பழனி முருகன் கோவில் உட்பட இந்துக் கோவில்களுக்குள் பிற நம்பிக்கையாளர்கள் செல்லத் தடை.!
பழனி முருகன் கோவில் உட்பட இந்துக் கோவில்களுக்குள்
பிற நம்பிக்கையாளர்கள் செல்லத் தடை.!
நீதிபதி அவர்களின் நோக்கம் உன்னதமானதாகக் கூட இருக்கலாம். ஆனால், அது நடைமுறையில் சாத்தியமானதாகவோ அல்லது சமூக ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தக் கூடியதாகவோ நிச்சயம் இல்லை.
நீதிபதி அவர்கள் தனது தீர்ப்பை மறு பரிசீலனை செய்வார் என்று நம்புகிறோம்!
பழனி முருகன் கோவில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து கோவில்களிலும் பிற மதத்தினர் – மாற்று நம்பிக்கையாளர்கள், கோவில் நிர்வாகத்தின் அனுமதியின்றி கோவில் கொடி மரங்களைத் தாண்டிக் கோவில்களுக்குள் செல்லத் தடை விதிக்கும் வகையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி அவர்கள் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார்.
தமிழகத்தில் இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டு 35,000க்கு மேற்பட்ட கோவில்களும், அறநிலையத்துறைக்கு உட்படாமல் பல்லாயிரக்கணக்கான கோவில்களும் உண்டு. இந்து பெரிய கோவில்களுக்குள்ளே கர்ப்ப கிரகத்திற்குள் பூஜை செய்யும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரைத் தவிர, மற்ற பிரிவினருக்கு அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து, பல வருடங்களாக “கர்ப்ப கிரக நுழைவுப் போராட்டங்கள்” நடைபெற்று வருகின்றன. பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலை 150 குடும்பங்கள் மட்டுமே சொந்தம் கொண்டாடிக் கொண்டு, அங்குள்ள நடராஜரை எளிதாகத் தரிசிக்கும் கனக சபை மேடை மீது ஏறுவதற்குப் பெரும்பான்மை தமிழ் சமுதாயத்தினருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது; அதற்கான போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.
நந்தனார் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்ததற்காகவே மேற்கு வாசல் இன்றும் மூடப்பட்டிருப்பதாகவும், அவர் நெருப்பிட்டு கொளுத்தப்பட்டதாகவும் இன்றும் அது குறித்த பல்வேறு கருத்துக்கள் கூறப்படுவதுண்டு. சிவகங்கை மாவட்டம் கண்ட தேவியில் சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலில் தேர் வடம் பிடித்து அனைத்து சமுதாயத்தினரும் இழுக்க மறுத்ததன் காரணமாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இன்றைய தேதி வரையிலும் கடந்த 10 வருடங்களாக அங்குத் தேரோட்டம் நடைபெறாமல் இருக்கிறது. தேவகோட்டை அருகே கண்ணன்குடி சிறுவாச்சி கிராமக் கோவிலுக்குள் தேவேந்திர குல வேளாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களை உள்ளே அழைத்துச் சென்றதற்காக அதை முன் நின்று நடத்திய மாடக்கோட்டை சுப்பு கொலை செய்யப்பட்டார். உசிலம்பட்டி அருகே சூலைப்புரம் – உலைப்பட்டியில் பட்டியலின மக்கள் கோவிலில் நுழைவதைத் தடுத்து நிறுத்த கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டது.
தமிழகத்தின் எண்ணற்ற கிராம கோவில்களில் அனைத்து இந்துக்களும் ஒன்றாக நின்று தெய்வத்தை வழிபடுவதற்கு வழி இல்லாமல் விழுப்புரம் வடபாதி திரௌபதி அம்மன் போன்ற பல கோவில்கள் மூடப்பட்டு இருக்கின்றன. இந்து கோவில்களுக்குள்ளேயே சாதி பிரிவினைகள் பார்த்து வழிபாடுகள் மறுக்கப்படுகின்றன. இதனால் எண்ணற்ற பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் ஆண்டுதோறும் நடந்தேறுகின்றன. இந்துக்களின் பல கோவில்கள் வனங்களுக்கு உள்ளும், மலைகளின் மீதும் உண்டு. அண்மைக் காலமாக பாபநாசம் மற்றும் வத்திராயிருப்பு பகுதிகளில் வனங்களில் உள்ள கோவில்களுக்குள் செல்ல முடியாமல் வனத்துறைக்கும் மக்களுக்கும் மோதல்கள் உருவாகின. இதுபோல இந்துக் கோவில்களில் – வழிபாடுகளில் இந்துக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கே இன்று வரை தீர்வு இல்லை.
