புதிய தமிழகம் கட்சியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி.!

9636f637701451.57492d63239e6 Copy
Published On: 21 Oct 2022

’தீப ஒளி எனும் தீபாவளி’ பாரத தேச மகிழ்ச்சி திருநாள்.!

மாசில்லா – மதுவில்லா மனமகிழ் மாநிலமாக தமிழகம் திகழட்டும்.!

புதிய தமிழகம் கட்சியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி.!

தீப ஒளி எனும் தீபாவளி திருநாளைக் கொண்டாடக்கூடிய பாரத மக்கள் – தமிழக மக்கள் மற்றும் புதிய தமிழகம் கட்சியினர் அனைவருக்கும் என் சார்பாகவும், புதிய தமிழகம் கட்சியின் சார்பாகவும் ’தீபாவளி நல்வாழ்த்துக்களை’ தெரிவித்துக் கொள்கிறேன்.

தீப ஒளித் திருநாள் என்பது பாரதத்தின் எல்லையைத் தாண்டி, உலகெங்கும் பரந்தும் விரிந்தும் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய இந்துக்களாலும், இந்திய மக்களாலும் கொண்டாடப்படக்கூடிய மிகப்பெரிய விழா ஆகும். தமிழகத்தை பொறுத்தமட்டிலும் தீபாவளி ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்தியாவின் பல பாகங்களில் இது ஐந்து நாள் விழா ஆகும். தீபாவளி திருநாள் மக்களிடையே நிலவும் அனைத்து விதமான குறுகிய எல்லைகளையும் தாண்டி, ஒரு மிகப்பெரிய நல்ல செய்தியைக் கொண்டு செல்கிறது. தனிநபரோ, குடும்பமோ, ஊரோ, மாநிலமோ, தேசமோ அதன் இருள் நிலையிலிருந்து விடுபட்டு, ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல வேண்டும்; தீமைகள் அகன்று நல்லவை ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மலர வேண்டும்; ’அறியாமை’ எனும் இருள் நீங்கி ’அறிவுடைமை’ எனும் தெளிவு அனைவரிடத்திலும் பிறக்க வேண்டும் போன்ற உன்னதமான செய்திகளை எடுத்துச் சொல்வதே தீபாவளி திருநாளின் அடிப்படை நோக்கமாகும்.

கடந்த 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தமிழகம் – இந்தியா மட்டும் இன்றி, உலகம் எங்கும் கரோனா எனும் கோர இருள் சூழ்ந்து அதிலிருந்து விடுபட்டு, தற்போதுதான் அதன் தாக்கத்திலிருந்தும் மீண்டு வருகிறோம். தமிழக மக்கள் – இந்திய மக்கள் அதுபோன்ற எல்லாவிதமான இன்னல்களிலிருந்தும் விடுபட்டு, உடல் நலத்துடனும், மன மகிழ்வுடனும், எல்லா வளத்துடனும் திகழ வேண்டும் என்பதே எனது வாழ்த்து செய்தியாகும். நம் மக்களின் ஒவ்வொருவருடைய வாழ்விலும் சுபிட்சங்களும் ஐசுவரியங்களும் வந்து சேர வேண்டுமென வாழ்த்துகிறேன்.

கல்வி, பணி, தொழில் மற்றும் பல்வேறு நிமிர்த்தமாக பல இடங்களிலும் பரவிக்கிடக்கக் கூடியவர்கள் அந்நாள் குடும்பத்தில் இருக்கக்கூடிய அனைவரும் ஒன்று கூடி, புத்தாடை உடுத்தி; இனிப்புகளை உற்றார், உறவினருடன் பகிர்ந்து அக மகிழ்வு கொள்ளக்கூடிய உன்னதமான நாள். குடும்பங்களை, ஊர்களை, மாநிலங்களை, தேசங்களை ஒற்றுமைப்படுத்தும் விழா இது. ’HAPPY DEEPAVALI’ என்று அனைவராலும் பரிமாறிக்கொள்ளும் இவ்விழாவில் சம்பிரதாயங்களோ, மூடத்தனங்களோ எதுவுமே இல்லை. பல்லாயிரக்கணக்கான ஆண்டு இந்தியப் பண்பாடும், அதன் ஒருமைப்பாடும் மட்டுமே இதன் அடிப்படை அடையாளங்கள். தீபாவளி ஒரு காலத்தில் நகர்ப்புறங்களில் மட்டுமே கொண்டாடப்பட்டது. ஆனால், அது இன்று கிராமங்கள் முதல் நாடெங்கும் கொண்டாடப்படக்கூடிய ஒரு மிகப்பெரிய விழாவாக மலர்ந்திருக்கிறது. எனவே, இந்த மகத்தான விழாவில் அனைவரது மகிழ்ச்சியிலும் பங்கு கொள்வோம்; பகிர்ந்து கொள்வோம்.!

