உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தண்டனை நிறுத்தி வைப்பு! இந்திய ஜனநாயகம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதையே உணர்த்துகிறது.!
565 Views
![]()
உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி தண்டனை நிறுத்தி வைப்பு!
இந்திய ஜனநாயகம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதையே உணர்த்துகிறது.!
அவரது மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்களுக்கு குஜராத் கீழமை மற்றும் குஜராத் உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ராகுல் காந்தி அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்படுவதற்கு மீண்டும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது; இந்த தீர்ப்பு மூலம் ராகுல் காந்தி அவர்களும் காங்கிரஸ் கட்சியும் இடைக்கால நிவாரணத்தையும் நிம்மதியையும் பெற்றிருக்கிறார்கள். குஜராத் நீதிமன்றங்கள் கொடுத்த 125 பக்கத்திற்கு மேற்பட்ட தீர்ப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலேயே இந்த வழக்கை ஆய்வு செய்வோம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ராகுலுக்குக் கொடுத்த தீர்ப்பின் தண்டனை அதிகபட்சம் என்று உச்ச நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
உலக அளவில் மக்கள் தொகை அடிப்படையில் இந்தியா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு. கீழமை நீதிமன்றங்கள் தவறிழைத்தாலும் உயர் நீதிமன்றங்களில் நீதியைப் பெற முடியும் என்ற ஒரு நம்பிக்கையை இத்தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது. இறுதித் தீர்ப்பு எப்படி வரும் என்று சொல்ல இயலாது. எனினும் தண்டனை முற்றாக ரத்து செய்யப்படலாம் அல்லது பதவி பறிபோகாத அளவிற்கு தண்டனை இடம்பெறலாம் அல்லது வெறும் கண்டனத்தோடும் தீர்ப்பு அமையலாம்.
இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டமன்றங்கள், நிர்வாக அமைப்புகள், நீதிமன்றங்கள் ஒருங்கிணைப்பு ஒன்றையொன்று சார்ந்தும், அதே சமயத்தில் சுதந்திரமாக இயங்கியும் இந்திய ஜனநாயகம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதையே இந்தத் தீர்ப்பு உணர்த்துகிறது.
எனினும் எந்த அரசியல்வாதியும் பேச்சு – எழுத்து – கருத்துரிமைகளை எச்சூழ்நிலையிலும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது; அவை அனைத்தும் சட்டத்திற்கு உட்பட்டவை என்பதையும் உணர வேண்டும்.
நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்த பொழுது பதவி பறிப்புக்கு ஆளாகி, மிகுந்த சோர்ந்த முகத்துடன் வெளியேறிய அவருடைய முகத்தில், இன்றைய தீர்ப்பு மூலம் மிகுந்த புன்னகை தவழ்கிறது. அவரது மக்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
04.08.2023





