”கொந்தகை – கீழடி தொல்லியல் ஆராய்ச்சி அருங்காட்சியகம் எனப் பெயரிடுவதே சாலச் சிறந்தது”

அறிக்கைகள்
s2 572 Views
  • கொந்தகை கீழடி தொல்லியல் ஆராய்ச்சி அருங்காட்சியகம்

    கொந்தகை கீழடி தொல்லியல் ஆராய்ச்சி அருங்காட்சியகம்

  • கொந்தகை கீழடி தொல்லியல் ஆராய்ச்சி அருங்காட்சியகம்
Published: 03 Mar 2023

Loading

காடுமேடுகளில் விலங்குகளை வேட்டையாடி நாடோடிகளாக வாழ்ந்த மனித குலம் பெருக்கம் அடைய அடைய தங்களுடைய உணவு தேவைக்காக ஆற்றுப்படுகைகளில் தங்கி வேளாண்மையில் ஈடுபட்டார்கள்.

கற்காலத்துக்கு பிந்தைய அக்காலத்தை ’மனித குல நாகரிகம்’ தோன்றிய காலமாக கருதுகிறோம். இந்தியாவின் சிந்து சமவெளிப் பகுதியில் தோன்றிய மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகங்களும்; இன்றைய ஈராக் பகுதியான டிக்ரிஸ் நதிக்கரையில் அமைந்த மெசபடோமியா நாகரிகமும்; எகிப்தில் நையல் நதிக்கரையில் தோன்றிய சுமேரியன் நாகரீகமும்; சீனாவின் மஞ்சளாறு மற்றும் யாங்சி நதிக்கரைகளில் தோன்றிய நாகரிகங்களும் தொன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன.

உலகின் பல தேசங்களிலும் தினமும் மனித குலத்தின் தோற்றுவாய், பரிணாமங்கள், நாகரிகங்கள் குறித்து அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மொகஞ்சதாரோ, ஹரப்பா நாகரிகம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு, அகழ்வாராய்ச்சி செய்து கண்டுபிடிக்கப்பட்டது. பாரத தேசத்தின் – தமிழகத்தின் தென்கோடியில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி மூலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அங்கே மக்கள் நாகரிக வாழ்க்கை வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இது முழுக்க முழுக்க தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, பாரம்பரியம் ஆகியவற்றை பறைசாற்றுவதாக இருக்கிறது.

வைகை ஆற்றின் கரையில் மதுரை அருகே உள்ள திருப்புவனம் பகுதியில் கொந்தகை மற்றும் கீழடி, அகரம், மணலூர் ஆகிய கிராமங்களில் ஏறக்குறைய 15 வருடங்களுக்கு மேலாக அகழ்வாராய்ச்சி பணிகள் இந்தியத் தொல்லியல் துறை மற்றும் தமிழக தொல்லியல் துறையின் சார்பாக நடைபெற்று வருகிறது. ஒரு குறிப்பிட்ட பகுதியில் மக்கள் பல காலம் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள், அவர்கள் செய்து வந்த தொழில்கள், அதற்கு பயன்படுத்திய கருவிகள், ஆடை – ஆபரணங்கள், பண்ட பாத்திரங்கள், இறந்த பிறகு அவர்கள் அடக்கம் செய்யப்படும் முறைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்வதே தொல்லியல் துறை ஆராய்ச்சி ஆகும்.

கொந்தகை, கீழடி, அகரம் ஆகிய பகுதிகளுடைய பெயர்களே வரலாற்றுச் சம்பவங்களோடு தொடர்புடையதாகக் கருதப்படுகின்றன. கொந்தகை என்பது மகாபாரதத்தில் இடம் பெற்றுள்ள வரலாற்றுப் பெயரான ’குந்தி தேவி’ அந்தப் பகுதிக்கு வந்து சென்றதால் குந்திதேவி தெய்வ வழிபாடும், அது காலப்போக்கில் ’கொந்தகை’ என்று மருவியதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல கீழடி என்பது ’கிரீடி’. அதாவது கிரீடம் சூட்டப்பட்ட இடம் என்ற காரணப் பெயராக அமர்ந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்பொழுது அருங்காட்சியகம் அமைய உள்ள ’பள்ளிச் சந்தை’ பகுதி உற்பத்தியான விவசாய மற்றும் தொழில் பொருட்களை வணிகம் செய்வதற்கான பொதுச் சந்தையாக விளங்கி இருப்பதும், அதனை ஒட்டியே அந்த பெயர் விளங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த பகுதிகள் முழுக்க முழுக்க சில காலங்கள் வரையிலும் கொந்தகை ஊராட்சி மற்றும் வருவாய் கிராமத்திற்கு உட்பட்டே இருந்திருக்கின்றன. எந்த ஒரு நாகரிகமும் இன்றைய காலகட்டத்தைப் போல ஒரு சிறிய சிற்றூராக உருவெடுத்திருக்காது. அவைகள் சுய சார்புடைய ஓரளவுக்குப் பெரிய பகுதிகளாக மட்டுமே நதிக்கரைகளிலே மக்கள் தங்களுடைய வாழ்விடம் மற்றும் தொழிற்கூடங்களை அமைத்து இருப்பார்கள். எனவே, அப்பகுதியில் உள்ள கொந்தகை, கீழடி, மணலூர், அகரம் ஆகிய அனைத்தும் ஒரே பகுதியாகத் தான் இருந்திருக்க வாய்ப்புண்டு.