கோடான கோடி தொழிலாளர்கள் தங்களுடைய உழைப்பின் பயனை, கொடுக்கப்படாத ஊதியத்தை தீபாவளி திருநாளில் தான் ’போனஸ்’ ஆகப் பெறுகிறார்கள். புதிய புதிய ஆடைகள் உற்பத்தி, புதிய வாகனங்கள் பதிவு, புதிய மனைகள் வாங்குதல், தொழில்கள் தொடங்குதல் அனைத்தும் தீபாவளி திருநாளிலிருந்து தொடங்கும். எனவே இத்திருநாளில் ஆயிரம் ஆயிரம் கோடி பணப் புழக்கம் கொண்ட மிகப்பெரிய பொருளாதாரத்தை உள்ளடக்கிய விழா. தொழில் முனைவோர், வணிகர்கள், வாடிக்கையாளர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு ஊழியர்களும் உழைப்பின் பயனை ஓரளவாது பங்கிட்டுக் கொள்ளக்கூடிய ஒரு விழா. இந்தியாவினுடைய பொருளாதார வலிமையை, இறையாண்மையை, ஒற்றுமையை, HAPPY INDEX – மன மகிழ்வு எனும் குறியீட்டை அளவீடு செய்வதற்கான ஒரு விழா தீபாவளி திருநாள். எனவே தமிழக மக்கள் – இந்திய மக்கள் அனைவரும் தேசப்பற்றுடனும், சகோதர பாசத்துடனும் அன்பையும், இனிப்புகளையும், பிற பண்டங்களையும் அனைவருக்கும் பரிமாறி மகிழ்வுடன் கொண்டாட வேண்டுகிறேன்.

பண்டிகைகள் என்று வருகின்ற பொழுது, சில நேரங்களில் நாம் சுற்றுப்புறச் சூழலையும், நம்முடைய உடல் நலத்தையும் மறந்து விடுகிறோம். குறிப்பாக, தீபாவளியை பொருத்தமட்டிலும், அதிகாலை 4 மணிக்கு எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, புத்தாடைகளை உடுத்தி, பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். அதிகாலை எழும் நல்ல பண்பு ஆண்டு முழுவதும் அனைவரிடத்திலும் தொடர வேண்டும். பட்டாசுகள் ஒலி மாசையும், காற்று மாசையும் உருவாக்குகின்றன. எனவே ஒலி – காற்றை மாசுபடுத்தா பட்டாசுகளை மட்டுமே மிகக் குறைந்த அளவில் உபயோகப்படுத்த வேண்டுகோள் வைக்கிறேன். இந்திய அளவில் தமிழகம் தூய்மையில் முதன்மை மாநிலமாகத் திகழ இத்திருநாளில் தீர்மானிப்போம்.!

அதேபோல, உணவுகளை உணவகங்களில் ஆர்டர் செய்து, வரவழைத்துச் சாப்பிடும் கலாச்சாரங்களும், அதனால் உடல் நலக் குறைபாடுகளும் அண்மை காலமாக பெருகி வருகிறது; அவற்றைத் தவிர்த்து முடிந்த அளவு வீட்டிலேயே அனைத்து பதார்த்தங்களையும் சமைத்து ஏழை, எளியோர், உற்றார் உறவினர் அனைவருக்கும் பரிமாறி உண்ணுங்கள். அதேபோல தீபாவளி என்றாலே பெட்டி பெட்டியாக முன்கூட்டியே டாஸ்மாக் பாட்டில்களை வாங்கி அடுக்கி வைத்துக் கொள்ளக்கூடிய போக்குகளும் உருவாகி வருகிறது; அவை நம்முடைய உடல் நலத்தை மட்டும் கெடுப்பதல்ல, நம்முடைய மன மகிழ்வையும் கெடுத்துவிடுகிறது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பணியில் இருக்கக்கூடியவர்கள் ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்து, தன்னுடைய சொந்த ஊர்களுக்கு வருகை புரிந்து, ஒரு நாளோ, இரண்டு நாளோ தன்னுடைய பெற்றோர் மற்றும் உற்றாருடன் மனமகிழ்ந்து இருப்பதற்கு பதிலாக, மது என்ற அரக்கனுக்கு அடிமையாகி, மதி மயங்கிக் கிடப்பது எவ்விதத்தில் நியாயமாகும்? இந்த தீபாவளியைப் பொறுத்த மட்டிலும் தமிழக இளைஞர்கள், ஆண்கள் அனைவரும் ஒரு சபதம் ஏற்றுக் கொள்ளுங்கள். ’மதுவை மறந்தும் கூட கையினால் தொடமாட்டோம்; நுகர்ந்தும் கூட பார்க்க மாட்டோம்’ என்றும் சபதம் ஏற்றுக் கொள்ளுங்கள்.! இளைஞர்கள், ஆண்களுக்கு தங்களுடைய தாய், தந்தையுடன் இருப்பதைக் காட்டிலும்; மனைவி, குழந்தைகளோடு இருப்பதைக் காட்டிலும்; உங்களுடைய ஊர் நண்பர்களோடும், உறவினர்களோடும் இருப்பதைக் காட்டிலும்; பல்வேறு கால கட்ட அனுபவங்களை நினைவு கூர்வதைக் காட்டிலுமா இந்த மது பாட்டில்கள் மகிழ்ச்சியைத் தந்துவிடப் போகிறது?

