அசோக் நகர் பள்ளியில் ‘ஆன்மீகம்’ என்ற பெயரில் நடந்தது அநாகரிகத்தின் உச்சம்.!

அசோக் நகர் பள்ளியில்
‘ஆன்மீகம்’ என்ற பெயரில் நடந்தது
அநாகரிகத்தின் உச்சம்.!
கல்விக் கூடங்களில் சாதி, மத, மூட நம்பிக்கைகளை ஒழித்துக்கட்ட நீதியரசர் சந்துரு அவர்களின் பரிந்துரைகளைச் செயல்படுத்த அரசாணை 40-ஐ உடனடியாக அமல்படுத்துங்கள்.!
சென்னை மாநகர், அசோக் நகர் மேல்நிலைப் பள்ளியில் ’ஆன்மீக சொற்பொழிவு’ என்ற பெயரில் ஒரு நபர் பேசிய பேச்சு ’சொற்பொழிவு’ என்று சொல்வதற்கோ, ’ஆன்மீக நெறி’ என்று சொல்வதற்கோ அணு அளவும் தகுதியற்றதாகும்; அது அநாகரிகத்தின் உச்சமாகும். இது போன்ற நபர்களை பள்ளிகளுக்கோ, கல்லூரிகளுக்கோ அழைத்துப் பேச அனுமதிப்பது ஆன்மீகத்துக்கும் அறநெறிக்கும் அவமதிப்பை உண்டாக்கும் செயலாகும்.
மேல்நிலைப் பள்ளியே ஆயினும் அதிகபட்சம் 18 வயதை கூட தாண்டாத பிஞ்சு உள்ளங்கள் தான் அங்கு பெரும்பாலும் பயில்வர். அவர்களிடத்தில் உரையாற்றச் செல்லக்கூடியவர்கள் நல்ல பழக்க வழக்கங்களை, ஒழுக்கங்களை கற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக அநாகரிகத்தையும், இல்லாதது பொல்லாதவற்றையும், அறிவுக்கு சிறிதும் ஒவ்வாத கருத்துக்களையும் பேசுவது; அதைப் பேச அனுமதிப்பது மிகப் பெரிய பிழையாகும்.
அசோக் நகர் பள்ளியில் பேசிய அந்த நபருடைய உடல் மொழியே அநாகரிகமானது; வார்த்தைகள் அனைத்தும் பிஞ்சு உள்ளங்களிலே நஞ்சை பாய்ச்சுவதற்குச் சமமானவை. பார்வையற்றவராக இருந்தாலும் தனது அறிவில் சிறிதும் கூட ஊனமில்லை என்று சொல்லக்கூடிய அளவில் ஒரு ஆசிரியர் தைரியமாக அவ்விடத்தில் கேள்வி கேட்டு இருக்கிறார்; அவர் பாராட்டுக்குரியவரே!
’ஆன்மீகம்’ என்ற பெயரில் குழந்தைகள் மனதில் வேறுபாடுகளையும் மூடநம்பிக்கைகளையும் விதைத்த அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையிலே தள்ள வேண்டும். இந்த ஒரு சம்பவம் வெளியே வந்த காரணத்தினால் இதற்கு எதிரான கண்டன குரல்கள் கடுமையாக எழுகின்றன. ஆனால், இதுபோன்று தினம் தினம் எத்தனை சம்பவங்கள் வெளி உலகிற்கு வராமல் நடந்து கொண்டிருக்கின்றது என்று சொல்ல முடியவில்லை.
பள்ளிகளில் மட்டுமல்ல; கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் கூட இதுபோன்று பல பிதட்டல் பேர்வழிகளை அழைத்துப் பாராட்டுவதும், அவர்களுடைய உரைகளை மாணவர்களை கேட்க வைப்பதும் அண்மை காலமாக அதிகரித்து வருகிறது. பல கல்வி நிறுவனங்கள் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் திரைப்பட நடிகர் – நடிகைகளைக் கூட அழைத்து மாணவர்களிடத்திலே அறிமுகப்படுத்தி அதன் மூலம் கலாச்சார சீரழிவை ஏற்படுத்துகிறார்கள்.
பெரிய அளவில் இதுபோன்ற ஏதாவது சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தால் மட்டும் அந்த நேரத்தில் அதைச் சமாளிப்பதற்காக ஏதாவது நடவடிக்கை எடுப்பதும், அதன் பின்பு அதை மறந்து விட்டு வேறொன்றுக்குச் செல்வதும் தான் அண்மை கால அரசின் வாடிக்கையாக இருக்கிறது.
