TNPSC குரூப் 2 & 2ஏ முறைகேடு சாதாரண தவறு அல்ல.! தேர்வை இரத்துச் செய்ய வேண்டும்.!
TNPSC குரூப் 2 & 2ஏ முறைகேடு சாதாரண தவறு அல்ல.!
மன்னிக்க முடியாத குற்றம்.!
இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்!
தேர்வு முறைகேட்டுக்கு மாநில அரசே முழு பொறுப்பேற்று,
தேர்வை இரத்துச் செய்ய வேண்டும்.!
527 Views
![]()
உயர்மட்டக்குழு விசாரணை நட த்தி உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.!
தமிழக அரசின் நிர்வாகத் துறைக்கு தகுதி வாய்ந்தவர்களை நேர்மையான முறையில் தேர்ந்தெடுப்பதற்காக உருவாக்கப்பட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். தமிழக அரசின் 55-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளினுடைய நிர்வாகப் பொறுப்பில் எழுத்தர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரையிலான முக்கிய பணியிடங்கள் அனைத்திற்கும் குரூப் 1, குரூப் 2 & 2ஏ, குரூப் 4 தேர்வுகள் மூலம் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்துவது அரசு பணியாளர் தேர்வாணையமே. இந்த தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படக் கூடியவர்களே மாவட்ட வருவாய் அலுவலர், டிஎஸ்பி போன்ற உயர் பதவிகளுக்கு நேரடியாக நியமனம் பெற்று, பின் அவர்கள் பணி மூப்பீன் அடிப்படையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற உயர் அந்தஸ்தையும் பெறுகிறார்கள்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்துப் பட்டம் பெற்று வெளியே வருகிறார்கள். ஏற்கனவே, ஒரு கோடிக்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் அரசு பணியிடங்களுக்காகக் காத்திருப்பது மட்டுமல்ல, ஏதாவது ஒரு அரசுப் பணியை அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு 5-10 வருடங்கள் கூட அதற்காக தங்களை வருத்திக் கொண்டு படித்தும், ஆயத்தப்படுத்திக் கொண்டும் வருகிறார்கள்.
அரசு நிர்வாகம் என்பது சில பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பது மட்டுமல்ல, அரசின் திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்குச் சிந்தாமல் சிதறாமல், ஊழல் இல்லாமல் கொண்டு போய்ச் சேர்ப்பதும் இது போன்ற அரசு உயர் பணியிடங்களுக்கு வரக்கூடியவர்களின் கடமையாகும்.
முக்கிய உயர் பதவிகளுக்கு வரக்கூடியவர்களை தேர்ந்தெடுக்கக்கூடிய தேர்வு நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற்றால் மட்டுமே தேர்வு பெறக்கூடியவர்கள் மனசாட்சியோடு நேர்மையாக பணியாற்ற முடியும். முறைகேடான தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்படக் கூடியவர்கள் நேர்மையுடன் செயல்படுவார்கள் அல்லது அரசியல் சார்பற்று செயல்படுவார்கள் என்பதை எப்படி எதிர்பார்க்க முடியும்?
TNPSC-யின் மீது இதேபோல கடந்த காலங்களிலும் எண்ணற்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 15 வருடங்களுக்கு முன்பு, தங்களுக்கு வேண்டியவர்களை குன்னூருக்கு அழைத்துச் சென்று, தனியாகத் தேர்வு நடத்தி, தேர்வு பெற வைத்த நிகழ்ச்சிகள்; சில வருடங்களுக்கு முன்பு, ராமநாதபுரத்தில் தேர்வு நடைபெற்ற ஒரு மையத்தில் நடைபெற்ற முறைகேடுகள் போன்றவற்றை எவரும் மறந்து விட முடியாது.
