கோவை – தொழில் நகரம் – குண்டுவெடிப்பு நகரமாக மாறுவதை தடுத்திட, ஆணித்தரமான திட்டம் தேவை!

9636f637701451.57492d63239e6
Published On: 27 Oct 2022

Updated On: 28 Oct 2022

கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex MLA அவர்கள் செய்தியாளர் சந்திப்பு – பத்திரிக்கை செய்தி!

தமிழக முதல்வர் மௌனம் சாதிப்பது ஏன்?
கோவை – தொழில் நகரம் – குண்டுவெடிப்பு நகரமாக மாறுவதை தடுத்திட, ஆணித்தரமான திட்டம் தேவை!

அக்டோபர் 23ஆம் தேதி கோவை கார் வெடிப்பைத் தொடர்ந்து கோவை மாநகரம் தொடர்ந்து பதட்டத்தில் உள்ளது.

கோவை மாநகரம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அடுத்தபடியாக மிகப்பெரும் தொழில் மற்றும் வணிக கேந்திரம்.

1998 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பிற்கு பின், மீண்டும் கோவை பழைய நிலை பதட்டத்திற்கு வருவது கோவைக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே பெரும் ஆபத்தையும் பாதிப்பையும் உண்டாக்கும்.

கடந்த 23ஆம் தேதி குண்டு வெடிப்பிற்கு பின், காவல்துறை தனது கடமையைச் செய்துள்ளனர்.
எனினும், பல்வேறு சந்தேகங்களையும், சதி வலைகளையும் வெளிப்படுத்தவில்லை.

இந்த குறிப்பிட்ட சம்பவத்தை வேண்டுமெனில் காவல்துறை NIAக்கு கை மாற்றலாம்.! ஆனால், தமிழகத்தின் ஒட்டுமொத்த சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு மட்டுமே உள்ளது.

NIA க்கு இவ்வழக்கை கைமாற்றியதுடன், அதற்கு முன் நடந்த சதி வலைகள், தொடர்புகள் ஆகியவற்றை தமிழக காவல்துறை ஆராய்ந்தால் மட்டுமே தமிழகத்தை சட்ட ஒழுங்கை முழுமையாகக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.
மாநில சுயாட்சி பேசும் அரசு ஏன் இவ்வழக்க உடனடியாக மத்திய அரசிடம் ஒப்படைத்தது? இருவரும் இணைந்தே இவ்வழக்கை விசாரிக்கலாமே?

சம்பவம் நடந்து ஐந்து நாட்கள் ஆகியும், தாங்கள் ஆளுங்கட்சியினர் என்ற முறையிலும்; பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சியின் தலைவர்; தமிழகத்தின் முதல்வர் என்ற ஸ்தானத்தில் இருந்தும் ஏன் இதுவரை முதல்வர் அவர்கள் கண்டன அறிக்கை கூடக் கொடுக்கவில்லை?

இது போன்ற நிலைப்பாடுகள் தானே சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன?

முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் யானை பசிக்குப் பொறி போட்டதை போல் உள்ளது.
கோவையில் கூடுதல் காவல் நிலையங்கள் தேவை என்பது வேறு; ஆனால், காவல் நிலையங்கள் சாதாரண கூட்டம், சட்ட ஒழுங்கு விஷயங்களில் மட்டும் தான் கவனம் செலுத்த முடியும். சர்வதேச நிதி உதவிகளுடன், அண்டை மாநில வலை பின்னல்களுடன், கோவையை ’நிரந்தர பயங்கரவாத தளமாக’ மாற்ற நினைக்கும் கும்பல்களுக்கு எதிராக தீர்க்கமான அரசியல் முடிவும், தெளிவான பார்வையுடனும், ஆணித்தரமான நடவடிக்கைகளும் தேவை.

கோவையை மையமாக வைத்து 24 * 7 மணி நேரமும் செயல்படும் ’பயங்கரவாத எதிர்ப்புப் படை’யின் நிரந்தர மையம் (ANTI-TERRORIST SQUAD) ஒன்றை விரைவில் அமைக்கப்பட வேண்டும்.

கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்தின் முழு பின்னணியையும் தமிழக மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

அந்த குழுவில் மொத்தம் எத்தனை பேர்?; எத்தனை குழுக்கள்?; அந்த குழுக்களை இயக்குபவர்கள் எந்த அமைப்பைச் சார்ந்தவர்கள்?; அதன் தலைமை யார்?; அவர்கள் இருப்பிடம் எது?; அவர்கள் நிதி உதவி பெறும் நிறுவனங்கள் எவை? என அனைத்தையும் தமிழக மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும்.

திட்டமிட்ட குண்டு வெடிப்பு முன்கூட்டியே வெடித்து சிறிய சேதாரத்துடன் முடிந்து போய்விட்டதால், அதன் முழு தன்மையும் மறைத்து விடக் கூடாது.

குறிப்பிட்ட இந்த வழக்கை NIA விசாரித்தாலும், தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள இதன் தொடர்புகள்குறித்து காவல்துறை முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்.

கோவை முழு நகரத்தையும் ’combing operation’ அதாவது வீடு வீடாக; வார்டு வார்டாக சல்லடை போட்டு தேடுதல் வேட்டையைத் துரிதப்படுத்த வேண்டும்.

தற்கொலைப்படையாகச் செயல்பட்டு இறந்து போன ஜமீசா முபினின் உடலை அடக்கம் செய்ய மறுத்தது போல் ஜமாத்துகளும்; ஜனநாயக ரீதியாகச் செயல்படும் இஸ்லாமிய அமைப்புகளும் எவ்வித தீவிரவாத அமைப்புகள் அல்லது தனி நபர்களுக்கும் எவ்வித இடமும் அளிக்கக் கூடாது.

கோவையின் பாதிப்பு தமிழகத்தின் ஒட்டுமொத்த தொழிலையும், அமைதியும் சீர்குலைத்து விடும்.

எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக கோவைக்கு நேரடியாக வருகை புரிந்து மக்களுக்கு நம்பிக்கை ஊட்டவும்; தீவிரவாதத்தை எதிர்த்து தனது அரசு தீவிரமாகச் செயல்படும் என்பதையும் தமிழக மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.