2024 நவம்பர் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மேதகு தமிழக ஆளுநர் அவர்களிடம் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்கள் அளித்த மனுவின் சாராம்சம்!

அறிக்கைகள்
s2 51 Views
  • 2
  • 2
Published: 08 Nov 2024

Loading

2024 நவம்பர் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மேதகு தமிழக ஆளுநர் அவர்களிடம் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்கள் அளித்த மனுவின் சாராம்சம்!

பொருள்: 3% அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டால் தேவேந்திரகுல வேளாளர்களுக்கும், சாம்பவர் எனும் பறையர் சமூக மக்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளின் காரணமாக அதை இரத்து செய்ய வேண்டியதன் அவசியம் கருதியும்; மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வுரிமையை 2006-ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டத்தின்படி நிலைநாட்டுவது உட்பட 6 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி.!

பேரன்புடையீர் வணக்கம்.!

1. கல்வி மற்றும் சமூக தளங்களில் வரலாற்று ரீதியாக பின்னடைந்த மக்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் துறைகள் மற்றும் அரசின் கட்டுப்பாடுகளில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் பிரத்தியேகமாக வாய்ப்பு அளிக்கும் வகையில் இட ஒதுக்கீடு (Reservation) வழங்க இந்திய அரசியல் சாசனத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடுகள் அளிக்கும் முறை இந்தியாவை ஆங்கிலேயர் ஆட்சி செய்வதற்கு முன்பிருந்தே நிலவி வருகிறது. மகாராஷ்டிரத்தில் ஜோதி பாபூலே அவர்கள் இட ஒதுக்கீட்டை முதல் முறையாக பெற்றுத் தந்தார்கள்; மெக்டோனால்டு எனும் இங்கிலாந்து பிரதமர் ஆட்சியில் இருந்த போது சென்னை மாகாணத்தில் ”கம்யூனியல் முறை” நடைமுறைப்படுத்தப்பட்டன. சுதந்திர இந்தியாவில் தீண்டாமை கொடுமைகள், பிற வன்கொடுமைகளுக்கு ஆளாகி கல்வி, வேலை வாய்ப்பு பறிக்கப்பட்டவர்கள் பட்டியலின மக்கள் எனவும்; மலை வாழ் பூர்வீககுடி மக்கள் பழங்குடியினர் எனவும் வகைப்படுத்தப்பட்டு, அகில இந்திய அளவில் பட்டியலின வகுப்பினருக்கு 15 சதவீதமும், பழங்குடியினருக்கு 7.5 சதவீதமும், மொத்தம் 22.5 சதவிகித இட ஒதுக்கீடுகள் தேசிய அளவிலும்; மாநில அளவில் பட்டியல் பிரிவு, பழங்குடியினருக்கு மக்கள் தொகைக்கு ஏற்ப பிரித்து இட ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

1950 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிற்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு கொடுக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவிகிதமும்; மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதமும்; பட்டியல் பிரிவினருக்கு 18 சதவீதமும்; பழங்குடியினருக்கு 1 சதவீதமும் ஆக மொத்தம் 69% இட ஒதுக்கீடு முறை நடைமுறையில் உள்ளது.

இந்திய அரசியல் சாசன விதிகளின் படி, SC/ST ஆகிய இரு இனங்களின் பட்டியலில் எவ்வித மாற்றம் செய்வதற்கும் மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. ஆனால் அதற்கு மாறாக 2008 ஆம் ஆண்டு பட்டியல் பிரிவினருக்கான 18 சதவிகித இட ஒதுக்கீட்டை அதே பிரிவில் இடம் பெற்றுள்ள ’அருந்ததியர்’ எனும் ஒரு பிரிவினருக்கு 3 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அன்றைய மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. எந்த ஒரு இட ஒதுக்கீடுகளும் வழங்குவதற்கு அல்லது அதில் மாற்றம் செய்வதற்கு முன்பாக, அந்த பட்டியலில் உள்ள அனைத்துச் சமூகங்களின் கல்வி, சமூக, பொருளாதார வளர்ச்சி நிலைகள் குறித்த விஞ்ஞான ரீதியான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முன்பு, அதுபோன்று கள ஆய்வுகள் எதுவும் செய்யப்படவில்லை. அப்பொழுதே 3% உள் இட ஒதுக்கீடு முறையை கடுமையாக எதிர்த்ததுடன் நீதிமன்றமும் சென்றோம்.