சில வருடங்களுக்கு முன்பு, குரூப் 1 தேர்வில் OMR விடைத்தாள்களில் பல குறியீடுகளை தேர்வர்கள் இட்டுச் சென்றார்கள் என்பதும்; அவர்களே தேர்வு பெற்றார்கள் என்பதும்; உச்சநீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டு அது முறைகேடு என்பதும், அவர்களெல்லாம் 15 முதல் 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி விட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக சட்டம் நியாயத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்படாமல் பரோபகார சிந்தனையோடோ அல்லது வேறு ஏதோ காரணத்தினாலோ அது போன்ற ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடந்த 60 வருடங்களாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட பல தேர்வுகளிலும் முறைகேடுகளே அதனுடைய ’முகவரி’யாக விளங்கியிருக்கிறது.
2016 ஆம் ஆண்டு தகுதியற்ற தேர்வாணைய உறுப்பினர்களை அன்றைய அரசு நியமனம் செய்ததை எதிர்த்து, புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நீதிமன்றம் சென்று, அது போன்று நியமிக்கப்பட்ட 10 உறுப்பினர்களுடைய பணி நியமனத்தையே உச்சநீதிமன்றத்தில் நாமே நேரடியாக வாதாடி ரத்து செய்தோம் என்பது கடந்த கால வரலாறு. ஆனால் நாம் எத்தனை முறை கூக்குரலிட்டாலும் தமிழ்நாடு தேர்வாணையத்தில் நடைபெறக்கூடிய முறைகேடுகள் மட்டும் மாறுவதாகத் தெரியவில்லை.
5,446 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு மே – 21ல் முதல் நிலை தகுதித் தேர்வு நடந்தது. அந்தப் பணியிடங்களுக்கு 9 லட்சம் பேர் தேர்வு எழுதினர். அது எப்படி திருத்தப்பட்டது என்பதும், அதில் எவ்வித முறைகேடுகள் நடைபெற்றது என்பதும் இன்னும் வெளியில் தெரியவில்லை. ஆனால், இப்பொழுது கடந்த 25ஆம் தேதி அன்று முதல் நிலை தகுதித் தேர்வில் தேர்வு பெற்ற 55,000 பேருக்கு பிரதான தேர்வு நடைபெற்றது. தேர்வு நடைபெற்ற அன்று தமிழக அரசும், தேர்வாணையமும் பல புதுவித அறிவிப்புகளை திடீர் திடீரென அறிவித்து பல குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது. அதில் மாற்றுத்திறனாளிகள் தமிழ் தேர்வு எழுத வேண்டியதில்லை என்று ஓர் அறிவிப்பு.
அன்று தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களும் குறித்த நேரத்தில் வந்து சேரவில்லை; கண்காணிப்பாளர்களும் குறித்த நேரத்தில் வந்து சேரவில்லை; தேர்வும் குறித்த நேரத்தில் துவங்கப்படவில்லை; தேர்வர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்படவில்லை; தேர்வர்களுக்கு பதிவெண்களுடன் கூடிய OMR விடைத்தாள்களும் வழங்கப்படவில்லை. பல்வேறு மாவட்டங்களில் பதிவெண்களுடன் கூடிய OMR வினாத்தாள்களும் மாறி மாறி வழங்கப்பட்டு இருக்கின்றன.
குளறுபடிக்கு மேல் குளறுபடி என்பதைப் போல, OMR விடைத்தாள் தவறுதலாக வழங்கப்பட்டவர்கள் வெற்றுத் தாட்களில் தேர்வு எழுத நிர்ப்பந்திக்கப்பட்டு இருக்கிறார்கள். காலை 09.30 மணிக்குத் துவங்க வேண்டிய தகுதி தேர்வு தாமதமாக 11.00 – 11.30 மணிக்கெல்லாம் துவங்கி 02.00 மணி வரை நடைபெற்று தேர்வு நேரமும் குறைக்கப்பட்டு இருக்கிறது. மாலை 2.00 மணிக்கு துவங்க வேண்டிய முதன்மை தேர்வு மாலை 02.30 மணிக்கு துவங்கி இருக்கிறது. மாலை 05.30 மணிக்கு முடிவடைய தேர்வு பல மாவட்டங்களில் 06.30 மணிவரையும் நடைபெற்று இருக்கிறது. காலை 9.30 மணிக்கே தேர்வர்கள் மத்தியில் மாலையில் கொடுக்கப்பட வேண்டிய முதன்மை தேர்வுக்கான வினாத்தாள் கொடுக்கப்பட்டு கேள்விகள் தேர்வர்களுக்கு கசிந்துள்ளது. மீண்டும் அதே வினாத்தாள் தான் பல்வேறு குழப்பங்களுடன் மதியம் 2 மணிக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
எனவே, கடந்த 25 ஆம் தேதி நடைபெற்ற தேர்வில் எவ்விதமான ரகசியமும் கட்டுப்பாடுகளும் காக்கப்படவில்லையென தெளிவாகத் தெரிகிறது. இது உள்நோக்கம் கொண்டதும், அரசியல் ரீதியாக ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு உதவி செய்வதற்காக செயற்கையாக உருவாக்கப்பட்டதும் என வெளிப்படையாகத் தெரிகிறது.
