சட்டமன்றம் நடக்கும்.! அது எதிர்க் கட்சியினர் மீதான பழி சுமத்தல் – ஆளும் தரப்பினர் மீதான பாராட்டு சப்த மன்றமாகவே இருக்கும்! சத்துள்ள விவாத மன்றமாக இருக்காது.!

9636f637701451.57492d63239e6
Published On: 17 Oct 2022

சட்டமன்றம் நடக்கும்.!

அது எதிர்க் கட்சியினர் மீதான பழி சுமத்தல் – ஆளும் தரப்பினர் மீதான பாராட்டு சப்த மன்றமாகவே இருக்கும்!

சத்துள்ள விவாத மன்றமாக இருக்காது.!

சம்பிரதாயப்படி மழைக்கால கூட்டத் தொடராக தமிழ்நாடு சட்டமன்றம் இன்று கூடுகிறது. இக்கூட்டத்தொடரில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை; ஜெயலலிதா மரணம் குறித்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கைகள்   சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படக்கூடும். இரண்டுமே கடந்த ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்கள் என்பதால் பழிகள் அனைத்தும் கடந்த ஆட்சியாளர்கள் மீதும்; ஜெயலலிதா குறித்த மரணப் பழியை ஒரு சில அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் மீதும் மட்டுமே சுமத்தி இருக்கலாம்.!

ஆட்சி-அதிகாரங்களில் மேம்பட்ட முறை நாடாளுமன்ற ஜனநாயக முறை அதனுடைய சிறிய அளவிலான பிரதிபலிப்பே  சட்டமன்றங்கள். ஒவ்வொரு பிரச்சனைகளையும் விவாதம் செய்து நல்லது எது என்பதை ஆய்ந்து ஒரு முடிவுக்கு வருவதே ஜனநாயகத்தின் ஆணிவேர். ஆனால், அந்த முறைகள் எல்லாம் பேச்சளவில் இருக்கிறதே தவிர, நடைமுறையில் இருப்பதில்லை. ஆளுங்கட்சியின் எண்ணிக்கை பலமே ஒருதலை பட்சமான முடிவாகிறது. விவாதங்களைச் சகித்துக் கொள்ள முடியாத ஆளுங்கட்சிகள் எதிர் தரப்பினரை வெளியேற்றுவதில் குறியாகவும்; தங்களுக்கு பேச வாய்ப்பில்லாததை வெளிநடப்பின் மூலமுமே எதிர்க் கட்சிகள் காட்டிக் கொள்ள நேரிடுகிறது.

பல நேரங்களில் மிக மிக தரம் தாழ்ந்த விமர்சனங்கள், கிண்டல்கள், கேலிகள் மற்றும்  அவமானப்படுத்துதல் போன்றவற்றை  செய்வதற்கு உண்டான இடமாகவும் சட்டமன்றங்கள் ஆகிவிட்டன. அறிவுப்பூர்வமான கருத்துக்கள் எடுத்து வைக்கப்பட்டால் அதைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களும் இருப்பதில்லை; புரிந்து கொள்ள வேண்டிய அவசியமும் இருப்பதாக  ஆட்சியாளர்கள் கருதுவதில்லை. நடப்பவை அனைத்தும் வெறும் சடங்குத் தனங்களும், சம்பிரதாயங்களுமே.! எனவே, இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மட்டும் ’மண் விண்ணுக்கும், விண் மண்ணுக்கும் மாறிவிடும்’ என்று யாரும் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.!

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினரில்  யாரை எங்கே உட்கார வைப்பது; யாரை வெளியேற்றுவது என்ற முஸ்திப்புகளும், வெளியேறுவதற்கு உண்டான திட்டமிடல்களும் ஏற்கனவே முடிவுற்று இருக்கும். மூன்று நாட்களும் வெளிநடப்பிலே தொடங்கி வெளிநடப்பிலே முடிகிறதா? அல்லது மூன்று நாட்களுக்கும் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பில் முடிகிறதா? என்று பார்ப்போம்.!

சட்டமன்ற விவாதங்களின் மூலமாக அண்மையில் உயர்த்தப்பட்ட அபரிமிதமான மின் கட்டண உயர்வு, காப்பாற்றப்படாத தேர்தல் வாக்குறுதிகள், பெருகி வரும் விலைவாசி,  கனிம வளங்களில் நடைபெற்று வரும் திருட்டு, வரலாறு காணாத ஊழல் போன்றவை குறித்து யார் பேச முற்படுவார்கள் அல்லது பேச முற்பட்டாலும் அவர்கள் பேச அனுமதிக்கப்படுவார்களா? என்பதெல்லாம் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம், இச்சட்டமன்றக் கூட்டத்தொடரில் மக்களுக்கான எந்த நல்லதும் நடப்பதற்கு உண்டான வாய்ப்பு இல்லை. ‘வாக்குறுதிகள் என்னாச்சு’ என்று கேள்வி கேட்பதற்கு இடம் கொடுக்காமல், ஆளும் கட்சி கூட்டணிகள் முன்பை காட்டிலும் முந்தி அடித்துக் கொண்டு, நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து தங்களுடைய விசுவாசங்களைக் காண்பிக்க பாராட்டு மழை பொழிவார்கள். பிரதான எதிர்க்கட்சி பிளவுண்ட நிலையில் ஆளுங்கட்சி மீதான ஒருமுகப்படுத்தப்பட்ட தாக்குதலுக்கும் வாய்ப்பு குறைவு.

எதிர்க்கட்சியினர் மீது பழி சுமத்தலும்,

அதனால் அவர்கள் வெளிநடப்பு அல்லது பங்கேற்காத நிலை மட்டுமே நிலவும்.!

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,

நிறுவனர் & தலைவர்,

புதிய தமிழகம் கட்சி.

17.10.2022.