அதேபோன்று, அதே காலகட்டத்தில் பிற்பட்டோர் பிரிவில் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவிகிதமும், கிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவிகிதமும் தனி இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், தங்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை கிறித்தவர்கள் சிறிது காலத்திலேயே திருப்பி அளித்து விட்டார்கள்; இஸ்லாமியர்களுக்கான 3.5 தனி இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தமட்டிலும் பட்டியல் பிரிவில் உள்ள 76 சாதிகளில் 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர்கள் சமூக மக்கள் மிக அடர்த்தியாகவும்; அதேபோன்று சென்னை உட்பட வட மாவட்டங்களில் சாம்பவர் எனும் பறையர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் மிகவும் பெரும்பான்மையாகவும்; மூன்று மேற்கு மாவட்டங்களில் மட்டும் அருந்ததியினர் சாதியைச் சார்ந்தவர்களும் உள்ளனர். தேவேந்திர குல வேளாளர்களும், சாம்பவர் எனும் பறையர் சமூக மக்களும் முழுக்க முழுக்க தமிழ் மண்ணையே பூர்வீகமாகக் கொண்ட ஒரு மொழி மட்டுமே பேசும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். அருந்ததியர் என்று அழைக்கப்படக் கூடியவர்கள் கன்னடம், தெலுங்கு போன்ற பிற மொழிகளையும் பேசக் கூடியவர்கள் ஆவர்.
மொழி ரீதியாக தமிழ்நாடு தனி மாநிலம் என்றாலும் தமிழ்நாட்டில் உள்ள எல்லாப் பகுதிகளிலும் அனைத்து சமூகத்தினரும் சம வளர்ச்சி பெற்றவர்களோ, ஒரே மாதிரியான சமூகச் சிக்கல்களை எதிர் கொள்ளக்கூடியவர்களோ அல்ல. கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மேற்கு மாவட்டங்கள் பன்னெடுங் காலமாகவே தொழில் ரீதியாக முன்னேறிய மாவட்டங்கள் ஆகும். இந்த மாவட்டங்களில் கல்வியே குறைவாக இருந்தாலும், வேலைவாய்ப்புகளுக்குப் பல்வேறு வழிகள் உண்டு. ஆங்காங்கே சாதி ரீதியாக ஒதுக்கல்கள் இருந்தாலும், ஆயுதப் பலத்தால் ஒடுக்குமுறைக்கு ஆளாவது ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவு. ஆனால் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களிலும்; திருநெல்வேலி, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் சமூகச் சூழல் என்பது முற்றிலும் மாறுபட்டவை.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நந்தனார் காலத்திலிருந்து இன்று வரையிலும் சமூக ஒதுக்கல்களுக்கும் ஒடுக்கல்களுக்கும் ஆளாகி வடக்கு மாவட்ட சாம்பவர் எனும் பறையர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகிறார்கள். 1978 ஆம் ஆண்டு விழுப்புரம் நகரத்தின் மையப்பகுதியில் பட்ட பகலில் 12 சாம்பவர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்கள். பல ஆண்டுகளாக ஏதாவது ஒரு இடத்தில் ஒரு கிராமத்தில் பறையர் இன மக்களின் வீடுகள் கொளுத்தப்படாத நாளோ, அச்சமுதாயப் பெண் பிள்ளைகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகாத நாளோ இருந்ததில்லை என்பதே வரலாறாக இருந்தது. இப்பொழுது அதில் எவ்வளவோ குறைந்திருக்கிறது என்றாலும், அம்மக்களுக்கு எதிரான வன்முறைகளும், ஒடுக்கல்களும் தீர்ந்தபாடில்லை.

அதேபோல தென் தமிழகத்தில் தேவேந்திர குல வேளாளர்களுக்கு எதிரான சமூக கொடுமைகளும், வன்முறைகளும் இந்தியாவின் எந்தப் பகுதியிலும் நடைபெறாத ஒன்று. 1928-1931ல் ஆங்கிலேயர் இந்த மண்ணை ஆண்ட காலத்திலேயே இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கடலாடி, கமுதி போன்ற பகுதிகளில் 8 கட்டளைகள் பிறப்பித்தும், அதற்குக் கட்டுப்படாத போது கூடுதலாக 3 கட்டளைகளும் சேர்த்து, மொத்தம் 11 கட்டுப்பாடுகள் மூலமாக ஏறக்குறைய 18 மாவட்டங்களில் வாழ்ந்த தேவேந்திரகுல வேளாளர் மக்களின் அடிப்படை வாழ்வுரிமையும், மனித உரிமை பறிக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் அம்மக்களிடையே தோன்றிய விழிப்புணர்வுகள் அச்சமூக மக்களை ஒற்றுமைப்படுத்தின; தங்களுக்கு எதிரான அட்டூழியங்களைத் தட்டிக் கேட்டனர். அச்சிறிய எதிர்ப்பைக் கூட தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் கலவரத்தில் ஈடுபட்டு இமானுவேல் சேகரன் எனும் ஓய்வு பெற்ற ராணுவ வீரரைக் கொலை செய்தார்கள். அன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு உதவிட யாரும் முன்வராத நிலையில், 2500 மேற்பட்ட கிராமங்களிலிருந்து மக்கள் தங்களின் உடைமைகளான ஆடு, மாடுகளோடு வெளியேற நேர்ந்தது. கடந்த 75 வருடத்தில் இடைப்பட்ட சில 10 ஆண்டுகளைத் தவிர, தென்தமிழகம் கலவரப் பூமியாகவே இருந்து வந்தது.

