பல்லடம் – சேமலை கவுண்டன் பட்டியில் மூவர் கொலை! தமிழகத்தில் சட்ட – ஒழுங்கு சீர்கேட்டின் வெளிப்பாடே.!
பல்லடம் – சேமலை கவுண்டன் பட்டியில் மூவர் கொலை!
தமிழகத்தில் சட்ட – ஒழுங்கு சீர்கேட்டின் வெளிப்பாடே.!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலை கவுண்டன் பட்டியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூவர் நேற்றைய முன்தினம் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த கொடூரமான கொலைச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதேபோன்ற ஒரு கொடூர சம்பவம் அதே பகுதியில் ஒரு வருடத்திற்கு முன்பு நடந்தேறியது. தோட்டத்துச் சாளைகள் அதிகம் உள்ள பகுதிகள் என்பதாலும், மாலை 6 மணிக்கு பிறகு மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்காது என்பதாலும் அப்பகுதிகளில் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கொலை பாதக எண்ணம் கொண்டோர் எளிதாக வன்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மை காலமாக மது, போதை, கஞ்சா போன்ற பழக்க வழக்கங்களுக்கு ஆளாவோர் துணிந்து கொலை, கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கொலை, கொள்ளை நடக்காத நாட்களே இல்லை என்ற மோசமான நிலை சட்ட ஒழுங்கு சீர்கேடு அடைந்து விட்டதை வெளிப்படுத்துகிறது.
சேமலைக்கவுண்டன்பட்டி கொலை சம்பவம் சில பவுன் நகையை அபகரிப்பதற்காக நடைபெற்றதா? கொலையை மறைப்பதற்காக இது ஒரு காரணமாக்கப்படுகிறதா? என்பது வெளிச்சத்திற்கு வர வேண்டும். குற்றவாளிகளின் நோக்கமும் பின்புலமும் எதுவாக இருந்தாலும் அவர்கள் எவ்விதத்திலும் தப்பிக்காத வண்ணம் வழக்கு விசாரணையைக் கையாள வேண்டும்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
30.11.2024