போலிப் பெரியாரிஸ்ட்டுகளிடமிருந்து பெரியாரையும் மீட்டெடுப்போம்! தமிழர்களையும் மீட்டெடுப்போம்!!
ஈ.வெ.ரா. பெரியார்; 143-வது பிறந்தநாள்!
அவரின் அரியத் தொண்டின் மூலம் நினைவு கூர்வோம்!!
பெரியார் கொள்கையில் பந்தமில்லை!
பெயரில் மட்டும் சொந்தம் கொண்டாடுகிறார்கள்!!
363 Views
![]()
தமிழ் சமூகத்தில் நிலவிய பழைமைவாதங்கள், மூடநம்பிக்கைகள், சாதிய ஏற்றத்தாழ்வுகள், அதனால் ஏற்பட்ட கொடுமைகளைச் சாடியதுடன் அவற்றை எதிர்த்து 50 ஆண்டுகாலத்திற்கும் மேலாகப் போராடிய ஈ.வெ.ரா. பெரியார் அவர்களின் 143-வது பிறந்தநாளில் அவர் ஆற்றிய அருந்தொண்டின் மூலம் அவரை நினைவு கூர்வோம். அரசியல் இலாபங்களுக்காக அன்றி, நேர்மையான சமூக மாற்றத்திற்கான, அவரது அர்ப்பணிப்பை எவரும் மறக்க இயலாது. அவர் அரசியல் மற்றும் சமூகத் தொண்டு ஆற்றியக் காலத்தில், தமிழகத்தில் மட்டுமின்றி, இந்திய அளவிலும், உலகளவிலும் வேகமாகப் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. ஓரளவு சமூகப் பற்றுக் கொண்ட ஒரு மனிதன் கூட, வெறுமனே இருந்துவிட முடியாது; களமிறங்கியே தீரவேண்டும் என்ற அகச்சூழல்களும் புறச்சூழல்களும் நிலவிய யுகம் அது.
எனவே ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டுமென்றுத் தனது உள்ளத்திலே தீரா எண்ணத்தை வளர்த்துக் கொண்ட பெரியார், இந்தச் சமுதாயத்தின் மாற்றத்திற்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டதில் ஆச்சரியமில்லை. உலகளவில் பிரஞ்சுப் புரட்சி நடைபெற்று பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவை உறுதிப் பெற்றிருந்தன. ஜெர்மனியில் ஏற்பட்டத் தத்துவார்த்த வளர்ச்சி, இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சி, புதிய, புதிய கண்டுபிடிப்புகள், முதல் மற்றும் இரண்டாவது உலகப் போர்கள், அதனால் பல தேசங்களின் அடையாளம் அழிந்து, புதிய அடையாளங்களோடு பல தேசங்கள் உருவாயின. 1917-ல் இரஷ்யாவில் கம்யூனிஸ்ட்டுகள் புரட்சி செய்து ஆட்சியைக் கைப்பற்றினார்கள்; ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்தார்கள். ஐன்ஸ்டீன் E = mc2 என்றப் பொது மற்றும் சிறப்புச் சார்புக் கோட்பாட்டை நிறுவினார்.
மக்கள் நிலபிரபுத்துவம் மற்றும் முதலாளித்துவச் சுரண்டல்களுக்கு எதிராகப் போர்க்குரல் எழுப்பினார்கள். நிற, இன, மத, மொழி ஆதிக்கங்களுக்கு எதிராக, மக்கள் கிளர்ச்சி செய்தார்கள். ஏகாதிபத்தியங்களும், பாசிச சக்திகளும் தங்களுடைய எல்லையை விரிவுபடுத்துவது மட்டுமின்றி, சுரண்டலையும், போர்களையும் வேகப்படுத்தின. ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த பாரதத் தாயின் புத்திரர்களும் தங்களுடைய தேச விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்தார்கள்.
முதலாளித்துவச் சுரண்டல்களுக்கு மாற்றாக எவ்விதச் சுரண்டலுமற்ற சமத்துவ சமுதாயம் படைக்க, மார்க்ஸும், ஏங்கெல்ஸும் தந்த மார்க்சியத் தத்துவம், நாடுகளின் எல்லைகளைக் கடந்து, ’உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்’ என்று அணி சேர்த்து கொண்டிருந்தது. எந்தவொரு தேசத்திலும், ஒரு சமூகம் ஒரு வலுவானப் பொருளாதாரம் மற்றும் அரசியல் கட்டுமானத்தின் மீதே அமைந்திருக்கும். பொருளாதார கட்டமைப்பில் உற்பத்திச் சாதனங்களான நிலங்களும், தொழிற்சாலைகளும் அடங்கும். அந்தப் பொருளாதாரத்தைக் கட்டிக் காப்பதற்காகவே ஓர் அரசு உருவாகும். இந்தப் பொருளாதார மற்றும் அரசியல் பின்னணியிலேயே மூட நம்பிக்கைகள், சாதி, மத, இன, வேறுபாடுகள் தளைத்தோங்கும்.
