மணிப்பூர் பெண்மணிகள் – மான பங்கம் – மனித நேயமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது!
345 Views
![]()
மணிப்பூர் பெண்மணிகள் – மான பங்கம் – மனித நேயமற்ற செயல் கடும் கண்டனத்திற்குரியது!
மத்திய, மாநில அரசுகள் இதை முன்கூட்டியே தடுக்க தவறியது ஏன்?
அப்பெண்களின் மீது பட்ட ரத்த கரையின் ஈரம் காய்வதற்கு முன் குற்றம் புரிந்தோர் துணை நின்ற காவல்துறையினர் உட்பட அனைவரும் தண்டிக்கப்பட விரைவு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும்.!
மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு பெண்மணிகள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் சென்று இறுதியாக கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு ஆட்படுத்தப்பட்ட செய்தி அறிந்து நமது மனம் மிகுந்த வேதனையளிக்கிறது. இச்செயல் வடகிழக்கு மாநிலங்களின் மலைப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்கள் இடையே நிலவும் முரண்பாட்டின் நிகழ்வாக நடந்த செயல் என்பதுதான் வேதனையிலும் வேதனை அளிக்கிறது. இந்தக் கொடூர செயலுக்கு நமது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
‘குக்கி, மெய்தீஸ்’ என்ற இரு இனக்குழுக்களுக்கு இடையே கடந்த மே மாதம் இந்த மோதல் தொடங்கிய போதே “இந்தப் பிரச்சினை உடனடியாக ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டும்; பிரச்சனையை முற்ற விடக்கூடாது” என 06.05.2023 அன்று நமது முகநூல் பதிவில் பதிவிட்டு இருந்தோம். எனினும் அப்பொழுதே மத்திய, மாநில அரசுகள் களம் இறங்கி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
அதன் விளைவாக கடந்த மூன்று மாத காலமாக மணிப்பூரில் நடக்கும் சம்பவங்கள் அனைவருக்குமே கவலை அளிக்க கூடியதாக தான் இருக்கிறது. இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் இரு தரப்பிலும் கொல்லப்பட்டதாக செய்திகள் வருகின்றன. இரண்டு இனக் குழுக்களுமே ஆயுதம் எடுத்து மோதிக் கொள்ளும் சூழல், 60,000 பேர்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாமில் வாழும் அவலம், காவல் நிலைய துப்பாக்கிகளும் சூறையாடப்படும் ஆபத்தான போக்குகள் என்று அடுக்கடுக்காக பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தேறி வந்துள்ளன.
‘மெய்தீஸ்’ இன குழுக்களை பழங்குடியினருடன் சேர்க்கலாம் என்று மணிப்பூர் உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு கொடுத்த பரிந்துரையை ஏற்று அவர்கள் பழங்குடி பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டால் தங்கள் நலன் பாதிக்கப்படும் என்று கருதி குக்கி பூர்விக குடிமக்கள் தங்களுடைய கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். அவர்களின் போராட்டத்திலும் நியாயம் உண்டு. ஏனெனில் ‘மெய்தீஸ்’ இனக்குழுக்கள் மணிப்பூர் நகர்ப்புற பகுதியிலும், ‘குக்கி’ பூர்வீகப் குடி மக்கள் கிராமங்களிலும், வன உட்பகுதிகளிலும் வாழக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்.
சட்டப்படி பழங்குடி மக்களுடைய நிலங்களை பழங்குடியினர் அல்லாத எவரும் வாங்க இயலாது. ‘மெய்தீஸ்’ இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படும் போது அவர்கள் தங்களுடைய பூர்வீக நிலங்களை வாங்கி தங்களை நிலமற்றவர்களாக்கி விடுவார்களோ என்ற அச்சமே இந்தப் போராட்டத்திற்கு மிக முக்கியமான காரணமாகும்.
‘மெய்தீஸ்’ இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டால் தங்களுக்கான அரசு வேலை வாய்ப்பு மற்றும் தங்களுடைய வாழ்விடங்கள் பறிபோகும் என்ற குக்கி பூர்வக்குடி பழங்குடி மக்களின் அச்சத்தையும் மணிப்பூர் மாநில அரசும், மத்திய அரசும் மேம்போக்காக அணுக கூடாது; அம்மக்களின் ஆழ்மனதிலிருந்து பிரச்சினையை அணுக வேண்டும்.
1958ல் இருந்தே அசாம், மணிப்பூருக்கு என்று ஆயுதம் தாங்கிய இனக்குழுக்களை சமாளிப்பதற்கு சிறப்பு சட்டம் அமலில் இருக்கிறது. அதன் அடிப்படையில் ‘நான்கு மணிப்பூரிக்கு ஒருவர்’ என்ற அடிப்படையில் மித மிஞ்சிய ராணுவத்தினர் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இப்போது உண்டு. ஏற்கனவே இரண்டு குழுக்கள் இடையே உள்ள பிரச்சனை அசாம், மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலத்திலும் தீவிரவாத ஆயுத குழுக்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை நன்கு தெரிந்து வைத்திருந்தும் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்கு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்காமல் இருந்தது ஏன்?