உலகெங்கும் உள்ள கிறித்தவ ஆலயங்களில், மசூதிகளில், புத்த விகாரங்களில் யாரும் உள்ளே செல்லலாம்; தொழலாம். எங்காவது ஒரு சில இடங்களில் மட்டுமே கட்டுப்பாடுகள் இருக்குமே தவிர, ஆனால் 99 சதவீத வழிபாட்டுத் தலங்களில் எவ்வித தடைகளும் இருப்பதில்லை. ஜப்பான், தாய்லாந்து, கிழக்கு ஆசிய நாடுகளில் புத்த ஆலயங்களில் யார் வேண்டுமென்றாலும் உள்ளே சென்று அந்த ஆராதனைகளில் கலந்து கொள்ளலாம். ரோம் செல்லக்கூடியவர்கள் அனைவரும் போப்பை சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தாய்லாந்தில் புத்தரை அனைவரும் வழிபடுகிறார்கள்; அவர்கள் அனைவரும் புத்தராக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை; யாரும் சான்றிதழ் பெற்று தான் உள்ளே செல்ல வேண்டும் என்ற விதிகளும் இல்லை.
இந்து மதம் என்பது பிற நம்பிக்கையிலிருந்து வேறுபட்டது. இயேசு, புத்தர், நபிகள் போன்று இந்து மதத்தில் ஒற்றை தெய்வமும் இல்லை; ஒற்றை அடையாளமும் இல்லை; வழிபாட்டு முறையும் இல்லை. இந்து மதத்தில் சிவன் உண்டு, பார்வதி உண்டு, முருகன் உண்டு, காளியம்மன் உண்டு, மாரியம்மன் உண்டு; மற்றும் பல இஷ்ட தெய்வங்கள் உண்டு. கோவில் நுழைவுப் போராட்டங்கள் பல பகுதிகளில் சமூக விடுதலைப் போராட்டங்களாகவே நடைபெற்று இருக்கின்றன. அது வேறு மதத்திற்கான தடை அல்ல, இந்துக்களிலேயே உயர்வு தாழ்வு கற்பித்து, உருவாக்கப்பட்ட பேதங்கள் அவைகள். சட்டங்கள், போராட்டங்கள் மூலமாக சமூகங்களுக்கிடையே ஏற்பட்ட விழிப்புணர்வுகள் கோயில் நுழைவுகளை இப்பொழுது எளிதாக்கியிருக்கிறது. எனினும் எல்லா கிராமக் கோவில்கள் மற்றும் தனியார் மற்றும் இந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட அனைத்து கோவில்களிலும் தீண்டாமையும், பாகுபாடும், ஒதுக்கல்களும், ஒடுக்கல்களும் முற்றாகக் குறைந்தபாடில்லை. இந்த வேறுபாடுகளே பிற மதங்கள் தழைக்கக் காரணங்கள் ஆகின்றன.
