Palestine – Israel ”Prince of God, Wrestles with God” சண்டையல்ல, சமாதானமே நிரந்தர தீர்வு
Palestine – Israel
”Prince of God, Wrestles with God”
சண்டையல்ல, சமாதானமே நிரந்தர தீர்வு
396 Views
![]()
கரோனாவிற்கு அடுத்தபடியாக கடந்த 10 தினங்களாக ஊடகங்களில் முதலிடத்தைப் பிடித்திருப்பது ஹமாஸ் இயக்கத்திற்கும் இஸ்ரேல் நாட்டிற்குமான போராகும். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன தேசங்கள் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய முக்கண்டங்கள் சந்திக்கும் முச்சந்திப்பில் உள்ளது. பரப்பளவிலும், இயற்கை வளங்களிலும் பிரசித்தி பெற்றது அல்ல, இதன் பெரும் பகுதி பாலைவனமாகும். ஆனால் இஸ்ரேல் – பாலஸ்தீனத்தின் பழமையும், பூர்வீகமும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. உலகின் பெரும்பாலான மக்கள் கடைப்பிடிக்கும் கிறித்தவ, இஸ்லாமிய மற்றும் யூத மதங்களின் தோற்றுவாயாக விளங்கிய புனிதத் தலமாகும். இஸ்லாமிய மற்றும் கிறித்தவத் தேவாலயங்கள் ஜெருசலேமில் தான் உண்டு.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மோதல்களானாலும் சரி, ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கிய ஹமாஸ் – இஸ்ரேல் யுத்தமானாலும் சரி, அது பழைய ஜெருசலேம் நகரத்தை மையமாக வைத்தே துவங்கியிருக்கிறது. வெளிப்படையாக இது மதங்களுக்கு இடையிலான போராட்டம் என்றாலும், இதன் அடிப்படை அம்சம் என்பது வேறு. கடந்த நூறு வருடங்களுக்கு முன்பு வரை, பாலஸ்தீனத்தில் உள்ள பெரும்பகுதி பாலஸ்தீனர்களுக்கும், சிறு பகுதி யூதர்களுக்குமான வாழ்விடமாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் பெரிய அளவிலான மோதல்கள் இல்லை. இன்று இஸ்ரேலாகவும், பாலஸ்தீனமாகவும் அழைக்கப்படும் அந்த ஒற்றை தேசத்தில் ஆதியிலிருந்தவர்கள் யார்? பின்பு வந்தவர்கள் யார்? என்பதில் தான் பிரச்சனை எழுந்ததுள்ளது.
ஹமாஸ் அல்லது பாலஸ்தீன – இஸ்ரேல் (யூத) போரை மத அளவுகளை மட்டும் கொண்டு பார்த்தால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது. அது நுனிப் புல்லை மேய்ந்ததாகக் கருதப்படும். ஒவ்வொரு மனிதனும் பிழைப்பதற்காக எவ்வளவு தூரம் சென்றாலும் பிறந்த மண்ணையும், இடத்தையும் யாரும் மறக்க மாட்டார்கள், அந்த வகையில் தங்களுடைய பூர்வீகமான பிறப்பிடம் இஸ்ரேல் என்ற காரணத்தினால் அந்த இடத்தில் மீள் குடியேறுவதற்கான தகுதி இருந்ததாக யூதர்கள் கருதினார்கள். அதில் இருக்கக்கூடிய நியாயத்தையும் அலசிப் பார்க்க வேண்டும். அவர்களின் வரலாறு ஏறக்குறைய 3,300 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே தொடங்குகிறது. இஸ்ரேல் என்று அன்றும் அழைக்கப்பட்ட தேசத்தில் வாழ்ந்த 12 வகை பழங்குடியினர் இனங்களை ஒன்றாக்கி ஆபிரகாம் அதற்கு தலைவராக விளங்கினார். அவருக்குப் பின்பு அவருடைய மகன் ஐசக், பேரன் ஜேக்கப் வழிவந்த பழங்குடியின மக்களால் இஸ்ரேலிய இனம் கட்டமைக்கப்பட்டது. அவர்கள் அருகிலிருந்த எகிப்து ஆட்சியாளர்களால் வெல்லப்பட்டு, 400 ஆண்டுகாலம் அடிமைப் படுத்தப்பட்டார்கள். மோசஸ் என்பவரால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டு, 40 ஆண்டுக்காலம் பாலைவனத்தில் சுற்றிய பின், மீண்டும் இன்று இஸ்ரேல் – பாலஸ்தீனம் என்றழைக்கப்படும் ”கானான்” தேசத்தில் குடியேறினார்கள்.
