வீடாக இருந்தாலும், நாடாக இருந்தாலும் வெற்றி பெற ’நல்ல வழிகாட்டி தேவை’ ’நேர்மை’ எனும் இலட்சியத்தை நிலைநாட்ட ’பயமும், பலகீனமும் அகல வேண்டும்’ – டாக்டர் கிருஷ்ணசாமி கோகுலாஷ்டமி வாழ்த்து
363 Views
![]()
வீடாக இருந்தாலும், நாடாக இருந்தாலும் வெற்றி பெற ’நல்ல வழிகாட்டி தேவை’
’நேர்மை’ எனும் இலட்சியத்தை நிலைநாட்ட ’பயமும், பலகீனமும் அகல வேண்டும்’
– எனும் உயரிய கோட்பாடுகளை தனது அவதாரம் மூலம் உணர்த்திய ’கிருஷ்ணர்’
’கோகுலாஷ்டமி’ எனும் ’கிருஷ்ண ஜெயந்தி’யை கொண்டாடும் உலகெங்கும் வாழும் இந்தியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ’இந்து மதம்’ எனும் இந்திய வழிபாட்டு முறையில் எண்ணற்ற தெய்வ வழிபாடுகள் உண்டு. அதில் கிராம அளவிலான சிறிய தெய்வ வழிபாடுகளும், கிருஷ்ண அவதாரங்கள் போன்ற பெரிய அவதார வழிபாடுகளும் அடங்கும். இந்து மதத்தின் சிறப்பம்சமே பலதெய்வ வழிபாடு முறையாகும். அதில் பெரிய இதிகாசங்களான மகாபாரதம், இராமாயணம் போன்றவை பெரிய பெரிய வழிபாட்டுக் கோட்பாடுகளை உள்ளடக்கியவை.
படைக்க பிரம்மா, காக்க விஷ்ணு, அழிக்க சிவன் என்று மூன்று பெரிய தெய்வ வழிபாடுகள் தனித்தனியே கூறப்பட்டு வந்தாலும் கூட அம்மூன்று தெய்வங்களும் ஒரே கருத்தைச் சொல்ல வந்தவர்களே. உலகத்தைக் காக்க 10 அவதாரங்களை எடுத்ததாகவும்; அதில் ஒன்று ’கிருஷ்ண அவதாரம்’ என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். இந்த அவதாரம் இந்துக்களில் ஒவ்வொரு விழாக்கள் அல்லது நிகழ்வுகளிலும் ஒரு உள்ளார்ந்த கருத்தை மையமாக வைத்தே அமைந்திருக்கும். ஆனால், அந்த மையக் கருத்துக்களை வெளிக்கொணரப்படாமலேயே வெறும் கதைகளாக மட்டுமே கடந்து போய் விட்டன.
பொதுவாக தெய்வங்களை எல்லாவற்றிற்கும் மேலாகக் காட்டுவது என்பது ஒன்று, கிருஷ்ணரை மட்டும் தான் குழந்தையாக, தோழராக, ஆசானாக, வழிகாட்டியாக, சகோதரனாக, கணவனாக பல வடிவங்களிலும் காட்டப்பட்டு இருப்பார். தெய்வங்களை-வழிபாடுகளை மனிதக் குலத்திலிருந்து பிரித்துப் பார்ப்பது என்பது ஒன்று; மனித வாழ்க்கையோடும், உயிரினங்களின் வாழ்க்கையோடும், நம்மைச் சுற்றி இருக்கக் கூடிய அண்ட வழி கோடான கோடி நட்சத்திரங்களோடும், அதன் இயக்கங்களோடும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடிய விஞ்ஞானத்தை உள்ளடக்கியது என்பது மற்றொன்று.
’எதுவும் முற்றாக அழிந்து போய் விடுவதில்லை, அழிந்தாலும் அது இயக்கமாக நிலைத்து நிற்கும்’ (matter can neither be created nor destroyed) என்ற நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீன் போன்ற அறிவியலாளர்களின் விதிகளுக்கு இணங்க பிறப்பும், இறப்பும் சதா நடந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு செயல். எனவே பிறப்பைக் கண்டு மகிழ்ச்சியோ, இறப்பைக் கண்டு அச்சமோ, துக்கமோ பட வேண்டிய அவசியமில்லை என்பது இயற்கை விதிகளோடு ஒத்த இந்து வழிபாடு – கோட்பாடு ஆகும்.
எனவே, ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்நாளில் ஒரு குறிக்கோளோடு வாழ வேண்டும்; அந்த குறிக்கோளுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்; தனக்கோ, தன்னை சார்ந்த ஒரு சமுதாயத்திற்கோ, உலகிற்கோ ஒரு அநீதி நடக்கின்ற போது அதை எதிர்த்து நீதியை நிலை நாட்டப் போராட வேண்டும். எனவே பகட்டுகள், பொய்யுரைகள், அதிகாரங்கள், ஆணவங்கள், அட்டூழியங்கள், சுரண்டல்கள் போன்றவற்றை எதிர்த்துப் போராட வேண்டும். அநீதியை ஒழிக்கப் போராடும் பொழுது ஒவ்வொருவர் உள்ளத்திலும் குடி கொண்டிருக்கக்கூடிய பயமும் போக வேண்டும்; பலவீனத்தையும் அறவே நீக்க வேண்டும். தீமையை அகற்றி ’நன்மையை’ நிலைநாட்ட நாம் ஒவ்வொருவரும் முழுமையாக நம்மை அர்ப்பணம் செய்து கொள்ளவேண்டும் என்பதுதான் கிருஷ்ண ஜெயந்தியின் உள்ளார்ந்த கருத்தாகும்.
லட்சியத்திற்கும் விசுவாசத்திற்கும்; தீமைக்கும், நன்மைக்கும் இடையே நடைபெறும் போரே ‘உலக நியதி’ ஆகும். மனிதக் குலத்தில் உயர்ந்தோர்-தாழ்ந்தோர்; ஏழை-பணக்காரர்; படித்தோர்- படிக்காதோர் போன்ற வேறுபாடுகள் மனித குலத்தால் கற்பித்து கொண்டவைகளே. நேர்மை என்பது சரியானது; நேர்மை மாறுவது என்பது தவறானது. எனவே, தவறானதை அறவே நீக்கி சரியானதை நிலைநாட்டுவதே ஒவ்வொருவரின் லட்சியமாகவும், குறிக்கோளாகவும் இருக்க வேண்டும். அதற்காக எதையும் எதிர்த்துச் செயல்படுவதே வாழ்க்கையின் லட்சியமாக இருக்க வேண்டும்.
’போர்க்களத்தில் ஒப்பாரி ஒருபோதும் கூடாது’ என்று சொல்வார்களே அதற்கிணங்க ’தனிநபருக்கோ, குடும்பத்திற்கோ, நாட்டிற்கோ, சமுதாயத்திற்கோ எந்தவகையில் எவ்வகை துன்பம் நேர்ந்தாலும் அல்லது ஆபத்து சூழ்ந்தாலும் ’நேர்மை’ என்ற ஒற்றைக் குறிக்கோளோடும், சிந்தனையோடும் நம்முடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணிப்பதே நமது வாழ்க்கை லட்சியமாகட்டும்’ என ’கிருஷ்ண ஜெயந்தி’ எனும் இந்நன்னாளில் ஒவ்வொரு இந்திய – இந்து மக்கள் அனைவரும் சபதமேற்போம்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,
நிறுவனர்& தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
30.08.2021






