர்நாடகா, பீகார் போன்ற பல மாநில தலைநகரங்களிலும் ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் தேதி முதல் முன் களப் பணியாளர்களுக்கும், அதை தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டோர், 18 வயதுக்கு மேற்பட்டோர் என மே 1 முதல் தடுப்பூசி போடும் நிகழ்ச்சிகள் துவக்கப்பட்டது. ஆரம்பத்தில் தடுப்பூசிப் போட ஆர்வம் காட்டாத மக்கள், இப்போது ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், தடுப்பூசி எந்த மருத்துவமனைகளிலும் இல்லை. எங்குப் பார்த்தாலும் மரண ஓலங்களும், அச்சமும், பீதியும் அனைவரிடத்திலும் நிலவுகிறது. எல்லா மாநில அரசுகளும் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன.
கடந்த ஆண்டு எல்லா நாடுகளுக்கும் உதவிக்கரம் நீட்டிய நமது பாரதம் தலை நிமிர்ந்து நின்றது. இன்று ஆக்சிஜன், வென்டிலேட்டர், தடுப்பூசிகள் போன்றவைகளுக்கு மற்றவர்களை நாம் எதிர்பார்த்து, தலை குனிந்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தேசத்தின் கௌரவம் பல படிகள் இறங்கி விட்டதாகவே நான் கருதுகிறேன். மிகவும் முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் தங்களுடைய பிரஜைகளுக்கு மட்டும் தடுப்பூசியைப் பயன்படுத்தினார்களே தவிர, வேறு எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யவில்லை. 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா முதல் தவணை தடுப்பூசியை கூட நிறைவேற்ற முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறோம். இரண்டாம் அலை வரும் என்று மருத்துவ நிபுணர்கள் கொடுத்த எச்சரிக்கையை உதாசீனப்படுத்தியதன் விளைவு இப்போது கரோனா இந்திய மக்களைச் சீர்குலைக்கிறது. நகரங்கள் முதல் கிராமங்கள் வரை எதிலும் வேறுபாடு இல்லாமல் அனைவரிடத்திலும் கரோனா பரவுகிறது; தாக்குகிறது. கடந்த காலத்தைப் போல காய்ச்சல், தலைவலி, இருமல் போன்ற அறிகுறிகள் இல்லாமல், வெறும் சோர்வு என்ற அறிகுறியுடன் மட்டும் 50 சதவீதத்திற்கு மேற்பட்டோர் அதிகமான நுரையீரல் பாதிப்புகளோடு மருத்துவமனையில் குவிகிறார்கள். கரோனா வந்த துவக்கத்தில் சீன நாட்டில் வூகான் நகரிலும் இப்படித்தான் பல மக்கள் மருத்துவமனையில் குவிந்தார்கள்.
கரோனாவால் தாக்குண்டவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல போதுமான ஆம்புலன்ஸ் வசதியும் இல்லை. மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதியும் இல்லை. ஆகையால் பல மணி நேரம் ஆம்புலன்சில் காத்திருக்கும் நிலை; மரங்களுக்குக் கீழேயும், மருத்துவமனை வறண்டாக்களிலும் மக்கள் கிடக்கும் அவலநிலை அதிகரித்து உள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை; மருந்து, மாத்திரை தட்டுப்பாடு என்று பலவழிகளிலும் மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகுகிறார்கள். ஆக்ஸிஜன் தட்டுப்பாடுகளால் மருத்துவமனையில் ஏற்படும் உயிரிழப்புகள், இறந்தவர்களின் உடல்களை எரியூட்டக் கூட முடியாமல் உடல்கள் ஆறுகளில் வீசப்படும் நிலைகள் இந்திய மக்களிடத்தில் என்றுமில்லாத அளவிற்கு மிகப்பெரும் மனதாக்கத்தையும், தங்கள் அரசின் மீது பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் இந்தியா மீதான நன்மதிப்பு குறைகிறது.
