பிப்ரவரி – 8, சட்டமன்றத் தீர்மானம்! நேற்று நடந்ததே நாளையும் நடக்கும்!! அரசுப்பள்ளி மாணவர்கள் மீது ஸ்டாலினின் தீண்டாமை முத்திரை! 2024 – திமுகவின் அரசியல் களத்திற்கு தமிழக மக்களை பலிபீடமாக்காதீர்!!

அறிக்கைகள்
s2 322 Views
  • Dr Krishnasamy

    டாக்டர் கிருஷ்ணசாமி

  • Dr Krishnasamy
Published: 10 Feb 2022

Loading

பிப்ரவரி – 8, சட்டமன்றத் தீர்மானம்! நேற்று நடந்ததே நாளையும் நடக்கும்!!
அரசுப்பள்ளி மாணவர்கள் மீது ஸ்டாலினின் தீண்டாமை முத்திரை!
2024 – திமுகவின் அரசியல் களத்திற்கு தமிழக மக்களை பலிபீடமாக்காதீர்!!

கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட சித்தாந்தவாதிகளின் பலிபீடமாய் சிக்கித் தவிக்கிறது தமிழகம்! அதனுடைய வெளிப்பாடுகளில் ஒன்றுதான் கடந்த 8-ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் நடந்தேறிய நிகழ்வு. நீட் தேர்வின் அனைத்துப் பரிமாணங்கள் குறித்தும் கடந்த ஐந்து ஆண்டுகளாக, தேவைக்கு அதிகமாகவே நாம் பல ஆதாரங்களை எடுத்து வைத்து இருக்கிறோம். எவ்வளவு ஆதாரங்களைத் திரட்டித் தந்தாலும், அதை அறிவுக் கண்கொண்டு பார்க்கவோ, காதுகொடுத்துக் கேட்கவோ திராவிட ஸ்டாக்கிஸ்ட்கள் மற்றும் அவர்களுடைய ஊதுகுழல்கள் தயாராக இல்லை. இன்று நேற்றல்ல, அவர்கள் இயக்கத்தைத் துவங்கிய நாளிலிருந்தே முற்போக்கு போல காட்டிக்கொண்டே பிற்போக்குத்தனமாகவும், பகுத்தறிவு பேசுவதைப் போல காட்டிக்கொண்டே பகுத்தறிவுக்கு ஒவ்வாத காரியங்களையும் மட்டுமே செய்து வந்திருக்கிறார்கள். உலகத்திலேயே இவர்களைத் தவிர சிறந்த அறிவாளிகளும், செயற்பட்டாளர்களும் இல்லை என்ற மமதை ஒருபோதும் அவர்களுடைய மண்டைச் சுரப்பியிலிருந்து குறைந்ததே இல்லை.

பரந்துபட்ட பாரத தேசத்தை விடுதலை செய்ய இவர்கள் கிஞ்சித்தும் குரல் கொடுத்தவர்களோ, பாடுபட்டவர்களோ அல்ல; வணிகம் செய்ய வந்தவர்கள் நம்மை ஆளலாமா? என்று அந்த சுயமரியாதைக் குஞ்சுகளுக்குச் சிறிது கூட குற்ற உணர்வு இருந்ததில்லை. நீங்களே எங்களை ஆளுங்கள் என்று ஆங்கிலேயர்களிடத்தில் மனுக்கள் கொடுத்து, மிட்டா மிராசு, ஜமீன், ராவ்பகதூர், சர் போன்ற பட்டங்களையும் பதவிகளையும் பெற்றுக் கொள்வதில் மட்டுமே குறியாக இருந்தவர்கள். இந்திய மண்ணை விடுதலை செய்வதற்காக இரத்தம் சிந்தியவர்கள், சிறை சென்றவர்கள், தங்களுடைய வாழ்க்கையையும் அர்ப்பணித்துக் கொண்டவர்களுடைய தியாகங்கள் இவர்களுக்குப் புரியாது. பத்துப்பட்டிகளாகவும், பதினெட்டுப்பட்டிகளாகவும் சின்னாபின்னமாகப் பிரிந்து கிடந்த தேசத்தை, பாரதம் அல்லது இந்தியா என்ற ஒற்றை அடையாளத்தில் மீட்டெடுப்பதற்காக, கோடானகோடி இந்தியர்கள் செய்த தியாகம் இவர்களுக்குப் புரியாது. அரும்பாடுபட்டு சமைத்து வைத்த உணவில் இவர்கள் மண்ணை அள்ளிப் போட நினைக்கிறார்கள். ஆம்! திமுகவினுடைய ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் பிரிவினை மட்டுமே குடி கொண்டிருக்கிறது.