வலுவான எந்த தேசத்தையும் உடல் நலம் அற்றவர்களால் படைக்க முடியாது. உடல் நலம் உற்றவர்களால் மட்டுமே படைக்க முடியும். உடல் நலத்தைக் கெடுத்த பிறகு, வேறு என்ன இருக்கிறது. நமது தமிழ் சமுதாய இளைஞர்கள் மதுவிலிருந்து அடுத்த கட்டமாக பல்வேறு விதமான கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கின்றனர். அதிலிருந்து உடனடியாக விடுதலை பெறவில்லை என்றால், நாம் கற்ற கல்வியும், பெற்ற செல்வமும் கூட பயனற்று போய்விடும். எனவே, இந்த தீப ஒளித் திருநாளில் ஒரு தீர்க்கமான சபதம் ஏற்றுக் கொள்வோம். மது போன்ற போதை வஸ்துக்களை விட்டொழித்து, பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வியில் சாதனை படைக்கவும்; இளைஞர்கள் ஒரு நிலையான தொழிலைத் தேர்ந்தெடுத்து தொழில் தொடங்கவும்; ஏற்கனவே வணிகம், தொழில் செய்பவராக இருந்தால் இந்த ஓராண்டுக்குள் அதைப் பன்மடங்கு உயர்த்த வேண்டும் என்ற உணர்வையும்; தனியார், அரசு ஊழியராக இருந்தால் தங்களுடைய கடமையில் மிகுந்த சிரத்தையுடன் இருக்கவும்; பத்திரிக்கையாளர்கள் பத்திரிக்கைத் துறையின் நெறியைக் காப்பாற்றவும்; அரசியல்வாதிகள் ’அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்பதை உணர்ந்து கொடுக்கின்ற போதே வாக்குறுதிகளைக் குறைத்துக் கொடுக்கவும், கொடுத்துவிட்டால் அவற்றை நிறைவேற்றவும் உறுதி பூண்டிட வேண்டும்.

வீட்டு வரி – மின் கட்டணம் குறைத்தும், டாஸ்மாக் கடைகளை அடியோடு மூடி, கனிம வளங்கள் காப்பாற்றப்பட்டு, இலவசங்களுக்கு யாரும் எதற்காகவும் எவரிடத்திலும் கையேந்தாத நிலையை உருவாக்கி, ஆளும் கட்சி ஆனாலும் சரி, எதிர்க்கட்சி ஆனாலும் சரி ஆட்சி மரபுகளை கடைப்பிடித்து, பொருளாதார சாதிய, மத பிரிவுகளும், ஏற்றத் தாழ்வுகளும் முற்றாக அகன்று, இரண்டு மூன்று நபர்கள் மட்டுமோ, இரண்டு மூன்று குடும்பங்கள் மட்டுமோ வளம் பெறும் நிலைகள் மாறி, அரசியல், சமூக பொருளாதார நிலைகள் அனைத்தும் அனைவருடைய கைக்கும் எட்டக்கூடிய சமநிலையை ’EQUALITY AND EQUITY’ சம பங்கு – சம உரிமை என்பதை இந்திய தேசம் முழுமைக்கும் – தமிழகத்தை முன்னோடி மாநிலமாக நிலைநாட்டிட தீபாவளி திருநாளில் நமது ஆழ் மனதில் உறுதி ஏற்போம்.

தீப ஒளித் திருநாளில் இந்திய மக்கள் – தமிழக மக்கள் அனைவரது இல்லங்களிலும், உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் என மீண்டும் மீண்டும் வாழ்த்துகிறேன்.!

இத்தீபாவளி திருநாளிலும், ஆண்டு முழுவதும்,

மாசில்லா – மதுவில்லா மனமகிழ் மாநிலமாக தமிழகம் திகழட்டும்.!

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,

நிறுவனர் & தலைவர்,

புதிய தமிழகம் கட்சி.

20.10.2022.