அம்மக்களின் நாகரிகம் ஏறக்குறைய 2500 முதல் 3000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக தொல்லியல் ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. நெசவு மற்றும் மண்பாண்டம் செய்தல், அணிகலன்கள் செய்வது மட்டுமின்றி பெரும்பாலும் வேளாண்மையே அங்கு பிரதான தொழிலாக இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்று இருக்கின்றன. இது போன்ற அகழ்வாராய்ச்சிகள் தான் தமிழ் சமுதாயம் ஒரு தொன்மை வாய்ந்த சமுதாயம் என உலகிற்கு நிலை நாட்டுவதற்கான ஆதாரமாக விளங்குகின்றன.

இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள 80% சதவீதத்திற்கு மேற்பட்ட பொருட்கள் இப்பொழுது தனி வருவாய் கிராமமாகவும், ஊராட்சியாகவும் இருக்கக்கூடிய கொந்தகை கிராமத்தைச் சேர்ந்தவர்களின் நிலங்களிலிருந்தும், அவர்களுடைய பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களிலிருந்துமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதுமக்கள் தாழிகள் முழுக்க முழுக்க கொந்தகை பகுதிகளிலேயே இருந்திருக்கின்றன. பொதுவாக எங்கெல்லாம் முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்படுகின்றதோ அது மக்களின் வாழ்விடம் ஆகும். அண்மைக்காலம் போல இறந்தவர்களை ஊருக்கு வெகுதூரம் கொண்டு சென்று அடக்கம் செய்யும் பழக்கம் அக்காலத்தில் இல்லை. வீட்டிற்கு அருகாமையிலேயே இறந்தவர்களை புதைப்பது மட்டுமே பழக்கமாக இருந்திருக்கிறது.

கொந்தகை கிராமம் அப்பகுதி மக்களுடைய வாழ்விடமாக இருந்திருக்கிறது. வருவாய் பதிவேடுகளில் கொந்தகை, கீழடி, மணலூர், அகரம் ஆகிய பகுதிகள் தற்போது தனித்தனியாக இருந்தாலும் அவைகள் எல்லாம் 50-60 வருடங்களுக்கு முன்பு வரை கொந்தகை என்ற தாய்க்கிராமத்தின் பெயரிலேயே அழைக்கப்பட்டு இருக்கிறது.

இன்னும் ஓரிரு தினங்களில் அந்த அருங்காட்சியகத்தை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்க இருப்பதாகவும், அதற்கு ’கீழடி தொல்லியல் ஆராய்ச்சி அருங்காட்சியகம்’ எனப் பெயரிட இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. 3000 ஆண்டுகால தமிழ்குடி மக்களுடைய வரலாற்றைத் தோண்டி எடுத்து, அதற்குப் பெயரிடுகின்றபோது அப்பகுதி மக்களின் உணர்வுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கொந்தகையும், கீழடியும் ஒன்றுக்கொன்று வெகு தூரத்தில் உள்ள பகுதிகள் அல்ல, திராட்சை கொத்துக்களைப் போல அருகருகே உள்ள நெருங்கிய பகுதிகள் தான். ஒன்றை ஒன்று பிரிக்க முடியாதபடியே விளங்குகின்றன.

எனவே, உலக அளவில் பேசப்படக்கூடிய, தேடப்படக்கூடிய இந்த மிக முக்கியமான வைகை ஆற்று நாகரீகத்தை தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்து உலகிற்கு எடுத்துச் செல்கின்றபோது, அந்த வரலாறுகளுடன் தங்களுடைய கிராமத்தின் பெயரும் வரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் விரும்புவதில் எவ்வித தவறும் கிடையாது. அந்த தொல்லியல் ஆராய்ச்சி நிலையத்திற்குப் பெயரிடும் போது ’கொந்தகை – கீழடி தொல்லியல் ஆராய்ச்சி அருங்காட்சியகம்’ எனப் பெயரிடுவதே சாலச் சிறந்தது ஆகும். அதுவே கொந்தகை, கீழடி பகுதி மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது. எனவே கொந்தகை – கீழடி தொல்லியல் ஆராய்ச்சி அருங்காட்சியகம் எனப் பெயரிட்டு திறப்பு விழா நடத்துமாறு தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
03.03.2023