மேகதாது பிரச்சினைக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்துவதாக அறிவித்துவிட்டு, சட்டமன்ற கட்சிகளை மட்டும் வைத்து கூட்டம் நடத்தியது ஏன்?
331 Views
![]()
காவிரி பிரச்சனை என்பது மூன்று அல்லது நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய பிரச்சனை அல்ல. தமிழ் மாநிலத்தில் வாழும் ஏழு கோடிக்கும் மேற்பட்ட மக்களின் உணவு ஆதாரம் சம்மந்தபட்ட மிக அடிப்படை பிரச்சனையாகும். 50 ஆண்டு காலத்திற்கு மேலாக நீடித்து வரக்கூடிய காவிரி பிரச்சினைக்குத் தமிழக அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் மற்றும் மக்களின் போராட்டங்களுக்கும், மாநில அரசுகளின் சட்ட ரீதியான போராட்டங்களுக்கும் பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு ’காவிரி மேலாண்மை வாரியம்’ அமைக்கப்பட்டது. மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆகியும் சட்ட ரீதியாக வழங்கப்பட்ட காவிரி நீர் பங்கீட்டை ஒரு முறை கூட தமிழகம் இதுவரை முழுமையாகப் பெறவில்லை.
இச்சூழலில் தமிழக எல்லையிலிருந்து 80 கி.மீ தொலைவில் காவிரி ஆற்றின் குறுக்கே ’மேகதாது’ எனும் இடத்தில் புதிய அணை ஒன்றைக் கட்ட கர்நாடக மாநில அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. தமிழகத்தின் எதிர்ப்பை சிறிதும் பொருட்படுத்தாமல், ’மேகதாது அணைக் கட்டும் பணி தொடரும்; அதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது’ என அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 62.5 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகதாது அணை கட்டப்படும் பட்சத்தில், தமிழகத்திற்கான காவிரி நீர் பங்கீடு மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும் என தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களிடமும் அச்சம் நிலவுகிறது. இந்நிலையில் தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய அரசின் நீர்ப்பாசனத்துறை அமைச்சரை டெல்லி சென்று சந்தித்தார். மத்திய அமைச்சருடனான சந்திப்பின் வெளிப்பாடு என்ன? என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
மூன்று தினங்களுக்கு முன்பு, தமிழகத்தில் மேகதாது அணை பிரச்சினை சம்பந்தமாக தமிழகத்திலுள்ள அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால், நேற்று திடீரென சட்டமன்ற கட்சித் தலைவர்களுடன் மட்டும் கூட்டம் நடத்தியுள்ளார். சட்டமன்ற கட்சிகளுடன் மட்டும் பேசுவது அனைத்து கட்சி கூட்டமும் ஆகாது; அதன் தாக்கம் கர்நாடகத்துக்கு எவ்வித வலுவான செய்திகளையும் கொண்டு சேர்க்காது. மேகதாது ஒட்டுமொத்த தமிழக மக்களின் பிரச்சினையாக இருக்கிறபோது, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகளையும் அழைத்து பேசி, ஆலோசனைகளைப் பெறுவது மிக மிக அவசியமானதாகும்.
1996-2001 மற்றும் 2011-2016 ஆகிய காலகட்டங்களில், டாக்டர் கலைஞர் மற்றும் அம்மையார் ஜெயலலிதா ஆகியோர் முதல்வர்களாக இருந்த பொழுது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், 30-க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகள் என ஏறக்குறைய 100-க்கும் மேற்பட்ட அமைப்புகளை நாமக்கல் கவிஞர் மாளிகையில் அழைத்துப் பேசி, அதன் பிறகு தான், பொதுவான நடவடிக்கைகள் மற்றும் சட்டரீதியான அணுகுமுறைகளை கையாண்டு இருக்கிறார்கள். எனவே, முக.ஸ்டாலின் அவர்கள் காவிரி பிரச்சினையை எக்காரணம் கொண்டும் அரசியல் ரீதியாகக் குறுகிய கண்ணோட்டத்தில் அணுகக்கூடாது. தமிழக மக்கள் அனைவரையும் ஒருமித்த குரலில் திரட்ட வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
தமிழகத்தில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சிகள் மட்டுமே, அனைத்து தமிழக மக்களின் பிரதிநிதிகள் ஆகமாட்டார்கள். அதிமுக பா.ஜ.கவை தவிர்த்தால், இது திமுக கூட்டணிக் கட்சிகளின் கூட்டமாகவே கருதப்படும். தமிழகத்தின் ஒரு முக்கியமான பிரச்சினையை ’சட்டமன்ற கட்சிகள்’ என்ற அளவிலேயே சுருக்கி, மேகதாது பிரச்சனையை முக்கியமற்றதாக ஆக்கும் செயலில் எக்காரணம் கொண்டும் இவ்வரசு ஈடுபட வேண்டாம்.
கரோனாவானாலும் சரி, மேகதாதுவானாலும் சரி சட்டமன்ற கட்சிகள் என்ற குறுகிய வட்டத்தில் மட்டுமே ஜனநாயகத்தின் ஒட்டுமொத்த அம்சங்களையும் குறுக்கிப் பார்க்கின்ற ’குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும்’ தவறான போக்கை விட்டுவிட்டு, தமிழக மக்களுடைய வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதில் அக்கரை கொண்டுள்ள தமிழகச் சட்டமன்றத்தில் இடம்பெற்ற மற்றும் இடம் பெறாத அனைத்து அரசியல் கட்சியின் தலைவர்கள், விவசாய சங்கங்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கும் பங்கு உண்டு என்பதை உணர்ந்து விரைவில் முறையான அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, மேகதாது பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
13.07.2021






