1600-ல் கிழக்கிந்திய கம்பெனிக்கு நாடே அடமானம்! 2021-ல் அம்பானி- அதானி கம்பெனிகளுக்கு ரூ 6 லட்சம் கோடிக்கு 27 இந்திய பொது நிறுவனங்கள்!! குறுகிய கால குத்தகைக்கா? ஒட்டுமொத்த விற்பனைக்கா? மோடி அரசுக்கு முப்பது கேள்விகள்!

அறிக்கைகள்
s2 377 Views
  • Dr K Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr K Krishnasamy
Published: 27 Aug 2021

Loading

1600-ல் கிழக்கிந்திய கம்பெனிக்கு நாடே அடமானம்!

2021-ல் அம்பானி- அதானி கம்பெனிகளுக்கு ரூ 6 லட்சம் கோடிக்கு 27 இந்திய பொது நிறுவனங்கள்!!

குறுகிய கால குத்தகைக்கா? ஒட்டுமொத்த விற்பனைக்கா?

மோடி அரசுக்கு முப்பது கேள்விகள்!

இந்தியாவின் பிரதமராக முதல் முறையாக மோடி பதவியேற்ற இரண்டு ஆண்டுகள் கழித்து 2016 நவம்பர் 10 ஆம் தேதி இந்திய மக்கள் எவரும் எதிர்பாராத வேளையில் Demonetization எனும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என இரவோடு இரவாக அறிவித்தார். இந்தியாவின் ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்ட ஒட்டுமொத்த நோட்டுக்களுக்கும், புழக்கத்தில் உள்ள நோட்டுக்களுக்குமான எண்ணிக்கையில் பெரும் வித்தியாசமும், கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதையும் கணக்கிலே கொண்டு பெரிய அளவிற்கான பணம் பதுக்கப்பட்டு இருக்கிறது; எனவே, அதை முழுமையாக வங்கிக் கணக்கிற்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டார்.

இந்த புரட்சிகரமான நடவடிக்கை மூலம் இந்தியாவில் கருப்புப் பணம் அறவே ஒழிக்கப்பட்டு விடும். அதன்மூலம் பதுக்கல் காரர்கள் ஒழிந்து ஏழை-பணக்காரர்கள் என்ற வித்தியாசம் குறையும் என பெரும்பாலான ஏழைகளும், எளிய நடுத்தர மக்களும், தேசப் பற்றாளர்களும் எதிர்பார்த்தார்கள்; நாமும் நல்லது நடக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் நடந்ததோ வேறு.

ரிசர்வ் வங்கியில் பணியாற்றிய சில கருப்பு ஆடுகள் உட்பட, அரசு வங்கி உயர் அதிகாரிகள், கந்துவட்டி கடைகளுக்குச் சிறிதும் குறைவில்லாத குணம் கொண்ட பல தனியார் வங்கிகள் திரை மறைவில் பதுக்கப்பட்டு வந்த கோடிக்கணக்கான 1000 ரூபாய் நோட்டுகளை புதிய ரூ 2000, ரூ 500 நோட்டுக்களாக மாற்றி கருப்புகளை எல்லாம் வெள்ளையாக்கி கொண்டார்கள். பதுக்கப்பட்ட பல லட்சம் கோடி ரூபாய் வங்கிகளுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக, வெறும் 16 ஆயிரம் கோடி மட்டுமே கணக்கிற்கு வந்தது. அந்த வரவு மீண்டும் புதிய நோட்டு அடிப்பதற்குக் கூட போதுமானதாக இல்லை.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலமாக இந்தியாவின் பொருளாதாரம் வளரும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக பல சிறு, குறு நிறுவனங்கள் நசிந்து போய் வேலையில்லா திண்டாட்டம் உருவாயிற்று. அன்று தொடங்கிய பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இன்று வரை நடுத்தர வர்க்கத்தினராலும், பெரும்பாலான நிறுவனங்களாலும் மீண்டு வர முடியவில்லை.

