தேவேந்திர குல வேளாளர், ஆதிதிராவிடர் உரிமையை தட்டிப்பறிக்கும் சட்டவிரோத 3% உள் இட ஒதுக்கீடு அநீதிக்கு முடிவு கட்டுவோம்!!
நவம்பர் 7 – சென்னை – ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி
அணி திரண்டு வாரீர்.!
புதிய தமிழகம் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அறைகூவல்!
அருந்ததியர் 3% உள் இட ஒதுக்கீடு ஆணையால் தென் தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள தேவேந்திர குல வேளாளர்களும்; வடக்கு மாவட்டத்தில் பெரும்பான்மையான சமூகமான ஆதிதிராவிடர்களும் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பெரும் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்!
இட ஒதுக்கீடுகளை யாருக்கும் யாரும் விருப்பப்படி அள்ளித் தந்து விட முடியாது! அதற்கான அழுத்தம் திருத்தமான காரணங்களும், ஆதாரங்களும் மிக மிக அவசியம். கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கிய மக்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்திய அரசியல் சாசனத்திலேயே உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வரலாற்று ரீதியாக அரசியல், பொருளாதாரம், சமூகம் என அனைத்து தளங்களிலும் பின்தங்கியவர்களுக்கு இந்திய அளவிலும், அந்தந்த மாநிலங்களிலும் இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் தேவேந்திர குல வேளாளர்களும், ஆதிதிராவிடர்களும், அருந்ததியர்களும் மற்றும் 70-க்கும் மேற்பட்ட சாதிகளும் அடங்கிய பட்டியல் பிரிவில் உள்ள மக்களுக்கு 18 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் எவ்வித மாற்றமும் செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு. ஆனால், அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்பில் பட்டியல் பிரிவினரையும் பிரித்து மாநில அரசுகள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால், அத்தீர்ப்பில் பட்டியலில் இடம்பெறும் எந்த ஒரு பிரிவினருக்கும் முன்னுரிமை கொடுக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் பட்டியல் பிரிவில் மிகப் பெரும்பான்மையாக உள்ள தேவேந்திர குல வேளாளர்களுக்கும்; வடக்கு மாவட்டத்தில் ஆதிதிராவிடர் சமுதாயத்திற்கும் பெரும் பாதிப்பை உருவாக்கும் வகையில் எண்ணிக்கையில் 3% குறைவாகவே உள்ள அருந்ததியர்களுக்கு ஒட்டுமொத்த 18 சதவீதத்தையும் தாரைவாக்கும் வகையில் முன்னுரிமை தந்து அரசாணை பிறப்பித்து கடந்த 15 வருடமாக அதை நடைமுறைப்படுத்தியும் வருகிறார்கள்.
அதன் விளைவாக கடந்த 15 வருடத்தில் உருவான ஆயிரக்கணக்கான புதிய பதவிகள் அனைத்தையும் அருந்ததியர் எனும் ஒரு சாதியினருக்கு மட்டுமே கொடுத்து விட்டார்கள்.!! இதனால் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 15% மேல் உள்ள இரு சமூக இளைஞர்களும் வேலை வாய்ப்பு இன்றி, நிர்க்கதியாக உள்ளார்கள். அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பிற்பட்டோர் பிரிவில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ’உள் இட ஒதுக்கீடாக’ வழங்கவில்லை; மாறாக ‘தனி இட ஒதுக்கீடாக’ வழங்கப்பட்டு வருகிறது. அதனால் இஸ்லாமியர் அல்லாத பிற பிற்பட்டோருக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை.
அரசு ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனில் அதற்கு தகுந்த அறிவுப்பூர்வமான ஆய்வின் அடிப்படையில் தான் வழங்க வேண்டும். அதுபோன்று பட்டியல் பிரிவில் இடம் பெற்றுள்ள தேவேந்திரகுல வேளாளர்; ஆதி திராவிடர்; அருந்ததியர் உள்ளிட்ட 76 சாதிகளின் சமூக, அரசியல், பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஆய்ந்து ஒப்பிட்டு உண்மை நிலையை பொதுவெளியில் சமர்பித்து, அதன் பின்னரே எந்த முடிவும் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. மாறாக திடீரென 2008 ஆம் ஆண்டு ஒரு அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி அரசியல் ரீதியாக ஒரு முடிவு எடுத்து, 3% உள் இட ஒதுக்கீட்டை அறிவித்து திமுக; பாமக; கம்யூனிஸ்ட் கட்சிகளின் அரசியல் பசிக்கு நம்மை இரையாக்கிவிட்டனர். அதே சமயத்தில் இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்த நாள் முதல் கடந்த 77 ஆண்டுகளாக 18 சதவிகித இட ஒதுக்கீட்டை முறையாகவும் முழுமையாகவும் அமலாக்காததால் பட்டியலின பிரிவில் உள்ள மக்களுக்குக் கிடைத்திருக்க வேண்டிய 3½ லட்சத்துக்கு மேற்பட்ட ஏ, பி, சி – எனும் உயர் பதவி பின்னடைவு காலிப் பணியிடங்களை வழங்கிட தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு அரசியல் கட்சியினரும் குரல் கொடுக்க முன் வரவில்லை. வெறுமனே தேர்தல் நேரத்தில் வாயளவில் சமூக நீதி பேசி ஓட்டு வாங்கி செல்கிறார்கள். அதன் பின் வாய் திறப்பதே இல்லை.
