மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் 138-வது பிறந்த நாளில் அவரின் சாதி ஒழிப்பு செயல்பாடுகளை நினைவு கூறுவோம்..!

அறிக்கைகள்
s2 519 Views
  • Bharathi

    மகாகவி சுப்பிரமணிய பாரதியார்

  • Bharathi
Published: 11 Dec 2020

Loading

மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்களின் 138-வது பிறந்த நாளில் அவரின் சாதி ஒழிப்பு செயல்பாடுகளை நினைவு கூறுவோம்..!

பாரதி போட்டு தந்த பட்டியல் வெளியேற்றப் பாதை..!

இந்தியத் திருநாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் இந்தியாவில் தென்கோடியிலிருந்து கவிதைகளால் சுதந்திரத் தீயை மூட்டியவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள். 1882-ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் எனும் ஊரில் அவர் பிறந்தார். நான்கு வயதிலேயே கவிபாடும் திறன் பெற்ற அவர் 11 வயதில் ”பாரதி” எனும் பட்டம் பெற்றார். அவருடைய கவிதைகள் வெறும் சுதந்திரத் தீயை மட்டும் ஊட்டவில்லை. சுதந்திரத்திற்குப் பிறகும் இந்த நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் கவிதை வடிவில் தனது சிந்தனைகளை வெளிப்படுத்தியிருந்தார்.

”ஆடுவோமே, பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என்று விடுதலை உணர்வை முன்கூட்டியே மக்கள் மத்தியில் கொண்டு வந்து நிலைநிறுத்தியவர். ”செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே” என்று தான் பிறந்த மண்ணையும், ”எங்கள் தந்தையர் நாடென்னும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே” என்று பாரத தேசத்தின் பெருமையையும் எடுத்துச் சொன்ன மகாகவி அவர். அதேபோன்று ”தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” என்றுக் கூறி வறுமையற்ற இந்தியாவாக இருக்க வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறார். அது மட்டுமல்ல, இன்று வரையிலும் இந்தியாவை பிடித்துள்ள சாதி வேறுபாடுகளைப் பற்றிச் சுட்டிக் காட்டுகின்ற போது ”சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்று கவிதை மூலம் முழங்கியவர் மட்டுமன்றி, வாழ்க்கையிலும் அதை நடைமுறைப்படுத்தி வழிகாட்டியாக வாழ்ந்து காட்டியவர்.

அவர் ஓர் உண்மையான மகத்தான மனிதர் என்பதற்கு அவர் வாழ்ந்த 38 ஆண்டுகளில் நிகழ்ந்த எத்தனையோ சம்பவங்களை சுட்டிக் காட்டலாம். ஒரேயொரு மிக முக்கியமான சம்பவத்தை மட்டும் சுட்டிக் காட்டுவது அவர் எவ்வளவு பெரிய உயர்ந்த மனிதர் என்பதற்கு சான்று ஆகும்.

பாண்டிச்சேரியில் பாரதியார் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவரது குடும்பத்தில் ஓர் அங்கத்தினராக வாழ்ந்தவர் கனகலிங்கம் என்பவர். அவர் பட்டியல் பிரிவில் உள்ளடங்கிய சாம்பவர் சமுதாயத்தை சேர்ந்தவராக இருக்கக்கூடும் என கருதுகிறேன். இந்து மதத்தில் நிலவிய வர்ணாசிரமப் பிரிவுகளும், சாதிப் பிரிவுகளும் மாற்ற முடியாதவை என்று இன்று போல் அன்றும் பலர் பிரச்சாரம் செய்து வந்த காலகட்டம் அது. அத்தகைய காலகட்டத்தில் அவர் கனகலிங்கம் என்ற சகோதரரை ஆதிதிராவிடர் சமுதாயத்திலிருந்து பிராமணராக மாற்றியிருக்கிறார்; இது எல்லோருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஏனெனில், 1920-களில் உருவாக்கப்பட்ட பட்டியலில் இருந்து வெளியேற்றுவதற்கே இன்றைய திராவிடச் சிந்தனை ஆட்சியாளர்கள் பிதற்றுகிறார்கள்.

