மனிதநேயமற்ற முறையில் கை விலங்கிட்டு இந்தியர்கள் வெளியேற்றம்.! அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கைகளால் ஜனநாயக பாதையிலிருந்து விலகப் போகிறதா அமெரிக்கா.?

மனிதநேயமற்ற முறையில் கை விலங்கிட்டு இந்தியர்கள் வெளியேற்றம்.!
அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கைகளால் ஜனநாயக பாதையிலிருந்து
விலகப் போகிறதா அமெரிக்கா.?
உலக நாடுகள் அனைத்திற்கும் ஜனநாயகத்தின் ’சட்டாம்பிள்ளையாக’ தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டு அமெரிக்கா ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு மேலாக பவனி வருகிறது. அந்த நாட்டில் நடக்கும் தேர்தல் முறைகள், அந்நாட்டில் வசதி படைத்த பெரும்பான்மை மக்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள், ஏகாதிபத்திய மனப்பான்மை கொண்ட பன்னாட்டு நிறுவனங்களின் பிடியில் உள்ள ஊடகங்களின் ஆதிக்கம், ஜப்பான் மீது அணுகுண்டு வீசி இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அடைந்த பொருளாதார மேன்மை, அதன்பின் உலகளவில் திட்டமிட்டுக் கட்டியமைக்கப்பட்ட ராணுவ வலிமை; சோவியத் ரஷ்யாவில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவை அமெரிக்கா மேன்மேலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வாய்ப்பாக அமைந்தது.
எங்கெல்லாம் முற்போக்கான அரசு அமைய வாய்ப்பாக இருக்கிறதோ ஜனநாயகத்தின் போர்வையில் அங்கெல்லாம் வலிந்து நுழைந்து அதுபோன்ற அரசுகள் அமைய விடாமல் தடுப்பது; மீறி அமைந்து விட்டால் அதன் தலைவர்களை ஒழிப்பது அல்லது எதிர் குழுக்களை உருவாக்கி அதன் மூலம் அங்கு தனக்கு சாதகமான அரசுகளை உருவாக்கிக் கொண்டு தங்களது வியாபாரத்தை விஸ்தரித்துக் கொள்வதே அமெரிக்காவின் பிரதான நோக்கம்.!
ஹோசிமின் தலைமையில் பொதுவுடைமை அரசு அமைந்து விடக்கூடாது என்பதற்காக ஏறக்குறைய கால் நூற்றாண்டு வியட்நாம் போர்; ரஷ்யாவை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்ற 20 வருடப் போர், இரட்டைக் கோபுரத் தாக்குதலைக் காரணம் காட்டி ஈராக் முற்றாக அளிக்கப்பட்டது; இது போன்று தென் அமெரிக்காவிலும், ஆசியாவிலும் பல நாடுகளில் அரசியல் நிலையற்ற தன்மைகள் உருவாகின. ஓரளவு வலிமை கொண்ட பல தேசங்களும் அதன் தலைவர்களும் எச்சரிக்கையுடன் அமெரிக்காவை விட்டு விலகிச் சென்று விட்டனர்.
உலக அளவில் மனித உழைப்பைச் சுரண்டுவதும் இயற்கை வளங்களைக் கொள்ளை அடிப்பதும் தான் பிரதான நோக்கம். அதற்கு அமெரிக்கா கையில் எடுக்கும் ஒரே ஆயுதம் ஜனநாயகம். எவ்விதமான அவசியமுமில்லாமல் உக்ரைன் நாட்டை நேட்டோவில் சேர்க்க எடுத்த முயற்சியை ரஷ்யா கடுமையாக ஆட்சேபித்தது. கண்ணை மூடிக்கொண்டு உக்ரைனை ஆதரித்ததன் விளைவு கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கு போர் நிற்கவில்லை. பல லட்சக்கணக்கான உயிரிழப்புகளும், பல லட்சம் கோடி பொருளாதாரமும் வீணாகி உள்ளது. ஹமாஸ்க்கு எதிரான போரில் ’ஹாமாஸ்’ இயக்கத்தினர் ஒடுக்கப்பட்டார்களோ இல்லையோ பாலஸ்தீனியர்கள் வாழும் ’காஸா’ தரைமட்டம் ஆக்கப்பட்டது. இதுவும் ஜனநாயகத்தைக் காக்க அமெரிக்கா எடுத்த நடவடிக்கையாகவே சொல்லப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று டோனால்ட் ட்ரம்ப் அதிபராக உள்ளார். அவர் பதவியேற்று மூன்று வாரம் மட்டுமே ஆகியுள்ளது. இக்குறைந்த நாட்களிலேயே அவர் எடுத்த எந்த நடவடிக்கையும் ஜனநாயக மாண்புகளைப் பிரதிபலிப்பதாக இல்லை.
