முள்ளிவாய்க்காலோடு முடிந்து விடாது! கிள்ளி கிள்ளி எறிந்தாலும் துள்ளித் துள்ளி துளிரும்!
முள்ளிவாய்க்காலோடு முடிந்து விடாது!
கிள்ளி கிள்ளி எறிந்தாலும் துள்ளித் துள்ளி துளிரும்!
மண்டியிடாமல் மாண்ட ஈழத்தமிழின விடுதலை போராளிகளுக்கு
எனது வீரவணக்கம்!!
பொதுவுடைமை தளகர்த்தர் காரல் மார்க்ஸ் அவர்கள் ”பாராளுமன்றம் ஒரு பன்றிக் கூடம்” என்று குறிப்பிட்டார். ஆனால், அதன் தேர்தல்களில் தோல்வியுற்று விட்டாலே உலகமே இருண்டு விட்டதாகச் சிலர் கருதுகிறார்கள்; இதுதான் வாழ்க்கை என சிலர் புலம்புகிறார்கள். ஐநூறுக்கும், ஆயிரத்திற்கும் வாக்குகளைச் சந்தைப்படுத்துகின்ற வாக்காளர்கள், அதை விலை பேசும் வேட்பாளர்கள் காணும் வெற்றி தோல்விகளைக் கண்டு சிலர் விரக்தியின் உச்சத்திற்கே செல்கிறார்கள், சிலர் கொண்டாடுகிறார்கள், சிலர் அங்கலாய்க்கிறார்கள். கொள்கைக்காக வாழக்கூடியவர்கள் அப்படியல்ல, உயிரையும் துச்சமெனக் கருதி வாழ்கிறார்கள். அதிகாரத்திற்காகவும்; அடையாளத்திற்காகவும் நடந்த போர்களில் வெற்றி பெற்றவர்களைக் காட்டிலும், கொள்கைக்காகவும்; கோட்பாட்டிற்காவும் இறுதிவரை போராடியவர்களின் வரலாறு தான் என்றுமே பேசப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் எல்லையிலிருந்து 20 கிலோமீட்டர் அப்பால் உள்ள இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை பூர்வீக வாழ்விடமாகக் கொண்டவர்கள் ஈழத்தமிழர்கள். மலையக தமிழர்கள் தேயிலைத் தோட்டங்களில் பணி புரிந்து வருகிறார்கள். ஏறக்குறைய, 100 ஆண்டு காலமாக மொழி, இனம், தமிழ் நிலத்திற்கான சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட ஈழத் தமிழ் மக்கள் போராடி வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களுடைய எல்லாவிதமான அடையாளமும் அழிக்கப்படும், தங்களுடைய வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்படும் என்ற சூழல் நேர்ந்தபோது அவர்கள் ஆயுதபாணிகளானார்கள்.
1975 ஆம் ஆண்டு நான் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவராக இருந்த காலம் தொட்டே ஈழத்தமிழ் இளைஞர்களை நன்கு அறிவேன். 1983-84 களில் அம்மக்கள் மீதான ஒடுக்குமுறைகள், அடக்குமுறைகள் உச்சக்கட்டம் அடைந்து போது, கோவையில் மருத்துவ பணி ஆற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றி இருக்கிறேன். ஏனெனில், ஒரு போராளி அமைப்பின் வலியை இன்னொரு போராளியால் மட்டுமே உணரமுடியும்.