கிமு 300-க்கு முற்பட்ட காலகட்டத்தில் ரோமானிய மற்றும் கிரேக்க படையெடுப்புகளுக்கு ஆளான இஸ்ரேலியர்கள் மீண்டும் போரில் தோற்கடிக்கப்பட்டு சிதறடிக்கப்பட்டார்கள். இஸ்ரேல் என்ற பெயர் அழிக்கப்பட்டு பாலஸ்தீனம் என்று மறு பெயர் சூட்டப்பட்டு, பழமை வாய்ந்த ஜெருசலேம் நகரின் பெயரும் மாற்றியமைக்கப்பட்டது. அந்தப் பெரும் தாக்குதலுக்கு ஆளான இஸ்ரேலிய யூதர்கள் ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கும் சிதறி ஓடினார்கள்; நாடோடிகளாக அலைந்தார்கள்; அவர்கள் பஞ்சம் பிழைக்கவும், தஞ்சமடைய போன இடங்களிலும் பல்வேறு விதமான சமூக கொடுமைகளுக்கு ஆளானார்கள். நகர்ப்புறங்களில் கூட அவர்கள் அந்த பகுதி பொது மக்களோடு கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டனர். எத்தனையோ ஒடுக்குமுறைகளைக் கண்ட போதிலும் அவர்கள் தங்கள் மொழி, இன அடையாளத்தையும்; தேசத்தின் மீதான பற்றையும் விட்டுவிடவில்லை. தங்களது அபரிவிதமான உழைப்பினாலும், அறிவு திறமையினாலும் பல அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும், ஒதுக்குமுறைகளையும் தாண்டி தங்களை நிலை நிறுத்திக் கொண்டார்கள்.
இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனியில் மட்டும் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் உள்ளன. எனினும் அப்படிப்பட்ட காலத்தில் தான் உலகின் தலைசிறந்த பௌதிக விஞ்ஞானி யூத இனத்தைச் சார்ந்த ஐன்ஸ்டீன் பல அரிய சாதனைகளை நிகழ்த்தினார். அதேபோல ஜெர்மனியில் பிறந்த யூத இனத்தைச் சார்ந்த காரல் மார்க்ஸ் உலக பொதுவுடைமை தத்துவத்தை உலகிற்கு அளித்தார். இன்றைய கணினி உலகத்தின் நாயகராக விளங்கும் பில்கேட்ஸும் யூத இனத்தைச் சார்ந்தவரே. ஒரு இனம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிதறடிக்கப்பட்டு, எந்த தேசத்திலும் எவ்வித அங்கீகாரமும் இல்லாமல் இருந்தாலும் கூட, தங்களது பூர்வீக அடையாளத்தைச் சிறிதும் இழக்காமல் நிலைநிறுத்தி வாழ்ந்தது அரிதினும் அரிதான நிகழ்வே. அவர்கள் ஈவிரக்கமற்ற கந்துவட்டிக்காரர்கள், அடாவடிக்காரர்கள், எல்லோருக்கும் மேலானவர்கள் என்ற சிந்தனை கொண்டவர்கள் போன்ற குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது என்றென்றும் உண்டு; இன்றும் உள்ளது.
