கரடி கடித்து காயமுற்றவர்களை உயர்தர பிளாஸ்டிக் சர்ஜரி மையத்திற்கு மாற்றி உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும்

272862650 2153950294772951 5509297885443037665 N
Published On: 07 Nov 2022
கரடி கடித்துப் பலத்த காயமுற்ற நாகேந்திரன், சைலப்பன் ஆகியோரின் கண், வாய், மூக்கு பகுதிகளில் பெரும் இழப்பு; முழு உடலின் முன் பகுதி சதைகளும் பலத்த பாதிப்பு.!
காயமுற்றோரைக் காப்பாற்ற faciomaxillary உயர்தர பிளாஸ்டிக் சர்ஜரி மையத்திற்கு மாற்றுக.!
அருள்மணி என்பவரைக் காப்பாற்றச் சென்று பாதிப்புக்கு ஆளான நாகேந்திரன், சைலப்பன் ஆகியோரின் தைரியத்தையும், வீரத்தையும் உரிய முறையில் உரிய நேரத்தில் கௌரவித்திடுக.!
உயிருக்குப் போராடும் இருவரின் குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் இடைக்கால நிவாரணம் வழங்கிடுக.!
மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழக வனத்துறை அமைச்சர் திரு. ராமசந்திரன் அவர்கள், தமிழக வனத்துறை செயலாளர் திருமதி. சுப்ரியா சாஹு, இ.ஆ.ப அவர்கள், முண்டந்துறை புலிகள் காப்பக இணை இயக்குநர் திருமதி. செண்பக பிரியா அவர்கள், தென்காசி மாவட்ட ஆட்சியர் டாக்டர் திரு. ஆகாஷ், இ.ஆ.ப அவர்கள் ஆகியோருக்கு தனித்தனியே கடிதம்
அன்புடையீர் வணக்கம்.!
இன்று (06.11.2022) அதிகாலை 6 மணி அளவில் தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள பெத்தான் பிள்ளை குடியிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்த பாவூர்சத்திரம் கருத்தலிங்கபுரத்தைச் சேர்ந்த 55 வயது மதிப்புமிக்க அருள்மணி என்ற வியாபாரியை அருகிலுள்ள வனப்பகுதியிலிருந்து வெளிவந்த கரடி ஒன்று தாக்கியுள்ளது. அவரை காப்பாற்றுவதற்காக சென்ற பெத்தான் பிள்ளை குடியிருப்பைச் சார்ந்த சகோதரர்கள் நாகேந்திரன், சைலப்பன் என்ற இருவரும் கரடியின் கடும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
கரடியின் கொடூர தாக்குதலுக்கு ஆளான மேற்குறிப்பிட்ட மூவரும் இப்பொழுது பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரடி கடித்ததில் நாகேந்திரன் தன்னுடைய இரண்டு கண்களையும், மூக்கையும் இழந்துள்ளார்; வாய் மற்றும் உடல் முழுவதும் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று சைலப்பன் ஒரு கண்ணையும், தனது மூக்கையும் இழந்துள்ளார்; தன் முன்பகுதி உடல் முழுவதும் மிக பலத்த காயத்திற்கு ஆட்பட்டுள்ளார். காயம் பட்ட நாகேந்திரனும், சைலப்பனும் மிக மிக ஆபத்தான நிலையில் இருப்பதாகத் தெரிய வருகிறது; வியாபாரி அருள்மணி லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். பலத்த காயம் பட்ட நாகேந்திரன் மற்றும் சைலப்பன் ஆகியோர் சிகிச்சை மூலம் உயிர் பிழைத்தாலும் கூட அவர்களுக்குப் பார்வை கிடைப்பது கடினம் என்றே தெரிகிறது. கண் மற்றும் மூக்கு மற்றும் முன் உடலில் முன் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர்கள் நிரந்தரமாக பாதிப்புக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
