’ஒன்றியர்’ என்று அல்ல, ’இந்தியர்’ என்ற அடையாளத்தால் அரிய பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டியவர் பெருந்தலைவர் காமராஜர்
’பெருந்தலைவர்’ காமராஜர் அவர்களின் 119-வது பிறந்த நாளில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் புகழாரம்!!

ஜீலை-15 இன்று ‘கர்மவீரர்’ காமராஜர் அவர்களின் 119-வது பிறந்த நாள் ஆகும். பள்ளியோ, கல்லூரியோ சென்று பட்டங்களைப் பெறாவிடினும் ’படிக்காத மேதை’ என்று அனைவராலும் பெருமையோடு அழைக்கப்பட்டவர். தமிழகத்தினுடைய முதல்வராக இருந்த போது தமிழகத்திற்கு அவர் ஆற்றிய தொண்டுகளை எவரும் எளிதில் மறந்து விட முடியாது. சுயாட்சி கோசமோ, ஒன்றிய கோசமோ எழுப்பியவர் அல்ல.
அவர் தமிழக முதல்வராக இருந்த காலத்தில் தமிழகத்தின் அனைத்து துறைகளும் உயர்வு பெற்றிருந்தாலும் மூன்று துறைகளில் அவர் முத்திரை பதித்துச் சென்றுள்ளார். அன்று அவர் அமைத்துக் கொடுத்த அடித்தளமே, இன்று தமிழகம் தனித்துவத்துடன் விளங்க முக்கிய காரணிகளாகும். ஊர்தோறும் ஆரம்ப பள்ளிகள், முக்கிய நகரங்களில் கல்லூரிகள், திருச்சி பெல், இராணிப்பேட்டை தொழில் வளாகங்கள் இன்றும் தமிழகத்தின் தொழில் அடையாளங்களாகும்.
இன்றைய காலகட்டங்களில் கனவிலும் கூட எண்ணிப் பார்க்க முடியாத, தமிழக எல்லையிலிருந்து 100கி.மீ அப்பால் கேரளாவின் எல்லைக்குள் 210 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையையும், அவ்வணையிலிருந்து அதிசயதக்க வகையில் பல மலைகளை குடைந்து வெட்டப்பட்ட காண்டூர் கால்வாய் மற்றும் துணைக்கடவு, ஆழியாறு, திருமூர்த்தி ஆகிய அணைகளையும் கட்டி கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை வளமடையச் செய்தவர்.
அவருடைய சாதனைகள் அனைத்தும் ’திராவிடத்தால்’ அல்ல, ‘தேசியத்தால்’ விளைந்தவைகள்; ’ஒன்றியர்’ என்று அல்ல, ’இந்தியர்’ என்ற அடையாளத்தால் நிகழ்த்திகாட்டப்பட்டவைகள். அந்த மகத்தான மாவீரர், பெருந்தலைவர், கர்மவீரர் அவர்களின் பிறந்த நாளில் தமிழக மக்கள் அனைவரும் அவரை நினைவு கூர்ந்து போற்றுவோம்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
15.07.2021