1989-90களில் தமிழகத்தில் ஈழத்தமிழ் போராளிகளைப் பலரும் கைவிட்ட வேளையில், நாம் அவர்களின் உள்ளம் மற்றும் உடல் காயங்களுக்கு மருந்தாக விளங்கி இருக்கிறோம். இலங்கை அதிபர் சந்திரிகா 1999 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை மீண்டும் தன் வசப்படுத்த முயற்சி செய்த நேரம் அது. இந்தியா அரசால் இலங்கைக்கு 400 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுத தளவாடங்கள் அடங்கிய கப்பல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது அதற்கு எதிராகத் தமிழகத்தில் எவரும் குரல் எழுப்பவில்லை, ”புத்த பெண்ணே, புத்த பெண்ணே, யுத்தம் செய்யாதே” எனவும், ”மத்திய அரசே, ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக ஆயுதம் வழங்காதே” எனவும் மத்திய அரசுக்கு எதிராகச் சென்னையில் நாம் போராட்டம் நடத்தினோம். அதன்பின் அக்கப்பல் திரும்பப் பெறப்பட்டது. 2007 ஆம் ஆண்டு இந்திய அரசின் பட்ஜெட்டில் இலங்கைக்கு ரேடார் வாங்க ரூபாய் 100 கோடி ஒதுக்கப்பட்டது. அதை இரத்து செய்ய வலியுறுத்தியும், திருச்சியிலிருந்து இலங்கை அரசுக்கு இராணுவத் தளவாடங்களை அனுப்பக் கூடாது எனவும் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம், அதில் ராஜபக்சேவின் கொடும்பாவி எரிக்கப்பட்டது.
”விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுகிறோம்” என்ற பெயரில் 2009 ஆம் ஆண்டு போர் உச்சகட்டமான பொழுது, போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னையின் பல இடங்களில் உண்ணாவிரதப் போராட்டமும், மறியலும் நடத்தினோம். சகோதரர் தா.பாண்டியன் அவர்களுடனும் இரயில் மறியல் போராட்டமும் செய்தோம். நாளுக்கு நாள் ஈழத்தமிழ் மக்களுக்கான தாக்குதல் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அன்றைய அதிபர் ராஜபக்சே அப்பாவி தமிழர்கள் மீது போர் விதிமுறைகளுக்கு மாறாக கொத்துக்குண்டுகளை வீசி அழித்தார். அன்று காங்கிரசும், திமுகவும் மத்தியில் கூட்டணி ஆட்சி, அதிகாரத்திலிருந்தார்கள். போரை நிறுத்த வேண்டும் என அனைத்து தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. எனினும் அன்றைய மத்திய அரசு செவி சாய்க்கவில்லை, அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் 2 மணி நேர உண்ணவிரதத்தோடு முடித்து கொண்டார். இறுதிப் போர் என்ற பெயரில் மே மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் பன்னாட்டு ராணுவ உதவியுடன் 30,000 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்களும், போராளிகளும் முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதில் விடுதலைப் புலிகளின் முன்னணி தலைவர்களும் மாண்டுபோனதாக ராஜபக்சே அரசு அறிவித்தது.
தங்களுடைய இனத்திற்கான அடையாளத்தை மீட்டெடுக்கவும், விடுதலையை வென்றெடுக்கவும் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழ் இளைஞர்கள் கடைசி வரையிலும் களத்திலே நின்று தங்களுடைய இன்னுயிரை நீத்தார்கள். கடந்த ஐந்தாறு நாட்களாக நடைபெறுகிற இஸ்ரேல்-பாலஸ்தீனம் போருக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவிக்கின்றன. போரை முடிவுக்குக் கொண்டுவர, ஐநா சபை அவசரமாகக் கூடுகிறது. ஆனால், முள்ளிவாய்க்காலில் 30,000 தமிழ் மக்கள் உயிரோடு புதைக்கப்பட்ட போது உலக அரங்கிலிருந்து ஒரு குரல் கூட எழவில்லை. அது மட்டுமல்ல, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சாதாரண குடிமக்களான பெண்களும், குழந்தைகளும் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். அதற்கு எதிராகவும் உலக அளவில் எக்குரலும் எழவில்லை. அதையும் கண்டித்து 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6,7 ஆகிய தேதிகளில் கோவையில் முதல் உலகத் தமிழர் மாநாட்டை நடத்தினோம். மலேசியாவிலிருந்து மட்டும் 150 பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள். அதன்பிறகு மீண்டும் முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்கு சுதந்திரமான சர்வதேச விசாரணைக் கேட்டு இலண்டனில் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களோடு கூட்டம், சுவிட்சர்லாந்து – ஜெனிவாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டோம். கோலாலம்பூரில் மீண்டும் இரண்டாவது மாநாட்டை நடத்தினோம். ஈழத் தமிழர்களுக்கான போராட்டத்தில் புதிய தமிழகம் கட்சி என்றும் இரண்டற கலந்து நின்றது.
