தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் புகார் மனு!

அறிக்கைகள்
s2 38 Views
  • Dr Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr Krishnasamy
Published: 28 Jan 2021

தேவேந்திரகுல வேளாளர்கள் மற்றும் புதிய தமிழகம் கட்சியினர் மீதான தமிழ்நாடு காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் குறித்து:
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் புகார் மனு!
Vs
1. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் (சட்டம் & ஒழுங்கு),
தமிழ்நாடு காவல்துறை தலைமை அலுவலகம்,
மயிலாப்பூர், சென்னை.
2. தென்மண்டல ஐ. ஜி. (சட்டம் & ஒழுங்கு),
தென்மண்டல ஐ. ஜி. அலுவலகம்,
மதுரை.
3. மதுரை மாநகர காவல் ஆணையர்,
மதுரை மாநகர்.
பேரன்புடையீர், வணக்கம்!
பொருள்: தேவேந்திரகுல வேளாளர்கள் மற்றும் புதிய தமிழகம் கட்சியினர் மீதான தமிழ்நாடு காவல்துறையின் மனித உரிமை மீறல்கள் குறித்து.
புதிய தமிழகம் கட்சி இந்தியத் தேர்தல் ஆணையத்தில் 1997-ஆம் ஆண்டு முறையாகப் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி ஆகும். எங்களது கட்சியின் கொடி, மேலே சிவப்பு, கீழே பச்சை நிறம் கொண்ட இரு வண்ணக் கொடி ஆகும். புதிய தமிழகம் கட்சி, தமிழ் மண்ணிலே வாழுகின்ற ஏழை, எளிய, விளிம்புநிலை மக்களின் மண்ணுரிமை, மனித உரிமை, வாழ்வுரிமை, அடையாள உரிமைகளை மீட்பதற்கான கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கொண்டதாகும். 1997-ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலும் நடைபெற்ற அனைத்து நாடாளுமன்றம், சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் புதிய தமிழகம் கட்சி தொடர்ச்சியாகப் பங்கேற்றுள்ளது. நான் 1996 – 2001, 2011 – 2016 ஆகிய காலகட்டங்களில் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளேன்.
1980, 1990-களில் தமிழகமெங்கும் தேவேந்திரகுல வேளாளர்கள், ஆதிதிராவிடர்கள், அருந்ததியர்கள் மீதான வன்கொடுமைத் தாக்குதல்கள் மிகப்பெரிய அளவிற்கு இருந்தன. இதில், தென்மாவட்டங்களில் அடர்த்தியாக வாழும் தேவேந்திரகுல வேளாளர்கள் மீதான தாக்குதல் என்பது மிகமிகக் கொடுமையானது. 1957-ஆம் ஆண்டு செப்டம்பர், 11-ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் அவர்கள் படுகொலை, 1968-ல் கீழவெண்மணியில் 44 பேர் உயிரோடு எரித்துக் கொலை, 1979-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிவகங்கை மாவட்டம் உஞ்சனையில் 5 பேர் படுகொலை, 1982-ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் புளியங்குடி – அய்யாபுரம் கலவரம், 1980-ஆம் ஆண்டு தொடர்ச்சியாக இராமநாதபுரம் மாவட்டத்தில் கலவரம், 1989-ஆம் ஆண்டு தேனி, போடி மீனாட்சிபுரம் கலவரம் ஆகியவற்றில் நூற்றுக்கும் பேற்பட்டோர் உயிரிழப்பு, 1995-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கொடியங்குளம் கிராமம் காவல்துறையால் சூறையாடப்பட்டது, 1999-ஆம் ஆண்டு ஜூலை 23-ஆம் தேதி நெல்லை தாமிரபரணியில் மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் 17 பேர் உயிரிழப்பு என எண்ணற்ற வன்முறைச் சம்பவங்களால் தேவேந்திரகுல வேளாளர்கள் பெரும் உயிரிழப்புக்கும் உடைமை இழப்புக்கும் ஆளானார்கள்.
