கரோனா அச்சம் தவிர்ப்போம்! மே 1ல் மக்கள் இயக்கம் தொடக்கம்!
இளைஞர்களே! நாம் இந்நேரத்தில் வெறுமனே இருந்துவிடக்கூடாது, களத்தில் இறங்கி பணியாற்றவேண்டும்.
356 Views
![]()
கரோனா அச்சம் தவிர்ப்போம்! அலட்சியத்தை போக்குவோம்!!
கரோனாவை வென்றிட களமாடுவோம்!
மே – 1ல் மக்கள் இயக்கம் தொடக்கம்!
2019-ல் துவங்கி; 2020 மார்ச் மாதத்தில் வேகமெடுத்து; ஜூன், ஜூலை மாதங்களில் உச்சம் தொட்டு, 2021 ஜனவரியில் குறைந்து வந்த கரோனா – இரண்டாவது அலை மீண்டும் துவங்கும் என்ற மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கையை உதாசீனப்படுத்தியதாலும், 5 மாநில தேர்தலை அறிவித்து பெரிய அளவில் மக்கள் கூட்டங்கள் கூட்டப்பட்டதாலும் கடந்த ஒரு மாதமாக கரோனாவின் தாக்குதல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. முதியவர்கள் அன்றி இளைஞர்களும், குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை; ஆக்ஸிஜன் பற்றாக்குறை; மரணம் எய்தியவர்களை நல்லடக்கம் கூட செய்ய முடியாத அளவிற்கு மயானத் தட்டுப்பாடுகள் என நாடெங்கும் மக்களின் அழுகைக் குரலாக உள்ளது. இச்சூழலிலும், களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டிய அரசுகள் முடங்கிக் கிடக்கின்றன. வரும் முன் காப்பதே மிக மிக அவசியமாகும். எனவே, கரோனா பரவலைத் தடுத்திட பொதுமக்கள் மத்தியில் நாம் விழிப்புணர்வை உண்டாக்குவது ஒன்றுதான் சிறந்த வழியாகும்.
இளைஞர்களே! நாம் இந்நேரத்தில் வெறுமனே இருந்துவிடக்கூடாது, களத்தில் இறங்கி பணியாற்றவேண்டும்.
1. கரோனா அச்சம் தவிர்ப்போம்! அலட்சியத்தை போக்குவோம்!! கரோனாவை வென்றிட களமாடுவோம்!
2. வெளியில் சென்றாலும்; வீட்டில் இருந்தாலும் முகக்கவசம் அணிவோம்!
3. சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்போம்!
4. திருமணம் உள்ளிட்ட விழாக்களை முடிந்தவரை தவிர்ப்போம்!
5. கிருமி நாசினிகளை பயன்படுத்தி எப்போதும் கைகளை சுத்தமாக வைத்திருப்போம்!
6. தைரியமாக தடுப்பூசிகளை போட்டுக் கொள்வோம்!
7. நோய் வாய்ப்பட்டோரை உடனடியாக மருத்துவ ஆலோசனைக்கு அழைத்துச் செல்வோம்!
8. சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி, மூச்சுத் திணறல் உள்ளிட்ட எந்த சிறிய அறிகுறியையும் உதாசீனப்படுத்தாமல் உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனைகளை பெறவேண்டும்!
9. மருத்துவர்கள் ஆலோசனையின்படி மட்டுமே, மருந்துகளை உட்கொள்ள வேண்டும்!
மே – 1 முதல் ஒவ்வொரு நகரம்/ஒன்றியத்திலிருந்து புதிய தமிழகம் கட்சியின் மாணவரணி, இளைஞரணியைச் சார்ந்த குறைந்தது நூறு பேர் சீருடை அணிந்து, வீடுவீடாக சென்று கரோனா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
27.04.2021