அதிகாரம் பரவலாக்கப்படும் என்ற அடிப்படையில் எத்தனை மாநிலங்கள் வேண்டுமானாலும் உருவாக்கப்படலாம். ஆனால் அரசு என்றால் அது மத்திய அரசுதான். மாநில அளவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் கீழ் ஆட்சி அதிகாரம் இருக்கலாம். ஆனால், இது அரசியல் பார்த்துச் செயல்பட வேண்டிய நேரமல்ல, அரசியலுக்கு அப்பாற்பட்டுச் செயல்பட வேண்டிய நேரம். வெறும் முழக்கங்களால் மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைக்க முடியாது. பிற நாடுகளோடு போர் வந்தால் மட்டும்தான் ஓரணியில் திரள வேண்டும் என்று பொருளல்ல. இப்போது இந்தியத் தேசத்தில் ஏற்பட்டுள்ள சூழல் போருக்கு ஒப்பானதே. பல நாடுகள் ஒன்றிணைந்து இந்தியா மீது தாக்குதல் தொடுத்தால் ஏற்படும் சூழலை விட, கரோனா என்ற பெருந்தொற்றால் நாம் அதிகமான பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறோம். இதை நவீன யுத்தம் என்றே கருத வேண்டும்.
ஊராட்சிகளாலும், நகராட்சிகளாலும், மாநகராட்சிகளாலும் அல்லது எந்தவொரு மாநில அரசுகளாலும் தனித்து கரோனாவை வெற்றி கொள்ள முடியாது. அனைத்து அதிகாரங்களையும் உள்ளடக்கியுள்ள இந்திய அரசு முழு சக்தியையும் பயன்படுத்தினால் மட்டுமே இன்றைய அசாதாரண சூழலிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும், கரோனாவை முற்றாக ஒழித்துக் கட்டவும் முடியும். அதை நிறைவேற்றுவதற்கு பல்வேறு நடைமுறை சவால்கள் இருப்பதை நான் அறிவேன். பல மாநிலங்களில் வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்ட அரசியல் கட்சிகளின் ஆட்சி நடைபெறுகின்றன. கடந்த ஆண்டு அது போன்ற ஒரு சூழல் இருந்த நேரம்தான் அனைத்து மாநிலங்களிலும் ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதைவிட இந்த ஆண்டு நிலைமை மோசமாக உள்ளதால், மத்திய அரசு வேறு ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என கருதுகிறேன். இப்போது கரோனாவை தேசிய பேரிடராக கருதி, இந்தியா முழுமைக்கும் “National Medical Emergency” அதாவது, ”தேசிய மருத்துவ அவசரநிலை பிரகடனம்” ஒன்றை அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த அவசிய பிரகடனத்தால் மட்டுமே மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை ஒரு புள்ளியில் கொண்டுவரமுடியும். மாநிலங்களை அலகாக (UNIT) கருதாமல், இந்தியா முழுமைக்கும் உள்ள மாவட்டங்களை அலகாக கருதினால், எளிதாக ஒருங்கிணைக்கவும் அதன் தேவைகளை அறிந்து விரைந்து மருத்துவ உபகரணங்களை அனுப்பவும் முடியும்.
அண்டை நாடான சீனா மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கலாம். ஆனால் அவர்கள் கட்டுப்படுத்திய கரோனாவை நம்மால் ஏன் கட்டுப்படுத்த முடியாது? அதேபோல இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் இலவசமாக மட்டுமே தடுப்பூசிகளைச் செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். ஒரு குறிப்பிட்ட கால வரையறையை நிர்ணயம் செய்து இந்தியாவில் கரோனா முற்றாக ஒழித்துக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக – இந்திய மக்கள் சார்பாக சில வேண்டுகோளை முன் வைக்கிறேன். மக்கள் நலனே பிரதானம் எனச் செயல்படும் தங்கள் அரசு இதை உடனடியாக நிறைவேற்றுவீர்கள் எனவும் நம்புகிறேன்.