ஆனால், 3300 வருடங்களுக்கு முன்பு, தங்களது பூர்வீக பூமியிலிருந்து சிதறடிக்கப்பட்ட ஒரு இனம் 100 தலைமுறைகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்றுபடும் என்றோ, அதே உணர்வோடு மீண்டெழும் என்றோ, எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? ஆனால் அவர்கள் தங்களுடைய எந்த அடையாளத்தையும் இழக்காமல் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தங்களுடைய பூர்வீக பூமிக்குத் திரும்பி விடுவோம் என்ற நம்பிக்கையோடு மட்டுமல்லாமல், அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் பல நாடுகளில் வாழ்ந்த யூதர்கள் பெரும் பணக்காரர்களாக இருந்திருக்கிறார்கள். அப்போது உலகின் பெரும்பாலான நாடுகளை இங்கிலாந்து ஆட்சி செய்து கொண்டிருந்தது. ஒவ்வொரு பெரும் போர் முடியும் போதும் அந்தந்த நாடுகளின் இராணுவ செலவினங்களைச் சமாளிப்பதற்கு இங்கிலாந்து அரசுக்கு பெரும் பொருள் உதவி தேவைப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மிகவும் வசதி படைத்த யூதர்கள் ஆங்கிலேயர்களைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார்கள். இந்தியாவை எப்படி கிழக்கிந்திய கம்பெனி மூலமாக 1857-க்கு பிறகு ஆங்கிலேயர்கள் பிடித்தார்களோ? அதேபோல, மத்திய தரைக்கடல் பகுதியில் பெரும்பாலான தேசங்களை தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தார்கள். அப்போது அது இஸ்ரேல் என்ற தேசமாக இல்லை, அது பாலஸ்தீனமாகத்தான் இருந்தது. அன்றைய பாலஸ்தீனத்தில் இன்றைய இஸ்ரேல், காஷா, வெஸ்ட் பேங் (மேற்குக்கரை), கோலான் மலைப்பகுதி மற்றும் ஜோர்டான் உள்ளிட்டவை அடங்கும். அப்போது பாலஸ்தீனம் பெரும் பொருட் செல்வம் நிறைந்த பகுதியாக இல்லாவிட்டாலும், ஐரோப்பாவிலிருந்து எளிதாக ஆயுதங்களை இந்தியாவை நோக்கிக் கடத்திச் செல்ல மையப் புள்ளியாக இருந்தது.
கிமு 300-களில் ரோம மற்றும் கிரேக்க படையெடுப்புகளில் சிதறுண்டு போன யூதர்கள் ஏறக்குறைய இரண்டாயிரமாண்டு காலம் அந்த பகுதிக்குள் நுழையவில்லை. அந்த இடைப்பட்ட காலத்தில் தான் இஸ்லாம் அல்லாத அரேபியர்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், மிகச் சிறிய அளவிலான யூதர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் கொண்ட பாலஸ்தீனர்களின் வாழ்விடமாக மாறிவிட்டது. முதல் மற்றும் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஆங்கில அரசுக்கு அடிமைப்பட்ட பல தேசங்கள் இந்தியாவைப் போல விடுதலை கோஷங்களை எழுப்பினார்கள். இந்தியாவில் இந்தியத் தேசிய காங்கிரஸ் போல, அங்கும் பாலஸ்தீன தேசிய காங்கிரஸ் பாலஸ்தீன நாட்டின் விடுதலையை முன்னெடுத்தது.
