புதிய தமிழகம் கட்சியின் 24 ஆம் ஆண்டு துவக்க விழா.! புதிய தமிழகம் மலர சபதம் ஏற்போம்..!!

அறிக்கைகள்
s2 288 Views
  • Dr-K-Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr-K-Krishnasamy
Published: 15 Dec 2020

Loading

புதிய தமிழகம் கட்சியின் 24 ஆம் ஆண்டு துவக்க விழா.!

புதிய தமிழகம் மலர சபதம் ஏற்போம்..!!

1993 ஆம் ஆண்டு தேவேந்திரகுல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பாக உருவாகி,
1995-ல் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பாக உருவெடுத்து, 1997 ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி புதிய தமிழகம் கட்சி மலர்ந்தது. சமூக அமைப்பாக 27 ஆண்டுகளும், அரசியல் கட்சியாக 23 ஆண்டுகளும் பயணம் செய்திருக்கிறோம். இன்று 24 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.
கடந்த 23 ஆண்டுகளில் புதிய தமிழகம் கட்சியின் இலக்கை நோக்கிப் பயணித்த பயணத்தில் மிகவும் சிக்கலான காலகட்டங்களில் உடன் பயணம் செய்த அனைத்து மட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளுக்கும், தேவேந்திரகுல சொந்தங்களுக்கும், தாய்மார்களுக்கும், இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும், நண்பர்களுக்கும், ஆதரவளித்த அனைவருக்கும், உற்ற துணையாக விளங்கிய குடும்பத்தாருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு அரசியல் கட்சியை துவக்குவது எளிதான காரியம். ஆனால் அந்த கட்சியைத் தொடர்ந்து வலுவாக நடத்திச் செல்வது என்பது மிகப்பெரும் சவாலானது. ஒரு கட்சி நிலைத்து நிற்பதற்கும், நீடிப்பதற்கும் மூன்று முக்கியமான அம்சங்கள் காரணமாக அமையும்.

1. கட்சியின் லட்சியம் 2. கட்டமைப்பு 3. வலுவான வழிநடத்தும் தலைமை.

1. சமத்துவத்தையும், சமூக உரிமையையும் பெற்றுத் தருவது; மண்ணுரிமை, மனித உரிமை, வாழ்வுரிமை, அடையாள உரிமையை மீட்டுத் தருவது; எளிய மக்களையும், பூர்வீக குடி மக்களையும் ஆட்சி – அதிகாரத்தில் அமர்த்துவது என்ற வலுவான லட்சியங்கள் மீது புதிய தமிழகம் கட்சி கட்டி எழுப்பப்பட்டுள்ளது.

2. நமது கட்சி இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலைகளில் எதிர்பார்த்த கட்டமைப்பு அமையாவிட்டாலும் கூட, அடிமட்ட அளவில் வலுவான கட்டமைப்பை இன்றும் கொண்டுள்ளது.

3. கடந்த 27 ஆண்டுகளில் தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைமையும் சந்திக்காத அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும் நாம் சந்தித்திருந்தாலும்; எண்ணற்ற துரோக செயல்பாடுகளுக்கு ஆட்பட்டிருந்தாலும்; எந்த மக்களின் சமூக-அரசியல்-பொருளாதார விடுதலைக்காகக் களம் இறங்கினோமோ, அந்த பாதையிலிருந்து இம்மியளவும் பிசகாமல், எடுத்துக் கொண்ட இலட்சியத்தை நோக்கி மக்களையும், கட்சியையும் வழிநடத்திச் செல்கிறோம். கட்சியால் மக்கள் பலம் பெறுகிறார்கள்; மக்களால் கட்சி பலம் பெறுகிறது. தலைமைக்கும் கட்சிக்கும் மக்களுக்கும் இடையே ஒரு ஆத்மார்த்தமான பிணைப்பு இருக்கின்ற காரணத்தினால் தான் எவ்விதமான சமூக, அரசியல் சுனாமிகளிலும் சாய்ந்து விடாமல் புதிய தமிழகம் கட்சி இன்றும் நிலைத்து நிற்கிறது. புதிய தமிழகம் கட்சி சமூக தளத்தில் அளவிடற்கரிய சாதனைகளைச் செய்திருந்தாலும், அரசியல் தளத்தில் நாம் அடைய வேண்டிய உச்சத்தைத் தொடவில்லை என்ற ஆதங்கம் அனைவரிடத்திலும் உண்டு. அரசியல் தளத்தில் எளிதாக உச்சத்தைத் தொட்டுவிடலாம். ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகள் பிற்போக்குத் தனத்தில் ஊறிப்போன இந்தியாவின் இறுகிப்போன சமூகத் தளத்தில் வெற்றி காண்பது கடினமானது என்பதை உணர்ந்தே அரசியல் வெற்றிகளை, இலாபங்களை தியாகம் செய்து சமூகத் தளத்தில் மிக அதிக கவனம் செலுத்தி வெற்றிக்கனிகளைப் பெற்றிருக்கிறோம்.

