எளிய மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறேன்.
368 Views
![]()
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மேலபிடாவூர் கிராமத்தில் ஆதிதிராவிட பறையர் சமுதாயத்தை சார்ந்த பூமிநாதன் என்பவர்; அக்கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வருகிறார். அவரது மகன் அய்யாசாமி என்ற கல்லூரி மாணவன் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அதே கிராமத்தை சார்ந்த வினோத், ஆதி ஈஸ்வரன், வல்லரசு என்பவர்களால் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளாகி கை, கால், கழுத்து ஆகிய பகுதிகளில் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்.
அய்யாசாமி என்ற கல்லூரி மாணவன் மீதான கொலை வெறி தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்.அந்த கிராமத்தில் பறையர் சமுதாயத்தை சார்ந்தவர்களின் 4 வீடுகளும், தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சார்ந்தவர்களின் 4 வீடுகளும், அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த 2 வீடுகளும், எண்ணிக்கையில் பெரும்பான்மையாக சேர்வை என்ற சமுதாயத்தை சார்ந்தவர்களும் உள்ளனர்.
பூமிநாதன் குடும்பம் வேளாண்மைத் தொழில் செய்து சிறிது வசதியுடன் வாழ்ந்து வருகின்றனர். அவரது மூத்த மகன் பொன்னமுத்து B.Sc பட்டதாரி ஆவர். இளைய மகன் அய்யாசாமி சிவகங்கை அரசு கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆம் ஆண்டு படித்து வருகிறார். அவர் தினமும் கல்லூரிக்கு தனது தந்தை வாங்கிக் கொடுத்த இரு சக்கர வாகனத்தில் சென்று வந்துள்ளார். இதனை தாங்கிக் கொள்ள முடியாத அந்த கிராமத்தில் பெரும்பான்மை சமுதாயத்தை சார்ந்த நான்கு பேர் அம்மாணவரை வழி மறித்து கொலை வெறித் தாக்குதல் நடத்தி உள்ளனர். காயம் அடைந்த அந்த மாணவன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பலத்த காயத்துடன் தற்போது சிகிக்சை பெற்று வருகிறார். இதேபோன்று கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பூமிநாதன் கட்டிய புதிய வீட்டையும் அடித்து நொறுக்கி பொருட்களை சூறையாடி உள்ளனர்.
இது ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு பட்டியல் வகுப்பு சமுதாயத்தை சார்ந்த மாணவனுக்கு மட்டும் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமையாக பார்க்கக் கூடாது. மானாமதுரை அருகே கடந்த சில வருடங்களுக்கு முன்பு கச்சநத்தம் என்ற கிராமத்தில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டனர் . சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதிகளிலும் அண்மைக் காலமாக தமிழகத்தின் பெரும் பகுதிகளிலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. திராவிட ஆட்சியால் தான் பட்டியலின மக்களும், பிற்படுத்தப்பட்டோரும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதும், படித்து வேலைக்கு செல்வதும் என்று வியாக்கியானம் பேசுகின்ற திராவிட சொம்பு தூக்கிகளுக்கு பட்டியல் சமூக மக்கள் சொந்த உழைப்பால் வீடு கட்டுவதும், தங்களது பிள்ளைகளுக்கு இரு சக்கர வாகனம் வாங்கி கொடுப்பதையும் கூட தாங்கிக்கொள்ள முடியாமல் கொலை வெறி தாக்குதல் நடத்துகிறார்களே! இதனை கண்டிக்க தயக்கம் ஏன் ? ஆதிதிராவிட பறையர்களும், தேவேந்திர குல வேளாளர் சமுதாயமும் திராவிட கட்டமைப்பிற்குள் வருவார்களா? இல்லையா?
தமிழகத்தில் நடைபெறும் இது போன்ற காட்டுமிராண்டித் தனமான சம்பவங்களை தமிழக அரசு தொடர்ந்து கண்டும் காணாமலும் இருந்து வருகிறது .பாதிக்கப்பட்ட அய்யாசாமி என்ற மாணவனுக்கு உடல் ரீதியாக ஏற்பட்ட இழப்பிற்கு தாக்குதல் நடத்தியவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து இழப்பீடாக வழங்க வேண்டும்; தமிழகம் முழுவதும் தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிட பறையர் உள்ளிட்ட எளிய மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
14.02.2025