அதே காலகட்டங்களில் தமிழகத்தில் 25,000-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தேனீர் கடைகளில் தனிக்குவளை முறை கடைபிடிக்கப்பட்டு தீண்டாமை பாராட்டப்பட்டது. பல கிராமங்களில் பொது வெளிகளில் இந்த மண்ணின் பூர்வீகக் குடிமக்கள் செருப்புப் போட்டுக் கூட நடக்க முடியாத அவலநிலை இருந்தது. இதுபோன்ற சமூக விலக்கல்களும், சமூகக் கொடுமைகளும் இருந்த காரணத்தினால், தமிழகத்தின் பல மாவட்டங்களில் குறிப்பாக தென்மாவட்டங்களில் மக்கள் கொத்துக்கொத்தாக இந்து மதத்திலிருந்து வேறு மதங்களுக்கு மாறினர். சட்டம் – ஒழுங்கும், பொது அமைதியும் சீர்குலைந்தன. 1997-ஆம் ஆண்டு புதிய தமிழகம் கட்சி உருவாக்கத்திற்குப் பிறகு பட்டியல் பிரிவிலிருந்த பெரும்பாலான மக்களும் பூர்வீகக் குடி தேவேந்திரகுல வேளாளர்களும் சமூக விழிப்புணர்வு பெற்றனர். புதிய தமிழகம் கட்சியின் பின்னால் அணிதிரண்டு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்களில் அதிகம் கவனம் செலுத்தி, தங்களுக்கு இழைக்கப்படும் சமூகக் கொடுமைகளைப் புதிய தமிழகம் கட்சியின் மூலம் சட்ட ரீதியாக அணுகினர். குரலற்ற மக்களின் குரலாக புதிய தமிழகம் கட்சி உருவான பிறகு, தென்தமிழகத்தில் மிகப்பெரிய அளவிற்கு சமூக நல்லிணக்கமும், பொது அமைதியும் நிலவி வருகிறது.
தேவேந்திரகுல வேளாளர்கள் இந்த மண்ணின் மூத்தக் குடிமக்கள் ஆவர். தொல்காப்பியத்தில் மருதநில மக்களாகப் போற்றப்பட்டவர்கள். அந்நியப் படையெடுப்புகளால் தங்களுடைய மகுடத்தையும் மண்ணுரிமையையும் இழந்தவர்கள். தங்களுடைய சொந்த நிலங்களை இழந்த மக்களுக்கு, தங்களின் கட்டுப்பாட்டிலிருந்த நிலங்களை எல்லாம் திருப்பி அளிப்பதற்குப் பதிலாக, Scheduled Castes என்ற ஒரு பட்டியலை உருவாக்கி அதற்குள் அடைத்துவிட்டார்கள். கடந்த நூறாண்டு காலமாகத் தங்களுடைய அடையாளத்தையும் மண்ணுரிமையையும் இழந்த தேவேந்திரகுல வேளாளர்கள், தங்களுக்கு சுயமரியாதையே முக்கியம் என்றும், தங்களைப் பட்டியல் பிரிவிலே இருந்து வெளியேற்றுங்கள் என்றும் போராடி வருகிறார்கள்.
எனவே தான், 6 பெயர்களில் அழைக்கப்படக்கூடிய மக்களை தேவேந்திரகுல வேளாளர்கள் என்று ஒற்றைப் பெயரில் அழைத்திடவும், அவர்களைப் பட்டியல் பட்டியலிலிருந்து வெளியேற்றிடவும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, கடந்த 4 ஆண்டுகளாக மாநாடுகள், பேரணிகள், உண்ணாவிரதங்கள், தேர்தல் புறக்கணிப்புகள் என தொடர் போராட்டங்களை புதிய தமிழகம் கட்சி முன்னெடுத்ததன் விளைவாக, கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி மதுரையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தேவேந்திரகுல வேளாளர்களின் கோரிக்கை கனிவுடன் பரிசீலிக்கப்படும் என்று அறிவித்தார். தமிழ்நாடு அரசு இதுகுறித்து முடிவெடுக்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா அவர்களுடைய தலைமையில் ஆய்வுக்குழுவை அமைத்தது.
