பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கும் பட்சத்தில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் முன் தோன்ற வேண்டும்
மத்திய, மாநில அரசுகள் பழ. நெடுமாறன் அவர்களிடம் உளவுத்துறையைக் கொண்டு ரகசிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.!
553 Views
![]()
பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிரஞ்சு புரட்சி, இங்கிலாந்து தேசத்தில் உருவான தொழில் புரட்சி, ஜெர்மனியில் தோன்றிய தத்துவார்த்த வளர்ச்சி, உலகில் உருவான புதுப்புது சித்தாந்தங்கள், போராட்டங்கள் புதிய புதிய தேசங்களைப் படைத்தன. அடங்கியும் ஒடுங்கியும் கிடந்த மக்கள் அணிதிரண்டும் ஆர்ப்பரித்தும் பழமைவாத அரசுகளைத் தூக்கி எறிந்து புதிய அரசுகளை உருவாக்கினார்கள். ரஷ்யா, சீனா, வியட்நாம், வடகொரியா, கம்போடியா, அல்பேனியா, கியூபா உள்ளிட்ட நாடுகளில் சோசலிச புரட்சி ஏற்பட்டது. மொழி, இன, மத அடிப்படையிலும் புதிய தேசங்கள் உருவாகின. ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளில் இன்றும் விடுதலைக்கான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இலங்கையில் மொழி – இன அடிப்படையில் தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்து அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக போராட்டம் நடந்து வருகிறது. ஈழத் தமிழர்களின் சுய ஆட்சிக்கான போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பங்களிப்பையும், அந்த அமைப்பிற்கு தலைமையேற்ற பிரபாகரன் அவர்களின் ஆளுமையையும் எவராலும் மறந்துவிட முடியாது. விடுதலைப் புலிகளின் துவக்கக் காலத்திலும், அதைத் தொடர்ந்தும் அவர்களுக்கு கிடைத்து வந்த ஆதரவும், அங்கீகாரமும் மிக முக்கியமான தருணத்தில் கிடைக்காமல் போய்விட்டது.
ஈழ விடுதலைப் போராட்டத்திற்கான அமைப்பை ஒட்டுமொத்த பயங்கரவாத அமைப்பாகச் சித்தரித்து தனிமைப்படுத்தப்பட்டு, பல நாடுகளின் தகவல் பரிமாற்றம் மற்றும் ஆயுத உதவியுடன் 2008 மற்றும் 2009களில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தம் என்ற பெயரில் இலங்கை அரசு கடும் தாக்குதலைத் தொடுத்தது; அனைத்து போர் விதிமுறைகளும் மீறப்பட்டன. கொத்துக் குண்டுகளுக்கு இரையாகி பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்களும், போராளிகளும் உயிர் நீத்தனர்.
2009 மே 17,18 ஆகிய தேதிகளில் முள்ளி வாய்க்காலில் மட்டுமே 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர். இறுதிக் கட்ட போரில் கடைசி நிமிடம் வரை களத்தை விட்டு அகலாமல் நின்ற விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவரது மகன் மற்றும் அவரது குடும்பத்தார் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அதற்கு சான்றாக டி.என்.ஏ உட்பட பல ஆதாரங்களை எடுத்துச் சொன்னார்கள். எனினும் பிரபாகரனுடைய மரணம் குறித்து விடுதலைப் புலிகள் அமைப்பு எவ்வித அதிகாரப்பூர்வமாக அறிவிப்பையும் வெளியிடவில்லை. முள்ளி வாய்க்கால் சம்பவத்தின் போது போராளிகள் சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டதால் அமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் எந்த நிகழ்வையும் கண்டிருக்கவும், ராணுவத்தின் இறுக்கத்தையும் மீறித் தப்பித்தவர்கள் கூட கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்பதை அறிந்திருக்கவும் வாய்ப்பில்லாமல் இருந்திருக்கும்.