தஞ்சாவூர் மாவட்டம், கீழவெண்மணியில் நெல் வயலில் பணிபுரிந்து வந்த பள்ளர்கள் எனும் தேவேந்திர குல வேளாளர்கள் அரைப்படி கூலி உயர்வு கேட்டதற்காக வயதான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 43 பேர் 1968 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி ஒரே குடிசையில் வைத்துத் தீயிட்டுக் கொல்லப்பட்டனர். 1979 ஜூன் 28 ஆம் நாள் சிவகங்கை மாவட்டம் உஞ்சனை என்ற கிராமத்தில் வழிபாட்டு உரிமை கோரியதற்காக 5 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள். 1980-ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள அய்யா புரத்தைச் சேர்ந்த 6 பேர் தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர். 1982-ல் தென்காசி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்னொரு சமுதாயத்தைச் சார்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதற்காக அவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கும் வர முடியவில்லை. வேறு எங்கும் வாழ முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டது. ஒரு கிராமமே அதனால் மதம் மாறியது.

1989 ஆம் ஆண்டு தேனி மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 60-க்கும் மேற்பட்ட தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் கொல்லப்பட்டார்கள். மீண்டும் 1993 தொடங்கிய கலவரம் 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி கொடியங்குளம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் சூறையாடப்பட்ட சம்பவத்தில் முடிந்தது. மீண்டும் 1997 ஆம் ஆண்டு வீரன் சுந்தரலிங்கம் பெயர் போக்குவரத்துக் கழகத்திற்கு சூட்டப்பட்டதை எதிர்த்து நடந்த கலவரம் ஏறக்குறைய 10 ஆண்டு காலம் நீடித்தது. 2021 தொடங்கி கடந்த 3½ ஆண்டு காலத்தில் மட்டும் தேவேந்திரகுல வேளாளர் சமூக இளைஞர்கள் ஏறக்குறைய 60-க்கும் மேற்பட்டோர் எக்காரணங்களும் இன்றி படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

ஒரு சமூகம் முன்னேற வேண்டும் எனில், நல்ல கல்வி கிடைக்க வேண்டும்; அதைத் தொடர்ந்து தொழில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்; தொழில் துறைகள் மலர சமூக அமைதி இருக்க வேண்டும். சண்டைகள், சச்சரவுகள், கலவரங்கள் தென்தமிழகத்தின் அடையாளங்களாக இருப்பதால் நல்ல தொழிற்சாலைகளும் உருவாகவில்லை; அதனால் வேலை வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. சமூகத்தில் இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகளாலும், பட்டியலின மக்கள் என்ற முத்திரைகளாலும், தாழ்த்தப்பட்டோர் என்ற அடையாளங்களாலும் சுயமாக தொழில் தொடங்கக்கூடிய வாய்ப்புகளைக் கூட தடுத்து விடுகிறது. எனவே வடக்கு மற்றும் தென் தமிழக படித்த தேவேந்திரகுல வேளாளர் மற்றும் சாம்பவர் சமூக இளைஞர்கள் வேலை வாய்ப்புகளுக்காக அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களை மட்டுமே பெரிதும் நம்பி உள்ளனர்.

1950 முதல் தமிழகத்தில் உள்ள 56 அரசுத்துறைகளில் 18% இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தாததால் 1997 முதல் 1999 வரையிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் A, B,C எனும் உயர் பதவிகளில் மட்டுமே 3½ லட்சம் பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் அது இன்னும் கூடுதலாகவே இருக்கும். இந்திய அரசியல் சாசனத்தை வடித்த அம்பேத்கர் அவர்கள் இட ஒதுக்கீடுகள் எந்த அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்திச் சென்றுள்ளார். அந்த அளவுகோலின் அடிப்படையில் ஆயுதம் தாங்கிய சாதிய வன்கொடுமைகளை எதிர்கொண்டு வரும் தென் தமிழக தேவேந்திர குல வேளாளர்களுக்கும், வடக்கு மாவட்ட ஆதிதிராவிடர்களுக்கும் தற்போது உள்ள 18 சதவீதத்திற்கும் கூடுதலாக இட ஒதுக்கீடு வழங்கி அம்மக்களைப் வலுப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் எவரும் செய்யவில்லை.

மேலும், தேவேந்திர குல வேளாளர்களும், வடக்கு மாவட்ட சாம்பவர் எனும் பறையர் சமூகத்தைச் சார்ந்தவர்களும் வேளாண்மையை நம்பியே பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களாக இருக்கக்கூடிய காரணத்தினால் அவர்கள் இன்றும் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள். நிரந்தரமாக மாதச் சம்பளம் பெறக்கூடியவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே! எனவே, இந்தச் சமூகங்களைக் கல்வி, பொருளாதார ரீதியாக முன்னேற்றக் கூடிய ஒரே வாய்ப்பாக அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகள் மட்டுமே உள்ளன.
1999-இல் கண்டறியப்பட்ட 3½ லட்சம் பின்னடைவு பணியிடங்களை நிரப்பி இருந்தாலும், அதைத் தொடர்ந்து வேலை வாய்ப்புகளில் முறையாக இட ஒதுக்கீடுகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் தேவேந்திர குல வேளாளர் / பறையர் எனும் சாம்பவர் சமூகங்கள் ஓரளவிற்கு முன்னேற்றத்தைக் கண்டிருப்பர். ஆனால், அதற்கு நேர் எதிராக 2010 ஆண்டு அமலாக்கப்பட்ட ’அருந்ததியர் 3% உள் இட ஒதுக்கீடு அரசாணை’ பட்டியல் பிரிவில் பெரும்பான்மையாக உள்ள தேவேந்திர குல வேளாளர் மற்றும் சாம்பவர் எனும் பறையர் இன மக்களின் சட்ட ரீதியான இட ஒதுக்கீடு உரிமைகளையும் தட்டிப் பறித்து விட்டது.

கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் உருவான பட்டியல் இன பிரிவினருக்கான காலிப் பணியிடங்கள் அனைத்தும் ஜனத்தொகையில் 3% மட்டுமே உள்ள அருந்ததியினர் என்ற ஒரு குறிப்பிட்ட பிரிவினை மட்டுமே வைத்து நிரப்பப்பட்டு வருகிறது. பிற்பட்டோர் பிரிவில் 3.5% இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. அது முழுக்க முழுக்க தனி இட ஒதுக்கீடு. அதாவது 3.5% இட ஒதுக்கீட்டில் இதர பிற்பட்டோர் போட்டியிட முடியாது; அதேபோல, இஸ்லாமியர்கள் எஞ்சியுள்ள பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிலும் பங்கு கோர முடியாது.
அதேபோலவே, பட்டியல் பிரிவில் 18 சதவீத இட ஒதுக்கீட்டில் 3 சதவிகிதம் அருந்ததியினருக்கு ஒதுக்கி அரசு அதைத் தனி இட ஒதுக்கீடு என அறிவித்திருக்க வேண்டும். SC(A) என்ற ஒரு பிரிவை உருவாக்குகின்றபோது, அதேபோல SC(B), SC(C) என்றோ பிரிவுகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் 3% சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெறும் அருந்ததியினர் அதைத் தாண்டி, மீதமுள்ள 15 சதவிகித இட ஒதுக்கீட்டையும் அபகரிக்காமல் தடுத்திருக்க முடியும்.

ஆனால், சட்ட ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் வெளி உலகிற்கு அருந்ததியினருக்கு 3% சதவீதம் எனக் காட்டிவிட்டு பட்டியல் பிரிவிலுள்ள 18 சதவிகிதத்திலும் அவர்களே இடம் பெற வாய்ப்பளித்தது சட்டப்பூர்வமானதுமல்ல; நியாயமானதுமல்ல! எங்கெல்லாம் புதிய பணியிடங்கள் உருவாகிறதோ அத்தனை பணியிடங்களையும் (சக்கிலியர்/ மாதாரி) அருந்ததியர் என அழைக்கப்படும் ஒரு சாதியினர் தமிழகத்தில் எந்தப் பகுதியில் குடி இருந்தாலும் அவர்களைக் கொண்டு வந்து பட்டியலின பிரிவினருக்கான ஒட்டுமொத்த இடங்களையும் அவர்களுக்கே தாரை வார்க்கும் அநீதி, அநியாயம் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அண்மையில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் பட்டியலில் இருக்கக்கூடிய பல சமூகங்களின் வாய்ப்புகளைப் பறித்து அதிலுள்ள ஒரு பிரிவினருக்குக் கொடுக்கலாம் என தீர்ப்பளிக்கவில்லை. ஆட்சி அதிகாரத்தில் இருக்கக் கூடியவர்கள் மொழி பாசத்தாலோ, அரசியல் வாக்கு வங்கிக்காகவோ தாங்கள் விரும்பக்கூடிய ஒரு பிரிவினருக்கே அனைவரது உரிமைகளையும் பறித்துக் கொடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் எந்தத் தீர்ப்பையும் வழங்கவில்லை.

தமிழ்நாட்டில் 3% உள் இட ஒதுக்கீட்டின் மூலம் நடைபெறும் இந்த அநீதி சமூக நீதிப் படுகொலைக்குச் சமமானது ஆகும். இதனிடையே இதன் உண்மையான பாதிப்பை உணராத தமிழகத்தின் பல அரசியல் கட்சிகளும் அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டைப் பற்றிப் பேசுவதை ஒரு சாதிக்கு எதிரானது போன்ற தவறான கண்ணோட்டத்தில் செயல்படுகின்றனர். இதை ஆட்சியாளரிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய அதிகாரிகளும் அச்சப்பட்டு உண்மை நிலையை விளக்க மறுக்கிறார்கள். 2010-இல் இந்த உள் இட ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தியவர்களே இன்றும் ஆட்சியில் இருப்பதால் அவர்களிடம் நேரடியாக இதைப் பேசுவதற்கு உண்டான வாய்ப்புகள் மிகக் குறைவு எனக் கருதுகிறோம். ஒரு மாநில அரசு சட்டத்தின் படியே ஆட்சி செய்ய வேண்டும். கொள்கை ரீதியாக சில முடிவுகள் எடுக்க மாநில, மத்திய அரசுகளுக்கும் அதிகாரம் உண்டு. அதே சமயம் அம்முடிவுகள் பாகுபாட்டுடனும், ஒரு தலைப்பட்சமாகவும் இருக்கக் கூடாது.