2019 – நாடாளுமன்றத் தேர்தல் முடிவுற்ற பின்னர், பெயர் மாற்றத்திற்கு அரசாணையும், பட்டியல் மாற்றத்திற்கு மத்திய அரசுக்குப் பரிந்துரையும் செய்யப்படும் என்று மாநில முதல்வர் கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்படாததால், நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலை தேவேந்திரகுல வேளாளர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தார்கள்.
கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, 2020-ஆம் ஆண்டு அக்டோபர், 6-ஆம் தேதி தமிழ்நாடெங்கும் தேவேந்திரகுல வேளாளர்கள் வாழும் 10,000 கிராமங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்களிடத்தில் முன் அனுமதி கோரப்பட்டிருந்தது.
பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு செய்யக்கூடிய வகையில் பொது இடத்தையோ அல்லது பிரதான சாலையின் ஓரங்களையோ உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரவில்லை. மாறாக, தேவேந்திரகுல வேளாளர்களின் கிராமக் குடியிருப்புகளுக்கு அருகாமையிலேயே அனுமதி கேட்கப்பட்டிருந்தது. இந்த உண்ணாவிரதப் போராட்டம் என்பது, கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாமல் காலம் தாழ்த்தி வரும், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கக்கூடிய போராட்டம் தானே தவிர, இது எந்தவிதத்திலும் சமூகப் பிணக்குகளை உருவாக்கும் நோக்கம் கொண்டதல்ல என்பதையும் புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் காவல்துறையினருக்கு தெளிவுபடுத்தி இருந்தனர்.
தேவேந்திரகுல வேளாளர்கள் பெரும் வசதி படைத்தவர்கள் அல்ல; அவர்கள் பெரும்பாலும் சிறு, குறு விவசாயிகளாகவும், விவசாயத் தொழிலாளர்களாகவுமே இருக்கக்கிறார்கள். தங்கள் மீதான தாழ்ந்த ஜாதி என்ற முத்திரை போக வேண்டும் என்ற நோக்கத்தில், உண்ணாவிரதத்தை மேற்கொள்ள அந்தந்த கிராம மக்களின் சொந்தச் செலவில் சாமியானா மற்றும் தட்டிப் பந்தல்களை அமைத்தனர்.
அக்டோபர் 5-ஆம் தேதி மாலை 4 மணி வரையிலும் உண்ணாவிரதத்திற்கு எந்த இடையூறும் இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்த காவல்துறை, மாலை 6 மணிக்குப் பிறகு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தேவேந்திரகுல மக்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் கிராமங்களுக்கு காவல்துறையினர் சென்று, ஆயிரக்கணக்கான கிராமங்களில் போடப்பட்டிருந்த பந்தல்களை எல்லாம் பிய்த்து எறிந்தனர்; உடுமலைப்பேட்டையில் உண்ணாவிரதமிருக்கப் போடப்பட்ட 100அடி X 40அடி அளவுள்ள பந்தலை காவல்துறையை வைத்தே பிரித்தனர். புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளும் பொது மக்களும் உண்ணாவிரதமிருந்தால் கைது செய்யப்படுவார்கள் என்று அச்சுறுத்தப்பட்டனர். பட்டியலிலிருந்து வெளியேறும் தங்களுடைய சமூக விடுதலைப் போராட்டத்தை, கிராம மக்கள் எவ்விதப் பந்தலும் இல்லாமல் கடுமையான வெயிலில், வீதியின் ஓரங்களிலும், வரப்பு, வயல் வெளிகளிலும் நடத்திடும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டனர். காவல்துறையின் உச்சகட்ட அடக்குமுறையையும் ஒடுக்குமுறையையும் மீறி பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் உண்ணாவிரதம் நடைபெற்றது.