இன உணர்வு, இயக்க கட்டுப்பாடு, இலட்சியத்திற்கான அர்பணிப்பு ஆகியவற்றிற்கு அடையாளமாக விளங்கியவர்கள் ஈழத் தமிழ்ப் போராளிகள். அவர்கள் எதிரிகளின் வீரத்தால் வீழ்த்தப்படவில்லை; இன துரோகத்தால் வீழ்த்தப்பட்டார்கள். அவர்கள் எதற்காகப் போராடினார்களோ, அதை இன்றும் அவர்கள் அடையவில்லை தான். ஆனால், அடங்கிப் போய் விடவில்லை. பிறந்த மண்ணில் மானத்தோடு வாழ முடியாது என்பதறிந்து வாழும் இடம் எதுவாயினும், இன உணர்வோடு வாழ்கிறார்கள். முள்ளிவாய்க்கால் தோல்வியால் அவர்கள் துவண்டு போய் விடவில்லை. முள்ளிவாய்க்காலில் தங்கள் தலைமைக்கும், அமைப்பிற்கும், இனத்திற்கும் ஏற்பட்ட வடுவைத் துடைத்தெறியக் காலத்தை நோக்கி ஆயத்தமாகி காத்துக் கொண்டிருக்கிறார்கள். நாடு கடந்து வாழ்ந்தாலும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றை உருவாக்கி, தங்களுடைய நெஞ்சில் இலட்சிய வேட்கை எனும் தீபம் சிறிதும் அணையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன உணர்வுள்ள இனம் எத்தனை போர்களில் தோற்றாலும் அது வீழாது, அந்த இனம் எழும். அந்த இனமே வாழும்.
அற்ப நலன்களுக்காக ஆசைப்படுபவர்களாலோ, அர்ப்பணிப்புக்குத் தயாரில்லாமல் வெறும் தற்பெருமை பேசக்கூடியவர்களாலோ, காய்ந்த சருகுகளைப் போல கருகிப் போகக்கூடியவர்களாலோ, காட்டிக் கொடுக்கக்கூடியவர்களாலோ பிறர் கையேந்தி வாழும் உணர்வு கொண்டவர்களாலோ எதையும் சாதிக்க முடியாது. அவர்கள் காலம் காலத்திற்கும் கையேந்திகளாகவும், கைக்கட்டுபவர்களாகவும், பிறர் கால் பிடிப்பவர்களாகவும் வாழ்ந்தும், வாழாதவர்களாக மடிந்தே போக நேரிடும். அவர்களுக்கென்று எந்த வரலாறுமிருக்காது. ஆனால் ஈழத்தமிழ் மக்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல, வீரத்தின் விளை நிலமாக விளங்கியவர்கள். அவர்கள் முள்ளி வாய்க்காலில் கொத்து குண்டுகளுக்கு இறையாகி மாண்டு கூட போயிருக்கலாம். ஆனால் எதிரிகளிடம் மண்டியிடாதவர்கள், அவர்கள் என்றென்றும் வாழ்வார்கள், வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களுடைய போராட்டம் தமிழ் ஈழ விடுதலைக்கான போராட்டம் என்று மட்டும் குறுக்கிப் பார்க்க வேண்டியதில்லை. உலக மனித குலத்தின் விடுதலையையும், இன உணர்ச்சியையும், ஒற்றுமையையும் மட்டுமே உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அவர்களுடைய போராட்ட வாழ்க்கையும், அர்ப்பணிப்பும் சம உரிமைக்காகவும், சமத்துவத்திற்காவும் போராடக்கூடிய ஒவ்வொருவருக்கும் கலங்கரை விளக்கமும், வழிகாட்டியும் ஆகும்.!
முள்ளி வாய்க்காலில் உயிர்நீத்த அனைத்து ஈழத்தமிழ் நெஞ்சங்களுக்கும் எனது வீர வணக்கம்.
அவர்களின் போராட்டம்! முள்ளிவாய்க்காலோடு முடிந்துபோனது அல்ல, மீண்டும் முளைக்கும்!
கிள்ளக் கிள்ள துள்ளித் துள்ளி துளிரும்!
டாக்டர் க.கிருஷ்ணசாமி எம்.டி,
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி.
17-05-2021