சாதிய வன்மத்தைத் தூண்டும் கேள்வி தயாரிப்பு! குற்றம் இழைத்தது கேள்வி தயாரிப்பு குழுவா? பெரியார் பல்கலைக் கழகமும் சேர்ந்தா?
513 Views
![]()
சாதிய வன்மத்தைத் தூண்டும் கேள்வி தயாரிப்பு!
குற்றம் இழைத்தது கேள்வி தயாரிப்பு குழுவா?
பெரியார் பல்கலைக் கழகமும் சேர்ந்தா?
உண்மை வெளிவர வேண்டும்!
தமிழ்நாட்டில் உயர்கல்வி நிறுவனங்கள் எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து, சீர்கேடு அடைந்து கிடக்கிறது என்பதற்கு ஜூன் மாதத்தில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ வரலாறு முதுநிலை MA (History) பட்டப்படிப்பு முதலாம் ஆண்டிற்காக தயாரிக்கப்பட்ட கேள்வித்தாளே பெரும் அத்தாட்சியாகும். ’Tell me your friend I will tell who you are’ என்பதற்கு இணங்க ஆங்கிலத்திலும் தமிழிலும் தயாரிக்கப்பட்ட கேள்வித்தாளே இந்த லட்சணத்திலிருந்தால் மாணவர்களின் கல்வி எப்படிச் சிறப்பாக இருக்க முடியும்? அந்தக் கேள்வித்தாளில் கேள்விகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் இருக்கிறது. தாய் மொழியைப் பயிற்று மொழியாகக் கொண்ட தமிழக மாணவர்கள் கேள்விகளை எளிதாகப் புரிந்து கொள்வதற்காகக் கேள்விகள் மட்டும் தமிழில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளன. அந்த முதல்நிலை பட்டப்படிப்பிற்கான கேள்வித்தாளில் ’ஆங்கிலமோ அரைகுறை; தமிழோ அவலட்சணம்’. ஆங்கிலப் புலமையும் இல்லாமல், தமிழ் புலமையும் இல்லாமல், சமூகப்பற்றும் இல்லாமல், வரலாறும் தெரியாமல் அந்த குறிப்பிட்ட கேள்வித்தாளைத் தயாரித்த ஆசிரியர் குழு போன்றவர்களால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எப்படி நல்ல கல்வியை கற்றுத் தர முடியும்? இது போன்ற ஆசிரியர்கள் இந்திய தேசத்தின் தூண்களாக, நாளைய மன்னர்களாக உருவாக்கப்பட வேண்டிய மாணவர்களுக்கு எப்படி நல்ல வழிகாட்டிகளாக இருக்க முடியும்? பல்கலைக்கழகங்களின் தரத்தையும் உயர்த்த முடியும்? தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் வெறும் பட்டங்களை வழங்கும் அலுவலகங்களாக மாறிவிட்டது என்று நாம் எடுத்துரைத்தபோது அதையெல்லாம் யாரும் உள்வாங்கிக் கொள்ளவில்லை. அதனுடைய வெளிப்பாடாகவே இப்பொழுது பெரியார் பல்கலைக்கழக முதுநிலை (MA) வரலாற்றுப் பாடப் பிரிவிற்கு தயாரிக்கப்பட்ட கேள்வித்தாள் இருக்கிறது.
பொறுப்பற்ற உதவி பேராசிரியர்கள் அல்லது பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்ட இது போன்ற கேள்வியைச் சுட்டிக்காட்டி எழுதுவதற்குக் கூட கைக்கூசுகிறது. ஆனாலும், இதை முழுமையாக அம்பலப்படுத்தவில்லை எனில் சாதி ஒழிப்பு – சமூக நீதியின் பெயரால் கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக நடைபெற்று வரும் மோசடி வித்தை அம்பலப்படாமல் போய்விடும். தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு பாடப்பிரிவிற்காக தயாரிக்கப்பட்ட ஒரு கேள்வியை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு அரை நூற்றாண்டு கால ஆட்சி – அதிகாரத்தை விமர்சிக்கலாமா? என்ற கேள்வியைச் சிலர் எழுப்பலாம்.