இதற்கிடையில், டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி, தேவேந்திரகுல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதுடன், அவர்கள் தொடர்ந்து பட்டியல் பிரிவிலே நீடிப்பார்கள் என தமிழக முதலமைச்சர் அறிவித்தது, தேவேந்திரகுல வேளாளர்கள் மத்தியில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் இருந்தது. தேவேந்திரகுல வேளாளர்களின் கோரிக்கை வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல, 6 பட்டப்பெயர்களை தேவேந்திரகுல வேளாளர் என்று பொதுப் பெயரிட்டு, அவர்களை SC பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்பது தான்.
எனவே தான், பட்டியல் வெளியேற்றமே தீர்வு என்ற ஒற்றைக் கோரிக்கையோடு, 2021-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி, மதுரை காளவாசலிலிருந்து பேரணியும், பழங்கானத்தத்தில் ஆர்ப்பாட்டமும் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு, அதற்கான அனுமதி கோரி, டிசம்பர் மாதம் 16-ஆம் தேதியே புதிய தமிழகம் கட்சியின் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.கண்ணுச்சாமி அவர்கள் மூலம் மதுரை மாவட்ட ஆட்சியரிடத்திலும், மாநகரக் காவல் ஆணையரிடத்திலும் மனு அளிக்கப்பட்டது. இது கரோனா பெருந்தொற்றுக் காலம் என்றாலும் கூட, டிசம்பர் மாதத்திலேயே அரசியல் கட்சிகள் கூட்டங்கள் நடத்துவதற்கான அனுமதி அளித்து அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னை மாநகராட்சியாக இருந்தால் மாநகர ஆணையரிடத்திலும், புறநகராக மாவட்டங்களாக இருந்தால் மாவட்ட ஆட்சியரிடத்திலும் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டுமென்று கரோனா தளர்வில் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அந்த விதிகளைப் பின்பற்றியே புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியரிடத்திலும், மாநகரக் காவல் ஆணையரிடத்திலும் மனு அளித்திருந்தோம்.
ஆயிரக்கணக்கான கிராமங்களிலிருந்து பேரணியிலும் ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொள்வதற்கு தேவேந்திரகுல மக்கள் ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். அதற்காக அந்தந்த கிராமங்களில் வாடகைக்கு வாகனங்களை அமர்த்தும் பணி தீவிரமாக நடைபெற்றது. இதற்கிடையில், பேரணிக்கும், ஆர்ப்பாட்டத்திற்கும் எழுத்துப் பூர்வமான அனுமதியைப் பெற, புதிய தமிழகம் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் மதுரை காவல்துறையினரைச் சந்திக்க முயற்சி எடுத்துக் கொண்டே இருந்தார்கள். எனினும், ஜனவரி மாதம் 5-ஆம் தேதி மாலை 5 மணி வரையிலும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான இடங்களை காவல்துறையினர் உறுதிபடுத்தவில்லை.
ஜனநாயக ரீதியாக எங்களுடைய போராட்டத்திற்கு முறைப்படி நாங்கள் கடிதம் கொடுத்த 5, 6 தினங்களிலேயே காவல்துறை அனுமதி அளித்திருக்கவேண்டும். காவல்துறை தொடர்ந்து இழுத்தடித்தது, தமிழ்நாடெங்கும் புதிய தமிழகம் கட்சியின் தொண்டர்கள் மற்றும் தேவேந்திரகுல வேளாளர்கள் மத்தியில் மிகப்பெரிய பதட்டத்தை உண்டாக்கியது. எங்களது பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு கடைசி நேரத்தில் காவல்துறை ஏதேனும் தடை ஏற்படுத்தும் பட்சத்தில், தமிழ்நாடெங்கும் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து, பொது அமைதிக்கு எந்தவிதமான பங்கமும் வந்துவிடக்கூடாது என்பதற்காக, நான் கோவையிலிருந்து மதுரைக்கு விரைந்து சென்று, மாநகர காவல் ஆணையரை அன்று இரவு 8.30 மணிக்குச் சந்தித்தேன். அதன் பிறகும் அவர்கள் எங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு எந்தவிதமான எழுத்துப் பூர்வமான அனுமதியும் அளிக்கவில்லை.