அப்போது இந்திய விடுதலைப் போராட்டம் எப்படி ஆங்கிலேயர்களுக்கு எரிச்சலூட்டியதோ அதேபோல, பாலஸ்தீன போராட்டமும் அவர்களுக்கு எரிச்சலூட்டியது. அந்த சந்தர்ப்பத்தில் தான் இந்தியாவில் கையாண்ட ”Divide and Rule” எனும் பிரித்தாளும் சூழ்ச்சியை ஆங்கிலேயர்கள் கையில் எடுத்தார்கள். ஒன்று பாலஸ்தீன விடுதலையைப் பலவீனப்படுத்த வேண்டும், இரண்டாவது தனக்கு விசுவாசமாக ஒரு பிரிவினரை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பது. அதன் அடிப்படையில் 1917-ல் ஆங்கில அரசு ”பால்பர்” என்பவர் தலைமையில் ஒரு கமிஷனை நியமித்தது. அந்த கமிஷன் பாலஸ்தீனத்தை மூன்றாகப் பிரித்து அரேபியர்கள் உள்ளடக்கிய பெரிய பகுதியைப் பாலஸ்தீனமாகவும், யூதர்கள் வாழ்ந்த சிறிய பகுதியை இஸ்ரேலாகவும், ஜெருசலேமை பிரிட்டிஷ் தனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டது. அன்று ஊன்றப்பட்ட விதைதான் இன்று விஸ்வரூபம் எடுத்துள்ளது.
”பால்பர்” அவர்களின் பிரகடனத்தை இருதரப்பினரும் ஏற்றுக் கொள்ளவிட்டாலும், யூதர்கள் மிக வேகமாக அப்பகுதியில் குடியேறிக் கொண்டிருந்தார்கள். தங்களிடத்தில் இருந்த மிகப்பெரியச் செல்வத்தைக் கொண்டு கொண்டு அரேபியர்களிடமிருந்த நிலத்தைச் சொந்தமாக வாங்கிக் குவித்தார்கள். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பார்த்தபோதுதான், பாலஸ்தீனத்தில் வாழ்ந்த அரேபியர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் தங்களுடைய பூமியை யூதர்களிடம் விற்று தங்களின் மண்ணுரிமையை இழந்ததை உணர்ந்தார்கள். ஆனால் அதற்குள் காலம் கடந்துவிட்டது.
1920-களில் யூதர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் மிகப்பெரிய மோதல் வெடித்தது. இரு தரப்பினருக்கும் இடையே தீவிரவாத இயக்கங்கள் தோன்றின. 1948-ல் பாலஸ்தீனத்திலிருந்து இஸ்ரேல் என்ற தனி நாடு அறிவிக்கப்பட்டது. நாடற்று வாழ்ந்த யூதர்களுக்குத் தனி நாடு கிடைத்தது. இரண்டாயிரம் ஆண்டுக் காலம் அம்மண்ணில் வாழ்ந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் நாடற்றவர்களானார்கள். அந்த பூமியில் வாழ்வதற்கு யூதர்களுக்கு உரிமை இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், 2000 ஆண்டுக் காலத்திற்கு முன்பே அந்த உரிமையை விட்டுவிட்டு வெளியேறிய யூதர்கள் 2000 ஆண்டுக் காலம் அப்பூமியில் வாழ்ந்து வந்த பாலஸ்தீனர்களின் மண்ணுரிமையைப் பறிப்பது உலக நியதிக்கு எதிரானது அல்லவா! எனவே தான் ”இது வெறும் மதம் சம்பந்தமான போராட்டம் அல்ல, இது மண்ணுரிமைக்கான, தாய் தேசத்திற்கான போராட்டம்” என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்.
தங்களுக்கு இஸ்ரேல் என்ற நாடு கிடைத்தது என்ற உற்சாகத்திலும், உத்வேகத்திலும் இஸ்ரேலியர்கள் தன்னை வலுப்படுத்தியும், வளப்படுத்தியும் கொண்டார்கள். காஷா மற்றும் மேற்குக்கரைப் பகுதியில் வாழ்ந்த பாலஸ்தீனர்கள் நாடற்ற மக்களாக இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். பாலஸ்தீனத்தைச் சுற்றி எண்ணெய் வளமிக்க 30-க்கும் மேற்பட்ட அரேபிய நாடுகள் உண்டு. அவர்கள் நினைத்திருந்தால் பாலஸ்தீன அரேபியர்கள் அனைவரையும் இஸ்ரேலியர்களுக்கு சமமாக வளப்படுத்தியும், வலுப்படுத்தியும் இருக்க முடியும். ஆனால் அரபு நாடுகளின் ஆதரவு என்பது உள்ளார்ந்ததாக இருக்கவில்லை.