இச்சூழலில் இந்தியா முழுமைக்கும் நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்திய மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட ரயில் நிலையங்கள், ரயில்கள்; விமான நிலையங்கள், விமானங்கள்; சிறிய மற்றும் பெரிய துறைமுகங்கள்; நான்கு வழி மற்றும் எட்டு வழிச் சாலைகள்; மின் கட்டுமானம் மற்றும் மின் பகிர்மான கழகங்கள்; தொலைத்தொடர்புத் துறைகள்; நிலக்கரி உள்ளிட்ட அனைத்துவித கனிம சுரங்கங்கள் மற்றும் உணவு கழக கிடங்குகள் என 27 துறைகளை 4 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டு Monetization-பணமாக்கும் திட்டத்தின் மூலம் ஆறு லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்ற முடிவை மோடி அரசு எடுத்திருக்கிறது.

பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி மற்றும் கரோனா ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதாரம் நலிந்து வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து 25-30 சதவிகித மக்கள் நிரந்தர வேலையின்றி அல்லல்படுகிறார்கள்.

இந்நிலையில் ஏற்கனவே நல்ல நிலையில் உள்ள அரசின் பொதுத் துறை நிறுவனங்களைச் செம்மைப்படுத்தி லாபம் ஈட்டவும், வேலைவாய்ப்பைப் பெருக்கவும், உலகளவில் நிலவும் இன்றைய அரசியல் சூழல் காரணமாக இந்தியாவில் தொழில் தொடங்க பல நாடுகளும் ஆர்வம் காட்டும் போது அதை ஊக்குவித்து முதலீட்டை ஈர்ப்பதற்குப் பதிலாக இந்திய மக்களின் நூறாண்டுக்கால உழைப்பு, அர்ப்பணிப்பால் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துக்களை அவர்கள் கண்ணெதிரே விலை பேச வேண்டியதன் உள்நோக்கம் குறித்து மோடி அரசுக்கு முப்பது கேள்விகள்.

1. உலகளவில் – இந்திய அளவில் மிகவும் நலிந்து போய் இனிமேல் புதுப்பிக்கவே முடியாது என்ற நிலையில் உள்ள நிறுவனங்களை அரசே மூடியது உண்டு. ஆனால், மிக மிக நல்ல நிலையில் லாபத்துடன் இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய மக்களின் பொதுச் சொத்தாகக் கருதப்படும் 27 முதன்மை நிறுவனங்களைப் பணமாக்கும் திட்டத்தின் கீழ் சில குறிப்பிட்ட தனி நபர்களுக்கு விலைக்கு விற்பதற்கு ஒப்பான குத்தகைக்கு விடும் இந்த நடவடிக்கைகளில் அரசின் உண்மை நோக்கம் என்ன?

2. இது போன்று பொதுச் சொத்துக்களைக் குத்தகைக்கு விட்டு லாபமீட்டி நல்ல அனுபவங்களை பெற்ற நாடுகள் எதையாவது குறிப்பிட முடியுமா?

3. 2013-களில் கெம்ப்ளா (Kempla) மற்றும் போட்டனிக் (Botany) துறைமுகங்களைப் பணமாக்கும் முயற்சியில் தனியாருக்குக் குத்தகைக்கு விட்ட ஆஸ்திரேலிய அரசு இறுதியில் அதனால் பட்ட அவதிகளை மோடி அரசு அறியுமா?

4. உலகளவில் தலைச் சிறந்து விளங்கிய சிங்கப்பூர் இரயில்வேயின் அற்புதமான கட்டமைப்புகளை ஒரு தனியார் நிறுவனத்திற்குக் குத்தகைக்கு விட்டிருந்தது. குத்தகைக்காரர் முறையாகப் பராமரிக்காமல் இலாபத்தை மட்டுமே அள்ளிக் கொண்டு போனதால் இரயில்களில் ஏற்படும் பழுதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு சிங்கப்பூர் மக்கள் போராடியதன் விளைவாகக் குத்தகை இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் இரயில்வே அரசுடைமை ஆக்கப்பட்டது. இதை மோடி அரசு அறியுமா?