ஆட்சியில் அமர்ந்த அதே நாள்;
1. மெக்சிகோ, கனடா போன்ற அண்டை நாடுகள் மீது 25 % வரி விதிப்பையும், சீனா மீது 10% வரி விதிப்பையும் செய்து அந்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க முயற்சித்தார்.
2. உலக அளவில் சுகாதாரத்தை மேம்படுத்தியும், மிக மிக முக்கியமான நேரங்களில் உலக நாடுகள் அனைத்திற்கும் விஞ்ஞானப்பூர்வமான ஆலோசனைகளை சரியான வழங்குவது WHO உலக சுகாதார அமைப்பாகும். ஆனால், அதையும் முடக்கிப் போடும் வகையில் அதற்கான நிதி உதவியை நிறுத்தியுள்ளார்.
3. பல நூறு ஆண்டு கால பாலஸ்தீனப் பிரச்சனைக்கு அறிவுப்பூர்வமான மற்றும் வரலாற்று ரீதியாகத் தீர்வு காணாமல் ஓய்ந்த சண்டையை மீண்டும் தூண்டிடும் வகையில் காஸா பகுதியிலிருந்து பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேறி அண்டை நாடுகளுக்குக் குடியேற வேண்டும் என்கிறார்.
4. காஸா பகுதியை அமெரிக்கா கையகப்படுத்தி சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
5. 200-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மனித நேயமற்ற வகையில் கைகளைக் கட்டி எவ்வித வசதியுமற்ற ராணுவ விமானத்தில் ஏற்றி, இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள 7 ½ லட்சம் பேரும் இதே போல் தான் அனுப்பப்பட உள்ளனராம்!
6. உலக நாடுகளின் முறையீட்டு மன்றமாக உள்ள நெதர்லாந்து நாட்டின் Hague சர்வதேச நீதிமன்றத்தையும் முடக்கிப் போடும் வகையில் அதன் மீது பத்துக்கும் மேற்பட்ட கட்டளைகளை விதித்துள்ளனர்.
ட்ரம்ப் தான் நினைத்ததை எல்லாம் உத்தரவுகளாகப் போட்டுக் கொண்டிருக்கிறார். ட்ரம்ப்பின் எந்த நடவடிக்கையிலும் இம்மியளவும் ஜனநாயகம் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால், அமெரிக்க மக்களின் பிரதிநிதி மையங்களான செனட்டும், காங்கிரஸூம் டிரம்ப்பின் நடவடிக்கைகள் ’ஜனநாயக ரீதியான நடவடிக்கைகள்’ என்று அமைதி காக்கப் போகிறார்களா? அல்லது டிரம்ப்பின் நடவடிக்கைகளுக்குக் கடிவாளம் போடப் போகிறார்களா? ட்ரம்ப்பின் நடவடிக்கைகள் தொடருமேயானால் அமெரிக்கா என்ற நாட்டின் மீது இருக்கும் கொஞ்ச நஞ்ச மதிப்பும் மரியாதையும் அடியோடு அழிந்து போகும்.!
எல்லா ஏகாதிபத்தியங்களும் ஒரு நாளில் வீழ்ச்சி அடையும் என்பதே விதி. பிரிட்டிஷ் எழுந்து விழ்ந்தது; ஜெர்மனி எழுந்து விழ்ந்தது; ஜப்பான், இத்தாலி எனப் பல நாடுகள் எழுந்து விழ்ந்துள்ளன. அதிபர் ட்ரம்ப்பின் கீழ் அமெரிக்க ’ஜனநாயகச் சாயம்’ முற்றாக வெளுக்கிறது. ஜனநாயகத்திற்காக அமெரிக்க மக்களும், செனட்டும், காங்கிரஸூம் எழுந்து நிற்கப் போகிறார்களா? அல்லது டிரம்ப்பின் சர்வாதிகாரப் போக்கிற்கு அடி பணிந்து விடப் போகிறார்களா? தற்போது அமெரிக்க மக்கள் முன்னால் உள்ள மிகப்பெரிய கேள்வி அமெரிக்காவா? ஜனநாயகமா? ட்ரம்ப்பா.?
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
08.02.2025