1967 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தை அடிப்படையாகக் கொண்டு இஸ்ரேலுக்கும் அரேபிய நாடுகளுக்கும் போர் மூண்டது. 20 நாடுகள் ஒன்றாக எதிர்த்தும் கூட இஸ்ரேலை வெல்ல முடியவில்லை. ஜோர்டான், கோலன் மற்றும் சிரியா போன்ற நாடுகளின் பல பகுதிகளை இஸ்ரேல் மீண்டும் தன் வசப்படுத்திக் கொண்டது. ஒவ்வொரு போருக்குப் பின்னரும் எஞ்சியிருந்த பாலஸ்தீன பகுதிகளை விழுங்குவதையே இஸ்ரேல் குறிக்கோளாகக் கொண்டது; அதில் வெற்றியும் கண்டது.
“PLO” என்ற பாலஸ்தீன விடுதலை அமைப்பை உருவாக்கி, பாலஸ்தீன விடுதலையை முன்னிறுத்தி யாசர் அராபத் அவர்கள் ஏறக்குறைய 30 ஆண்டுக் காலத்திற்கு மேலாக அந்த தேச விடுதலை போராட்டத்தை முன்னெடுத்தார். அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலுக்குப் பின்புலமாக விளங்கியது. 1993-ல் நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோவில் யாசர் அராபத் அவர்களுக்கும், இஸ்ரேலுக்கும் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. அதில் பாலஸ்தீனம் தனி நாடு என்ற கோரிக்கையைக் கைவிட்டு, பல படிகள் கீழே இறங்கி பாலஸ்தீனத்தை நிர்வகிக்கும் அமைப்பு (Palestine Administrative Authority) என்ற மிகக் குறைந்த அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். எப்பொழுதுமே ஒரு மிகப்பெரிய இலட்சியத்திற்காக போராடும் போது தற்காலிகமான நன்மைகளுக்காக விட்டுக் கொடுப்பது பிற்காலத்தில் பேராபத்தைத் தரும் என்பதற்கு ”ஆஸ்லோ உடன்படிக்கை” ஒரு மிகப்பெரிய முன்னுதாரணமாகும். 1993-க்கு பிறகு பாலஸ்தீனம் நாடு என்று பெயரளவில் சொல்லப்பட்டாலும், நாட்டிற்கான அங்கீகாரம் இல்லாத காரணத்தினால் மீண்டும் மீண்டும் அங்கு மோதல்களும், போராட்டமும் தொடர்கின்றன.
ஒரு மண்ணுக்கு இருவர் சொந்தக்காரர்கள். ஒருவருக்கு அங்கீகாரத்துடனும், மற்றொருவர் அங்கீகாரம் இல்லாமல் அனாதையாகவும் நிற்கிறார்கள். அங்கீகாரமற்றவர்கள் போராடத் தானே செய்வார்கள். 1920-களில் ஐந்தாறு இலட்சம் மட்டுமே ஜனத்தொகை கொண்ட யூதர்கள், இன்று ஒரு கோடி ஜனத்தொகை கொண்ட இஸ்ரேல் நாடாக பரிணமித்துள்ளார்கள். ஆனால் அன்று பாலஸ்தீன குடிமக்களாக இருந்த பல லட்சம் பாலஸ்தீனியர்கள் நாடற்று போராடும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். யாசர் அராபத் அவர்கள் பாலஸ்தீன தேச விடுதலைப் போராட்டமாக முன்னெடுத்தார். ஆனால், அது இப்போது மெல்ல மெல்ல ”ஹமாஸ்” என்ற இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பின் போராட்டமாகச் சுருங்கி போய் விட்டது. கடந்த ஒரு வாரக் காலமாக நடைபெறும் போராட்டம் அவசியமற்றது. ஆனால் நடக்கும் போரின் தன்மையைப் பார்த்தால் இருதரப்பினரும் பெரிய மோதலுக்கு நீண்டகாலமாக தங்களை ஆயத்தப்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது தெளிவாக விளங்குகிறது.