5. ஆஸ்திரேலியாவில் சவுத் வேல்ஸ் என்பது ஒரு மாநிலத்தில் இதே பணமாக்கும் திட்டத்தின் மூலம் மின்சாரத்துறை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டதால் குத்தகை நிறுவனம் மின் கட்டணத்தைப் பல மடங்காக்கியது. அதனால் அந்நாட்டு மக்களிடத்தில் ஏற்பட்ட எதிர்ப்பை சமாளிக்க தனியார் நிறுவனத்திடமிருந்து குத்தகையாக வாங்கிய பணத்தைக் கட்டிலும் அந்த அரசு அம்மாநில மக்களுக்குப் பன்மடங்கு மானியமாகக் கொடுத்ததை இந்திய அரசு அறியுமா? அறியாதா?

6. இப்பொழுது பணமாக்கும் திட்டத்திற்கு லாபமீட்டும் 27 பொது நிறுவனங்களை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது. இதுபோன்று முக்கிய முடிவு எடுக்கும் போது இந்நிறுவனங்களைப் பாதுகாத்த ஊழியர் அமைப்புகள், அவ்வமைப்புகளின் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் அரசு கலந்தோசித்து இருக்க வேண்டுமல்ல? அது போன்ற ஒரு கருத்துக் கேட்புக் கூட்டத்தைக் கூட்ட அரசு இதுவரை முன்வராதது ஏன்?

7. கே.ஜி பேசின் (K.G Basin) என்றழைக்கப்படும் கிருஷ்ணா, கோதாவரி பகுதியில் கடலுக்கு அடியில் இந்திய அரசின் ஓ.என்.ஜி.சி நிறுவனம் பல காலம் எண்ணெய் எடுத்து வந்தது. அதனருகே சட்டத்திற்கு விரோதமாக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு எண்ணெய் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஓ.என்.ஜி.சி கிணறுகளைக் கட்டிலும் ரிலையன்ஸ் கிணறுகளிலிருந்து அதிகமாக எண்ணெய் ஊற்றெடுக்கிறது என்று அறிவித்தார்கள். ஆனால், விசாரணைக்குப் பிறகு, கடலுக்கு அடியில் ஓ.என்.ஜி.சி கிணறுகளிலிருந்தே நியாயத்திற்கு விரோதமாக பல வருடங்கள் ரிலையன்ஸ் நிறுவனம் திருடிக் கொண்டிருந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டு பல்லாயிரம் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதே போன்று ஒரு ஏக்கரில் சுரங்கத்திற்கு அனுமதி வாங்கிக் கொண்டு நூற்றுக்கணக்கான ஏக்கர்களை சுரண்ட மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?

8. ஆந்திர-கர்நாடக எல்லையில் உள்ள பெல்லாரி மாவட்டத்தில் ரெட்டி சகோதரர்கள் சட்டப்படி பெற்ற அனுமதியைக் காட்டிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர்களில் பல கோடி மதிப்பிலான இரும்பு தாதுக்களையே (Iron Ore) வெட்டி எடுத்து இரண்டு மாவட்டங்களையே நாசமாக்கி சுற்றுப்புறச் சுழலை கெடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டதை போன்று இப்பொழுது குத்தகைக்கு எடுக்கக் கூடியவர்கள் வளங்களைக் கொள்ளை அடிக்கவும், சுற்றுப்புறச் சூழலைச் சீரழிக்கவும் மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?

9. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட சொத்துகளை ஒவ்வொரு துறை அதிகாரிகளும் பாதுகாத்து வருகிறார்கள். இது தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டு விட்டால் அச்சொத்துக்கள் முழுமைக்கும் பாதுகாப்பு யார்?

10. “பொன் முட்டையிடும்” வாத்தை ஒரே நாளில் கூறுப்போட்டதை போல 27 துறைகளின் சொத்துக்களைக் குத்தகைக்கு விட அரசு முடிவு செய்து உள்ளதே, அவற்றின் அளவும், மதிப்பும் (Quantity And Quality) கணக்கீடு செய்யப்பட்டுள்ளதா?