கடந்த 13 வருடங்களாக பிரபாகரன் குறித்து புலிகள் அமைப்பில் உயர்ந்த பதவியிலிருந்தவர்கள் கூட எவ்வித கருத்துக்களும் தெரிவிக்கவில்லை. பொதுவாக மரணம் எய்தி இருக்கிற வீரரின் அளப்பரிய தியாகத்தைப் போற்றக்கூடிய வகையில் அவர்களுடைய மரணத்தை வெளிப்படையாக அறிவிப்பதும், அஞ்சலி செலுத்துவதும் வழக்கம். என்ன காரணத்தினாலோ பிரபாகரனின் நிலை குறித்து நாடு கடந்து வாழும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களோ, இன்னும் ஈழத்தில் வாழக்கூடியவர்களோ எந்த நிலைப்பாட்டையும் கடந்த 13 வருடங்களாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த பழ. நெடுமாறன் அவர்கள் இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென தஞ்சாவூரில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பிரபாகரன் அவர்கள் உடல் நலத்துடன் இருக்கிறார்; அவர் விரைவில் வெளிப்படுவார் என அறிவித்திருக்கிறார். 13 ஆண்டுகளாக அவருடைய நிலை குறித்து எந்த தகவல்களும் வெளிவராத போது சர்வதேச அளவிலும், தேச அளவிலும் உகந்த ஒரு அரசியல் சூழல் உருவாகியுள்ளது. பிரபாகரன் அவர்கள் விரைவிலே வெளி வருவார்; மீண்டும் விரைவில் தமிழ் ஈழத்திற்கு தலைமை தாங்குவார் என்ற கருத்தை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து இருக்கிறார்.
பிரபாகரன் அவர்கள் அனைவர் மனதிலும் வாழக் கூடியவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அவர் உயிரோடு தான் இருக்கிறார் என்ற தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் தமிழ் மக்களுக்கு அதைவிட மகிழ்ச்சியான செய்தி வேறு எதுவும் இருக்க இயலாது. அதே சமயத்தில் ஒரு பரபரப்பை உருவாக்குவதற்காகவோ அல்லது வேறு எதுவும் அரசியல் உள்நோக்கத்திற்காகவோ பழ. நெடுமாறன் அவர்கள் தெரிவித்து இருப்பாராயின் அதைவிட ஏமாற்றம் அளிக்கக் கூடியதும் எதுவும் இருக்க இயலாது.
முள்ளிவாய்க்கால் சம்பவத்திற்குப் பிறகு, விடுதலைப் புலிகள் சார்பாக ஆயுதப் போராட்டம் மௌனித்து விட்டதாக அறிவித்தார்கள். அன்று ஆயுத பாணிகளாக இருந்தவர்கள் இன்றைய காலகட்டத்தில் ஜனநாயக ரீதியான போராட்டத்தில் பங்கு பெற முடியும். எனவே நன்கு உகந்த இச்சூழலில் மூன்றாம் நபர், நான்காம் நபர்களை வைத்து அறிக்கை கொடுப்பதைக் காட்டிலும் பிரபாகரன் அவர்களே நேரடியாகத் தோன்றி அல்லது அவரது சார்பாக அவருடைய குடும்பத்தினர் கூட வெளிப்படையாக அறிவிப்பதே சாலச் சிறந்தது ஆகும்; வீண் குழப்பங்களையும் தவிர்க்கவும், பிரபாகரன் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அது உதவும்.
பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கிறார் என்ற செய்தி இலங்கை, தமிழகத்தைத் தாண்டி உலகெங்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியான குதூகலமான செய்தியாகவே சென்றிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு நிகழவில்லை. நெடுமாறன் அவர்களின் அறிக்கையை இன்னும் பெரும்பாலான மக்கள் நம்பத் தயாராக இல்லாததும், அதில் உண்மை இல்லை என்று கருதக்கூடியதுமே அதற்குக் காரணமாகும். பிரபாகரன் அவர்கள் ஒரு வரலாற்றுப் புருஷர். அவர் ஒரு இனத்துக்கான விடுதலைக்காக ஏறக்குறைய 30 ஆண்டுகாலம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இலங்கை அரசு அவர் மரணித்ததாக அறிவித்தது. இந்தியாவில் வழக்குகள் நடைபெற்ற போது இலங்கை அரசின் அறிக்கையை இந்திய நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டன.
இப்படிப்பட்ட சூழலில் பிரபாகரன் அவர்களைப் பற்றிய உண்மை நிலையைக் கண்டறிய நெடுமாறன் அவர்களிடம் மத்திய, மாநில அரசுகள் உளவுத்துறையைக் கொண்டு ரகசிய விசாரணையை நடத்தி பிரபாகரன் அவர்களை விரைவில் வெளியே கொண்டு வரும் நடவடிக்கையை மேற்கொண்டால் உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களிடம் தோன்றியுள்ள சந்தேகத்தை நீக்கி உண்மையை நிலைநாட்டிட உதவும்.
பிரபாகரன் அவர்கள் மக்களிடம் தோன்றும் பட்சத்தில் அந்நிகழ்வு 21 ஆம் நூற்றாண்டின் ஓர் உன்னத நிகழ்வாகவே இருக்கும்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் &தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
16.02.2023