மகாகவி பாரதியார் அவர்கள் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் அந்தக் கருத்துக்களுக்கு அவர் ஆட்பட்டவர் அல்ல. ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன்பு இப்படி ஒரு செயலை அவரால் எப்படி செய்ய முடிந்தது என நான் வியக்கிறேன். ஆதிதிராவிடர் சமுதாயத்தில் பிறந்து பிராமணராக மாற்றப்பட்ட கனகலிங்கம் என்பவரது சுயசரிதையிலிருந்து அவர் எப்படி பிராமணராக மாற்றப்பட்டார் என்று எடுத்துச் சொல்வதே பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுகிறேன். பிராமணர் அல்லாத ஒருவரை பிராமணராக மாற்றக்கூடிய செயல்பாட்டிற்கு உபநயனம் என்று பெயர். பிரம்மாவிடமே அழைத்துச் செல்வது என்பது அதன் பொருள். கனகலிங்கம் அவர்கள் தன்னுடைய சுயசரிதையில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.

”இத்தகைய கூட்டம் எனக்கு நடைபெறப்போகும் உபநயனத்திற்காக கூடியிருப்பதாய் தெரிந்து கொண்டேன். பேரறிஞர் வ.வே.சு.ஐயரையும், மற்றவர்களையும் மனமார நமஸ்கரித்தேன். அவர்களும் என்னை உற்று நோக்கி நமஸ்கரித்து ”வந்தே மாதரம்” என்ற சொல்லி வாழ்த்தினார்கள். பாரதியார் சுறுசுறுப்பாகக் கூட்டத்திற்கும் சமையல் கட்டிற்கும் நடந்த வண்ணமாக இருந்தார்.

“நாழிகையாகிறது, நடக்கட்டும்!” என கணீரென்று ஒலித்தது பேரறிஞர் வ.வே.சு.ஐயரின் குரல். ’இதோ வந்துவிட்டேன்!’ என்று எதிரொலித்தது பாரதியாரின் வெண்கல மணிக்குரல். உடனேயே பாரதியார் பிரசன்னமாகிவிட்டார். குங்குமத் திலகமும் நெற்றியுமாக.
கூட்டத்தில் லட்சுமி, ஸரஸ்வதி, கிருஷ்ணன் ஆகிய மூவருடைய படங்கள் மாட்டியிருந்தன. மூன்று படங்களையும் பூக்களால் அலங்கரித்தார் பாரதியார். கிருஷ்ணன் படத்திற்கு அடியில் பிச்சுவா என்ற வளைவான கத்தி ஒன்று இருந்தது. அந்த கத்திக்கும் குங்குமப்பொட்டு இட்டார். சற்று நேரம் தேவி பராசக்தியை தியானித்து பாடினார்.

பிறகு என்னிடம் வந்து கிழக்கு முகமாக உட்கார சொன்னார். நான் உட்கார்ந்ததும் அந்த வீர விழியால் ஒரு பார்வை பார்த்துவிட்டு, குருநாதர் தம் திருக்கரத்தால் என் நெற்றியிலும், புயத்திலும், மார்பிலும் திருநீரூற்று காப்பு இட்டார். பிறகு என்னை மண்டியிட்டு உட்கார சொன்னார். கையில் பூணூலை எடுத்துக் கொண்டு சூரிய வழிபாடு செய்து, வெகுநேரம் ஜபம் செய்து முடித்ததும், எனக்கு பூணூல் அணிவித்தார்.

நான் உடனே சாஷ்டாங்கமாக குருவின் பாதத்தை தொட்டு நமஸ்கரித்தேன். குருநாதர் என்னை ஆசீர்வதித்து இன்று முதல் நீ பிராமணன் என்று உரத்த குரலில் கோஷித்தார். இனியாராகிலும் என்ன ஜாதி என்று கேட்டால் ”நான் பிராமணன்” என்று தைரியமாகச் சொல் என்று கட்டளையிட்டார்.