18 சதவிகித இட ஒதுக்கீட்டில் 3 சதவீதம் அருந்ததியருக்கு எனப் பிரித்துக் கொடுத்த மாநில அரசு மீதம் எஞ்சியுள்ள 15 சதவிகித இட ஒதுக்கீட்டில் அருந்ததியினர் எவ்விதத்திலும் உரிமை கோர முடியாது; அதில் போட்டியிட முடியாது என்பதையும் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை; மாறாக, அருந்ததியினருக்கு 3% இட ஒதுக்கீடு பிரத்தியேகமாகவும், எஞ்சியுள்ள 15 சதவிகிதத்தைப் பொதுப்பிரிவாக மாற்றி, அதிலும் அருந்ததியினரே முன்னுரிமை பெறும் வகையிலும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அது வரலாற்று பிழை ஆகும்.

எனவே சட்டரீதியாகவும், சமூக ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் பட்டியலின பெரும்பான்மையாக உள்ள தேவேந்திரகுல வேளாளர் மற்றும் பறையர் எனும் சாம்பவர் மக்களுக்கு எதிராக உள்ள 3% அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் மேதகு ஆளுநர் அவர்கள் அறிவுறுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், அரசுத் துறைகளில் புதிதாக உருவாகக்கூடிய ஒவ்வொரு வேலை வாய்ப்பிலும் இந்த அரசு திட்டமிட்டு எல்லா வாய்ப்புகளையும் ’அருந்ததியர்’ என்ற ஒரு பிரிவினருக்கே வழங்கி வருகிறது. அண்மையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் உருவான பட்டியலின பிரிவினருக்கான 4 காலி பணியிடங்களையும் SC(A)-க்கு ஒதுக்கி வெளியிடப்பட்ட அரசாணையையும் இத்துடன் இணைத்துள்ளேன். இது பெரும்பான்மை பட்டியலின மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே, இதில் விரைந்து தமிழக அரசு, மத்திய அரசு முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டும் எனவும் மேதகு ஆளுநர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

2. திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை; தேனி மாவட்டம் ஹைவேவிஸ்; கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை, முடிஸ்; நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, கூடலூர்; சேலம் மாவட்டம் ஏற்காடு ஆகிய பகுதியிலுள்ள தேயிலை மற்றும் காப்பி தோட்டங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் தேவேந்திரகுல வேளாளர் மற்றும் பறையர் எனும் சாம்பவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆங்கிலேயருடைய ஆட்சிக் காலத்தில் தேயிலைத் தோட்டங்கள் உருவாக்கப்பட்ட போது எவ்விதமான வசதிகளுமற்ற மற்றும் விஷச் சந்துகள் மற்றும் கொடிய விலங்குகளின் தொல்லைகளை எதிர் கொண்டு மலைப் பகுதிகளில் குடியேற எவரும் முன்வரவில்லை. ஏற்கனவே பல படையெடுப்புகளுக்கும் அந்நிய ஆக்கிரமிப்புகளுக்கும் ஆளாகி தங்கள் சொந்த நிலங்களை இழந்து ஏழைகளாகவும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டும் கிடந்த மக்களை அடித்தும் உதைத்தும் சித்திரவதை செய்தும் அடிமைப்படுத்தியும் வலுக்கட்டாயமாக மலைப்பகுதிகளில் சாலைகள் அமைக்கவும், காடுகளைத் திருத்தி தேயிலைத் தோட்டங்களைப் பயிரிடவும் அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

அதே காலகட்டங்களில் தமிழகத்திலிருந்தும், இந்தியாவின் பிற பகுதியிலிருந்தும் ஏழை, எளிய பட்டியலின மக்கள் எங்கெங்கெல்லாம் பிரிட்டிஷ் ராஜ்ஜியம் வியாபித்து இருந்ததோ, குறிப்பாக மலேசியா, பர்மாவில் ரப்பர் தோட்டங்களை உருவாக்கவும்; இலங்கையில் தேயிலை, காப்பி தோட்டங்களை உருவாக்கவும்; பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள பிஜீ தீவிற்கு கரும்புத் தோட்டங்களில் பணிபுரியவும், தென் ஆப்பிரிக்காவில் சுரங்கப் பணிகளுக்காகவும் அழைத்துச் செல்லப்பட்டனர். பிஜீ, பர்மா, மலேசியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் குடியுரிமை பெற்று அந்த மக்களோடு மக்களாக இரண்டற கலந்து அவர்கள் தங்கள் வாழ்வுரிமையையும், அரசியல் உரிமையையும் தக்க வைத்துக் கொண்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் ’மாஞ்சோலை’ உள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட அந்த வனப் பகுதி பின்னாளில் சிங்கம்பட்டி ஜமீனுக்கு தனமாக வழங்கப்பட்டு, அந்த ஜமீனிடமிருந்து முகமது அலி ஜின்னாவின் மகள் வழிப் பேரன் நுசில் வாடியாவின் பிபிடிசி நிறுவனத்தின் வசம் சென்றது. பிபிடிசி வருவதற்கு முன்பு இருந்தே அந்த மலைப் பகுதியில் வாழ்ந்து வந்த பழங்குடியினர் அல்லாத வனவாசிகளும்; இன்றைய திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் ஆயிரக்கணக்கான தேவேந்திரகுல வேளாளர்களும் ஆதி திராவிடர்களும் மாஞ்சோலை வனப் பகுதியில் தேயிலைத் தோட்டப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அம்மக்கள் ஏறக்குறைய 100 வருடங்களுக்கு மேலாக மாஞ்சோலை, காக்காச்சி, ஊத்து, நாலுக்கு, குதிரை வெட்டி ஆகிய பகுதிகளை வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஏறக்குறைய ஆறு தலைமுறையாக பல குடும்பங்களாக அங்கு வாழ்ந்தும், பிபிடிசி நிறுவன தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் 1951 ஆம் ஆண்டு தொழிலாளர் சட்டப்படி அங்கேயே வாழ வழிவகை உண்டு. ஆனாலும், அவர்கள் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு குறைந்தபட்ச சம்பளம் கூட அமலாக்கப்படாமல் கொத்தடிமைகளிலும் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர். தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி அவர்கள் நடத்திய போராட்டத்தில் மாநில அரசும் நிர்வாகமும் சேர்ந்து நடத்திய தாக்குதலில் 1999 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி 17 தோட்டத் தொழிலாளர்கள் உயிர் நீத்தார்கள். 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மாஞ்சோலையிலிருந்து டெல்லி சென்று மனித உரிமை ஆணையத்திடம் முறையிட்டு, மனித உரிமை ஆணையம் தலையிட்டதன் பேரில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு ஓரளவுக்குத் தீர்வு கிடைத்தன; அவர்களின் தினச் சம்பளமும் உயர்ந்தது.