பட்டப் பகலில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் காவலில் இருந்தபோதே பல கிலோமீட்டர் தூரம் இரண்டு பெண்கள் கடத்தப்பட்டு அவர்கள் முன் நிலையிலேயே நிர்வாணமாக அழைத்து வரப்பட்டு உள்ளார்கள். அதை தடுத்த ஒரு இளம் பெண்ணின் தந்தையும் சகோதரனும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். இத்தனையும் கண்ணெதிரே கண்ட காவல்துறையினர் ஒதுங்கிக் கொண்டனர் அல்லது அந்த குற்றவாளிகளுக்கு உதவி செய்தனர் என்ற தகவல்கள் வருகின்றனவே இது உண்மையா?? இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த காவல்துறையினரும் ராணுவத்தினருமே முதல் குற்றவாளி ஆகிறார்கள். அவர்களை முதலில் உடனடியாக கைது செய்ய வேண்டும்; அவர்கள் கடும் தண்டனைக்கு ஆட்படுத்தப்பட வேண்டும். மணிப்பூர் பெரும் கலவரத்தின் துவக்க நாளிலேயே பெண்களின் மானபங்க நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இத்தனை நாட்கள் கழித்து மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு வராமல் போனது ஏன்? அல்லது வந்தும் மெத்தனமா? இல்லை, அதில் அரசு அக்கறை செலுத்தவே இல்லையா?
அதேபோல, மே மாதம் ஏழாம் தேதி இச்சம்பவம் நடந்திருக்கிறது. கடந்த 76 நாட்களாக இந்தச் செய்தி வெளியில் கொண்டுவரப்படாமல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முதல் நாள் இது Twitter வாயிலாக வெளியாகிறது.
அந்த பெண்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை எவராலும் ஈடு செய்ய முடியாது; குற்றவாளிகள் அனைவரும் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவர்கள் மீது விரைவாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, மக்கள் இந்த செய்தியை மறந்து விடுவதற்கு முன்பாக, தண்டனை செய்தி வெளியே வர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதே சமயம் நாடாளுமன்றம் தொடங்குவதற்கு முன்பாக ட்விட்டரில் இச்செய்தியை கசிய விட்டோரின் தீய நோக்கம் குறித்தும் கண்டறிய உயர்மட்ட விசாரணை அமைக்கப்பட வேண்டும்.
அதாவது ‘போக்சோ’ வழக்குகளில் மகளிர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை செய்தியாக வெளியிடும்போது, பொது ஊடகங்களில் அந்த காட்சியை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவுக்கு மாறாக ட்விட்டரில் அந்த பெண்மணிகளின் நிர்வாண படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை வெளியிட்டது தவறான முன் உதாரணமாகும்.
இந்த சம்பவத்தோடு சில வரலாற்று நிகழ்வுகளையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29, 30, 31 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளம், காசிலிங்கபுரம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்கள் காவல்துறையால் சூரையாடப்பட்டது. அந்த பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப நாம் தமிழக மற்றும் பிற மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களை ஆயத்தப்படுத்தி வைத்திருந்தோம். அவர்களும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய போது, “சட்ட-ஒழுங்கு மாநில அரசின் வரம்புக்கு உட்பட்டது. எனவே நாடாளுமன்றத்தில் அதை விவாதிக்க அனுமதிக்க முடியாது” என்று கூறி அதை நாடாளுமன்ற விவாதத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
தென் தமிழகத்தில் 1995 முதல் மாஞ்சோலை பிரச்சனைகள் வரை இது போன்ற அத்துமீறல்கள் பற்றி குரல் எழுப்பும் போதெல்லாம், அதே கருத்தை முன்வைத்து பேச விடாமல் தடுக்கப்பட்டது. ஆனால், இப்போது மணிப்பூர் பிரச்சனையை அவையை ஒத்திவைத்து பேச வேண்டும் என்று எதிர்க்கட்சியினர்கள் பேசுகிறார்கள். மனித உரிமை மீறல், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் இந்தியாவில் எந்த பகுதியில் நடந்தாலும் அவை மக்களவையில் விவாதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் தீர்வு வரும். ஆனால், தமிழகத்தில் உச்சகட்டத்தில் அடக்குமுறைகளும், ஒடுக்கும் முறைகளும் இருந்தபோது அது குறித்து தமிழகத்தில் உள்ள மாநில கட்சிகளும் தேசிய கட்சிகளும் மக்களவையில் அதை விவாதிக்கவும் இல்லை; விவாதிக்க விடவும் இல்லை. இது வரலாறு.
ஆனால், இப்பொழுது மணிப்பூர் பிரச்சனையை முழுக்க முழுக்க மனிதநேயத்தோடு அணுகிட வேண்டும் என்பதே நம்முடைய பார்வையாகும். இதில் மத்திய, மாநில அரசுகளின் எல்லை குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை.
மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு நடந்திருக்கக் கூடிய அவமானம் என்பது ஏதோ ஒரு மலைப்பகுதியில் ஏதோ இரண்டு இன மக்களுக்கு எதிராக நடந்த மனித உரிமை மீறல் இன்று ஒதுங்கிவிடாமல் இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களுக்கும் நடந்த அவமானமாக கருதி அப்பெண்மணிகளுக்கு ஏற்பட்ட ரத்த கரையின் ஈரம் காய்வதற்கு முன்பாக அவர்களை கடத்தியவர்கள், உதவிய காவலர்கள், உடன் வந்தோர், வேடிக்கை பார்த்தோர் அனைவரும் தண்டிக்கப்படக்கூடிய வகையில் சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைத்து அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
21.07.2023