தமிழகத்தில் அரை நூற்றாண்டுகள் அல்ல, ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறக்கூடிய ஆட்சியே ’சமூக நீதி அடிப்படையிலான திராவிட மாடல் ஆட்சி’ தான் என்று சிலர் சொல்லிக் கொண்டு இருப்பதுதான் அதற்கான காரணம். சாதியத்தை ஒரு பெரும் கூட்டம் ‘திராவிட போர்வை’ போர்த்தி வளர்த்தெடுத்து வருவதால்தான் இந்தியாவினுடைய எந்த மாநிலத்திலும் இல்லாத சாதிய வன்மம் தமிழகத்தில் எழுகின்றன. கக்கத்திலே கத்தியை வைத்துக்கொண்டு காந்தியம் பேசினால் எப்படி அது முரணாகுமோ, அதேபோல உள்ளத்திலே சாதிய உணர்வுகளை வைத்துக்கொண்டு உதட்டிலே சமூக நீதிப் பேசுவதால் தான், இவ்வளவு காலத்திற்குப் பிறகும் இது போன்ற ஒரு அடாவடித்தனமான – அராஜகமான சாதிய வன்மமும், விசமத்தனமும், வினையமும் கொண்ட கேள்வியை ஒரு ஆசிரியனால் கேட்க முடிகிறது.
இந்த மண்ணினுடைய மூத்த குடிமக்களை ‘ஹரிஜன்’ என்று அழைக்கக் கூடாது என்று ஏறக்குறைய 30 வருடங்களுக்கு முன்பே அந்த வார்த்தை தடை செய்யப்பட்டு விட்டது. ஹரி என்றால் கடவுள் ‘ஜன்’ என்றால் குழந்தைகள்/மக்கள். எனவே ’கடவுளின் குழந்தைகள்’ என்ற பெயரிலேயே காந்தி அவர்கள் அப்பெயரிட்டார்.எனவே எந்த அகராதியிலும் ’ஹரிஜன்கள்’ என்று சொன்னால் அது தாழ்ந்த ஜாதி என்று பொருள் இல்லை. அது மட்டுமல்ல. Scheduled Caste என்றால் கூட அது தாழ்ந்த என்ற பொருள் கொண்டது அல்ல. ஆனால் காலப்போக்கிலும், வழக்கிலும் நல்ல சொற்கள் கெட்டவையாகவும்; கெட்ட சொற்கள் நல்லவையாகவும் ஆக்கப்படுவதைப் போல, ’ஹரிஜன்’ என்ற வார்த்தை இந்தியாவின் பெரும்பகுதி மக்களைத் தனிமைப்படுத்துவதற்கும், அவர்களை மதிப்பு குறைவாக நடத்துவதற்கும் காரணமாக இருந்ததன் அடிப்படையில் தான் அந்தச் சொல் இந்திய அரசாங்கத்தினுடைய அனைத்து ஆவணங்களிலிருந்து மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுடைய ஆவணங்களிலிருந்தும் நீக்கப்பட்டு விட்டன. இதைக் கூடத் தெரியாத ஒருவர் ஒரு பல்கலைக்கழகத்தில் அல்லது ஒரு கல்லூரியில் உதவி பேராசிரியராகவோ அல்லது பேராசிரியராகவோ பணியாற்றுவதற்கு சிறிதும் தகுதியற்றவர் என்றே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். ஒன்றாம் வகுப்பு புத்தகத்திலிருந்து தமிழக அரசின் அனைத்து பாடப் புத்தகங்களிலும் முதல் பக்கத்திலே தீண்டாமை அறவே ஒழிக்கப்பட்டு விட்டது என்று அச்சிட்டு இருப்பதன் நோக்கத்தைக் கூட இந்த வினாத்தாளைத் தயாரித்த ஆசிரியர் குழுவோ அல்லது அந்த ஆசிரியர் குழுவிற்கு தலைமை தாங்கிய வேறு ஒரு பல்கலைக்கழக பேராசிரியருக்கோ தெரிந்திருக்கவில்லை எனில் அவர்கள் அப்பொறுப்பில் வகிக்கத் தகுதியற்றவர்கள் மட்டுமல்ல, அவர்கள் கடுமையான நடவடிக்கைக்கும் உட்படுத்தப்பட வேண்டியவர்கள் ஆவர்.