இதற்கிடையில், அன்று மாலை 7.30 மணியிலிருந்து, காவல்துறையினர் ஒவ்வொரு வாடகை வாகன நிறுத்தத்திற்கு சென்றும், புதிய தமிழகம் பொறுப்பாளர்களை அழைத்தும், ‘வாடகை வாகனங்களுக்கு அனுமதியில்லை, சொந்த வண்டிகளிலே தான் ஆர்ப்பாட்டத்திற்குச் செல்ல வேண்டுமென்று சொல்கிறார்கள்’ என்ற செய்திகள் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்த வண்ணம் இருந்தன. மதுரை மாநகரக் காவல் ஆணையரிடத்தில் அதைப்பற்றி பேசியபோது, அவருக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது என்று சொல்லிவிட்டார்.
உடனே, தென்மண்டல ஐ.ஜி. அவர்களை சந்திப்பதற்காக இரவு 10.30 மணிக்கு அவருடைய இல்லத்திற்குச் சென்று அவரையும் சந்தித்தேன். அவரிடத்தில், ’நாங்கள் ஒரு மாத காலமாக இந்தப் பேரணி – ஆர்ப்பாட்டத்திற்காக ஆயத்திமாகி வருகிறோம்; ஒரு மாதத்திற்கு முன்பாகவே அனுமதி கேட்டு மனுவும் கொடுத்துவிட்டோம்; 6-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறபோது, 5-ஆம் தேதி மாலை 7.30 மணியிலிருந்து சொந்த வாகனங்களில் தான் வரவேண்டும், வாடகை வாகனங்களில் வரக்கூடாது என்ற உத்தரவை எந்த அடிப்படையில் போடுகிறீர்கள்? இது அனைத்து அரசியல் கட்சிகளுக்குமா? அல்லது புதிய தமிழகம் கட்சிக்கு மட்டும் தானா? இது அனைத்து மக்களுக்குமா? அல்லது தேவேந்திரகுல வேளாளர்களுக்கு மட்டும் தானா?’ என்று வாதாடிய பிறகு, ’இல்லை அதை நான் தளர்த்திக் கொள்ளச் சொல்கிறேன்; ஆனால் எல்லா வாடகை வாகனங்களும் அந்தப்பகுதியிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று பாஸ் வாங்கித் தான் வரவேண்டும்’ என்று சொன்னார். ”ஒவ்வொரு வாடகை வாகனமும், அங்கிருக்கக்கூடிய காவல் நிலையம் சென்று, ஆவணங்களை சரிபார்த்து, பாஸ் வாங்கிகொண்டு, அதற்குப் பிறகு ஆட்களை ஏற்றிக்கொண்டு வருவதென்றால், அதற்குள் ஆர்ப்பாட்ட நேரமும், அந்த நாளுமே முடிந்துவிடும்; இதுநாள்வரையிலும் தமிழ்நாட்டில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் விதிக்காத இந்தத் தடையை ஏன் புதிய தமிழகம் கட்சிக்கு மட்டும் விதிக்கிறீர்கள்?” என்று வினவினோம்.