11. திருநெல்வேலி-மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களைக் குத்தகைக்கு எடுத்த பி.பி.டி.சி நிறுவனம் சட்டத்திற்கு விரோதமாக குசுங்குழியார் காடுகளிலுள்ள அனைத்து மரங்களையும் வெட்டி விற்பனை செய்தார்கள்? அதை அரசு வனத் துறை அதிகாரிகளால் கூட தட்டிக் கேட்க முடியவில்லை. இதேபோல குத்தகைக்கு எடுக்கும் அம்பானி-அதானிகள் இயற்கை வளங்களைக் கொள்ளை அடிக்க மாட்டார்கள் என நம்மால் எப்படி நம்ப முடியும்?

12. மதுரையில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற தனியார் நிறுவனம் கிரானைட் கற்களை வெட்டி எடுக்க அனுமதி வாங்கிய நிலங்களை விட்டு விட்டு ஊர் கண்மாய்கள், குளங்கள்-குட்டைகள்; சுடுகாடுகள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க மலைக் குன்றுகளை எல்லாம் சிதைத்து கிரானைட் கற்களை வெட்டி எடுத்து வெளிநாடுகளுக்குக் கப்பல் கப்பலாக விற்பனை செய்தார்களே. அப்படி இயற்கை வளம் கொள்ளை போன போது மாநில, மத்திய அரசின் எந்த அதிகாரியால் அவர்களைத் தடுக்க முடிந்தது?

13. அன்றைய கால கட்டங்களில் கிராமங்கள், நகரங்களில் புதிதாக வீடு கட்டியவர்கள் தேவைக்கு மட்டும் மணல் எடுத்து வந்தார்கள். ஆனால், எப்பொழுது அரசு மணலைக் குத்தகைக்கு விடுவது என முடிவு எடுத்ததோ அப்பொழுதே ஆறு, குளங்கள் சுரண்டப்பட்டு அண்டை மாநிலங்களுக்கும், நாடுகளுக்கும் இரவு பகலுமாக மணலும், செம்மண்ணும் கடத்தப்பட்டன. எவ்வித விலையும் இல்லாமல் எடுக்கப்பட்டு வந்த ஒரு லோடு ஆற்று மணலின் விலை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ரூ 50,000 வரை எகிறியது. அரசு சொத்துக்களைக் குத்தகைக்கு எடுக்கும் வரை தான் குத்தகைக்காரர்கள் அமைதி காப்பார்கள். அதன் பின் அவர்களை எந்த அரசாலும், அதிகாரியாலும் கட்டுப்படுத்த முடியாது என்பதை மத்திய அரசு அறியுமா? அறியாதா?

14. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கோடிக் கணக்கான ரூபாயை ஒதுக்கி இந்திய இரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டன; குறுகலான இரும்பு பாதைகள் (meter gauge) அகன்ற இரும்பு பாதைகளாக (broad gauge) மாற்றப்பட்டன; புதிய வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு மின்மயமாக்கப்பட்டன. இத்தனை கட்டமைப்புகளையும் மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கி அதன் பலனை அறுவடை செய்ய வேண்டிய நேரத்தில் அதன் உருவாக்கத்தில் எள்ளளவும் சமந்தப்படாத யார் யாரையோ அழைத்து அவர்களுக்கு குத்தகை என்ற பெயரில் தாரை வார்க்க வேண்டியதன் அவசர அவசியம் என்ன?

15. இந்தியாவில் அதிகமான வேலை வாய்ப்பை உருவாக்கியும்; கட்டணம் குறைவாகவும், அதிகமான பயணிகளையும், சரக்குகளையும் ஏற்றிச் செல்லும் ஒரே நிறுவனம் இந்திய இரயில்வே நிறுவனமே. இந்த அற்புதமான நிறுவனத்தை ஒரு சில பண முதலைகளுக்குத் தாரை வார்க்க வேண்டியதன் கட்டாயம் என்ன? இதில் மிகப்பெரிய உள்நோக்கம் இருக்கிறது எனக் குற்றம் சுமத்தப்பட்டால் அதை இந்த அரசால் எப்படி மறுக்க முடியும்?

16. இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைத்துள்ள ஒரே துறை இந்திய இரயில்வேத் துறை. இந்தியத் தேசத்தின் ஒற்றுமையின் அடையாளமான இரயில்வேயையே தனியாருக்குத் தாரை வார்ப்பது எதாவது ஒரு விதத்தில் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயலாகாதா?

17. இன்று வரையிலும் ஏழை, எளிய மக்கள்; மாணவர்கள்; அரசு, தனியார்த் துறை ஊழியருக்கு வரப் பிரசாதமாக இருப்பது இந்திய ரயில்வேயின் குறைந்த கட்டணங்கள் தான். குத்தகைக்கு எடுத்தவர்கள் அடுத்த நாளே எல்லா கட்டணங்களையும் உயர்த்துவார்களே! அன்று மக்கள் கொந்தளித்தால் அப்போது என்ன செய்வீர்கள்?

18. ’கிடைத்தவரை லாபம்’ என்ற ஒரே நோக்கத்தோடு செயல்படும் தனியார் நிறுவனங்கள் தாங்கள் குத்தகைக்கு எடுக்கும் நிறுவனங்களின் கட்டிடம், இயந்திரங்களைப் பழுது பார்க்காமல் சீரழித்துவிட்டு குத்தகை கால முடிவில் பாழ் படுத்திக் கொடுத்தால், அவற்றையெல்லாம் எவ்வாறு சரி செய்வீர்கள்? அதற்கான செலவுகளை யார் தலையில் சுமத்துவது?

19. அரசு நிறுவனங்களைக் குத்தகைக்கு எடுப்போர் வேறு எந்த நிறுவனமும் போட்டிக்கு வரக்கூடாது என்ற அடிப்படையில் கழுத்தை அறுக்கும் முயற்சியில் (Cut Throat Competition) ஈடுபட்டுச் சிறு, குறு நிறுவனங்களை அழித்தொழிப்பார்களே? அதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

20. ஏற்கனவே விவசாயிகளுக்கும், ஒவ்வோர் குடும்பத்திற்கும் இலவச மின்சாரம்; நெசவாளர்களுக்கு பல்வேறு கட்டணச் சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. குத்தகை நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே கணக்கில் கொண்டு கட்டணத்தை உயர்த்தினால் அதைத் தடுப்பது எப்படி? இந்தியா முழுமைக்கும் பல மாநிலங்களில் பல்வேறு கட்டணம் இருக்கிறதே இவற்றையெல்லாம் எப்படி ஒழுங்கு படுத்த முடியும்?

21. தொழில் போட்டிகள் உருவாகும் பட்சத்தில் அந்நிறுவனத்தை மேலேயே வைப்பதற்காகச் செலவைக் குறைக்கிறோம் (Cut Back On Upkeep) என்ற பெயரில் ஊழியர்களையும், சம்பளத்தையும் குறைப்பார்கள்; தற்காலிக பணியாளர்கள் மற்றும் அந்நிறுவனத்திற்கு விசுவாசமானவர்களைக் கொண்டு நிரப்புவார்கள். அதனால் ஏற்படும் எதிர் விளைவுகளை மத்திய அரசு ஒரு கணமாவது சிந்தித்தது உண்டா?

22. அந்த நிறுவனங்களில் உருவாகும் புதிய வேலை வாய்ப்புகளை எந்த அடிப்படையில் நிரப்புவார்கள்? ஏற்றத்தாழ்வான சமூகத்தில் பல விதமான இட ஒதுக்கீடு முறைகள் இருக்கிறதே அதற்கெல்லாம் என்ன உத்தரவாதம்?

23. இந்த நிறுவனங்கள் ஒப்புக்கொண்டபடி உரியக் காலத்தில் குத்தகையைச் செலுத்தாமல் விட்டு விட்டாலோ அல்லது சர்வதேச அளவிலான மதிப்புகளால் ஏற்படும் பாதிப்புகளால் அவற்றைப் பாதியிலேயே விட்டு விட்டு ஓடினால் அதைத் தடுப்பது எப்படி? அதற்கான தீர்வுகள் தான் என்ன?

