மாஞ்சோலையில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி செப்டம்பா் மாதம் போராட்டம்!

செய்திகள்
s2 263 Views
  • 2
  • 2
Published: 29 Aug 2023

Loading

கடந்த ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து பிறகு தென்காசி மற்றும் திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் சுமாா் 5 ஆயிரம் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய இடங்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்லும் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளன. இந்தச் சாலையை சீரமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பினும் இதுவரை அதற்கான பணிகளைத் தொடங்கவில்லை.

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒரு முறை ரூ.1,000 வரை தொழில் வரி வசூலிக்கப்படுவது கண்டிக்கதக்கது. பிஎஸ்என்எல் 4ஜி வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனா்.

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களுக்கு தெற்கு பாப்பான்குளத்தில் வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது; ஆனால், இதுவரை அவா்களிடம் வீட்டுமனை ஒப்படைக்கப்படவில்லை.

தேயிலை நிறுவனத்தின் குத்தகைக் காலம் முடிவடைந்ததும் வரும் 2028 ஆம் ஆண்டில் தொழிலாளா்களுக்கு இந்த நிலங்கள் பகிா்ந்து அளிக்கப்பட வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பா் மாதம் மூன்றாவது வாரத்தில் திருநெல்வேலியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

செய்தி; தினமணி நாளிதழ்