காந்தியார் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட தினமான ஜனவரி மாதம் 30 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவலகங்களிலும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளும் அடிப்படை வரலாறுகள் கூடத் தெரியாத ஆசிரியர்கள் எப்படி வரலாற்று ஆசிரியர்களாக இருக்க முடியும்? கருவிலே குற்றம் என்பதைப் போல இந்த கேள்வியைத் தயாரித்தவர்கள், அக்குழுவிற்கு தலைமை தாங்கிய பேராசிரியர் உட்பட அனைவருமே திட்டமிட்டு குற்றம் இழைத்தவர்களாகவே கருதப்பட வேண்டி உள்ளது. அந்தக் கேள்வித்தாள் குழுவிற்குக் கொடுக்கப்பட்ட பாடத்திட்டம் ”Freedom Movement of India from 1857 to 1947” ஆகும். இந்தியாவில் 1857 முதல் 1947 வரை ஏற்பட்ட சுதந்திரப் போராட்டங்கள் ஒன்றல்ல; இரண்டல்ல, ஆயிரக்கணக்கில் இருக்கிறது. அதுகுறித்து எத்தனையோ கேள்விகள் கேட்க முடியும். ஆனால் அதை விட்டுவிட்டு பெரியார் என்ற பட்டத்தை ஈ.வே. ராவிற்கு வழங்கியவர் யார்? என்ற அவசியமற்ற கேள்வியும், தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற சம்பந்தமில்லாத கேள்வியும் வக்கிர புத்தி உள்ள ஆசிரியர் சிருஷ்டித்து, அதை மேற்பார்வையிட்ட பேராசிரியர் குழுவும் அதை முழுமையாக அங்கீகரித்தபின்னர் தானே அச்சிடப்பட்டுள்ளது!
பெரியார் பல்கலைக்கழக எம்.ஏ பாடப்பிரிவிற்கான கேள்வித்தாள்களை அந்த பல்கலைக்கழக ஆசிரியர்கள் தயாரிக்கவில்லை என்பது வேறு. ஆனால், பெரியார் பல்கலைக்கழகத்தால் தான் வேறு ஒரு பல்கலைக்கழக அல்லது கல்லூரி பேராசிரியர் குழுவால் கேள்வி தயாரிக்கக் கோரப்பட்டு இருக்கிறது. எனவே கடும் ஆட்சேபனைக்குரிய எம்.ஏ வரலாற்றுப் பாடப் பிரிவிற்கு கேள்விகளைத் தயாரித்த ஆசிரியர் குழு எந்த பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர்கள் என்பது பெரியார் பல்கலைக்கழக ‘Comptroller of Examinations’ க்கு தெள்ளத் தெளிவாகத் தெரியும். அந்த ஆசிரியர் குழுவிற்குத் தலைமை தாங்கியவர் யார் என்பதும் தெரியும்.இன்னும் சொல்லப்போனால் அந்தக் குறிப்பிட்ட ”Freedom movement of India from 1857 to 1947” பாடத்திட்டத்தின் கீழ் கேள்விகள் தயாரித்த ஆசிரியர் யார்? என்பது அன்று தெரியவில்லை என்றாலும், இந்நேரம் தெரிந்திருக்க வேண்டும். எனவே ’விசாரிக்கப்படும் – நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று பூசி மெழுகாமல்’ கைப்புண்ணை காண்பதற்கு கண்ணாடி எதற்கு என்பதைப் போல பல்கலைக்கழகத்தின் மூலம் மேற்குறிப்பிட்ட கேள்வித்தாளைத் தயாரிப்பதற்கு,
1. எந்த பல்கலைக்கழகத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது?
2. அந்த வினாத்தாள் தயாரிக்கும் குழுவின் தலைவர் யார்?
3. அக்குழுவில் அங்கம் பெற்ற ஆசிரியர்கள் எத்தனை பேர்? யார்? யார்?
4. கடும் கண்டனத்திற்குரிய அந்தக் குறிப்பிட்ட வினாவைத் தயாரித்த ஆசிரியர் யார்?
5. இந்த வினாத்தாளை வேறு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆசிரியர்கள் தயாரித்திருப்பினும் கூட, பெரியார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தின் நகல்கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்குமே, அப்படியாயின் இது போன்ற சாதிய ரீதியான பாகுபாடுடைய கேள்விகளை உருவாக்குவதற்கு அடிப்படையாக இருந்த பெரியார் பல்கலைக்கழக வரலாற்றுப் பாடம் என்ன?
போன்றவற்றை நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்?