ஜனவரி 6-ஆம் தேதி, பேரணி – ஆர்ப்பாட்டத்தைப் பகல் 2 மணிக்குத் துவங்கி, மாலை 5 மணிக்கு முடிப்பதற்கு நாங்கள் தயாராகிக் கொண்டிருந்தபொழுது வந்த செய்திகள், ஒரு சட்டப்பூர்வமான ஜனநாயகக் குடியரசு தேசத்தில் தான் நாம் வாழ்கிறோமா? இல்லை ஒரு பாசிச கொடுங்கோண்மை ஆட்சியில் இருக்கிறோமா? என்ற கேள்வி தான் எழுந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், பெரம்பலூர், கரூர், சேலம், திருச்சி, திருப்பூர், கோவை, நாமக்கல், ஈரோடு, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வாகனங்கள் மதுரை வந்தடைவதற்கு முன்பாகக் குறைந்தது 20 இடங்களிலாவது நிறுத்தப்பட்டு, ஆவண சரிபார்ப்பு என்ற பெயரில் ஒவ்வோர் இடத்திலிலும் பல மணிநேர காத்திருப்பிற்குப் பின்னரே வாகனங்களை அனுமதித்துள்ளனர். பல சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் மக்களை வாகனங்களுக்குள்ளேயே அடைத்துவைத்து, ஒவ்வொரு வாகனத்திற்குள்ளும் ஏறி, எத்தனை பேர் செல்கிறார்கள்? அவருடைய பெயர் என்ன? இவருடைய பெயர் என்ன? என்று கேட்டு, செல்போனிலே படமெடுத்திருக்கிறார்கள்.
மதியம் 2 மணிக்கு மதுரை காளவாசல் குரு தியேட்டர் அருகே வந்திருக்க வேண்டிய வாகனங்கள் இரவு 8 மணி வரையிலும் அங்கே வந்து சேரவில்லை; மதுரையினுடைய எல்லைகளிலேயே வாகனங்களைத் தடுப்பது, 10 வாகனங்களை மட்டுமே ஓர் அணியாக சேர்த்துக் கொண்டு அவர்கள் முன் ஒரு காவல் ஆய்வாளார் செல்வது, அந்த வாகனங்களைக் கொண்டுபோய் ஏதேனுமொரு சந்துக்குள் நிறுத்திவிட்டு அந்த அதிகாரி ஓடிவிடுவது, இப்படியே பேரணி – ஆர்ப்பாட்டத்திற்கு வந்த மக்கள் மிகப்பெரிய அளவிற்கு அலைக்கழிக்கப்பட்டிருக்கிறார்கள்.
எண்ணற்ற கிராமங்களிலிருந்து வந்த மக்களை கடும் வெயிலில், நடுரோட்டில் வாகனங்களிலிருந்து கீழே இறக்கிவிட்டு, பல மணி நேரம் காத்திருக்க வைத்து பேரணிக்கும் வரமுடியாமல், ஆர்ப்பாட்டத்திற்கும் வரமுடியாமல், 10 முதல் 15 கிலோமீட்டருக்கு அப்பாலேயே அவர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அன்று ஆர்ப்பாட்டம் முடிந்து திரும்பும் வழியில் மக்கள் உணவோ, தேனீரோ, தண்ணீரோ கூட அருந்த முடியாத அளவில், அனைத்துச் சாலைகளிலும் இருந்த உணவகங்கள், தேனீர் கடைகள் அனைத்தையும் காவல்துறையினர் கட்டாயப்படுத்தி அடைக்கச் செய்து, மக்கள் பசியோடும், பட்டினியோடும் வீடு திரும்பக்கூடிய வகையில் கொடுமையை நிகழ்த்தியுள்ளனர். தமிழகக் காவல்துறையினரின் இந்த மனிதநேயமற்ற செயல் அவர்களின் கெட்ட எண்ணத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியதோடு, பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆதங்கத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
காவல்துறையின் இந்த ஜனநாயக விரோத, சட்ட விரோத செயல்பாடுகள் காரணமாக எங்களால் பேரணியையும் சரியாகத் துவங்க முடியவில்லை, ஆர்ப்பாட்டத்தையும் குறிப்பிட்ட நேரத்தில் நடத்த முடியவில்லை. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஆர்ப்பாட்டத்திற்கு வந்த அனைத்து வாகனங்களும் ஒரே சாலை வழியாக மட்டுமே பழங்கானத்தம் வந்தடைய வேண்டும் என்ற காவல்துறையின் தவறான திட்டமிடலின் காரணமாக, அன்று மதுரை மாநகரத்தில் ஏறக்குறைய 8 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டது.
