மணிப்பூர் பற்றி எரியலாமா? அடக்கு முறையால் அணைக்கும் முயற்சி பலன் தருமா?

இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னரும் இந்தியாவின் ஒற்றுமைக்குத் தொடர்ந்து சவாலாக இருந்து வந்தவை அசாம், அருணாச்சல பிரதேசம், நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேகாலயா, சிக்கிம் உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் ஆகும். பூகோள ரீதியாக மட்டுமல்ல, கலாச்சார ரீதியாகவும் அம்மாநிலங்கள் இன்னமும் தூரத்தே விலகி நின்கின்றன. வடகிழக்கு மாநிலங்கள் மலை மற்றும் மலை சார்ந்த பகுதிகளில் அமைந்திருப்பதால் அங்கு பூர்வீக பழங்குடி மக்களே பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். சீனா, பர்மா, பங்களாதேஷ் எல்லைக்கோடுகளில் இக்குறிப்பிட்ட மாநிலங்கள் அமைந்துள்ளன.
அங்கு Palaeolithic பழைய கற்காலம் தொட்டே மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் மிக மிகச் சிறிய அளவிலான பல்வேறு இன குழுக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மலைவாழ் பகுதி என்றாலும் ஒப்பீட்டு அளவில் கல்வியில் முன்னேறியவர்களாகவே இருந்து வருகிறார்கள். ’7 sister states’ ஏழு சகோதரி மாநிலங்கள் என்று இம்மாநிலங்களுக்கு சிறப்புப் பெயர் உண்டு. சீனா, பர்மா உள்ளிட்ட தேசங்களின் எல்லையோடு இருப்பதால் பிற தேசங்களில் பயிற்சி பெற்ற ஆயுதப் பயிற்சி பெற்ற குழுக்கள் தன்னாட்சி கேட்டுப் போராடுவதும், அவ்வப்போது போராட்டங்கள் தலை தூக்குவதும், பின் அமைதி நிலைக்குச் செல்வதும் இயல்பு ஆகும்.
நாகலாந்தில் ”லால் டெங்கா” என்பவர் தனி நாடு கேட்டு நீண்ட காலம் போராடி அதற்குப் பிறகு தனது அமைப்பைக் கலைத்துவிட்டு தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டார். 1975 வரை சிக்கிம் தனி நாடாக இருந்தது, பின்னர் வாக்கெடுப்பின் மூலம் இந்தியாவுடன் இணைத்துக் கொண்டது. அருணாச்சலப் பிரதேசத்தை சீனா இன்றும் சொந்தம் கொண்டாடி வருகிறது. திரிபுரா, மணிப்பூர், மிசோரம் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய குழுக்களின் போராட்டங்கள் இந்தியாவிற்கு தொடர்ந்து இடையூறு விளைவித்துக் கொண்டே வருகின்றன. பல ஆண்டுகள் வடகிழக்கு மாநிலங்களில் போக்குவரத்து மற்றும் பொருளாதார ரீதியாக எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டு வந்ததே அதற்கு ஒரு காரணமாகக் கூறப்பட்டது. அண்மை காலமாக வட கிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்குக் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு, நிதியும் ஒதுக்கப்பட்டு, அதற்கென்று பிரத்தியேகமாக மத்திய அமைச்சர் ஒருவரும் நியமிக்கப்பட்டு அம்மாநிலங்களின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
எனினும், பல்வேறு காரணங்களால் அங்கு ஏதாவது ஒரு மாநிலத்தில் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டே வருகின்றன. பர்மா எல்லையில் உள்ள மிக முக்கியமான ஒரு வடகிழக்கு மாநிலம் மணிப்பூர். அதனுடைய தலைநகர் இம்பால். அங்கு NAGAS – நாகாஸ் எனும் பிரிவினரே பிரதான பூர்வீக குடிமக்கள் ஆவர். ஜோமிஸ், குக்கீஸ் உள்ளிட்ட பூர்வீக இனப்பிரிவு குழுக்களும் உண்டு. அண்மைக்காலமாக பர்மா மற்றும் பங்களாதேஷில் இருந்து எண்ணற்றோர் ஊடுருவி அங்கு குடி பெயர்ந்தும் உள்ளனர். இதன் விளைவாக மக்கள் தொகை அதிகரிப்பு, வேலையில்லா திண்டாட்டம், வறுமை ஆகியன அப்பகுதி மக்களை வாட்டும் பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன. மேலும், ’Meiteis-மெய்தீஸ்’ எனும் பிரிவினரை பழங்குடியின பட்டியலில் (ST) சேர்ப்பது; பூர்வீக மணிப்பூர் மக்களை தங்கள் நிலங்களிலிருந்து அகற்றுவது, அதில் மற்றவர்களைக் கொண்டு வந்து குடியேற்றம் செய்வது போன்றவை தற்போது எழுந்துள்ள வன்முறைக்கு மிக முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.