நாம் அறிந்த வரையிலும் பழனி முருகன் கோவில் உட்பட தமிழகத்தில் உள்ள எந்தக் கோவில்களுக்குள்ளும் பிற மதத்தைச் சார்ந்தவர்கள் அடாவடியாக உள்ளே நுழைந்தார்கள் என்றோ, அவர்களால் பிரச்சனைகள் உருவாகிறது என்றோ பெரிய புகார்கள் எதுவும் எழவில்லை. அண்மையில் சென்னி மலையில் உருவான பிரச்சனை என்பது வேறு. எனவே, வேறு எந்த மதத்தைச் சார்ந்தவர்களும் இந்து மதத்திற்கு கோவில்களுக்குள் நுழைந்தார்கள்; அதனால் பிரச்சனைகள் உருவாகின என்ற புகார்கள் பெரிய அளவிற்கு இல்லாத போது, பிற மதத்தினருக்கு தடை விதிக்க வேண்டும் என்ற உத்தரவு தற்போது பிறப்பிக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது? என்று தெரியவில்லை. பழனி முருகன் கோவில் உட்பட இந்து ஆலயங்களில் உள்ள வணிக வளாகங்களைப் பிற நம்பிக்கையாளர்கள் – பிற மதத்தினர் பலரும் ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள் என்ற பிரச்சனை தொடர்ந்து நிலவி வருகிறது. அதை வேறு விதமாகத் தான் அணுக வேண்டுமே தவிர, வழிபாட்டுடன் சேர்த்துக் குழப்பக் கூடாது. அதேபோல ’இந்துக் கோவில்களுக்குள் பிற மதத்தினர் பிரவேசிக்க அனுமதி இல்லை’ என்று சட்ட விதிகள் இருந்தாலும் கூட, சமூக நல்லிணக்கம், ஒற்றுமை கருதி தற்போது அதை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமுமில்லை என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது.
எனவே, முதலில் சரி செய்ய வேண்டியது கிராம கோவில்கள், தனியார் கோவில்கள், அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களில் எவ்வித சாதிய பாகுபாடுகளுமின்றி எல்லோரும் சரிசமமாக தெய்வங்களை வணங்குவதற்கும், கர்ப்பக் கிரகத்துள் செல்வதற்குமுண்டான உரிமையும், பாதுகாப்பையும் நீதிமன்றங்கள் உறுதி செய்ய வேண்டும். இப்பொழுது இந்துக்களிடையே தேவைப்படுவது அந்த உரிமையும், சமத்துவமும், இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வும், மனித நேயமும் தான்!!
வெளிநாடுகளிலிருந்து வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் இந்தியாவின் சிற்பக் கலைகளையும், கோவிலின் அழகையும் பார்ப்பது அவர்களின் சுற்றுலாப் பட்டியலில் இருக்கக்கூடிய ஓர் மிக முக்கியமான நிகழ்வாகும். மதுரை வரக்கூடிய எந்த வெளிநாட்டுக்காரர்களும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் கண்டிப்பாக விஜயம் செய்வார்கள். கிறித்தவர்களாக இருந்தாலும் அவர்கள் நாட்டிலேயே அவர்களில் பெரும்பாலானோர் கிறித்தவ தேவாலயங்களுக்குக் கூட செல்லாதவர்கள் என்பது வேறு விஷயம். மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தின் அழகையும், அதன் தொழில்நுட்பத்தையும் அறிந்து கொள்வதற்காகக் கூட அவர்கள் உள்ளே செல்வார்கள். எனவே கோவில்களைச் சுற்றுலாத்தலங்கள் என்று கருத முடியாது என்று நீதிமன்றம் சொல்லியிருப்பது ஏற்புடையது அல்ல.
தஞ்சை பெரிய கோவில், நெல்லை நெல்லையப்பர் கோவில், சுசீந்திரம் கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கோவில், கோவை பேரூர் உள்ளிட்ட பல கோவில்களுக்குப் பக்தியுடனும் செல்வார்கள்; அதே சமயம் அந்தப் பிரம்மாண்டங்களைப் பார்ப்பதற்கும் நமது மக்களும் செல்கிறார்கள்; பிற மதங்களைச் சார்ந்தவர்களும் செல்கிறார்கள். தமிழகத்தில் உள்ள எந்த இஸ்லாமிய மசூதிகளிலும் எந்தக் கிறிஸ்தவர்களும் செல்லக்கூடாது என்று உத்தரவோ, தடைகளோ கிடையாது. குறிப்பாக தேர்தல் காலகட்டங்களில் எல்லா வேட்பாளர்களும் எல்லா கோவில்களுக்கும், மசூதிகளுக்குள்ளும், தேவ ஆலயங்களுக்குள்ளும் சென்று வழிபட்டு விட்டுத் தான் வருகிறார்கள். ஓர் ஜனநாயக நாட்டில் அதிகமான இறுக்கங்களோடு வாழ முடியாது. தமிழகத்தில் உள்ள கோவில்கள் ஓரளவிற்கு சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கக்கூடிய நிறுவனங்களாக இருக்கின்றன. இந்து கோவில்களின் பெருமையை, அதன் மூலமாக தமிழ் மக்களுடைய பண்டைய வரலாற்றை அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களும் புரிந்து கொள்வதற்கு உண்டான ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகவே அதைக் கருத வேண்டும்.
