கனிமவளம்: அமலாக்கத்துறை சோதனை சரியே; இது மேலும் தொடரவேண்டும்!

இராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;
தமிழகத்தில் மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் மது பரவி வருகிறது. மதுவால் கொலை கொள்ளை சட்டம் ஒழுங்கு பிரச்னை சம்பவங்கள் நடந்து வருகிறது. தமிழகத்தில் பூரண விலக்கை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் மது ஒழிப்பு சிறப்பு மாநாடு வருகிற டிசம்பர் 15-ம் தேதி நடைபெற உள்ளது. இதுதான் தி.மு.க.வுக்கு எச்சரிக்கை மாநாடாக அமையப்போகிறது.
திருமங்கலம் – தென்காசி வரையான தேசிய நெடுஞ்சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. அந்த பணிகளை அரசு விரைவுப்படுத்த வேண்டும்.
தமிழக அமைச்சர்களின் ஆதரவில் கனிமவள மணல் கொள்ளை நடைபெறுகிறது. முக்கியமாக இந்த கனிம கடத்தலில் நீர்வளத்துறை அமைச்சருக்கு முக்கிய பங்கு உள்ளது. மணல் கொள்ளை தொடர்பாக வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது சரிதான். இந்த சோதனைகள் மேலும் தொடர வேண்டும்.
இந்து மதத்தில் உயர்வு தாழ்வென்பது இருக்கக்கூடாது என்பதே புதிய தமிழகத்தின் நிலைப்பாடு. ஆறுகள் உற்பத்தியாகும் இடத்தில் கழிவுகள் கலப்பதில்லை. அது செல்லும் இடத்தில் தான் கழிவுகள் கலக்கிறது. அதற்காக ஆறுகள் அனைத்தும் சாக்கடை என்று சொல்வது தவறாகும். அதுபோலத்தான் இந்து மதம் உருவான இடத்தில் தவறுகள் இல்லை. அது கடந்து வந்த பாதையில் சிலர் ஏற்படுத்திய பாகுபாடுகளால் இந்து மதமே அழிக்கப்பட வேண்டும் என்பது கூறுவது தவறு.
ராஜபாளையத்தில் உள்ள சாலைகள் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. நகரம் என்று கூறுவதை விட நரகம் என கூறலாம். எனவே சாலைகளை விரைந்து சரி செய்ய வேண்டும்” என்றார்.
செய்தி; விகடன்