* புதிய தமிழகம் கட்சி இந்த நாட்டினுடைய விளிம்புநிலை மக்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுப்பதற்காகப் போராடி வருகிறது. ஒவ்வொரு தனிநபருக்கும், இயக்கத்திற்கும், கட்சிக்கும் தங்களுடையக் கோரிக்கைகளை முன்வைத்து போராடுவதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடமுண்டு.
* தமிழகக் காவல்துறையும், அரசு நிர்வாகமும் எந்தவிதமான பாகுபாடுகளும் காட்டாமல், நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதே இந்திய அரசியல் சாசனத்தின் விதிமுறைகளாகும்.
* கரோனா பெருந்தொற்று முழுமுடக்கம் அமலிலிருந்தபொழுதே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மட்டும், அரசுவிழா என்ற பெயரில், மக்களைத் திரட்டி கூட்டங்களை நடத்திக் கொண்டிருந்தார். பல அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்திக் கொண்டு தான் இருந்தன. அ.இ.அ.தி.மு.க.வினுடைய தலைமை அலுவலகத்திலும், வானகரத்திலும் நடைபெற்ற அக்கட்சியின் கூட்டங்கள் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றாமலுமே நடத்தப்பட்டன.
* முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய தேர்தல் பிரச்சாரங்களை கரோனா கட்டுப்பாடு விதிமுறைகளைக் கடைபிடிக்காமல், பல்லாயிரக்கணக்கான மக்களோடு எடப்பாடியில் தொடங்கினார்.
* ஆனால், முறையாக அனுமதி கோரப்பட்ட புதிய தமிழகம் கட்சியின் அக்டோபர் 6, 10,000 கிராம உண்ணாவிரதப் போராட்டத்திற்கும், மதுரையில் நடைபெற்ற ஜனவரி 6, பேரணி – ஆர்ப்பாட்டத்திற்கும் காவல்துறையால் கொடுக்கப்பட்ட இன்னல்களும், தொல்லைகளும், இடையூறுகளும் ஜாதிய வன்மம் கொண்டது, பாரபட்சமானது, மனிதநேயமற்றது, ஜனநாயக விரோதமானது, சட்டவிரோதமானது ஆகும்.
* புதிய தமிழகம் கட்சி மற்றும் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு எதிரான இந்த இரு நடவடிக்கைகளும் காவல்துறையின் அத்துமீறல்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
* புதிய தமிழகம் கட்சி மற்றும் தேவேந்திரகுல வேளாளர்களுக்கு எதிராக தமிழகக் காவல்துறை நடந்துகொண்ட விதத்தை எளிதாகக் கடந்து செல்ல முடியாது. இதில் மிகப்பெரிய உள்நோக்கமும் சதியும் இருப்பதாகவேக் கருதுகிறோம். ஏனெனில் இந்த இரண்டு போராட்டங்களுக்கும் காவல்துறையிடத்தில் அனுமதி கோரியபோது, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களுக்கும் மனு அளித்திருந்தோம்; அவருக்கும் இதுகுறித்து அனைத்தும் தெரியும். எனவே சாதாரண, எளிய மக்களான தேவேந்திரகுல வேளாளர்களுக்கு எதிரான காவல்துறையின் இந்த மனித உரிமை மீறல் குறித்து, இதில் சம்பந்தப்பட்ட தமிழ்நாடு காவல்துறை இயக்குனர், தென்மண்டல ஐஜி, மதுரை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அனைவர் மீதும் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி, சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
26/01/2021.