கடந்த 500 ஆண்டுகளில் உலகத்தில் நடந்த பெரும் பெரும் போராட்டங்கள் புரட்சிகள் பலவற்றையும், மகத்தான தலைவர்களின் வரலாறுகளையும் படித்திருக்கிறேன். ஆனால், திமுகவைப் போன்று பதவி வெறிபிடித்த பிறிதொரு இயக்கத்தைப் பற்றிப் படித்ததும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை. ஹிட்லர் பாசிஸ்ட்டாக இருந்தாலும் அவரிடம் ஒரு நெறி இருந்திருக்கிறது.

எவரெவரோ உருவாக்கிய இயக்கத்தைத் தங்களுடைய குடும்பச் சொத்தாக்கி, தாங்களே கட்சியிலும் ஆட்சியிலும் நிரந்தரமாகப் பதவியில் இருக்க வேண்டும் என்ற வெறி மட்டுமே அவர்களிடத்தில் மிஞ்சியிருக்கிறது. அவர்களின் அந்த பதவிவெறிக்கு தமிழகம் கடந்த 50 ஆண்டுகாலமாக பலிபீடமாகியிருக்கிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தொடங்கி திராவிட நாடு கொள்கை வரையிலும், தமிழக இளைஞர்கள் மற்றும் மக்களின் உணர்ச்சியையும், ஆத்திரத்தையும் தூண்டி, இளைஞர்களைப் பலிகடா ஆக்கியது மட்டுமே அவர்களின் வரலாறு.

காமராஜர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றிய அணைக்கட்டுகள், சாலைகள், பாலங்கள், பள்ளிக்கூடங்கள், தொழில் நிறுவன வளர்ச்சிகள் அனைத்தையும் மூடி மறைத்து, அவரை ’கருப்பு காக்கா’ என்று சிறுமைப்படுத்தினார்கள்; எம்.ஜி.ஆரை ’மலையாளி’ என்று வசைபாடினார்கள்; ஜெயலலிதாவை ’கன்னடத்துப் பாப்பாத்தி’ என்று கட்டம் கட்டினார்கள்.

இராஜாஜி அவர்கள் கொண்டுவந்த திறன் வளர்ப்புத் திட்டத்தைக் கூட, குலக்கல்வி முறை என முத்திரையிட்டு ஒழித்துக் கட்டியதால், ஒரு காலத்தில் 64 ஆயக் கலைகளையும் கற்றுத் தேர்ந்திருந்த தமிழகம், இன்று சாதாரண நாற்காலி செய்வதற்குக் கூட, பீகார் மற்றும் உத்தரப்பிரதேசக்காரர்களை நம்பி இருக்கக்கூடிய அவலநிலைக்கு வந்துவிட்டது. திராவிட நாடு கோரிக்கையை ஏதாவது ஒருவிதத்தில் திணித்துவிட அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொள்கிறார்கள்.

