ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் ரஷ்யா – உக்ரைன் போர் வந்திருக்குமா? மூன்றாம் உலகப் போருக்கு வரிந்துகட்டும் நேட்டோ நாடுகள்?
363 Views
![]()
ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் ரஷ்யா – உக்ரைன் போர் வந்திருக்குமா?
மூன்றாம் உலகப் போருக்கு வரிந்துகட்டும் நேட்டோ நாடுகள்?
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யத் தாக்குதல் தொடங்கி எட்டு தினங்கள் முடிவுற்று ஒன்பதாவது நாளும் தொடங்கி விட்டது. தாக்குதல் தொடங்கிய இரண்டு, மூன்று தினங்களில் உக்ரைன் வீழ்ந்துவிடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், உக்ரைன் முழுமைக்கும் இன்னும் ரஷ்யக் கட்டுப்பாட்டின் கீழ் வரவில்லை. ஒருவேளை இந்தக் கட்டுரை வெளிவரும் தருணத்தில் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் முக்கிய நகரமான கார்கீவ் வீழ்ச்சி அடைந்து விடலாம் அல்லது இன்னும் சில நாட்களுக்கோ, வாரங்களுக்கோ கூட இப்போர் நீடிக்க வாய்ப்பு உண்டு. ஆனால், இந்த ஒன்பது நாட்களும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் தாக்குப்பிடிப்பது என்பதும் சாதாரண விசயம் அல்ல.
உக்ரைன் நாட்டிலிருந்து பிரிந்து தங்களைச் சுதந்திர பிரதேசங்களாக அறிவித்துக் கொண்ட டான்பாஸ் (DONBOSS) பகுதிக்கு அமைதிப் படையாகத்தான் (Peacekeeping Force) செல்கிறோம் என்று ரஷ்ய அதிபர் புட்டின் முதலில் அறிவித்திருந்தார். ஆனால், கடந்த 24 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு உக்ரைன் மீதான தாக்குதலை ஒரு ’பிரத்யேகமான ராணுவ தாக்குதல் – Specific Military Operation’ என அவர் பிரகடனப்படுத்தினார். அதற்கு ஏற்ப முதல் மூன்று தினங்கள் இராணுவ கேந்திரங்கள், விமான நிலையங்கள், தொலைத் தொடர்புக் கட்டுமானங்கள் மீதே தாக்குதல் நடைபெற்றது. ஆனால், கடந்த இரண்டு தினங்களாக ரஷ்யாவின் தாக்குதல் உக்கிரமடைந்துள்ளது. இதன் விளைவாக தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன. நேற்று கீசன் நகரம் ரஷ்யாவின் வசப்பட்டு விட்டது. இன்று ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஷப்ரோசியாவும் (Zaporizhzhia) கைப்பற்றப்பட்டு விட்டது.
உக்ரைன் போர்குறித்து களச் செய்திகள் என்று பல ஊடகங்கள் அறிவித்துக் கொண்டாலும் எவையும் முழுமையாக நம்பும் படியாக இல்லை. பல வருடங்களுக்கு முன்பு, எங்கோ எடுக்கப்பட்ட செய்திகளை இன்று நடப்பதைப் போல மார்பிங் செய்த காணொளி செய்திகளையே, சில சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் காண முடிகிறது. ரஷ்யாவிற்கு எதிர் பார்த்ததை விட அதிகமான இழப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன என்பதை நம்மாலும் யூகிக்க முடிகிறது. எனினும், 10,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு, 500 பீரங்கி டாங்கிகள் அழிப்பு என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளாக இருக்கின்றன. உக்ரைன் ராணுவத்தின் இழப்புகள்பற்றி எவ்வித தகவல்களும் வரவில்லை. ரஷ்ய நாட்டிற்கு எதிராக நேட்டோ நாடுகள் அணி திரண்டதை போல, உலக ஊடகங்களும் அணி திரண்டு உண்மைகளை இருட்டடிப்பு செய்கின்றன. கடந்த ஒரு வாரப் போரில் உக்ரைனின் மிக முக்கிய நகரங்கள் மிகப்பெரிய சேதமடைந்து இருக்கின்றன. பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து இருக்கிறார்கள்.
பொதுவாக, இரு நாடுகளுக்கு இடையே போர் வருகிறது என்றால், அது எல்லை பிரச்சினையாகத்தான் இருக்கும்; ஆனால், உக்ரைன் – ரஷ்யா போர் அரசியல் சார்ந்த பிரச்சினையாக உள்ளது. உக்ரைன் நாட்டின் எந்தப் பகுதியையும் பிடிக்கும் நோக்கம் இல்லை என்றே புட்டின் தெரிவித்து வருகிறார். போர் மூளுகின்ற வரையிலும் ’ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் எவ்வித பகையும் இல்லை, போர் வராது’ என்றே அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் இன்று நடப்பதை உலகம் அறியும்.
இந்த இரு நாடுகளுக்கும் இடையே யுத்தம் ஏன் நடக்கிறது? இதன் பின்னணி யார்?
இரண்டாம் உலகப் போரின்போது கூட, இரண்டு நாடுகளுக்கு இடையேயான யுத்தத்தில் ஒரு நாட்டிற்கு ஆதரவாக ஒரு கண்டமே அணி திரண்ட வரலாறில்லை. இப்பொழுது ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு தெரித்துள்ளன; ஜப்பான், ஆஸ்திரேலியாவும் வரிந்து கட்டுகின்றன. உக்ரைனை நேட்டோவில் சேர்ப்பது என்பது ரஷ்யா மீதான படையெடுப்புக்குச் சமம் எனும் புட்டினின் கூற்றை அமெரிக்கா மற்றும் அதன் அரவணைப்பில் செயல்படும் நேட்டோ நாடுகளின் தற்போதைய நடவடிக்கைகள் ஊர்ஜீதம் செய்கின்றன. 15-க்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்களைக் கொண்ட உக்ரைன் அமெரிக்கா – நேட்டோ நாடுகளின் வசம் சென்றால், அது நேரடியாக ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தானே. ’உக்ரைனை நேட்டோவில் சேர்க்க மாட்டோம்’ என பிடனும், ஜெலன்ஸ்கியும் அன்று ஒரு வார்த்தை சொல்லி இருந்தாலே இந்தப் போர் வந்திருக்காது;