அதைவிடுத்து, பிற நம்பிக்கையாளர்களைத் தடுத்து நிறுத்த ஒவ்வொரு இந்துக் கோவில் கொடி மரங்களுக்கு அருகாமையில் யாரை நிறுத்துவது? உள்ளே செல்ல அனுமதிக்கு எப்படி விண்ணப்பிப்பது? அனுமதி கொடுப்பது யார்? இவையெல்லாம் எவ்விதத்தில் சாத்தியம்? எனத் தெரியவில்லை.
கோவிலுக்கு ஒரு அதிகாரி இருப்பார். அவரால் வரக்கூடிய பல்லாயிரக்கணக்கான பக்தர்களை அடையாளம் கண்டு, இவர் இந்து மதத்தைச் சார்ந்தவர், சாராதவர் எனப் பிரித்துப் பார்த்து, அவர்களை வேற்று மதத்தினர் என்று கண்டறிந்து, அவர்களிடத்தில் விளக்கம் கேட்டு, அவர்களிடத்தில் அனுமதி கடிதம் எப்படிப் பெற முடியும்? இவையெல்லாம் நடைமுறையில் சாத்தியமாகுமா? அவசியமா? நீதிபதி அவர்கள், ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை மனதில் வைத்து இந்த உத்தரவு பிறப்பித்ததாகத் தெரிகிறது. அவருடைய நோக்கம் உன்னதமானதாகக் கூட இருக்கலாம். ஆனால், அது நடைமுறையில் சாத்தியமானதாகவோ அல்லது சமூக ஒருமைப்பாட்டை நிலை நிறுத்தக் கூடியதாகவோ நிச்சயம் இல்லை.
இது போன்ற நடைமுறைகள் சமூகங்களுக்கிடையே மீண்டும் பிளவுகளை உண்டாக்கக்கூடிய சூழல்களைத் தான் உருவாக்குமே தவிர; சாதி, மதங்கள், இனங்கள், மொழிகளைத் தாண்டி, சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தக்கூடிய செயலாக இருக்காது. கோவிலுக்குள் அனைவரும் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். இதில் இந்து, இந்து அல்லாதவர் என்ற பிளவுபடுத்தி சமுதாயத்தை மீண்டும் துண்டாட வேண்டிய அவசியமோ, கோவில்களில் நிலவும் வணிக வளாகப் பிரச்சனைகளையும், வழிபாட்டையும் ஒன்றாக்கி பார்க்க வேண்டிய அவசியமோ இல்லை என்றே கருதுகிறேன்.
பிற மதத்தினர் கோவில் கொடி மரத்தைத் தாண்டி உள்ளே வர அனுமதி பெற வேண்டும் என்பதைக் காட்டிலும், கேரளாவில் உள்ள குருவாயூரப்பர் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில்களைப் போல அனைத்து இந்துக் கோவில்களுக்குள்ளும் ஆடை கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவது ஓரளவிற்கு கோவில்களின் தூய்மையையும், உன்னதத்தையும் மேம்படுத்தக் கூடியதாகவும்; அங்கே வரக்கூடியவர்கள் ஆன்மீக நோக்கத்தோடு வர வேண்டும் என்பதையும் உறுதி செய்யும். எனவே நீதிபதி அவர்கள் தன்னுடைய தீர்ப்பை மறு பரிசீலனை செய்வார் என்று நம்புகிறோம்.!
நன்றி! வணக்கம்.!
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex.MLA.
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
01.02.2024