தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களுடன் ஆலயம் காப்போம் குழுவினர் சந்திப்பு

தமிழகத்தில் 35,000-க்கும் மேற்பட்ட இந்துப் புராதனக் கோவில்கள் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இக்கோவில்களில் வழிபாட்டு முறைகள் முறையாகத் தொடரும் பொருட்டு, பண்டைய கால ஆட்சியாளர்களாலும், தொண்டுள்ளம் கொண்டவர்களாலும், அவ்வப்பொழுது வழங்கப்பட்ட 5,50,000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களும், மிகவும் மதிப்பு வாய்ந்த நகரங்களில் மையப்பகுதியில் அமைந்துள்ள கட்டிடங்களும் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்தக் கோவில் சொத்துக்கள் அனைத்தையும் அந்த ஆக்கிரமிப்பாளர்களிடத்திலிருந்து மீட்டெடுக்க வேண்டும், இந்துக் கோவில்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்து வெள்ளியறிக்கை வெளியிட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், ’ஆலயம் காப்போம் குழுவினர்’ பி.ஆர்.ரமணன், எம்.சரவணன், எஸ்.விஜய நாராயணன், கே.பாலமுருகன், என்.வெங்கடேஷ், ஸ்ரீனிவாசன் ஆகியோர், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் அய்யா அவர்களை, இன்று (28.12.2021) கோவை பொதிகை இல்லத்தில் சந்தித்து, தமிழக இந்துக் கோவில்கள் மற்றும் கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்டெடுக்கும் வழிமுறைகள் குறித்து ஏறக்குறைய 1 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்கள். மேலும், இதுகுறித்து விரைவில் தமிழகம் தழுவிய ஆர்வலர்களை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்திடவும், தொடர்ந்து இந்துக் கோவில் சொத்துக்கள் மீட்புப் பணியை இயக்கமாக முன்னெடுக்கவும் ஆலோசிக்கப்பட்டது. அதற்கு அனைவரும் ஒருமித்த ஆதரவு தெரிவித்தனர்.
– தலைமையகம்,
புதிய தமிழகம் கட்சி.
28.12.2021