இந்நிலையில், 2024 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி அன்று மாஞ்சோலை குரூப் அலுவலகப் பலகையில் ஜூன் மாதம் 14 ஆம் தேதிக்குள் அனைத்துத் தொழிலாளர்களும் விருப்ப ஓய்வு விண்ணப்பத்தில் கையெழுத்திட்டுக் கொடுக்க வேண்டும் எனவும், ஜூன் 14 ஆம் தேதிக்குப் பிறகு அம்மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு மின் இணைப்பு, குடிநீர் துண்டிக்கப்படும், போக்குவரத்து வசதி கிடைக்காது என அறிவிப்பு வெளியிட்டு ஜூன் 1ஆம் தேதியிலிருந்து வேலையையும் நிறுத்தி விட்டார்கள்.

ஏறக்குறைய 100 வருடங்களுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் ரத்தத்தாலும் வியர்வையாலும் உருவாக்கப்பட்ட 8,373 ஏக்கர் தேயிலைத் தோட்டங்கள் கடந்த நான்கு மாதங்களாக தேயிலை பறிக்கப்படாமல் காடுகளைப் போல் வளர்ந்து வீணாக நிற்கின்றன. 536 தொழிலாளர் குடும்பங்களைச் சார்ந்த ஏறக்குறைய 2500க்கு மேற்பட்ட மக்கள் எவ்வித வருமானமும் இன்றி பசியோடும் பட்டினியோடு கிடக்கிறார்கள். இந்த மக்களால் உருவாக்கப்பட்டு, சர்வதேச அளவில் அடையாளப்படுத்தப்பட்ட மாஞ்சோலை பகுதியிலிருந்து அம்மக்களை விரட்டி அடித்து விட்டு அந்த வனப்பகுதியில் உள்ள பிபிடிசி நிர்வாக அதிகாரிகளுக்காகக் கட்டப்பட்ட 100க்கு மேற்பட்ட சொகுசு பங்களாக்களைச் சூழல் சுற்றுலா என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்க்கத் திட்டமிடுகிறார்கள்.

பிபிடிசி ஒரு சர்வதேச கார்ப்பரேட் கம்பெனி ஆகும். 1947 ஆம் ஆண்டு தொழில் தாவாச் சட்ட விதிகளின்படி விருப்ப ஓய்வுத் திட்டத்தையோ அல்லது கம்பெனியை மூடும் திட்டத்தையோ அறிவிக்கவில்லை. கம்பெனி அரசிடம் முன் அனுமதியும் பெறவில்லை. தொழிலாளர் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கங்களையும் ஆலோசிக்கவில்லை. சொற்பத் தொகையைத் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் திணித்துவிட்டு பிபிடிசி நிர்வாகம் எடுக்கும் முடிவிற்கும் தொழிலாளர்களைக் கட்டுப்பட்டு நடந்திட வேண்டும் என்று சர்வாதிகாரப் போக்கில் நடந்து கொள்கிறார்கள். மாநில அரசின் அனைத்துத் துறை நிர்வாகம், மாவட்ட ஆட்சியர், காவல்துறை, வனத்துறை, உள்ளாட்சித் துறை, போக்குவரத்துத் துறை என அனைத்தும் மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்கு எவ்வளவு நெருக்கடி கொடுக்க முடியுமோ, அவ்வளவு வன்மத்துடன் மக்களை வெளியேற்றும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள்.