மெய்தீஸ் என்ற ஒரு பெரும்பான்மை சமுதாயத்தையும் பழங்குடியின பட்டியலில் சேர்க்கும் முடிவை எதிர்த்து கடந்த மூன்று தினங்களாக மிகப்பெரிய அளவிற்கு வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. மணிப்பூர் பற்றி எரிவதாகவும், அதில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும்; எண்ணற்றோரை காணவில்லை என்ற தகவல்களும் வருகின்றன.
கடந்த காலங்களில் மணிப்பூரில் நிலவி வந்த தொடர் வன்முறைகளின் காரணமாக பொடா, தடா சட்டங்களைக் காட்டிலும்; விசாரணையின்றி எவரையும் கைது செய்யலாம்; சிறையில் அடைக்கலாம் உள்ளிட்ட கடுமையான அதிகாரங்களோடு, தனி ராணுவமே அங்கு நிறுத்தப்பட்டு இருந்தது. அவைகள் எல்லாம் இப்பொழுது நீக்கப்பட்டு. மணிப்பூர் மக்களும் இயல்பு நிலைக்கு வந்து, இந்திய இறையாண்மை ஏற்றுக் கொள்ளும் நன் நிலைக்குப் பெரிதும் மாறி வந்தனர்.
சிறிய மாநிலங்கள் என்றாலும் வடகிழக்கு மாநிலங்கள் இப்பொழுது முழு மாநில அந்தஸ்து பெற்று விளங்குகின்றன. இந்தியப் பாரதமெனும் பரந்துபட்ட தேசத்தில் அதன் பூகோள எல்லைக்குள் எந்த மூலையில் ஒரு குடிமகன் இருந்தாலும், அவர்களுக்கு எவ்வித பாகுபாடும் இல்லாமல் கல்வி, வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட வளர்ச்சிகளை வழங்குவது இந்திய அரசின் கடமை. இந்தியாவினுடைய இறையாண்மையை கட்டிக்காக்கக் கூடிய வகையில் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தவும், அமைதியை நிலைநாட்டவும் வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு கூடுதலாகவே இருக்கிறது;
ஓரிரு நாள் வன்முறையில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்; கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாக இருக்கிறது என்றால் வேறு ஏதோ பிரச்சனை முற்றி இருக்கிறது என்று பொருள். பழங்குடி பட்டியல் அல்லது பட்டியல் இனம் ஆகியவற்றில் சில சமூகங்களைச் சேர்ப்பதும், நீக்குவதும் மத்திய அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டது. ஆனால், பட்டியல் பாகுபாடுகளால் மட்டுமே அச்சமூகங்கள் முன்னேற்றம் அடைந்திருக்கிறதா என்று எண்ணிப் பார்த்து, வடகிழக்கு மாநிலங்களில் இன்னும் அடிப்படை கட்டுமான போக்குவரத்து வசதிகள், போதுமான கல்விக்கூடங்கள், மருத்துவ கட்டமைப்புகள், நவீன தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப பயிற்சி மையங்கள், அனைவருக்கும் வேலை வாய்ப்புகள், நிலப் பங்கீடுகள், பிற மாநிலத்தவர்களின் ஊடுருவல் ஆகியவற்றில் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மணிப்பூர் பூர்வீக குடிமக்களை அவர்களுடைய சொந்த நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தக் கூடாது; அதில் வேறு எவரும் குடியேற்றப்படக் கூடாது என்று அம்மக்கள் போராடுவதையும் உள்வாங்கிக் கொண்டு, அது போன்று ஏதாவது அவர்களது சொந்த நிலங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டால், அது உடனடியாக தடுக்கப்பட வேண்டும்; அதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஒட்டுமொத்தத்தில் பற்றி எரியும் மணிப்பூர் பிரச்சனை அது இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் நடப்பதாக மட்டும் எவரும் கருதி விடக் கூடாது. ராணுவத்தாலோ, காவல்துறையாலோ தற்காலிகமாக அடக்கித் தீர்வு காண்பதற்கு பதிலாக, அந்தப் பிரச்சனையினுடைய ஆழ்ந்த உண்மைத் தன்மையைக் கண்டறிந்து மணிப்பூர் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.பற்றி எரியும் மணிப்பூர் பிரச்சனைக்கு அடக்குமுறை என்ற ஆயுதத்தை விட்டுவிட்டு, அமைதி, வளர்ச்சி என்ற நீர் ஊற்றப்பட்ட வேண்டும் என்பதே எதார்த்த நிலையாகும்.
மணிப்பூர் பற்றி எரியக் கூடாது.!
அடக்குமுறையால் அணைக்கும் முயற்சி பலன் தராது!
’அமைதி- வளர்ச்சி’ எனும் ’நீர்’ ஊற்றி அணைக்கப்பட வேண்டும்.!
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
06.05.2023