திராவிட நாடு – இந்தி எதிர்ப்பு – மாநில சுயாட்சி, அதுவே இன்று நீட் எதிர்ப்பாகப் பரிணமித்துள்ளது. இன்றைய திமுக அரசு தவறாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று ஏற்கெனவே தமிழக ஆளுநருக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் நான் எச்சரித்திருந்தேன்; இந்தியாவினுடைய இறையாண்மைக்கு ஒரு பங்கம் நிகழப்போகிறது என்று சொன்னால் அது திராவிட ஸ்டாக்கிஸ்டுகளிடம் இருந்துதான் வரமுடியும் என்று சொல்லியிருந்தேன்; அது இப்பொழுது நிரூபணமாகி வருகிறது.

585 தனியார் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகளில் இளநிலை மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கைகளுக்கு பொது நுழைவுத் தேர்வு என்பது, 15 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசாலும், தேசிய மருத்துவ கவுன்சிலாலும் பலமுறை விவாதிக்கப்பட்டு எடுக்கப்பட்ட முடிவு. அதன்பின், உச்சநீதிமன்றமே இன்றையக் காலகட்டத்திற்கு ஒப்ப, உயர்தரமான மருத்துவர்களை உருவாக்க ஒரு பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் என்றும் தீர்ப்பளித்துவிட்டது. 2004-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்து துவங்கி, 2016-ல் இறுதி வடிவம் பெற்றது. எனவே இது முழுக்க முழுக்க ஒரு சட்டப்பூர்வமான நடவடிக்கை ஆகும். இதில் எவ்விதமான அரசியல் நோக்கமும் இல்லை. நீட் தேர்வு அமலாக்கப்பட்ட பிறகு, அதுவரையிலும் தன்னாட்சி அதிகாரங்கள் பெற்றிருந்த எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற உயர்தர மருத்துவ நிறுவனங்கள் கூட, நீட் மதிப்பெண் அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு உட்பட்டுவிட்டன.

எனவே நீட் கிராமப்புற, ஏழை, எளிய, பின்தங்கிய, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எதிரானது அல்லது ஒருதலைபட்சமானது என்று சொல்வது மிகவும் அபத்தமானது. இந்தியா முழுமைக்கும் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் அமலில் உள்ள நீட் தேர்வு, தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் எதிரானது என்பது எந்த விதத்தில் நியாயம்? இது ஸ்டாலின் அவர்களின் பத்தாம்பசலித்தனமான குற்றச்சாட்டு ஆகாதா? ஸ்டாலின் ஒரு கட்சித் தலைவராக 2019 – நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 – சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக பேசியது என்பது வேறு. ஆனால், ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்து கொண்டு, சிறிதும் கூட மனசாட்சி இல்லாமல், மிகப்பெரிய பொய்யை தமிழக சட்டமன்றத்தில் பதிவு செய்வது நியாயமா? ”தமிழகத்தில் இருக்கக் கூடிய அரசுப்பள்ளி மாணவர்களை நீட் தேர்வு ஒதுக்குகிறது; இது அறிவுத் தீண்டாமை” என்று குற்றம் சுமத்துகிறார். அய்யா தளபதியாரே! கொஞ்சம் பின்னோக்கிப் பாருங்கள். 1967-லிருந்து நீங்கள் 5-வது முறையாக ஆட்சிக்கு வந்திருக்கிறீர்கள். தமிழகத்தில் ஆரம்பப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என இருக்கக்கூடிய 58,000-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்களில், ஏறக்குறைய 2½ இலட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். ஆண்டொன்றுக்கு தோராயமாக 3 இலட்சம் கோடி ஒதுக்கப்படும் தமிழக பட்ஜெட்டின் மொத்த நிதியில், ஏறக்குறைய 40,000 கோடி ரூபாய் பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டுமே ஒதுக்கப்படுகிறது.