அதேபோன்று அப்பகுதியில் 10,000 மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருவது தெரிந்திருந்தும், அது ஒரு பேரூராட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தும் ’புலிகள் காப்பகமாகவும், காப்பு காடாகவும்’ அறிவிக்கும் முன்பு சட்டப்பூர்வமான எவ்விதமான முன் அறிவிப்பும் செய்யவில்லை. பொதுமக்களிடம் கருத்தும் கேட்கவில்லை. குறிப்பாக Forest Settlement Officer வனப்பகுதியில் குடியிருக்கும் பகுதிகளில் வனத்தீர்வு அதிகாரி நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யப்படவில்லை. அம்மக்கள் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக வாழுகின்ற காரணத்தினால் 2006 வன உரிமை பாதுகாப்புச் சட்டத்தின் படி மாஞ்சோலையில் வாழ்வதற்கும், ஒவ்வொரு குடும்பத்தினரும் தலா 10 ஏக்கர் நிலம் பெறுவதற்கும் சட்ட உரிமை பெற்றவர்கள் ஆவர். ஆனால், எவ்விதமான சட்ட விதிமுறைகளையும் கடைப் பிடிக்காமல் மாஞ்சோலை மக்களை வெளியேற்றுவதிலேயே பிபிடிசி நிர்வாகமும் அரசும் குறியாக செயல்படுகிறது.

உயர்நீதிமன்ற இடைக்கால உத்தரவின் அடிப்படையில் மாஞ்சோலை மக்கள் தற்போது இடையூறு செய்யப்படாமல் இருக்கிறார்கள். 2006 வனவுரிமை பாதுகாப்புச் சட்டத்தின் படி, இவர்களுக்கான வாழ்வுரிமையை மாஞ்சோலையிலேயே நிலைநாட்டத் தவறினால், மாஞ்சோலை மக்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற மலைப்பகுதியில் வாழக்கூடிய லட்சக்கணக்கான தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், வனவாசிகள் மற்றும் மலைவாழ் மக்களும், இந்திய வனப்பகுதியில் வாழும் லட்சோபலட்சம் மக்களும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகும்.

எனவே, முதல் குடிமகனாகவும், ஆட்சி அதிகாரத்தில் தலைவராகவும் இருக்கக்கூடிய தாங்கள் நேரடியாகத் தலையிட்டு 2006 ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டப்படி மாஞ்சோலை மக்களின் வாழ்வுரிமையை மீட்டுத் தர வலியுறுத்துகிறேன்.

மேலும், தமிழக அரசின் வனப்பகுதிக்குச் சொந்தமான 8,373 ஏக்கர் பரப்பளவு நிலத்தை பிபிடிசி நிறுவனம் போலிப் பத்திரம் தயார் செய்து 2015 ஆம் ஆண்டு சென்னை ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் ரூ 50 கோடிக்கு அடமானம் வைத்தது இப்பொழுது அம்பலமாகியுள்ளது. குத்தகை முடியும் தருவாயில் அரசை ஏமாற்றவும்; அந்த நிலத்திற்கு அவர்களே சொந்தம் கொண்டாடவும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அதோடு பிபிடிசி நிறுவனம் ஏற்கனவே அரசுக்குக் குத்தகை வரிப் பாக்கி ரூ 300 கோடி மற்றும் நீதிமன்ற உத்தரவுப்படி, ரூ 700 கோடி என ரூ 1,141 கோடிக்கு மேலாக அரசுக்குக் குத்தகை செலுத்த வேண்டி இருக்கிறது. கடந்த 99 வருடத்தில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை அட்டைப் பூச்சிகளைப் போலச் சுரண்டி, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் லாபமீட்டிய பிபிடிசி கம்பெனி வெளியேறுகின்ற பொழுது அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ 1141 கோடியையும் ஏப்பம் விட்டு விட்டு ஓட நினைக்கிறது. அரசும் அந்தக் குத்தகை பாக்கியைப் பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்sலை என்பதையும் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வரக் கடமைப்பட்டுள்ளேன்.

3. 1937 முதல் 1971 வரையிலும் தமிழகத்தின் ஒரு தலைமுறையே மதுவின் வாசம் அறியாமல் இருந்தது. 1971ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி அவர்கள் மதுவிலக்கை ரத்து செய்து, சாராயம் மற்றும் கள்ளுக்கடைகளைத் திறக்க அனுமதி அளித்தார். மதுவிலக்கு அமலில் இருந்த காலத்தில் ஆயிரத்தில் ஒரிருவர் தான் கள்ள மது பழக்கத்திற்கு ஆட்பட்டு இருப்பார்கள். ஆனால், தமிழகத்தில் மதுவிலக்கை ரத்து செய்ததன் பரிணாம வளர்ச்சி பல்லாயிரக்கணக்கான மதுபானக் கடைகளை அரசே நடத்தி ஆண்டுக்கு ரூ 50,000 கோடி லாபம் ஈட்டும் நிலைக்கு வந்து விட்டது. தமிழ்நாடு அரசு நடத்தும் டாஸ்மாக் வணிகத்தில் ஒரு லட்சம் கோடி ஊழல் நடைபெறுகிறது என இரண்டு வருடங்களுக்கு முன்பே நான் பேரணி நடத்தித் தங்களிடம் மனு அளித்துள்ளேன்.

