அண்ணா பல்கலைக்கழக மாணவி துன்புறுத்தல்! ஜனவரி 6 – போராட்ட தேதி மாற்றம்! ஜனவரி 20-க்கு பிறகு மும்முனைப் போராட்டம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி துன்புறுத்தல்!
ஜனவரி 6 – போராட்ட தேதி மாற்றம்!
ஜனவரி 20-க்கு பிறகு மும்முனைப் போராட்டம்!
மெல்ல மெல்ல வெளுத்து வந்த திமுகவின் இன்னொரு முகம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்குப் பின்பு வெகுவாகவே வெளிரிப் போய்விட்டது. மூச்சுக்கு முந்நூறு முறை ஜனநாயகம், அரசியல் சாசனம், அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசக்கூடியவர்கள் பிரசித்தி பெற்ற அண்ணா பல்கலைக் கழக மாணவி ஒருவருக்கு இழைக்கப்பட்ட அப்பட்டமான மனித உரிமை மீறல்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த கூட அனுமதி மறுத்து; எந்த அமைப்பு, கட்சி ஆர்ப்பாட்டம் செய்ய வந்தாலும் ’கைது’ என்ற ஒரே ஆயுதத்தையே பிரயோகிக்கிறார்கள்.
கரோனா முழு அடைப்பின் போது கூட அதைப்பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் தினமும் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தானே திமுகவினர்! அவர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை! அவர்களின் ஆட்சியில் அவர்களை எதிர்த்து நடத்தினால் அது சட்டவிரோதம் ஆகிவிடுமா?
திமுக ஆட்சியில் நடக்கக்கூடிய அத்துமீறல்களை சுட்டிக்காட்டி, அதை எதிர்த்துப் போராட வேண்டியது மக்களின் மற்றும் மக்களுக்குத் துணை நிற்கும் அமைப்புகளின் கடமை! ஆனால், ஆட்சி – அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு திமுகவினர் அராஜக ஆட்சி நடத்த முற்படுகிறார்கள்; இது நீண்ட காலத்திற்கு நிலைக்காது! கடந்த நவம்பர் 7ஆம் தேதி மாஞ்சோலை மலையக மக்கள் பிரச்சனை, தேவேந்திரகுல வேளாளர்கள் – ஆதிதிராவிடர்களின் இட ஒதுக்கீடு பறிப்பு குறித்து புதிய தமிழகம் கட்சி பேரணிக்கு அனுமதி கொடுத்த பின்னரும் பேரணி துவங்கும் முன் காவல்துறையை வைத்து முடக்கினார்கள்; கைது செய்தார்கள். அன்று தமிழ்நாட்டில் ஒரு கட்சி கூட அதை கண்டிக்க முன்வரவில்லை. அதன் விளைவு, இன்று அனைத்து கட்சிகளுக்குமே அந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டது.
தமிழக அரசியல் கட்சிகளும் பல கட்டங்களில் உள்நோக்கங்களோடு செயல்படக் கூடியவர்கள் தான். இவர்களின் பொறுப்பற்ற செயல்பாடுகளால் தான் தமிழக மக்களின் பல உரிமைகள் பறிபோய் உள்ளன. எனினும் நம்மைப் பொறுத்த வகையிலும் எவ்வித பாகுபாடும் இன்றி பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்பதே நமது பிரதான கோட்பாடு. அந்த அடிப்படையில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கத் தொடர்ந்து குரல் கொடுப்போம்!
எனவே, திமுகவின் ஜனநாயக விரோத செயல்களை எதிர்த்து அடையாளப் போராட்டம் நடத்தினால் மக்கள் மத்தியில் எந்த தாக்கமும் ஏற்படாது. தமிழக மக்களின் கவனத்தை கவர்ந்து இழுக்கும் வண்ணம் வலுவான மும்முனைப் போராட்டத்தை முன்னெடுத்து நடக்க வேண்டி உள்ளது. எனவே 06.01.2025 அன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டமும், தமிழகமெங்கும் துண்டு பிரசுர விநியோகமும் ஜனவரி 20ஆம் தேதிக்குப் பிறகு மாபெரும் மக்கள் இயக்கமாக நடைபெறும். எனவே நாளை நடைபெற இருந்த போராட்டங்கள் ஒத்தி வைக்கப்படுகின்றன. மும்முனை போராட்டங்களுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.!
டாக்டர் கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
05.01.2025