சமூகதளத்தில் நமக்கிருந்த பெரும் தடைகளை எல்லாம் தாண்டி பொதுத்தளத்தில் கலப்பதற்கு உண்டான சூழலை அமைத்துள்ளோம். அடிமட்டம் முதல் அனைத்து மட்டங்களிலும் இருக்கக்கூடிய கட்சியின் உறுப்பினர்-வாக்காள பெருமக்கள், கிராம அடிமட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, மாநகராட்சி, சட்டமன்ற, மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் ஒருங்கிணைப்பும், அர்ப்பணிப்பும்; எந்த சூழ்நிலையிலும் எவர்களிடத்திலும் விலைபோகாத தன்மைகளும்; எவ்வளவு பலம் பொருந்திய எதிரியையும் சமாளிக்கும் மன நிலையும்; ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்ற தீராப் பசியும் இருக்குமேயானால் அரசியல் வெற்றிக்கனியைப் பறிப்பது எளிதானதே. ஆனால் இன்று வரையிலும் நாம் அதற்கு பெரிய முனைப்புக் காட்டவில்லை என்பதுதான் எதார்த்தம். இயக்கம் – கட்சி ஆரம்பித்து கால் நூற்றாண்டு காலம் முடியப் போகிறது. சமூகத் தளத்தில் நம்முடைய கடமையை எவ்வித குறைபாடுகளுக்கும் இடமில்லாமல் செவ்வனே நிறைவேற்றி வந்துள்ளோம். இனி அரசியல் தளத்தில் நமக்கிருக்கும் கடைமைகளை நிறைவேற்றும் தருணம் வந்து விட்டது.

புதிய தமிழகம் கட்சியின் 24 ஆண்டும், 2021 புத்தாண்டும் புதிய தமிழகத்தின் ஆண்டுகள். தமிழகத்தில் 53 ஆண்டுகால ஆட்சிக்கு மாற்றம் உருவாக்குவதற்கான சரியான தருணம் இதுவே.
’எண்ணங்கள் போல் வாழ்க்கை’ என்பது பொன்மொழி. பிறந்த மண்ணையும், மகுடத்தையும் மீட்டெடுக்க இன்று அனைவரும் புத்தாடை உடுத்தி, புதிய தமிழகம் கட்சி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, 2021- சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டி, சிவப்பு-பச்சைக்கொடி சென்னை கோட்டையில் பறந்திட, ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திட சபதம் ஏற்போம். நம்முடைய ஒட்டுமொத்த சக்தியையும் அடுத்து வரும் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுகப்படுத்தி நம்முடைய வாக்கு சக்திகளை உறுதிப்படுத்துவதற்கும், ஒருங்கிணைப்பதற்கும், அதை புதிய தமிழகம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களாக வென்றெடுப்பதற்கும்; புதிய தமிழகம் கட்சி அமைச்சர்களாக ஆட்சிக் கட்டிலிலே அமர வைப்பதற்கும் அரும் பயணத்தை தொடங்கிடுவோம்.

புதிய தமிழகம் கட்சியின் 24வது ஆண்டு –
2021 புத்தாண்டு புதிய தமிழகம் கட்சியின் வழி –

புதிய தமிழகம் மலரட்டும்!
தமிழக மக்களின் வாழ்வு ஒளிரட்டும!!

அன்புடன்,

டாக்டர் க.கிருஷ்ணசாமி, MD
புதிய தமிழகம் கட்சி
15.12.2020