குடிப்பழக்கத்திற்கு ஆளாகாத தமிழ்ச் சமுதாயத்தில் இப்பொழுது 50% முதல் 60% ஆண்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விட்டார்கள்; பாதிப்பிற்கு ஆளானோர் இளம் வயதிலேயே உயிர் துறக்கிறார்கள்; பலர் வாரத்தில் நான்கு நாட்கள் கூட பணிக்குச் செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு ஆட்பட்டுக் கிடக்கிறார்கள். ஏழை, எளிய மக்களின் உழைப்பு பெரும்பாலும் டாஸ்மாக் கடைக்கே செல்கிறது. மது, புகை, போதைப் பழக்க வழக்கங்களுக்கு ஆளானவர்கள் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகிறார்கள்; சட்ட ஒழுங்கு கெடுகிறது; அமைதி கெடுகிறது. மதுவிலக்கு முழுக்க முழுக்க மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, பூரண மதுவிலக்கை அமல்படுத்த மத்திய அரசின் மீது பழியை போடாமல் அல்லது மடைமாற்றம் செய்யாமல் மாநில அரசு அமல்படுத்தப் பரிந்துரை செய்ய வேண்டுகிறோம்.

4. தென் தமிழக தேவேந்திர குல வேளாளர் சமூக இளைஞர்கள் மீதான தொடர் தாக்குதலைத் தடுத்து நிறுத்தவும், கண்காணிக்கவும் மத்திய அரசின் உளவுத்துறை மற்றும் துணை ராணுவத்தை தென் மாவட்டங்களில் நிலையாக நிறுத்தவும்;

ஏறக்குறைய 100 வருடங்களாக தென்தமிழகத்தில் சாதிய அடக்குமுறைகளும் ஒடுக்கு முறைகளும் வன்முறைகளும் தொடர் நிகழ்வாக இருந்து வருகின்றன. 2021 மே மாதம் முதல் 2024 அக்டோபர் வரையிலும் ஏறக்குறைய 60க்கும் மேற்பட்ட தேவேந்திர குல இளைஞர்கள் எக்காரணமும் இன்றி கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிகழ்வு தொடர் கதையாகவே இருக்கின்றன. நேற்றைய முன் தினம் கூட, திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாட்டம் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சார்ந்த மனோஜ் என்ற 17 வயது கல்லூரி மாணவன் சாதி வெறியர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

குற்றம் இழைப்போருக்கு எதிராக வலுவற்ற நிலையில் முதல் தகவல் அறிக்கை, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதும்; கீழமை நீதிமன்றங்களில் தண்டனை பெற்றாலும் மேலமை நீதிமன்றங்களில் விடுதலை ஆகும் வண்ணம் பல்வேறு குளறுபடிகளைக் காவல்துறை திட்டமிட்டு ஏற்படுத்திக் கொடுப்பதால் சட்டத்தின்மீது குற்றவாளிகளுக்கு எவ்விதமான அச்சமும் இல்லாமல் போய் விடுகிறது; அவர்கள் தொடர் குற்றவாளிகளாக மாற காவல்துறையினரே காரணமாக அமைகின்றனர்.

தேவேந்திரகுல வேளாளர் எனும் அடையாளத்தை கூட ஏற்க மனமில்லாமல் சாதி வன்மங்களைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும் போக்கு அண்மைகாலமாக அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து இதுபோன்ற கொலைவெறி பலிகளுக்கு ஆளாகி வரும் சூழலை மத்திய அரசின் என்.ஐ.ஏ போன்ற துறைகள் மூலமாகத் தான் கட்டுப்படுத்த முடியும் எனக் கருதுகிறோம்.

எனவே, தென் தமிழகத்தில் தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்களுக்கு எதிராக நடத்தப்படும் அனைத்து சாதியக் கொலைகளைப் பயங்கரவாதத்திற்கு ஒப்பாகக் கருதி தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு எதிராக நடைபெறும் அனைத்துக் கொலை வெறித் தாக்குதல்களையும் என்.ஐ.ஏ மூலம் கையாள வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள் ஆகும்.

5. அந்நிய முதலீட்டின் வாயிலாகத் துவங்கப்படும் தொழிற்சாலைகளை சென்னையை மட்டும் மையமாக வைத்துத் தொடங்காமல் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம், மதுரை போன்ற தென் மாவட்டங்களில் பரவலாகத் துவங்கிட மாநில அரசுக்கு அறிவுறுத்தக் கேட்டுக் கொள்கிறோம்.

6. தொழிற்சாலைகளின் கட்டுமான பணிகளில் தென் தமிழக மக்களைப் பயன்படுத்திக் கொண்டு தொழிற்சாலை இயங்குகின்ற பொழுது பிற மாநிலத்தைச் சார்ந்தவர்களுக்கு உயர் பதவிகளில் முன்னுரிமை கொடுப்பது, கடினமான மற்றும் மதிப்பு குறைவான பணிகளுக்கு மட்டுமே தென் தமிழக மக்களைப் பயன்படுத்துகின்ற பிரிவினைப் போக்குகள் முற்றாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும், இதற்கான விதிமுறைகளைப் புரிந்துணர்வு ஒப்பந்தத்திலேயே உருவாக்கப்பட வேண்டும் எனவும் மாநில அரசுக்கு அறிவுறுத்த வேண்டுகிறேன்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
08.11.2024