எனவே ”சமூகக் கட்டமைப்பை நிரந்தரமாக மாற்றியமைக்க வேண்டுமெனில், அதற்கு மிகவும் பக்கபலமாக இருக்கக் கூடிய பொருளாதாரக் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும், அதை ஏற்றுக் கொள்கிற அரசியல் அமைப்பு உருவாக வேண்டும்” என்ற விஞ்ஞான ரீதியான ஒரு தத்துவார்த்தத்தை மார்க்ஸும், ஏங்கல்ஸும் முன்வைத்தார்கள். பொருளாதார அடிப்படை மாற்றங்கள் மூலம் அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பது என்ற அந்தப் பிரதான அம்சங்களை விட்டுவிட்டு, மூடநம்பிக்கைகள் ஒழிப்பு, சாதி ஒழிப்பு, மொழி, இன ரீதியான பிரச்சினைகளுக்குத் தீர்வு என்று மேல் கட்டுமானங்களை மட்டுமே மாற்றியமைப்பதற்காகவும் உலகிலே பல பேர் குரல் கொடுத்ததுண்டு.
இங்கர்சால் போன்ற அறிஞர்கள் கடவுள் மறுப்புப் பிரச்சாரம் செய்தார்கள். இந்தியாவில் உச்சக்கட்டமாக ஆங்கிலேயருக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போன்ற மக்கள் இயக்கங்கள் வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆந்திர மாநிலம் தெலுங்கானாவில் விவசாயிகள் தங்களுடைய நில உரிமைக்காகப் போராடிக் கொண்டிருந்தார்கள்.
மேற்குவங்காளத்தில் நிலச்சுவான்தார்கள் மற்றும் ஜமீன்தார்களுக்கு எதிராக கடுமையான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தமிழகத்திலும் நிலச்சுவான்தார்களின் சுரண்டலும் கொடுமையும் தலைவிரித்தாடிய நேரம் அது. நிலப்பிரபுக்கள் சாதாரண ஏழை, எளிய மக்களைக் கசக்கிப் பிழிந்தார்கள். இந்திய நாட்டு விடுதலைப் போராட்டமும், நிலப்பிரபுக்களின் நுகத்தடியில் சிக்கித் தவித்த கோடான கோடி ஏழை, எளிய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் விடுதலைப் போராட்டமும், சமூக சீர்திருத்தமும் ஒருசேர நடைபெற்றிருந்தால், இன்று இந்தியா உலக நாடுகளுக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாகத் திகழ்ந்திருக்கும். காங்கிரஸ் நாட்டு விடுதலைக்காகப் போராடியது; கம்யூனிஸ்டுகள் விவசாயத் தொழிலாளர்களுடைய விடுதலைக்காகப் போராடினார்கள். உலகில் பொருளாதாரக் கட்டுமானங்களையும், அரசியல் கட்டுமானங்களையும் மாற்றியமைக்க முன்னெடுத்தப் போராட்டங்களால் அமையப்பெற்ற நாடுகளில் சமூகப் பிரச்சினைகள் எளிதாக ஒழிக்கப்பட்டுவிட்டன. ஏனெனில், சாதிய வேறுபாடுகள், மூடநம்பிக்கைகளுக்குத் தளமாக இருப்பதேப் பொருளாதாரக் கட்டுமானமும், அரசியல் அமைப்பும் ஆகும். அது மாற்றியமைக்கப்படாமல் என்னதான் சீர்திருத்தம் செய்தாலும் அந்தச் சீர்திருத்தங்கள் நிலைத்து நிற்பதில்லை. பெரியார் சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு என்ற இலக்குகளை மட்டும் எடுத்துக் கொண்டுப் போராடினார்.
ஆயிரமாயிரம் ஏக்கர் நிலங்களை ஆதீனங்களுக்கும், ஜமீன்களுக்கும் எழுதிக் கொடுத்துவிட்டு, அதில் பணிபுரியக்கூடிய இலட்சோபலட்சம் ஏழை, எளியப் பணியாட்களை சமத்துவமாக நடத்துங்கள், சுதந்திரமாக நடத்துங்கள், அவர்களுக்கு சுயமரியாதை தாருங்கள் என்று எந்த நிலப்பிரபுக்காவது உபதேசம் செய்தால் அது பலனளிக்குமா? உழைப்பவரிடத்தில் தானே நிலம் இருக்க வேண்டும்! ஆதீனங்களுக்கு எதற்கு நிலம்? என்றுக் கேள்வி கேட்கப்படவில்லை. பெரியார் சாதியை ஒழிக்க, சாதி மறுப்புத் திருமணங்களைச் செய்யப் பிரச்சாரம் செய்தார். ஆனால், அவர் வழிவந்தவர்கள் என்று சொல்லிக் கூடியவர்கள் கடந்த 50 ஆண்டு காலங்களில் செய்த சாதனைகள் என்ன? முதலியார், ரெட்டியார், நாயுடு, பிள்ளை, கவுண்டர், வன்னியர், தேவர் என்று சாதிபார்த்து மட்டுமே கட்சிக் கிளைச் செயலாளர் முதல் மாநில உயர் பதவி வரையிலும் வழங்கினார்கள். கிராம ஊராட்சித் தலைவர் முதல் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர்கள் வரையிலும் சாதி பார்த்தே பதவிகள் வழங்கப்பட்டன.