அண்மைக் காலத்தில் சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி மற்றும் தலையாரிகள் பணியிடங்கள் அனைத்தையும் ஆளும் கட்சிக்காரர்களே ஏலம் போட்டுக் கூறு போட்டு எடுத்துக் கொண்ட சம்பவங்கள் தென்காசி மாவட்டத்தில் நடைபெற்றது. அதை நாம் சுட்டிக் காட்டிய பிறகே, அந்தப் பட்டியல் இரவோடு இரவாக ரத்துச் செய்யப்பட்டு புதுப்பட்டில் வெளியிடப்பட்டது.
இன்று (27.02.2022) தேர்வாணையம் விளக்கம் கொடுத்திருப்பதை போல, ஒப்பந்தக்காரர்கள் அவுட்சோர்சிங் விட்டதால் தவறு நடைபெற்று விட்டதாகத் தெரிவிப்பது நம்பத் தகுந்ததாக இல்லை. இது ஆளுங்கட்சி மற்றும் அதனுடைய சார்புடையவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்ள வேண்டும், அவர்களை எப்படியாவது நேர்முக தேர்வுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற அடிப்படையில் தான் திட்டமிட்டு வினாத்தாள் கசிய விடப்பட்டுள்ளது.
இது போன்ற ஒரு சம்பவம் வேறு எந்த ஆட்சியில் நடைபெற்றிருந்தாலும் ஸ்டாலினும், அடிவருடிகளும் வானத்திற்கும் பூமிக்கும் குதித்து இருப்பார்கள். இப்பொழுது அடக்கி வாசிப்பதேன்? டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகளுக்கு மாநில அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும். பொறுப்பேற்க தயங்குவதேன்?
கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கூடிய இது போன்ற தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளால் இளைஞர்கள் நம்பிக்கை இழந்திருக்கும் இந்நிலையில் தேர்வு நடந்து இரண்டு நாட்களாகியும் அது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசு ஈரோடு கிழக்கு தொகுதியில் எவ்வாறு வெற்றி பெறுவது என்ற நோக்கோடு ஒட்டு மொத்த அரசு அமைச்சர்களயும் அனுப்பி அங்கும் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது.
எனவே, நடந்து முடிந்த தேர்வு முறைகேட்டை அப்படியே மூடி மறைத்து, தேர்வு எழுதிய தேர்வுத்தாள்கள் திருத்தப்படுமேயானால் 5 வருடங்கள் நேர்மையாகப் படித்த இளைஞர்களுக்கு நியாயம் கிடைக்காது; அவர்களின் வேலைவாய்ப்பு குறித்த நம்பிக்கை தகர்ந்து போகும்; அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும்.
இச்சம்பவத்தை திட்டமிட்ட முறைகேடாகவே கருத வேண்டியுள்ளது. ஆகவே, இந்த முறைகேடுகள் குறித்து முழுமையான உண்மையை வெளிக்கொணர ஒரு நியாயமான நீதிபதியைக் கொண்டு உயர் மட்ட குழு விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும் கடந்த 25.02.2023 ஆண்டு நடைபெற்ற குரூப் 2 & 2ஏ தேர்வுகளை உடனடியாக ரத்து செய்து, முறையான கண்காணிப்புடன் மறுதேர்வு நடத்தி இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டுமென புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
27.02.2023.