அப்படி இருந்தும் உங்களால் ஏன் அரசுப் பள்ளி மாணவர்களுடைய தரத்தை உயர்த்த முடியாமல் போயிற்று? அரசு மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து பள்ளிக்கு ஒரு மாணவர் என்று கணக்கு வைத்தால் கூட, தமிழகத்திலுள்ள மொத்த மருத்துவ இடங்களில் 90% இடங்களை அரசுப்பள்ளி மாணவர்கள் தானே நிரப்ப வேண்டும். அது ஏன் நடைபெறவில்லை? அதைப்பற்றி என்றாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? கடந்த 50 ஆண்டுகளில் தமிழக அரசினுடைய பாடத்திட்டத்தில் (Syllabus) குறைபாடா? கற்பிப்பதில் (Pedagogy) குறைபாடா? கற்றுக் கொள்வதில் (Learning Disability/Economic Inequality) குறைபாடா? என்பது பற்றி ஒரு முறையாவது நீங்கள் ஆய்வு செய்ததுண்டா?
நீட் தேர்வு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவது அல்ல. National Council of Educational Research and Training (NCERT) என்று அழைக்கப்படக்கூடிய மத்திய அரசின் விரிவான பாடத்திட்டத்தினுடைய அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் என்று ஒன்று செயல்படுகிறதே, அந்த நிறுவனம் மத்திய அரசின் பாடத்திட்டதைப் புரட்டிப் பார்த்தால் என்ன குறைந்து போய்விடப் போகிறது? எவ்வளவு விலையுயர்ந்த செல்போன் நம்மிடத்தில் இருந்தாலும் கூட, அதிலிருக்கக் கூடிய பல்வேறு அம்சங்களை நாம் பயன்படுத்துவதற்கு முடிவதில்லை. ஆனால் இன்றையத் தலைமுறைக் குழந்தைகள் 2, 3 வயதுகளிலேயே நாம் கற்றுக் கொள்ள முடியாததை அவர்கள் எளிதாகக் கற்றுக் கொள்கிறார்கள். எனவே நல்ல பாடத்திட்டத்தையும், நல்லக் கல்விமுறையையும் அமலாக்குவதைப் பற்றி சிந்தியுங்கள். அதனால், இளைய தலைமுறை தங்களை மேம்படுத்திக் கொள்ள முடியும். பிறவி அறிவாளி என்பாருமில்லை, பிறவி மூடர் என்பாருமில்லை. எல்லாமே பயிற்சியில் தான் இருக்கின்றன. அரசுப்பள்ளி மாணவர்களாலும் ஜொலிக்க முடியும், ஜெயிக்க முடியும்.
நல்ல தரம் வாய்ந்த ஆசிரியர்கள் எத்தனையோ பேர் அரசுப் பள்ளிகளில் இருக்கிறார்கள். ஆனால், மாணவர்களை திறமைசாலிகளாக வளர்த்தெடுக்கவோ வார்த்தெடுக்கவோ அவர்களை கல்விப்பணி செய்யவிடாமல், உங்களுடைய கட்சி அரசியல் பணிக்கு மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தினீர்கள்; இன்றும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். இந்தியாவில் எந்த மாநிலமும் நீட் தேர்வுக்கு விலக்குக் கேட்காதபோது, தமிழகத்திலே மட்டும் விலக்குக் கேட்கிறீர்கள். அரசுப்பள்ளி மாணவர்களைத் தனிமைப்படுத்தி, தரம் குறைந்தவர்களாகக் காட்டி, நீங்கள் தான் அவர்கள் மேல் ஒரு புதிய தீண்டாமை முத்திரை குத்த முயற்சி செய்கிறீர்கள்.