அதன் விளைவாக கிராமங்களில் மட்டுமின்றி, நகரங்களையும் தாண்டி, Gated Community வரையிலும் சாதி பாய்ந்திருக்கிறது. பெரியாரைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு குறைந்தபட்சம் அவர் பேசிய, அவர் வாழ்ந்த, அவரது இலட்சியத்தின் ஒரு பகுதியையாவது நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், அதில் இம்மியளவு கூட செய்யாதவர்கள் இன்று பெரியாரிஸ்ட்டுகள், பெரியார் வாரிசுகள் ஆகிறார்கள். கறுப்பு என்பது வெறுமனே அவருடைய நிற அடையாளமல்ல; வெளியொன்றும் உள்ளத்திலொன்றும் இல்லாமல், உண்மையாக இருக்க வேண்டும், கறைபடிந்த சமூக அழுக்கை நீக்க வேண்டும் என்பதே அதனுடைய பொருளாகும். தடியும், தாடியும் அவருடைய இன்னொரு அடையாளங்களல்ல; இன்னொரு மனிதனின் கைத்தடியாக இருக்காதே, சுயமரியாதையோடு வாழ் என்பதே அதனுடைய பொருளாகும். தாடியை வளர்த்தது அதை வளர்க்கத் தூண்டுவதற்காக அல்ல; “மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்” என்ற வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப, எந்த வேடமும் தரிக்காமல் உண்மையான மனிதனாக இருக்க வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும்.
எதுவுமே யாருக்கு சொந்தமானதில்லை என்றக் கருத்தைக் கொண்டவர் பெரியார். மண், பொன், பொருள், புகழ், அரசியல், மகுடம் ஆகியவற்றை வெறுத்தவர். அவர் எதையெல்லாம் வெறுத்தாரோ, அதையெல்லாம் அவருடைய கொள்கைக்கு நேர்மாறாக வைத்துக்கொண்டு, இப்பொழுது பெரியார் மண் என்று பட்டம் சூட்டுகிறார்கள். பெரியாரைப் பற்றிப் பேசுவது என்பது வேறு; பெரியாரை முழுமையாகப் புரிந்து கொண்டு இலட்சியங்களை நடைமுறைப்பத்துவதென்பது வேறு. அவர் வாரிசு என்ற வார்த்தையைக் கூட எதிர்த்தவர். ஆனால், வழிவழியாக வாரிசுகளை உருவாக்கக் கூடியவர்கள் எப்படி பெரியாரிஸ்டுகள் ஆக முடியும்? சிலை வைப்பது கூட ஒரு மூடநம்பிக்கை என்று சொன்னவர் அவர். அதனாலேயே சிலைகளை உடைத்தார். ஆனால், அவருக்கு இப்பொழுது வள்ளுவரைக் காட்டிலும் உயரச் சிலையாம். அனைத்து ஆஸ்திகளும், அந்தஸ்துகளும், ஆட்சியும், அதிகாரங்களும் அனைவருக்கும் சேர வேண்டுமென்று விரும்பியவர் அவர். ஆனால், எல்லாமும் ஒரு சிலக் குடும்பங்களைச் சுற்றி மட்டுமே இருக்க வேண்டும் என்று எண்ணக் கூடியவர்கள் பெரியாரிஸ்ட்டுகளாம்.
பெரியார் மறைந்தும் அரை நூற்றாண்டு நெருங்குகிறது. சாதிகளை ஒழித்து தமிழராகவும் ஒன்றுபட மறுக்கிறார்கள்; இன, மத, மொழி வேறுபாடுகளைக் களைந்து இந்தியராகவும் ஒன்றுபடவிடாமல் இடை நிற்கிறார்கள். பெரியார் வாழ்க என்று சொல்லிக் கொண்டு, பெரியாரின் இலட்சியங்களைக் குழிதோண்டி புதைக்கிறார்கள். இந்தத் தமிழ் மண்ணையும், தமிழ் அடையாளத்தையும், தமிழ் மக்களையும், அரசு அதிகாரங்களையும் மீட்டெடுப்பது மட்டுமல்ல, பெரியாரையும் போலி பெரியாரிஸ்டுகளிடமிருந்து மீட்டெடுப்பதே உண்மையான பெரியாரிசம் ஆகும். அதுவே உண்மைப் பெரியாரிஸ்ட்டுகளின் குறிக்கோளாகும்.
பெரியார் கொள்கையில் பந்தமில்லை!
பெயரில் மட்டும் சொந்தம் கொண்டாடுகிறார்கள்!!
போலிப் பெரியாரிஸ்ட்டுகளிடமிருந்து
பெரியாரையும் மீட்டெடுப்போம்! தமிழர்களையும் மீட்டெடுப்போம்!!
இப்படிக்கு,
டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD, Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
17/09/2021.