1. கரோனாவை தேசிய பேரிடராக கருதி, இந்தியா முழுமைக்கும் “National Medical Emergency” அதாவது, இதை ஒரு தேசிய மருத்துவ அவசரநிலை பிரகடனமாக அறிவிக்க வேண்டும்.
2. இந்தியா முழுமைக்கும் மாநிலங்களை அலகாக (UNIT) கருதாமல், மாவட்டங்களை அலகாக கருதி, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
3. ஆம்புலன்ஸ், படுக்கை வசதிகள், ஆக்சிஜன், மருந்துகள், மாத்திரைகள் போன்ற மருத்துவ தேவைகள் நாடெங்கும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் மூலமும், ஆர்வமுள்ள பிற தனியார் நிறுவனங்கள் மூலமும் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
5. இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் இலவசமாக மட்டுமே தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும்.
6. இதைக் கண்காணிக்கத் தேசிய அளவிலும், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் ஒருங்கிணைந்த கண்காணிப்புக் குழுக்கள் (WAR ROOMS) 24 மணி நேரமும் செயல் பட வேண்டும்.
7. இது சிக்கலான காலகட்டம் என்பதால் ஏழை, எளிய நடுத்தர மக்கள்; சிறு வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு மாதந்தோறும் ரூபாய் பத்தாயிரம் வழங்க வேண்டும்.
8. இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரம் சீர்குலையும் என்பதால், ஊரடங்கை மட்டுமே தீர்வாகக் கருதாமல், பாதிக்கப்படும் பகுதிகளுக்கேற்ப கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட வேண்டும்.
9. முகக் கவசம் அணிவதையும், தடுப்பூசி போட்டுக் கொள்வதையும் உறுதிப்படுத்த ரேசன் கார்டு இரத்து, வாகன ஓட்டுநர் உரிமம் இரத்து போன்ற கடும் புதிய விதிமுறைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும்.
10. கரோனா முற்றாக ஒழிக்கப்படும் வரையிலும் மத்திய, மாநில அரசுகளுடைய இலவசத் திட்டங்களை இரத்து செய்துவிட்டு மக்களுடைய உயிரையும், உடைமைகளையும் பாதுகாப்பது, அவர்களுக்கு உணவளிப்பது போன்ற முக்கிய அத்தியாவசிய நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
11. மக்கள் மத்தியில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, கிருமிநாசினியைப் பயன்படுத்துவது, தடுப்பூசிகள் போடுவது குறித்து தேசிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து மத்திய, மாநில ஊழியர்களும்; பெரும் நிறுவன ஊழியர்களும்; அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களும், மாணவர்களும் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
12. இப்பொழுது ஏற்பட்டுள்ள கரோனா இரண்டாவது அலையை முறையாகக் கட்டுப்படுத்த தவறினால் இது நிரந்தரமாக இந்தியாவில் தங்கி விடுவதற்கான (ENDEMIC) வாய்ப்பு இருப்பதால், கரோனா இல்லா இந்தியா (CORONA FREE) என்ற நிலை ஏற்படும் வரை தேசிய மருத்துவ அவசரநிலை பிரகடனம் அமலில் இருக்க வேண்டும்.
நகல் :
1. மேதகு ராம்நாத் கோவிந்த் அவர்கள்,
இந்திய ஜனாதிபதி,
ராஷ்ட்ரபதி பவன்,
புது தில்லி – 110011
2. மேதகு அமித்ஷா அவர்கள்,
உள்துறை அமைச்சர்,
உள்துறை அமைச்சர் அலுவலகம்,
புது தில்லி – 110011.
3. மேதகு டாக்டர் ஹர்ஷ் வர்தன் அவர்கள்,
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்,
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அலுவலகம்.
புது தில்லி – 110011
தங்கள் அன்புடன்,
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
14.05.2021