முதற்கண் பலத்த காயம்பட்ட நாகேந்திரன் மற்றும் சைலப்பன் உயிர் காப்பாற்றப்பட வேண்டும். இரண்டாவது அவர்களுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி போன்ற அதிநவீன சர்ஜரிகள் மூலமாக அவர்களுடைய கண்கள், மூக்கு, வாய் உள்ளிட்ட பழுதுபட்ட அனைத்து உறுப்புகளும் மறுசீரமைக்கப்பட வேண்டும். எனவே, சிறிதும் காலம் தாழ்த்தாமல் faciomaxillary துறை மூலமாக நவீன சிகிச்சை அளிக்கும் விதமாக, அதுபோன்ற வசதிகள் உள்ள சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கோ அல்லது வேறு நவீன வசதி கொண்ட தனியார் மருத்துவமனைக்கோ அவர்கள் மாற்றப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் இன்றைய வனத்துறை விதிகளின்படி, இது போன்ற காயம் படக்கூடியவர்களுக்கு ரூ 60,000 முதல் அதிகபட்சம் ஒரு லட்சம் வரை கொடுக்கக்கூடிய சூழல்களே உள்ளன. சைலப்பனும், நாகேந்திரனும் சாதாரணமான ஏழை, எளிய வேளாண் குடியைச் சார்ந்தவர்கள். அவர்களுடைய உழைப்பை மட்டுமே நம்பி அவருடைய குடும்பம் வாழும் நிலை உள்ளது. ஆகவே இடைக்கால நிவாரணமாக பலத்த காயம்பட்ட நாகேந்திரன் மற்றும் சைலப்பன் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சமும்; மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அவர்களின் முழு சிகிச்சையும் அரசை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும்; அவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டதுள்ளதால் அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவுடன் நட்ட ஈடாக குடும்பத்திற்கு தலா ரூபாய் 50 லட்சமும் ஈடாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
அந்த பகுதி முண்டங்கரை புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் யானை, சிறுத்தை போன்ற விலங்குகளின் தொல்லைகள் அடிக்கடி ஏற்படுவதும்; அதேபோல விவசாய நிலங்களில் புகுந்து மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதும் தொடர்கதையாக இருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு, இதே கரடி ஒரு பெண்ணையும் கடித்ததாகத் தகவல்கள் வருகின்றன. கரடி தாக்குதல் சம்பவம் கடையம் வனப்பகுதி வனத்துறை அலுவலகத்திலிருந்து மிக அருகாமையில் நடுரோட்டில் நடந்துள்ளது. இதை ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தும் சம்பவம் ஆகும். ஏறக்குறைய 18 கிலோமீட்டர் பகுதியில் ஏறக்குறைய 15 கிலோமீட்டருக்கு வேலிகள் மற்றும் அகழிகள் அமைக்கப்பட்டு இருந்தாலும் இன்னும் 3 கிலோமீட்டருக்கு மின் வேலைகள் அமைக்கப்படாததாலும், பல இடங்களில் மின்வேலிகள் பழுதுபட்டுச் சரி செய்யாமல் இருப்பதாலும், இந்த இடைவெளிகளின் மூலம் இந்த கரடிகள் தாக்குதல் கரடிகள் புகுந்து கோரச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
எனவே, எதிர்காலத்தில் இது போன்ற எவ்வித சம்பவமும் நிகழாத வண்ணம் மின்வேலியை ஓடை போன்ற பகுதிகளிலும் வலுவாக அமைத்திடவும்; இப்போது இருக்கக்கூடிய 3 அடி உயரத்தை 6 அடியாக உயர்த்தவும்; அகழிகளைத் தூர்வாரியும், அதை அகலப்படுத்திடவும் நடவடிக்கைகளைத் துரிதப் படுத்த வேண்டுகிறேன்.
சட்டம் சம்பிரதாயங்கள் எதுவாக இருந்தாலும் நாகேந்திரனும், சைலப்பனும் அருள்மணி என்ற வியாபாரியைக் காப்பாற்றச் சென்றவர்கள். எனவே அவர்களின் துணிச்சலையும், தைரியத்தையும் போற்றக்கூடிய வகையில் அந்த பலத்த காயம்பட்ட நாகேந்திரன், சைலப்பன் ஆகியோரை உரிய வகையில் கௌரவிக்கவும்; அவர்களுக்கு ஏற்பட்ட பலத்த பாதிப்பால் குடும்பங்களுக்கு ஏற்பட்ட இழப்பைச் சரிசெய்ய உடனடியாக இடைக்கால நட்ட ஈட்டை வழங்கிடவும் வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
06.11.2022