அரசுப் பள்ளி மாணவர்கள் என்றாலே தகுதி குறைவானவர்கள் என்றுப் பொதுவெளியில் ஓர் அபிப்பிராயத்தை உருவாக்க முயற்சி செய்வது ஒரு முதலமைச்சருக்கு அழகல்ல. அரசு மருத்துவக் கல்லூரிகளிலோ, அரசுப் பொறியியல் கல்லூரிகளிலோ, அரசு வேளாண்மைக் கல்லூரிகளிலோ, அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளிலோ, அரசு சட்டக் கல்லூரிகளிலோ படித்தால் அவர்கள் சிறப்பான மாணவர்கள்; ஆனால் அரசுப் பள்ளிகளில் படித்தால் அவர்கள் மட்டும் தரம் குறைந்த மாணவர்களா? நீங்கள் ’திராவிட மனு’ எனும் புதிய வருணாசிரமத்தை உருவாக்க முயற்சிக்காதீர்கள். ஸ்டாலின் அவர்களே, மிகப்பெரிய தவறு செய்கிறீர்கள். வரலாறு உங்களை மன்னிக்காது. உங்களுடைய பதவி சுகத்திற்காக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் எத்தனையோ மாணவர்களை நீங்கள் பலிகடா ஆக்கியிருக்கிறீர்கள். எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக, ஏழை, எளிய மாணவர்களிடத்தில் நீட் தேர்வுக்கு எதிராக, தவறான எண்ணங்களைப் பரப்பி, 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழக்கவும் காரணமாய் இருந்திருக்கிறீர்கள். மீண்டும் மீண்டும் அதே விசக் கருத்தை தமிழகத்தில் பரப்ப எண்ணுகிறீர்கள். உங்களுடைய அரசியல் இலாபத்திற்காக, ’மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது’ போல, நீட் தேர்வையும் மாநில சுயாட்சியையும் ஒன்றிணைக்கிறீர்கள். வரலாற்றில் அப்படியாவது எதையும் சாதித்துக் கொடுத்திருக்கிறீர்களா என்றால், அதுவும் இல்லை; அத்தனையும் வெத்து வேட்டு. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50%, பட்டியலினத்தவர்களுக்கு 19% என்ற 69% இடஒதுக்கீடு கூட, எம்.ஜி.ஆர் அவர்களால் முன்னெடுக்கப்பட்டு, ஜெயலலிதா அவர்களுடைய சாதுர்யத்தால் 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.உங்களுடைய ஆட்சிக் காலங்களில் தமிழகம் பெற்ற தீமைகளே அதிகம்.

1. காவிரி ஒப்பந்தம் குறித்த வழக்கை தன்னிச்சையாக நீதிமன்றத்திலிருந்து வாபஸ் பெற்றீர்கள்.
2. தமிழகத்தினுடைய எல்லைக்குட்பட்டிருந்த கட்சத்தீவை இலங்கைக்குத் தாரை வார்க்க உடன்பட்டீர்கள்.
3. 2009 மற்றும் 2010-ஆம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது, 8 அமைச்சர்களோடு மத்திய ஆட்சியைத் தீர்மானிக்கக் கூடிய இடத்தில் இருந்த நீங்கள், ஈழத் தமிழ் மக்களைக் காப்பாற்றத் தவறினீர்கள். அதன் காரணமாக முள்ளிவாய்க்காலில் 1 ½ இலட்சம் ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள்; 3 ½ இலட்சம் அப்பாவி ஈழத்தமிழ் மக்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டார்கள்; ஈழத்தமிழர்களின் தலைசிறந்தப் போராளிகளையும் இழக்க வேண்டிய நிலைக்கு நாம் ஆளானோம். ஓர் இனத்தின் ஒரு நூற்றாண்டுகாலப் போராட்டமே பின்னுக்குத் தள்ளப்பட்டது.

