திமுக அரசே.! பன்னாட்டு கம்பெனிகளை வாழவைக்க.! தன்நாட்டுத் தொழிலாளர்களை அடகு வைப்பதா ?
299 Views
![]()
ஆண்டான் – அடிமை, நிலப் பிரபுத்துவ முறை மற்றும் தொழில் புரட்சி ஏற்பட்டு முதலாளித்துவ உற்பத்தி முறைகள் ஏற்பட்ட காலகட்டங்களில் தொழிலாளர்கள் 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரையிலும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் கம்யூனில் ஏற்பட்ட புரட்சி, 1864-ல் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும், உலகின் பிற பகுதிகளிலும்; நூற்பாலைகள், கனரக இயந்திர உற்பத்தி நிறுவனங்கள், கடுமையாக பணிபுரிய வேண்டிய தேயிலைத் தோட்டங்கள், பெரும் வணிக நிறுவனங்களிலும்; 1886-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் 8 மணி நேர வேலையை வலியுறுத்தி நடத்திய போராட்டங்களும், அதில் எண்ணற்ற தொழிலாளர்கள் தங்களுடைய ரத்தம் சிந்தி உயிர்த் தியாகம் செய்ததன் விளைவாகவும் தொழிலாளர்களுக்கு ’8 மணி நேர வேலை’ என உறுதி செய்யப்பட்டது.
உலகெங்கும் உள்ள தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க International Labour Organisation (ILO) – சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் உருவாவதற்கும், தொழிலாளர்களுக்கான பிரத்தியேகமான சட்டங்களை இயற்றுவதற்கும் வழிவகுத்தது. இதன் விளைவாக உலகத்தினுடைய பெரும்பாலான நாடுகளில் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் பெற்று இருக்கக்கூடிய நாடுகள் மற்றும் international labour organisation-ல் இடம் பெற்றிருக்கக் கூடிய நாடுகள் எட்டு மணி நேர வேலையை அமல்படுத்தி வருகின்றன. அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பெரும் முயற்சியால் 1942 முதல் இந்தியாவில் 8 மணி நேர வேலை அமல்படுத்தப்பட்டது.
மாறி வரக்கூடிய இயற்கை சூழல்கள், உணவுப் பழக்க வழக்கங்கள், சுற்றுப்புறச் சூழல் பாதிப்புக்களால் கடும் உடல் உழைப்புகள் தேவைப்படும் தொழில் நிறுவனங்களில் 8 மணி நேரம் வேலை செய்வது என்பதே தொழிலாளர்களுக்கு உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பெரும் உபாதைகளை உருவாக்குகின்றன. இதன் காரணமாக எட்டு மணி நேரத்தையும் ஆறு மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றக்கூடிய வகையில் 1945 ஆம் ஆண்டு தொழிலாளர்களுக்கான நலச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் சட்டம் ஒன்று தமிழகச் சட்டமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
மே 1 ஆம் தேதியை உலகெங்கும் இருக்கக்கூடிய தொழிலாளர்கள் ’தொழிலாளர் தினமாக’ அனுசரிக்கிறார்கள். இன்னும் மே தினத்திற்கு எட்டு-ஒன்பது தினங்களே இருக்கக்கூடிய வேளையில் தொழிலாளர் நலனுக்கு நேர் எதிரான இச்சட்டத்தை திமுக அரசு நிறைவேற்றி இருப்பது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. தோல் பொருட்களைப் பயன்படுத்தாமல் காலணிகளை உற்பத்தி செய்யும் தைவானைச் சேர்ந்த ஒரு கம்பெனி உளுந்தூர்பேட்டையில் ஒரு தொழிற்சாலையை கொண்டுவர அண்மையில் ஒப்பந்தம் போட்டது. அந்த கம்பெனி வந்தும் வராததற்கு முன்பாக தொழிலாளர் நல உரிமைகளைப் பறிக்கக் கூடிய வகையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக திமுக அரசு இச்சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
ஒரு ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படக்கூடிய எந்த அரசும் மக்களுக்காக இருக்க வேண்டுமே தவிர. லாப நோக்கம் கொண்ட கம்பெனிகளுக்காகவோ, கார்ப்பரேட்டுகளுக்கவோ இருக்கக் கூடாது. இது இந்தியாவை கிழக்கிந்திய கம்பெனி ஆண்ட காலத்தை நினைவுபடுத்துகிறது. 25 வருடங்களுக்கு முன்பு கார்கள் உற்பத்தி செய்யும் போர்ட் மற்றும் ஹூண்டாய் கம்பெனிகள் சென்னை அருகே தங்களுடைய உற்பத்திகளைத் துவங்க வந்த பொழுது 2000 கோடி முதலீடு, நேரடியாக 2000 பேருக்கு வேலை, மறைமுக மாக மூன்று லட்சம் பேருக்கு வேலை என்றெல்லாம் கூறினார்கள். அதுபோன்று எதுவும் இதுவரை நடைபெறவில்லை. ஏறக்குறைய 20 ஆண்டு காலத்திற்கு மேலாக மத்திய, மாநில அரசுகளின் வரிச்சலுகைகளை பெற்ற கம்பெனிகள் சலுகை காலம் முடிந்தவுடன் இப்பொழுது இந்தியாவிலிருந்து கம்பி நீட்டி விட்டார்கள். இது ஒரு குறிப்பிட்ட கார்ப்பரேட் கம்பெனிக்கு மட்டுமல்ல, நிலக்கரி சுரங்கம் – இரும்பு தங்கச் சுரங்கம், தொழிற்சாலை – நூற்பாலை, சிமெண்ட் ஆலை, தேயிலைத் தோட்டங்கள் என எதுவாயினும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நோக்கமெல்லாம் கொண்டுவரும் முதலீட்டைக் குறிப்பிட்ட காலத்திற்குள் பன்மடங்கு எடுத்திட வேண்டும்; அதற்காக தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்தாலும் கவலை இல்லை என்பதுதான்.
