விகிதாசாரத் தேர்தல் முறையுடனான ’ஒரே நாடு – ஒரே தேர்தல்” முறையை புதிய தமிழகம் கட்சி வரவேற்கிறது!

உலகின் எந்த ஒரு நாட்டிலும் அரசு உதிர்ந்து போகும் நாள் எந்நாளோ அந்நாளே உண்மையான எதார்த்தமான சுதந்திர பூமியாகும். ஆனால், அப்படிப்பட்ட ஒரு ஏகாந்த நிலையை அடைவதற்கு பல யுகங்கள் ஆகலாம். தற்போதைய நிலையில் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மக்களால் உருவாக்கப்படக்கூடிய ஜனநாயக ரீதியான அரசுகளும், அதிலிருந்து மாறுபட்ட பல்வேறு விதமான ஆட்சி அமைப்புகளும் பல்வேறு தேசங்களில் நடைபெறுகின்றன. கண்கூட பர்மாவில் ராணுவ ஆட்சியும், பெரும்பாலான தேசங்களில் மன்னர் ஆட்சிகளும், ஐரோப்பிய நாடுகளில் முதிர்ச்சி பெற்ற ஜனநாயக ஆட்சிகளும் நடைமுறையில் உள்ளன.
முகலாயர் மற்றும் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற இந்தியத் தேசத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மூலம் மத்திய அரசின் ஆட்சியும்; சட்டமன்றத் தேர்தல்கள் மூலம் மாநில அரசின் ஆட்சியும்; உள்ளாட்சித் தேர்தல்கள் மூலம் கிராமம் மற்றும் நகராட்சி அமைப்புகளின் ஆட்சியும் அமைகின்றன.
இந்தியா விடுதலை பெற்ற பிறகு 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் இந்தியாவெங்கும் நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தான் தேர்தல்கள் நடைபெற்று இருக்கின்றன. அதன் பின்னர் 1962 முதல் 1967 வரையிலும் அதே நிலை தான் நீடித்தது. அதற்குப் பிறகு, அவ்வப்போது நடைபெற வேண்டிய தேர்தல்கள் தள்ளிப் போடப்பட்டது அல்லது 96, 98, 99 ஆம் ஆண்டுகளில் அடிக்கடி தேர்தல்கள் வரவேண்டிய சூழல்களும் உருவாகின. இதைப் போன்று மாநிலங்களிலும் மாறி மாறி தேர்தல்கள் வரும் சூழல்கள் ஏற்பட்டது. உள்ளாட்சித் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படாமல் அந்தந்த மாநிலங்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என தனித்தனியாக பிரித்துச் சிதைக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டன.
இதன் விளைவாக ஐந்து ஆண்டுகளுக்குள் ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தல், அடுத்த 2 ஆண்டுகள் கழித்து சட்டமன்றத் தேர்தல், அதன்பின் உள்ளாட்சித் தேர்தல், இடை இடையே இடைத்தேர்தல் என மக்கள் எப்பொழுதும் தேர்தலை எதிர் நோக்கியே இருக்கக்கூடிய ஒரு மோசமான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
ஒவ்வொரு தேர்தல் அறிவிப்பின் போதும் தேர்தல் விதிமுறைகளை அமலாக்க வேண்டிய சூழல்கள் காரணமாக அரசின் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் நிறுத்தி வைக்கப் படுகின்றன. அதனால் மக்களால் மத்திய அல்லது மாநில அரசுகளுடைய செயல்பாடுகளை முறையாக வரையறை செய்ய முடிவதில்லை. பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகும் மக்கள் தெளிவற்ற நிலையில் வாக்களிக்கும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணம் அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுவதே ஆகும்.
மேலும், அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுவதால் பெரும்பாலான அரசியல் கட்சிகளால் மக்களும் ஊழல் படுத்தப்படுகிறார்கள். அரசியல் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ’இலவசம்’ எனும் சில எலும்புத் துண்டுகளை மட்டும் தூக்கி வீசிவிட்டு கொள்ளையடிப்பதிலே குறியாக இருக்கிறார்கள். அவர்களுடைய கொள்ளைகளுக்கு ’மாநில சுயாட்சிகள்’ என்று கொள்கை பட்டமும் சூட்டிக் கொள்கிறார்கள்.
எனவே, இப்பொழுது இந்தியாவில் இருக்கக்கூடிய தேர்தல் முறைகளை மாற்றாமல் இந்திய மக்களுக்கு ஒரு நல்ல விடிவு காலத்தை உருவாக்க இயலாது. அதனுடைய முதற்படியாக ”ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்து இருக்கிறது. இதுவே முழுமையான தீர்வை வழங்காது எனினும் நாடாளுமன்றங்களுக்கும் சட்டமன்றங்களுக்கும் நாடு முழுவதும் ’ஒரே தேர்தல்’ என்ற கோட்பாட்டை நாம் வரவேற்கிறோம்.
ஆனால், இந்த சீர்திருத்தத்தின் போதே ஐரோப்பாவின் பல நாடுகளிலும் மிக வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ”விகிதாசாரத் தேர்தல்” முறையை அமலாக்கவும்; 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் என்பதை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை என மாற்றிடவும் இந்த தேர்தல் சீர்திருத்தத்திலேயே கொண்டு வருவதன் மூலம் இந்திய ஜனநாயகத்தில் ஒரு அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவர முடியும். ஆட்சி – அதிகாரத்தின் விளிம்பு நிலைக்குக் கூட வர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கக் கூடிய கோடான கோடி ஏழை, எளிய விளிம்பு நிலை மக்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின் மூலம் ஆட்சி – அதிகாரத்தில் பங்கு பெறுவதற்கு உண்டான மிகப்பெரிய வாய்ப்பு உண்டாகும்.
விகிதாசாரத் தேர்தல் முறை என்பது புதிய தமிழகம் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே கடந்த 30 வருடங்களாக வலியுறுத்தி வருவதாகும். இக்கோரிக்கையை வலியுறுத்தி 2004 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் வி.பி.சிங் தலைமையில் டெல்லியிலும் பல்வேறு கருத்தரங்களை புதிய தமிழகம் கட்சி முன்னெடுத்துள்ளது. எனவே, ’ஒரே நாடு – ஒரே தேர்தல்’ முறையை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தக்கூடிய பாஜக அரசு அதனுடன் இணைத்து விகிதாச்சார தேர்தல் முறையையும் அமல்படுத்த முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
டாக்டர் கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
13.12.2024