தமிழகத்தில் உள்ள 30 பல்கலைக்கழகங்களில் ஒரு பாடத்திட்டத்தில் நடந்ததாக இருந்தாலும் கூட, ’ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதைப் போல கண்ணுக்குத் தெரியாமலோ, செவிக்கு வராமலோ இது போன்ற பல தவறுகள் உயர்கல்வி நிறுவனங்களில் நடந்து கொண்டிராமல், திடீரென்று இது போன்ற நிகழ்வுகள் முளைத்திருக்க வாய்ப்பில்லை. எனவே, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி கற்கும் நிறுவனங்களில் இது போன்று வேற்றுமைகளையும், வெறுப்புகளையும் விதைக்கும் ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் அடியோடு களை எடுத்தாக வேண்டும். அதற்கு வித்திடும் ஏதேனும் பாடத்திட்டங்கள் இருப்பின் அவைகளும் நீக்கப்பட வேண்டும். இவை வெறும் விசமத்தனமாக மட்டுமல்ல, வினையமாகவே ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களைக் காயப்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு கேள்வியைத் தயாரித்த ஆசிரியர் குழுவின் தலைவர் மற்றும் அந்த ஆசிரியர் குழு, அந்த குறிப்பிட்ட ஆசிரியர் யார் என்பதை பெரியார் பல்கலைக்கழகம் உடனடியாக வெளிப்படையாக அறிவித்திடல் வேண்டும்.
தமிழக அரசின் உயர் கல்வித் துறை இதில் யாரையும் கட்டிக் காப்பதற்கு முயற்சி செய்யாமல் நியாயமான நடவடிக்கையை எடுத்திடல் வேண்டும். மேலும் அந்தக் கேள்வி முழுக்க முழுக்க ஒரு மிகப்பெரிய சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டதால் அந்த ஆசிரியர், அக்குழுவின் தலைவர் ஆகியோர் மீது குடியுரிமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
கடந்த அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக புதிய தமிழகம் கட்சி ’ஆதிதிராவிடர்’ என்ற பெயரைக் கூட பயன்படுத்தக் கூடாது என்று குரல் கொடுத்த போதும்; தேவேந்திர குல வேளாளர்களைப் பட்டியல் பிரிவிலிருந்து நீக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்த போதும்; ’தலித்’ என்ற வார்த்தை கூட ’கறை’ தான் என்று சொன்ன போதும் ’அய்யயோ சலுகைகள் போய்விடும், அந்த மக்கள் வாழவே முடியாது’ என்றெல்லாம் அன்று கூக்குரலிட்டவர்கள் அதற்கான காரணங்களை இன்றாவது புரிந்து கொள்வார்கள் என்று கருதுகிறேன்.
இது போன்ற ஏதாவது சிறிய நிகழ்வு நடந்தால் தமிழகத்தில் பல அரசியல் கட்சிகளும், அதனுடைய சார்பு அமைப்புகளும் சமூக நீதி மற்றும் சாதி ஒழிப்பு வீரர்களைப் போல தங்களைக் காட்டிக் கொள்வதற்காக வெற்று அறிக்கைகள் கொடுக்கிறார்கள். ஆனால், இவை எல்லாம் வெறும் உதட்டளவில் இருக்கின்ற காரணத்தினால் தான் இந்தியாவினுடைய எந்த மாநிலத்திலும் இல்லாத வன்மங்கள் சமூகநீதியை வாய்கிழியப் பேசும் தமிழ்நாட்டில் தோன்றுகின்றன. தமிழ்நாட்டினுடைய அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும் உண்மையாகவும், சாதிய வன்மமற்ற, நடுநிலையாளர்களாய் பாரபட்சமற்று இருந்தாலே தமிழ்நாட்டில் சாதி தானாக வீழ்ந்து விடும்; சமத்துவம் மலரும் என்பதை உணர்ந்து செயல்படுவார்கள் என்று கருதுகிறேன்.
சாதிய வன்மத்தைத் தூண்டும் கேள்வி தயாரிப்பு!
குற்றம் இழைத்தது கேள்வி தயாரிப்பு குழுவா?
பெரியார் பல்கலைக்கழகமும் சேர்ந்தா?
உண்மை வெளிவர வேண்டும்!
பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள்!
விசமமானதும், வினையமானதுமே!
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
16.07.2022.






