தூத்துக்குடி- குறிப்பன் குளத்தில் வெடி விபத்து! உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 25 லட்சம் வழங்க வேண்டும்!
357 Views
![]()
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள குறிப்பன் குளத்தில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி இரவு தனியார் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கண்ணன், விஜய் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இருவரின் குடும்பத்திற்கும் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேசமயம் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் தமிழக அரசு தலா மூன்று லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளதாகச் செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது.
தொடர்ந்து தமிழக அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுவதால் பட்டாசு தொழிற்சாலைகள், கல்குவாரிகளில் வெடி விபத்துக்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன. அன்றாடம் காய்ச்சிகளாக இருக்கின்ற ஏழை, எளிய மக்களுக்கு பணிகளின் போது மரணம் ஏற்படும் போதெல்லாம் சில லட்சங்களை அறிவித்து தங்கள் கடமையை முடித்துக் கொள்ள அரசு முயல்கிறது.
வெடி விபத்து மரணங்களுக்கு ரூபாய் இரண்டு மூன்று லட்சம் இழப்பீடு என்பது எவ்விதத்திலும் போதுமானது அல்ல; அரசின் இந்த நிவாரணம் அக்குடும்பங்களுக்கு உரியப் பலன் அளிக்காது.
எனவே, நாசரேத் குறிப்பன் குளம் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 25 லட்சம் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்க வேண்டும் எனவும், காயமுற்றோருக்கு உயர்தர நவீன சிகிச்சை அளிக்கவும் கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டுமின்றி, இதேபோன்று எதிர்காலத்தில் அனைத்து ஆலை விபத்துகளுக்கும் வழங்க உரியக் கொள்கை முடிவு எடுக்கவும் வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD,Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
02.09.2024