1999 முதல் 5 ஆண்டுகாலம் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியிலும் (திமுகவின் கூற்றுப்படி பாஜக அன்று மதவாத கட்சியுமல்ல, பாசிச கட்சியும் அல்ல) 2004 முதல் 2014 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலும் என தொடர்ந்து 15 ஆண்டுகாலம் நீங்கள் மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தீர்கள். மாநில சுயாட்சி பேசக் கூடிய நீங்கள், அந்த 15 ஆண்டுகளில் எந்த மாநில சுயாட்சிப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டீர்கள்? கட்சத்தீவை மீட்டுக் கொடுத்தீர்களா? முல்லைப் பெரியாறை மீட்டுக் கொடுத்தீர்களா? ஈழத்தமிழர்களின் உரிமைகளை வென்று கொடுத்தீர்களா? அப்பொழுது பொதுப் பட்டியலில் இருக்கக் கூடிய கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற எந்த முயற்சியும் எடுக்காமல், இப்பொழுது திடீரென்று கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று சொல்வதன் பொருள் என்ன? உங்களுடைய நோக்கம் வேறாக இருக்கிறது. நீங்கள் நீட் தேர்வைப் பயன்படுத்தி தமிழகத்தில் அரசியல் நாடகம் ஆட நினைக்கிறீர்கள்.

இப்பொழுது மாநிலத்திலே ஆட்சி கைக்கு வந்துவிட்டாலும், மத்திய ஆட்சியிலே அங்கம் பெற முடியவில்லை என்றவுடனேயே மாநில சுயாட்சி கோரிக்கையைக் கிளப்புகிறீர்கள். இதைத் தானே உங்கள் தந்தையாரும் செய்து வந்தார். உங்களுடைய பொய்யும், புரட்டும், பித்தலாட்டமும் எல்லா காலகட்டத்திற்கும் செல்லுபடியாகாது. அன்று தமிழக மக்கள் விழிப்போடு இல்லாத காலகட்டத்தில் அவர்களுடைய உணர்வுகளைத் தூண்டி அரசியல் சதுரங்கம் விளையாடினீர்கள். ஆனால், இன்று அது பலிக்காது; இனிமேல் அது வெற்றியும் பெறாது; வெற்றி பெறவும் விடமாட்டோம்.

ஒரு சட்ட மசோதா ஆளுநரால் திருப்பி அனுப்பப்படுகிறது; அதில் 2, 3 முக்கியமான விசயங்கள் குறித்து அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதில் ஏதாவது ஒரு விசயத்தைப் பற்றியாவது சட்டமன்றத்தில் யாராவது பேசினீர்களா? ”நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்; நாங்கள் அன்று என்ன சொன்னோமோ, அதைத் தான் இன்றும் சொல்கிறோம்; நாங்கள் நிறைவேற்றிய தீர்மானத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு ஆளுநர் கைழுத்திடுவது மட்டுமே அவருடைய வேலை” என்று அகங்கார எண்ணத்தில், ஆணவத்தில் தானே சட்டமன்றத்தில் எந்தவிதமான விவாதமும் செய்யாமலே ஆளுநர் மீது வசைபாடியும், மாநில சுயாட்சியை முன்னிறுத்தியும், அதே தீர்மானத்தைத் தானே மீண்டும் நிறைவேற்றி இருக்கிறீர்கள்.

அப்படியெனில், காமாலைக் கண்ணோடு பார்க்கிறீர்கள் என்று ஆளுநர் சொன்னது நூற்றுக்கு நூறு சரிதானே? ஒட்டுமொத்தத்தில் ஒருநாள் சட்டமன்றக் கூட்டத் தொடர் வீண். ஸ்டாலின் என்ற மனிதரின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்காக தமிழக மக்களின் வரிப்பணம் இலட்சக்கணக்கில் 8-ஆம் தேதி வீணடிக்கப்பட்டிருக்கிறது. எனவே 8-ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு நேற்று என்ன நடந்ததோ, அதுவே நாளையும் நடக்கும்.
தமிழக மக்கள் தெரிந்தோ தெரியாமலோ திமுக-வின் அரசியல் சூழ்ச்சிகளுக்கு இதுவரை பலிகடா ஆகி இருக்கிறார்கள். ஸ்டாலின் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு இதில் பல இலாபங்கள் உண்டு. ஆனால், கொஞ்சம் கூட சிந்திக்காமல், திமுகவின் அரசியல் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல், பல அறிவுஜீவிகள் கூட மாநில உரிமை என்று தங்களுடைய சுய நினைவை இழந்து ஏன் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. நான்காவது தூண் என்று சொல்லப்படக்கூடிய ஊடகமும் ஏன் மூடகம் ஆகிவிட்டது?