24. குத்தகைக்காரர்கள் அந்த நிறுவனங்களைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவது; அந்த சொத்துக்களையே சிறுக சிறுக விற்பது; லாபம் ஈட்டிய பணத்தோடு வெளிநாடுகளில் பதுங்கிக் கொள்வது போன்ற சட்டவிரோத செயல்களை எப்படிக் கட்டுப்படுத்துவீர்கள்?

25. இப்பொழுதே இரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் நியாயமான விலையில் தரமான உணவுப் பொருட்கள் கிடைப்பதில்லை. பெரும்பாலான விமான நிலையங்களில் ஒரு கப் வெந்நீரில் இரண்டு கிராம் தேயிலைத்தூளை கலக்கிக் கொடுக்க ரூ 150 வாங்குகிறார்கள். அதேபோல உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டால் அதை எப்படித் தடுப்பீர்கள்?

26. 27 பொது நிறுவனங்களும் சிறிய நிறுவனங்கள் அல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பின்னிப் பிணைந்து கிடப்பவை. அந்நிறுவனங்களை குத்தகைக்கு விட்ட பின் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க என்ன முகாந்திரம் உண்டு?

27. இந்த 27 நிறுவனங்களால் ஈட்டப்படும் இலாபம் குறித்து ஆண்டு தோறும் தனித்தனியே வெள்ளி அறிக்கை சமர்ப்பிக்கப்படுமா?

28. இந்த 6 லட்சம் கோடி ரூபாய் திரட்டுவதற்காக பொது மக்களின் சொத்தை இரண்டு-மூன்று தனியாருக்கு விற்பது என்பது ”கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்குச் சமம்” என்பதை மத்திய அரசு உணரவில்லையா?

29. இந்தியா துவக்கத்தில் ஆயுதத்தாலும், பின் காகிதத்தாலும் வீழ்த்தப்பட்டு இருக்கிறது.1606 –ல் இந்தியாவில் காலூன்றிய கிழக்கிந்திய கம்பெனி முதலில் வியாபாரம் செய்யவே அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தது. அதே கம்பெனிதான் இந்திய மக்களை ஈவிரக்கமில்லாமல் அடக்கியும், ஒடுக்கியும் ஆட்சி செய்தார்கள். அன்று ஆட்சியிலிருந்த கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு இடம் கொடுக்காமலிருந்திருந்தால் நாடு அடிமைப்பட்டு இருக்காது. இப்போது மீண்டும் வரலாறு திரும்புகிறதோ என்ற அச்சம் எழுகிறது. அன்று ஆங்கிலேய கம்பெனிகள்; இன்று அதானி-அம்பானி கம்பெனிகளா? பொது மக்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட உயர்தர நிறுவனங்களை ‘கிளியை வளர்த்து பூனையிடம் கொடுப்பதை” போல அதானி-அம்பானி நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதை எந்த இந்தியக் குடிமகனும் விரும்பமாட்டார்கள். இந்திய நிறுவனங்களைக் குத்தகைக்கு விடுவது என்பது இந்திய நாட்டையே குத்தகைக்கு விடுவதற்குச் சமமாகாதா?

30. இந்தியாவின் மிக முக்கியமான நிறுவனங்களெல்லாம் அதானி-அம்பானிகளுக்கு தாரை வார்க்கப்பட்ட பிறகு அரசுக்கு என்ன வேலை இருக்கும்? சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்கள் இந்திய நாட்டையும், மக்களையும், வளங்களையும் சுரண்டி மக்களை அடிமைப்படுத்த வழிவகுக்காதா?

1600-ல் கிழக்கிந்திய கம்பெனிக்கு நாடே அடமானம்!
அது மக்கள் அறியாமையிலிருந்த காலம்.

2021-ல் அம்பானி- அதானி கம்பெனிகளுக்கு ரூ 6 லட்சம் கோடிக்கு 27 இந்திய பொது நிறுவனங்கள்!!
குத்தகைக்கா? ஒட்டுமொத்த விற்பனைக்கா? என விழிப்போடு கேள்வி கேட்கும் காலமிது!

மோடி அரசு பதில் சொல்லுமா?

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,
நிறுவனர்& தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
27.08.2021