ரம்ஜானுக்கு சில தினங்கள் முன்பாக ஆறு இஸ்லாமியக் குடும்பங்களை கிழக்கு ஜெருசலேமில் இருந்து வெளியேற்றியதும், கிழக்கு ஜெருசலேமில் உள்ள ”அக்சா” மசூதியின் உள்ளே புகுந்து காவல்துறை தாக்கியதும் எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல. அதற்காக ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் தொடங்கியது முற்றிலும் தவறானது. 1967-ல் 20க்கும் மேற்பட்ட அரேபிய நாடுகள் இணைந்து நடத்திய போரை ஒரே வாரத்தில் முடிவுக்குக் கொண்டு வந்த இஸ்ரேல் ஒரு துண்டு நிலத்திலிருந்து போர் நடத்தும் ஹமாஷ் அமைப்பை வெற்றி கொள்ள முடியவில்லை. ஹமாஸ் அமைப்பினர் காஷா – பாலஸ்தீனத்தில் ஓர் அடிப்படைவாத இஸ்லாமியத் தேசத்தைக் கட்டியமைக்க முற்பட்டால் அது மிகத் தவறானது ஆகும். அதேபோல இஸ்ரேல் பாலஸ்தீனத்தை முற்றாக விழுங்கி இஸ்லாம் அல்லாத அரேபியர்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், மற்ற எந்த பழங்குடியின இனமும் அல்லாத யூத இனத்தைக் கொண்ட தனி தேசமாக இஸ்ரேலை மாற்ற நினைத்தால் அதுவும் தவறானது ஆகும். ஆயுதங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தோற்றுப்போகும். நியாயங்கள் மட்டுமே வெல்லும். இருதரப்பும் போரை விட்டுவிட்டு அப்பகுதியில் நின்றுபோன அமைதியைக் கொண்டு வர வேண்டும்.
பாலஸ்தீனர்கள் இஸ்ரேலை அங்கீகரிக்க வேண்டும்; இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும். இனிமேல் இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை உள்ளடக்கிய வரைபடங்கள் உருவாக வேண்டும். வல்லரசுகள் அந்த பகுதியில் போர் மேகம் சூழ அனுமதிக்கக் கூடாது. உடனடியாக கடந்த 50 ஆண்டுகளாக இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து பாலஸ்தீன பகுதிகளும் திருப்பி கொடுக்கப்பட்டு பாலஸ்தீனம் – இஸ்ரேலின் எல்லைகள் முறையாக வரையறுக்கப்பட வேண்டும். இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தது போல, பாலஸ்தீனத்தையும் இறையாண்மை மிக்க நாடாக அமெரிக்க அங்கீகரிக்க வேண்டும். ”இஸ்ரேல்” என்பதற்கு ”Prince of God, Wrestles with God” என்பது பொருளாகும். இஸ்ரேல் மூன்று மதங்களின் புனிதத் தலமாகும். அங்கு அமைதி நிலவ வேண்டுமே தவிர, போர்களுக்குத் தளமாகவும், களமாகவும் இருக்கக்கூடாது.
பாலஸ்தீனர்கள் மற்றும் இஸ்ரேலியர்களின் மண்ணுரிமை நிலை நாட்டப்படட்டும்!
இனி ஒரு போதும் பாலஸ்தீனர்கள் – இஸ்ரேலியர்களுக்கிடையே சண்டை கூடாது; என்றென்றும் சமாதானமே மேலோங்கட்டும்!
டாக்டர் க.கிருஷ்ணசாமி,
புதிய தமிழகம் கட்சி.
21.05.2021