”அப்படி ஆய்விடலாமா” என்று யாராவது கேட்க துணிந்தால். ”அது எனக்கு தெரியாது என் குரு பாரதியாரை கேளுங்கள், அவர் உங்கள் ஐயத்தை தெளிவிப்பார் என்று பதில் சொல்லி விடு” என்பதும் எனக்கு பாரதியார் இட்ட கட்டளை. இந்த உபநயன செய்தி ஊரெல்லாம் பரவி விட்டது. புதுவை வாசிகளில் யாராவது ஒருவர் தம்மை கேள்வி கேட்க மாட்டார்களா? என்று பாரதியார் ஆவலாக எதிர்பார்த்து இருந்தார். அதை ஒரு சந்தர்ப்பமாக கொண்டு பழைய வேத முனிவர்களின் பரந்த மனப்பான்மையையும், உண்மையான இந்து மதத்தின் உயர்ந்த இலட்சியங்களையும் வெளியிட்டு விவரிக்க துடித்துக்கொண்டிருந்தார். ஆனால் பாரதியாரிடம் யாரும் அதுபற்றி கேள்வி கேட்கவோ விவாதிக்கவோ துணிந்ததாக தெரியவில்லை.”

அதேநாள் கனகலிங்கம் மட்டுமல்ல அவருடன் 11 பேர் பிராமணராக மாற்றப்பட்டார்கள் என்பதும் செய்தி. ஏன் இது போன்ற புரட்சிகரமான காரியங்கள் தமிழகத்தில் – இந்திய தேசத்தில் தொடரவில்லை என்பது தெரியவில்லை. தொடர்ந்து இருந்தால் தமிழகத்தின் நிலை மட்டுமல்ல – இந்திய தேசத்தின் இன்றைய முகவரியே மாறியிருக்கும். இன்றும் கூட சாதியை ஒழிக்கவே முடியாது என்றும், சாதியை ஒழிக்க மதமாற்றம் தான் தீர்வு என்றும் பேசும் பெருங்கூட்டம் உண்டு. வேற்று மதத்திலிருந்து இந்து மதத்திற்கு வந்தால் எந்த ஜாதிக்குள் வைப்பீர்கள்? என்றும் கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு பாரதியார் அன்றே வழிகாட்டியிருக்கிறார்.

நூறு வருடங்களுக்கு முன்பு கனகலிங்கமும் 11 பேரும் வேறு ஒரு சாதி அடையாளத்தை விட்டு பிராமணராக முடியும் எனில், இன்றைய காலத்தில் ஏன் சாதியை ஒழிக்க முடியாது?. தேவேந்திரகுல வேளாளர்களின் இன்றைய பட்டியல் மாற்ற போராட்டத்திற்கு பாரதியார் அன்றே வழிகாட்டி இருக்கிறார். இந்த மண்ணின் மூத்தகுடி மக்கள் தவறுதலாக பட்டியலுக்குள் அடைக்கப்பட்டுவிட்டார்கள். எனவே பட்டியலிருந்து வெளியேற்றுங்கள் என்று கேட்டால் பொருளாதார – சமூக நிலைகளை கணக்கிலே கொண்டு பட்டியலிலே நீடிக்க பரிந்துரையும், சலுகைகளை அள்ளித்தருவோம் என தங்களுடைய பரோபகார சிந்தனையையும் வெளிபடுத்துகிறார்கள். இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மொழிப் பாசம், இனப் பாசம், சாதி ஒழிப்பு நேசம் பற்றி பேசுவோர் தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றத்தை ஆதரித்து பேச முன் வராதாது ஏன்?

மேடைக்கு மேடை முழங்குவது அல்ல கொள்கை.!

கொள்கைக்காகவும் கொள்கையாகவும் வாழ்வதே வாழ்க்கை..!!

”சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்று வெறும் கவி மட்டும் பாடியவரல்ல பாரதியார், அதன்படி அவர் வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்.
பாரதியார் அவர்கள் (பூ)நூல் போட்டு சாதி மாற்றி காட்டினார்!

நாங்கள் ரூல் (Rule – சட்டம்) போட்டு பட்டியலை மாற்றச் சொல்கிறோம்.
பாரதி காட்டிய பாதையே..!

தேவேந்திரகுல வேளாளர்களின் பட்டியல் மாற்றத்திற்கான பாதை..!!
ஆட்சியாளர்களே..!

பாரதியின் படங்களை திறந்து வைத்தால் மட்டும் போதாது..!
அவரது பாடல்கள் மூலம் சொல்லிதந்த பாடங்களை பின்பற்றுங்கள்..!
வாழ்க பாரதி.!

வெல்க பாரதியின் கொள்கை..!

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
11.12.2020