நாங்குநேரி அரசுப் பள்ளி மாணவன் ஒருவன் சக மாணவர்களால் கொலை வெறித் தாக்குதலுக்கு ஆளான சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி உட்பட அனைத்து கல்வி நிலையங்களிலும் சாதி, மத, இன, நிற வேறுபாடுகளைக் களைய உரிய ஆலோசனைகளைப் பெற நீதியரசர் சந்துரு அவர்களுடைய தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு, அவரது பரிந்துரைகளையும் இரண்டு மாதத்திற்கு முன்பாகவே தமிழக அரசு ஏற்றுக் கொண்டு விட்டது.
அவர் பரிந்துரைத்த பத்தாவது கருத்தில் Conducting Ara Neri Classes – அறநெறி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்குள் மூன்று மிக முக்கியமான ஆலோசனைகளையும் சொல்லி இருக்கிறார்.
நீதியரசர் சந்துரு அவர்களுடைய அறிக்கையை முழுமையாக இந்த அரசு கடைப்பிடித்து இருந்தாலே அசோக் நகர் சம்பவம் நடந்திருக்காது. ஆனால், இந்த அரசு எதையும் முழுமையாக முழு மனதுடன் நடைமுறைப்படுத்துவதற்கு உண்டான முயற்சி எடுக்காததன் காரணமாக பள்ளி பெயர்களில் இருக்கக்கூடிய சாதிய பெயர்களை மாற்றுவதற்கு நீதியரசர் சந்துரு பரிந்துரைத்த முக்கிய ஆலோசனையை எதிர்த்து சில பகுதிகளில் வந்த எதிர்ப்பைத் தொடர்ந்து ”அதை அமல்படுத்த மாட்டோம்” என்று தன்னுடைய குதிங்கால் பின் தலையில் படுகின்ற அளவிற்கு வேகமாக இந்த அரசு ஓடி, பின்வாங்கியது.
’சமூக நீதி’ என்பதும், முற்போக்கு என்பதும், பகுத்தறிவு என்பதும் வெற்று வார்த்தைகளாக இருக்கக் கூடாது. இந்த சமூகத்தில் எதையும் ஆட்சி – அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்கள் பின்பற்றினால் தான்; மற்றவர்களும் அதைப் பின்பற்றுவார்கள் என்ற உணர்வோடு அனைத்தையும் செயல்படுத்த வேண்டும். எல்லாவற்றிலும் உள் நோக்கத்தை வைத்துக் கொண்டு அல்லது சில பகுதிகளிலிருந்து வரக்கூடிய சாதிய, மத வெறியாளர்களின் எதிர்ப்புகளுக்கும், வாக்குகளை இழந்துவிடுவோம் என்று பயந்தும் ஒரு அரசு செயல்படுமேயானால் எல்லாம் வெற்று அறிக்கைகளாகவே போய்விடும்.
ஏதோ ஒரு தலைமை ஆசிரியரை இடமாற்றி அசோக் நகர் சம்பவத்திற்கு பரிகாரம் தேடிக் கொள்ளலாம் என்று மட்டும் இந்த அரசு எண்ணிவிடக்கூடாது. முதலில் நீதியரசர் சந்துரு அவர்களுடைய பரிந்துரைகளைச் செயல்படுத்த அரசாணை 40-ஐ அமல்படுத்த வேண்டும். அவர் சொல்லியிருக்கக்கூடிய அனைத்து பரிந்துரைகளையும் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு உண்டான நடவடிக்கையை உடனடியாக இந்த அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்; அதன் மூலமே அனைத்து பள்ளிகள், கல்லூரிகளில் சாதிய, மத, இன வெறி மற்றும் மூடநம்பிக்கை போதனைகளுக்கு எதிராக அறநெறிகள் போதிக்கப்படும்.
அசோக் நகர் பள்ளி சம்பவத்தை ஒரு முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு இந்த அரசு அறநெறிகளை பள்ளி பாடத்தோடு இணைத்து மாணவர்களுக்குப் போதிக்கவும், பள்ளியோ, கல்லூரியோ, பல்கலைக்கழக மாணவர்களோ அறிவுப்பூர்வமான பண்புகளைப் பெறக்கூடிய வகையில் அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
06.09.2024