3 % உள் இட ஒதுக்கீட்டை ஆதரித்து, ஒட்டுமொத்த 18% இட ஒதுக்கீட்டையும் அருந்ததியினருக்கு தாரை வார்த்து அதன் மூலம் பட்டியல் பிரிவில் பெரும்பான்மையாக உள்ள தேவேந்திர குல வேளாளர் மக்களையும், ஆதி திராவிட பறையர் சமூக மக்களையும் வஞ்சிப்பதே அவர்களின் நோக்கம் என தெரிகிறது. உள் இட ஒதுக்கீட்டின் பேராபத்தை கடந்த 15 வருடங்களாக நாம் எடுத்துச் சொல்லி வருகிறோம். ஆனால், பதவி பித்துப் பிடித்த சில தலித் அமைப்புகள் இந்த உண்மை நிலையை பட்டியலின மக்களிடம் கொண்டு செல்லவில்லை. அதனால், வடக்கு மாவட்ட ஆதிதிராவிட இளைஞர்களால் உள் இட ஒதுக்கீட்டின் பாதிப்புகளை அறிய முடியாமல் போய்விட்டது. இப்பொழுது தான் ஆதிதிராவிட மக்களும், தேவேந்திரகுல வேளாளர்களும் 3% இட ஒதுக்கீட்டால் ஏற்படும் பேராபத்தை உணர தொடங்கி இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் 3% மக்கள் தொகை கொண்ட ஒரு சாதியினருக்கு 3 சதவீதம் பங்கிட்டு கொடுப்பது இவர்களின் நோக்கம் எனில், 18 சதவீதத்திலிருந்து அருந்ததியினரைப் பிரித்து அவர்களுக்கு தனியாக 3 சதவீதம் கொடுப்பது தானே சட்டரீதியாகவும், இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் சரியானதாக இருக்க முடியும்? ஆனால், அவர்களை பட்டியல் பிரிவிலிருந்து தனியாக பிரிக்காமல் உள்ளேயே வைத்துக் கொண்டு முதல் வாய்ப்பு எனும் முன்னுரிமை அடிப்படையில் எப்பொழுதெல்லாம் புதிய பணி இடங்களும்; பதவி உயர்வு பணியிடங்களும் உருவாகிறதோ அப்பொழுதெல்லாம் எங்கிருந்தேனும் அருந்ததியினரை தேடிப் பிடித்துக் கொண்டு வந்து அனைத்து முக்கிய பதிவிகளிலும் அமர்த்தி விடுகிறார்கள்!! இதைவிட சட்ட விரோதம்; நயவஞ்சகம்; சமூக அநீதி வேறு ஏதாவது இருக்க முடியுமா? இதற்கு தீர்வு காண வேண்டாமா?
தேவேந்திர குல வேளாளர்களுக்கும் ஆதிதிராவிடர்களுக்கும் இழைக்கப்படும் அநீதிக்கு முடிவு கட்டிட 3% அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டு முன்னுரிமை அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் புதிய தமிழகம் கட்சி முன்னெடுப்பில் நவம்பர் 7ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடைபெறுகிறது. அப்பேரணியில் அனைத்து தரப்பினரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
தேவேந்திரகுல வேளாளர் மற்றும் ஆதி திராவிடர்களின் உரிமையை தட்டிப் பறிக்கும்
திராவிட மனு வாதிகளின் அருந்ததியர் 3% உள் இட ஒதுக்கீடு
தீய நோக்கத்தை
தோலுரிப்போம்.! அம்பலப்படுத்துவோம்.! முறியடிப்போம்.!
அண்ணல் அம்பேத்கர் அவர்களால்
அரும்பாடு பட்டு பெற்ற இட ஒதுக்கீடு உரிமையை மீட்டெடுப்போம்.!
மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களின்
மண்ணுரிமையை 2006 வன உரிமைச் சட்டத்தின்படி நிலைநாட்டுவது உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி,
நவம்பர் – 7 – ஆளுநர் மாளிகை நோக்கி மாபெரும் பேரணி.!
பேரணி புறப்படும் இடம்
ராஜரத்தினம் ஸ்டேடியம், சென்னை காலை 11.00 மணி.
ஆதி திராவிடர் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் இளைஞர்களே.!
அணி திரண்டு வாரீர்.!!
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
02.11.2024