தமிழக பாஜக தலைமை அலுவலகம் மீது குண்டுவீச்சு! கண்டன அறிக்கை!!
327 Views
![]()
தமிழக பாஜக தலைமை அலுவலகம் மீது குண்டுவீச்சு!
கண்டன அறிக்கை!!
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக வந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது; இது கண்டனத்திற்குரியது. ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு தனிநபருக்கும், ஒவ்வொரு குழுவிற்கும், அரசியல் கட்சியினருக்கும், தனித்தனி கொள்கைகளும் கோட்பாடுகளும் உண்டு. பாரதிய ஜனதா கட்சி மத்தியிலும், பல்வேறு மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கக்கூடிய கட்சி.
பாஜகவின் கொள்கை மீது மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை அக்கட்சியைப் பின் தொடர வேண்டும் என்று யாரும் வற்புறுத்துவதில்லை. எனவே மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள், தங்கள் வழியைப் பார்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, தங்களுக்கு விருப்பமில்லை என்ற காரணத்திற்காக, இன்னொரு கட்சிக்கு எதிரான கருத்தை கருத்தியல் ரீதியாக சந்திப்பதற்குப் பதிலாக, வன்முறையைக் கையிலெடுப்பது பலன் தராது.
பெட்ரோல் குண்டு வீசிய ஒரு சில மணித்துளிகளிலேயே குற்றவாளி கைது செய்யப்பட்டுவிட்டான்; அவன் ஏற்கெனவே குடிகாரன்; இதுபோன்று பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவன் என்று காவல்துறை அறிக்கை கொடுக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைகளோடு எத்தனையோ பேர் முரண்படுகிறார்கள். ஆனால், ஓர் அகில இந்தியக் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்திற்கு வந்து பெட்ரோல் குண்டு வீசுவது என்பது எளிதான காரியம் அல்ல; அவன் சுயமாகவும் சிந்தித்திருக்க வாய்ப்பில்லை. அவன் ஒருவேளை பைத்தியக்காரனாக இருந்தாலும் கூட, அவனை யாரேனும் இயக்கியிருக்கக் கூடும் என்ற எண்ணமே தோன்றுகிறது.
பல்வேறு அரசியல் சூழ்நிலைகள் தமிழகத்தில் உருவாகிக் கொண்டிருக்கிற இந்த வேளையில், இதுபோன்று சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கக் கூடிய எந்தவொரு சம்பவத்தையும் காவல்துறை அனுமதிக்கக் கூடாது; இதை எளிதாகக் கருதி விட்டுவிடவும் கூடாது. ஏற்கெனவே அந்த அலுவலகம் பலமுறை தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது.
எனவே அதனுடைய முழுப்பின்னணியையும் கண்டறிந்து, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதற்குண்டான நடவடிக்கையை தமிழ்நாடு காவல்துறை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். இதுபோன்று தமிழகத்தில் எந்த சம்பவமும் எந்தக் கட்சிக்கும் நிகழாமல் நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு தமிழகக் காவல்துறைக்கு உண்டு.
அரசியல் மாச்சரியங்களை இதுபோன்ற வன்முறைகளின் மூலமாகத் தீர்த்துக் கொள்ள எவர் துணை நின்றாலும், தூண்டியிருந்தாலும், அது பெரும் பின்விளைவுகளையே உருவாக்கும். குண்டு வீசியவன் கைது செய்யப்பட்டிருப்பதாக சொன்னாலும் கூட, அதன் முழுப் பின்னணியையும் விரைந்து வெளிக்கொண்டு வருவதற்குண்டான நடவடிக்கையை காவல்துறை எடுக்க வேண்டுமென்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.
– டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
10.02.2022.