தமிழக மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளிலேயே தமிழகத்தை தாண்டி, அகில இந்திய கோட்டாவிலும் அதிக அளவில் இடங்களைப் பெற்று வருகிறார்கள். எம்.டி., எம்.எஸ். போன்ற முதுநிலைப் படிப்புகளிலும் 200% தமிழக மாணவர்கள் அதிக இடங்களைப் பிடிக்கிறார்கள். இவ்வளவு மாற்றங்களையும் முற்றாக மறைத்துவிட்டு, தமிழகத்திலுள்ள வெறும் 4,500 இடங்களுக்கு மட்டுமே 10 இலட்சம் மாணவர்களைப் போட்டியிடத் தள்ளுகின்ற, ஓர் அயோக்கியத்தனத்தைத் திராவிட ஸ்டாக்கிஸ்டுகள் செய்ய நினைக்கிறார்கள்; அவர்கள் கிராமப்புற, அரசுப் பள்ளி மாணவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்; நீட் தேர்வின் மூலமாக தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மருத்துவர் உருவாக்கப்படுவது தடுக்கப்படுகிறது என்பதைப் போன்ற ஒரு பிரம்மையைக் கட்டியமைக்க முயற்சி செய்கிறார்கள்.

திமுக நீண்டநாள் ருசிகண்ட பூனை; ’தமிழக மக்கள் எளிதாக உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள்; அவர்களை எளிதாக தூண்டிவிட முடியும்’ என்று மனப்பால் குடிக்கிறார்கள். அது பழைய நினைப்புடா பேரான்டி என்பதை நினைவுபடுத்தும் காலம் நெருங்கிவிட்டது. மத்தியிலும் மாநிலத்திலும் தங்கள் குடும்பம் நிரந்தமாக ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற ஒரே குறுகிய நோக்கத்தோடு மட்டுமே, நீட் மற்றும் மாநில சுயாட்சி பேசுகிறார்கள்; ஏழை, ஏளிய, பின்தங்கிய, அரசுப் பள்ளி மாணவர்களை இவர்களின் அரசியல் இலாபத்திற்காக பலிகடாவாக்க நினைக்கிறார்கள்.

எனவே, நீட் எதிர்ப்பிற்குள்ளே இருப்பது ஸ்டாலின் அவர்களின் வீட்டு அரசியலும், திமுகவின் ஓட்டு அரசியலும், பரந்துபட்ட பாரத தேசத்தின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிராக அவர்கள் வைக்கக்கூடிய வேட்டு அரசியலுமே உள்ளடக்கம் ஆகும்.

ஸ்டாலின் அவர்களே, திமுகவே!
1965 எண்ணத்தோடு செயல்படாதீர்கள்; இது 2022!!
இது பழைய தமிழகம் அல்ல; இது புதிய தமிழகம்!!
நீட்டை – மாநில சுயாட்சியை காட்டி
தமிழக மக்களை இனிமேலும் பலிபீடமாக்க முடியாது!
உங்களின் நீட் அரசியல் முற்றாகத் தோற்கடிப்படும்!!

அவர்களின் அரசியல் சதுரங்கத்திலிருந்து தமிழக மக்களைக் காப்பாற்ற,
அறிவு சார் தமிழக இளைஞர்களே விழிப்போடு இருங்கள்!
பிரிவினைவாத, தேசவிரோத, குடும்பநலம் சார்ந்த திராவிட ஸ்டாக்கிஸ்டுகளின் அரசியலை அம்பலப்படுத்துங்கள்!

– டாக்டர்.க.கிருஷ்ணசாமி, MD,Ex.MLA,
நிறுவனர் – தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
10.02.2022.