தமிழ்நாட்டிற்குள் தைவான் கம்பெனி வருவதோ அல்லது துபாயின் லூலு மால்கள் வருவதோ தமிழ்நாட்டை வளப்படுத்துவதற்காகவோ, வலுப்படுத்துவதற்காகவோ அல்ல! மேல்மட்டத்தில் உள்ள ஒரு சிலரை வளப்படுத்த அல்லது வலுப்படுத்த வரலாம். ஆனால் இது தமிழக தொழிலாளர்களை கசக்கிப் பிழியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் 8 மணி நேர வேலை என்பதே உளரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்பை உண்டாக்கும் என்ற சூழல் நிலவுகின்ற பொழுது, 12 மணி நேர வேலை எப்படிச் சாத்தியமாகும்.
துவக்கத்தில் தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே 12 மணி நேர வேலை என்று தான் துவங்குவார்கள். ஆனால், எந்த ஒரு நிறுவனமும் 5 – 10 தொழிலாளர்களை வைத்து ஒரு ஷிப்ட் நடத்த முடியாது. எனவே, பிற தொழிலாளர்களுக்கும், பிற தொழிற்சாலைகளுக்கும் நிர்ப்பந்தங்கள் என்பது தானாக வந்துவிடும்; மறைமுக அழுத்தங்களும், அடக்குமுறைகளும் வந்து சேரும். நல்ல சம்பளம், மூன்று நாட்கள் விடுமுறை, பல்வேறு வசதிகள் என்றெல்லாம் கூறி முதலிலேயே ஆசை வார்த்தைகளைக் காட்டுவார்கள். ஆனால், அது போன்று எதுவும் நடக்காது. சுரண்டல் மட்டுமே தங்குதடையின்றி நடைபெறும்; தொழிலாளர்களுக்கு ஒரு நல்ல உணவளிக்கும் கேண்டின் கூட நடத்த மாட்டார்கள்.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஸ்ரீ பெரம்பூரில் ஒரு பெரிய கார் தொழிற்சாலை கேண்டீன்களில் தரமற்ற உணவுகள் வழங்கி ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் நோய்வாய்ப்பட்டதை நாடறியும். எனவே எட்டு மணி நேரம் வேலை செய்யக்கூடிய தொழில் நிறுவனங்களிலேயே தொழிலாளர்களுக்கு நல்ல கழிப்பிட வசதி இல்லை; கேண்டின்கள் கிடையாது. 12 மணி நேர வேலை என்றால் அவர்களுக்கு என்ன வசதிகளை இந்த நிறுவனங்கள் செய்து கொடுக்க முடியும்? எட்டு மணி நேரச் சட்டம் அமலிலிருந்த பொழுதே 12 மணி நேர வேலை வாங்கிய காரணத்திற்காகத் தானே மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர் போராட்டங்களை நடத்தினோம். 8 மணி நேர வேலை என்பதே பெரும் சுரண்டலுக்கு வழி வகுக்கின்ற போது, 12 மணி நேர வேலை பெரும் சுரண்டலுக்கு வழிவகுக்காதா?.
உடல் உழைப்பு மட்டும் பிரதானப்படுத்தக்கூடிய தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் 12 மணி நேர வேலை சட்டப்பூர்வமாக்கப்பட்டு விட்டால், அது 12 மணி நேரத்திற்கும் மேலாக பணிபுரிய வழி வகுக்கும்; அது பல சமூக, பொருளாதார சிக்கல்களையும் தோற்றுவிக்கும்.
அன்னிய பன்னாட்டுக் கம்பெனிகளை வாழ வைக்க, தன் சொந்த நாட்டு தொழிலாளர்களை – மக்களின் உரிமைகளை அடகு வைப்பதை ஏற்றுக் கொள்ள இயலாது.
திமுக அரசே.!
12 மணி நேர வேலை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறுக.!
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
22.04.2023.





