இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76-வது நினைவு நாள்! புதிய தமிழகத்தின் புகழஞ்சலி!!
642 Views
![]()
இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76-வது நினைவு நாள்!
புதிய தமிழகத்தின் புகழஞ்சலி!!
சாதி சகதியில் சிக்குண்ட மக்களின் சமூக விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட, ‘தாத்தா’ என்றப் பட்டத்தோடு அன்போடு அழைக்கப்படும் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 76-வது நினைவு தினத்தன்று அவர் ஆற்றிய அரும்பெரும் பணிகளை புதிய தமிழகம் கட்சி நினைவு கூர்கிறது.
காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றியபோது மொழிபெயர்ப்பாளராகப் இருந்து, காந்தியாருடைய தென்னாப்பிரிக்கப் போராட்டத்திலும், இந்தியா திரும்பிய பின்பு இந்திய விடுதலைப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
அன்றையக் காலகட்டங்களில், ஒரு பக்கம் சுதந்திரப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் கூட, இன்னொரு பக்கம் ஆங்கிலேயர்கள் உருவாக்கித் தந்த சட்டமன்றங்களிலே பங்கு பெறுவது; இந்தியா சுதந்திரம் பெற்றப் பின்னரும், இம்மண்ணினுடையப் பூர்வீக் குடிமக்களின் உரிமைகள் எப்படிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்பன குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்.
இந்தியாவினுடைய சுதந்திரம் மற்றும் ஆட்சிமுறை குறித்து இங்கிலாந்தில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாவது வட்டமேசை மாநாடுகளில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் காந்தியடிகளோடு கலந்து கொண்ட இரட்டைமலை சீனிவாசன் அவர்கள், ஆங்கிலேயப் பிரதமரோடு கைகுலுக்க மறுத்து, இந்தியாவில் நிலவியத் தீண்டாமைக் கொடுமைகளை மிகவும் நூதனமான முறையில் ஆங்கிலேயருக்கு விளங்க வைத்தார்.
மாத இதழ் ஒன்றையும், ஆதிதிராவிட மகாஜன சபையையும் உருவாக்கி அதன் மூலமாக அம்மக்களின் மீதான மனித உரிமை மீறல்களை வெளிக்கொணர்ந்தவர். அவர் எளிய மக்களின் விடுதலைக்காகப் போராடியதற்காக அவருக்கு ‘இராவ்பகதூர்’ என்ற பட்டத்தை ஆங்கிலேயர்கள் வழங்கினார்கள்.
எழுத்து, பேச்சு, கல்வியில் சிறந்து விளங்கிய அவர் வழக்கறிஞராக பணியாற்றியதுடன், தான் வாழ்ந்த 86 ஆண்டுகாலத்தையும் சமூக விடுதலைக்காவே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். அவர் 1945-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதி மரணமெய்தினார். அவருடைய 76-வது நினைவு தினமான இன்று அவர் ஆற்றியத் தொண்டின் மூலம் அவரை நினைவு கூர்வோம்.
டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
18.09.2021






