மகாசிவராத்திரி! இன்று இரவு விழித்திருப்பது மட்டுமல்ல, என்றும் விழிப்புடனும் இருக்க வேண்டும்  என்பதை உணர்த்துவது!!

அறிக்கைகள்
s2 349 Views
  • Dr krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr krishnasamy
Published: 02 Mar 2022

Loading

மகாசிவராத்திரி!

இன்று இரவு விழித்திருப்பது மட்டுமல்ல, என்றும் விழிப்புடனும் இருக்க வேண்டும்  என்பதை உணர்த்துவது!!

ஒன்று கூடி வாழ்ந்தால் மட்டும் போதாது, உள்ளத்தாலும் உணர்வாலும் பாரதத் தாயின் புதல்வர்கள் என்ற ஒற்றைச் சிந்தனையோடு இருந்திட வேண்டும் என்பதை உணர்த்துவது!!

தேய்பிறை முடிந்து வளர்பிறை துவங்கக் கூடிய நாளான அம்மாவாசை அல்லது புதுநிலவு நாளை, மாதம் ஒருமுறை சிவராத்திரி எனவும், அதையே ஆண்டுக்கு ஒருமுறை பிப்ரவரி அல்லது மார்ச் மாதம், அதாவது மாசி மாதத்தில் வரும் புதுநிலவு நாளை மகாசிவராத்திரி எனவும், உலகெங்கும் வாழும் இந்திய மக்கள் அனுசரிக்கிறார்கள்.  இந்திய மக்களுடைய பல விழாக்களுக்குப் பின்னால், பல புராணங்களும், கதைகளும் பேசப்பட்டாலும், அதில் ஏதாவது ஒரு சதவீதமாவது இயற்கையோடு இயைந்த விஞ்ஞானப் பார்வை இல்லாமல் இருந்ததில்லை. பூமி சூரியனை நீள்வட்டப் பாதையில் 23 ½ டிகிரி கோணத்தில் சாய்ந்த நிலையில் சுற்றி வருகிறது. எனவே பூமியின் எல்லா பகுதியும் எல்லாக் காலகட்டத்திலும் சூரியனிடமிருந்து முழு சக்தியைப் பெற முடியாது. பூமி சூரியனிடமிருந்து அதிகமான சக்தியைப் பெறக்கூடிய நாளின் துவக்கமாகவே மகாசிவராத்திரி அனுசரிக்கப்படுகிறது.

பிரபஞ்சத்தில் நாம் பகலில் சில ஆயிரம் மைல்கள் ஒளியைப் பார்த்தாலும், அதற்கு அப்பால் பகலிலும் எங்கும் இருள் சூழ்ந்த கருப்பு நிறத்தையேப் பார்க்க முடிகிறது. இரவில் கோடானகோடி நட்சத்திரங்கள் மின்மினிப் பூச்சிகளைப் போல ஒளிர்ந்தாலும், இந்த அண்டம் முழுமையையும் கருப்பு நிறத்திலேயே காண்கிறோம். பிரபஞ்சத்தில் 70% கருப்பாகவும் மீதி மட்டுமே ஒளியாகவும் இருக்கிறது.

இருளிலிருந்து ஒளியும் ஒளியிலிருந்து இருளும் இரண்டும் தனித்தனியாக இருப்பதில்லை. ஒன்றுக்குள் ஒன்று இணைந்தே இருக்கின்றன. காலையில் சூரியன் உதித்த பிறகே இருள் விலகி ஒளி வருவதைப் பார்க்கிறோம். ஆனால், சூரியன் மறைந்தவுடனே இந்த அண்டம் முழுமையும் விநாடி நேரத்தில் இருளாகி விடுகிறதே, இந்த இருள் எங்கிருந்து வருகிறது? என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. எனவே ஒளியை எப்படி ஒரு சக்தியாகப் பார்க்கிறோமோ, அதேபோல, இருளையும் ஒரு சக்தியாகத் தான் பார்க்க வேண்டும். இருளே இல்லாமல் ஒளி மட்டுமோ அல்லது ஒளியே இல்லாமல் இருள் மட்டுமோ என்றாவது ஒரு காலத்தில் இருந்ததா? அல்லது இனி என்றாவது ஒருநாள் அதுபோன்று இருக்குமா? என்பதே மனிதகுலத்தின் ஆராய்ச்சி.

கோடானகோடி மக்கள் விழித்திருந்து இன்றைய இரவை மகாசிவராத்திரியாக கொண்டாடுவது என்பது இந்திய வழிபாட்டுபண்பாட்டின் அடிப்படையில் பார்க்கப்பட்டாலும், பிரபஞ்சத்தில் ஒளிந்து கிடக்கக்கூடிய பல்வேறு மர்மங்களை அல்லது உண்மைகளை கண்டறிவதே நோக்கம். மனிதன் அடக்கமாக இருக்க வேண்டும்; பதவிகள் வரும்போது, பவுசுகள், விளம்பரங்களில் மோகம் கொள்ளக் கூடாது; ஒடுங்கியும் போகக் கூடாது, ஓங்கவும் கூடாது என்பதை உணர்த்தக் கூடியதே மகாசிவராத்திரி நாளாகும்.

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றிய முழுமையான சிந்தனையோடு, விழிப்புடன் (Awakening)  இருக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தக் கூடிய வகையில் தான், இன்று இரவு (Wakefulness) விழித்திருக்கிறோம். இதில் அறிவியலுக்கு ஒப்பாத சிந்தனைகள் எதுவுமில்லை. மாறாக, பிரபஞ்சத்தில் நாமும் ஒரு அங்கமே என்பதையும் இந்த மகாசிவராத்திரி உணர்த்துகிறது. அது தனிமனிதனானாலும், ஒரு குடும்பமானாலும், ஒரு குலமானாலும், ஒரு சமூகமானாலும், ஒரு தேசமானாலும் எப்போதும் எல்லா விசயத்திலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லவும், கன்னியாகுமரியில் வாழ்ந்தாலும், கல்கத்தாவில் வாழ்ந்தாலும், குஜராத்தில் வாழ்ந்தாலும் அல்லது உலகின் வேறு எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும், ஒன்றுபட்டு வாழ்ந்தால் மட்டும் போதாது, கருப்பும் வெள்ளையும் பின்னிப் பிணைந்து இருப்பதைப் போல, பாரதத் தாயின் புதல்வர்கள்  அனைவரும் ஒற்றை அடையாளத்துடன், ஒற்றைச் சிந்தனையுடன் பின்னிப் பிணைந்து இருந்திட வேண்டும் என்பதை வலியுறுத்துவதே இந்த மகாசிவராத்திரி நாளாகும். இந்நன்னாளில் மகாசிவராத்திரி கொண்டாடக் கூடிய இந்திய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புதிய தமிழகம் கட்சி சார்பாக நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு,

டாக்டர்.. கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,

நிறுவனர்தலைவர்,

புதிய தமிழகம் கட்சி.

02/03/2022.